No icon

வியாகுலத் தாயின் விந்தை அழகு

அன்றொரு நாள்: அந்தி சாயும் வேளை. எனக்கு உதவி செய்யும் மாயா என்ற பெண்; பழைய நாட்காட்டியில் கிழித்த மாதா படத்தைக் கொண்டு வந்தார். கொழு கொழு வென்றிருக்கும் அழகான குழந்தை இயேசுவைத் தனது மடியில் கிடத்த, அக்குழந்தையைப் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பது போன்ற படம். உற்று நோக்கினால் உயிர் ஓவியம் போலிருந்தது. என் அறையின் ஒரு பகுதியில் அப்படத்தைத் தொங்கவிட்டு, பார்த்து இரசித்துக் கொண்டேயி ருந்த அவளது பார்வை, அதற்கு எதிர்ப்புரத்தில் மேசையில் வைத்து, நான் பக்தியுடன் வணங்கும் வியாகுலத்தாயின் சிறிய சுரூபத்தின் மேல் விழுந்தது. மரித்த மகனை மடியில் சுமந்த மைக்கிள் ஆஞ்சலாவின் மாதிரியை வடிவமைத்த சுரூபம் அது. படத்தையும் சுரூபத்தையும் மாறி மாறி உற்று நோக்கிய அவள் உதிர்த்த சொற்கள்...
அம்மா, எத்துணை அழகு இந்தக் குழந்தை இயேசுவில்; அழகின் மகுடமாக விளங்கும் செல்லக் குழந்தையை ஏந்திய மடியில், சோகச் சிலையாக இருக்கும், இறந்த மகன் இயேசுவின் உடலைத் தாங்கி நிற்கும் இந்தத் தாயின் வேதனையை உணர்ந்து அனுபவிக்கிறேன். எந்தத் தாயும் அனுபவிக்காத வேதனையை இந்தத் தாய் அனுபவிக்கும் கொடுமை - எத்துணை கடினமானது!
மாயா ஓர் இந்துப் பெண்; அவள் உதிர்த்த சொற்களில் நிறைந்திருந்த ஞானத்தைத் திரும்பத் திரும்ப இரசித்தேன்; சிந்தித்தேன். சிந்தனையில் எழுந்த கருத்துகள் சில... இதோ...
அன்னையின் வியாகுலங்கள் பற்றி எடுத்துரைக்கும் கருத்துகள் எத்தனையோ உள்ளன. மாறுபட்ட மாயாவின் கருத்து என்னைத்
தொட்டது. எல்லையற்ற சக்தி, எல்லைக்கட்டுப் பாட்டு, தாயின் மடியில் கொஞ்சி விளையாடத் தன்னைக் குழந்தையாகக் கையளித்தபோது, தாயின் உள்ளம் உணர்ந்த பூரிப்பை, சிலுவை மரத்தில் சிதைந்து உருக்குலைந்த மரித்த மகன் இயேசுவை மடியில் ஏந்தியபோதும் உணர்ந்தாளோ... வித்தியாசமான பூரிப்பு இது.
எனவேதான் எங்களது சபைச் செபம் வியாகுலத் தால் பூரிப்படைந்த மரியாவே என்று தொடங்கு கிறதோ... எனது சிந்தனை இன்னும் சிறிது ஆழமாகக் சென்றது.
மரித்த மகனை மடியில் சுமந்த மரியாவின் துயரத்தை, அத்தாய் அனுபவித்த 6வது வியாகுலம் என்று சொல்கிறோம். மனுக் குலத்தின் பாவங்கள் அனைத்தையும் மரித்த மகன் உருவில் மடியில் தாங்கி நிற்கிறார் வியாகுலத்தாய்... சிந்தனை தொடர்ந்தது.
உலகில் இல்லாதவர், இயலாதவர், பொல்லாதவர் என்ற மூன்று நிலையினர் உள்ளனர். நெஞ்சில் இயல்பாகச் சுரக்கும் இரக்கக்குணம் ஈகைப்
பண்பாகப் பரிணமித்து, இல்லாதார்க்கு, இயலாதார்க்குப் பகிர்ந் தளிக்கும் ஆற்றலைத் தருகிறது.
ஆனால்... பொல்லாதவர்...
கோபம் என்ற மூர்க்கக் குணத்தால் வெளியின் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொலைக் குற்றங்களுக்கானவர், தவறான வழியில் சென்றவர், நமது விருப்பத்திற்கு மாறாகச் செயல்படுபவர், போதையினால் பிறர் பொருள்களை அபகரித்தவர், தானும் வாழாது, பிறரையும் வாழவிடாமல் தடுக்கும் இழிந்த குணமுடையவர், பொறாமை என்ற தீக்குணத்தால் அடுத்திருப்பவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்... இப்படி எத்தனை எத்தனையோ இரகங்கள்...
பொல்லாதார் வரிசையில் நிற்கும் இத்தகையோரை அன்பு செய்வது இயல்பு கடந்த ஒன்று. ஆண்டவர் அருளை நிரம்பப் பெற்றவரன்றி, வேறெவராலும் இத்தகையோரை அன்பு செய்ய இயலாது. ’ஆகட்டும்’ என்றுரைத்த வினாடி முதல் சிலுவையில் தொங்கி, ’இதோ உன் தாய்’ என்று யோவானிடம் உரைத்த இறைவாக்கினைக் கேட்ட தருணம் வரை, இறை கரத்திலிருந்து அவரது திருமகன் வழியாகப் பெற்றிருக்கும் பேரருள் மட்டுமே, மரித்த மகனை மடியில் தாங்கும் சக்தியைத் தந்தது. இப்பேரருளே, பாலகன் இயேசுவை மடியில் தாங்கியபோது உள் உணர்ந்த பூரிப்பை, மனுக்குலத்தின் பாவங்களை மரித்த மகனுருவில் மடியில் தாங்கிச் சுமந்த நேரத்திலும், துவண்டு விழாமல், புரண்டு அழாமல் உணர்ந்து அனுபவிக்கும் வலிமையைத் தந்தது.
தலைவனாம் இறைவனை நெருங்க நெருங்க, உள்ளத்துப் பூரிப்பில் நிறைந்திருக்கும் உயிர்ப்பின் ஆற்றலை உணர்ந்து அனுபவிக்கும் சக்தியைப் பெறுகிறார். சாவுக்குத் தன் மகனைக் கையளித்ததால் உயிர்ப்பின் ஆற்றலை அனுபவிக்கும் பேற்றினைப் பெறுகின்றார். துன்பத்திலும் தனிமைத் துயரிலும் இறைகரம் தன்னைத் தாங்கி வழிநடத்துகிறது என்ற மெய்யுணர்வால் பூரிப்படைந்து நிற்கிறார் நம்  தாய். இந்த நம் தாயை வியாகுலத்தால் பூரிப்படைந்த மரியாவே, என்று அழைப்பது தகுதியும் நீதியுமானது!

Comment