No icon

வரலாற்றில் நற்கருணை பக்தி

மூவொரு கடவுள் பெருவிழாவைத் தொடர்ந்து வருகின்ற ஞாயிறன்று (இவ்வாண்டு ஜூன் 23 ஆம் தேதி) கத்தோலிக்கத் திருஅவை, கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைச் சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது. சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம் நற்கருணை ஆண்டை சிறப்பித்து வரும் இந்நாட்களில்,
நற்கருணை மீதான பக்தி வரலாற்றில் வளர்ச்சி அடைந்த விதத்தை இங்கு காண்போம்.
நம் ஆண்டவர் இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப் பட்ட அந்த இரவில், திருத்தூதர்களோடு பாஸ்கா விருந்தை உண்ட வேளையில் நற்கருணையை ஏற்
படுத்தினார். அவர் அப்பத்தின் வடிவில் தமது உடலை
யும், திராட்சை இரசத்தின் வடிவில் தமது இரத்தத்தை யும் அவர்களுக்கு வழங்கினார். கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பிறகு, முதல் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை
களில் நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் (திப 2:42).
“கடவுளைப் போற்றி, திருவிருந்துக் கிண்ணத்தி லிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!” (1 கொரி 10:16) என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் முதல் நூற்றாண்டின் நற்கருணை இறையியலாக விளங்குகின்றன. “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்று இயேசுவின் வாய்மொழியாகத் திருத்தூதர் யோவான் (6:56) தருகின்ற போதனையும் நற்கருணையின் முக்கியத் துவத்தை வலியுறுத்துகிறது.
2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தியோக்கு
புனித இக்னேசியுஸ், புனித ஜஸ்டின் ஆகியோர் நற்கருணையை “பலி விருந்து” என்று அழைக் கின்றனர். ‘திருத்தூதர்களின் போதனை’ என்ற அக்கால நூல், “ஆண்டவரின் நாளில் ஒன்றாய் கூடுங்கள். அப்பத்தைப்பிட்டு இறைப்புகழ் கூறும்
முன்னரே உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளுங்கள்” என நற் கருணைக் கொண்டாட்டத்திற்கான அறிவுரையை வழங்குகிறது. திருவிருந்தில் பங்கேற்க இயலாத நோயாளிகளுக்கு வழங்க நற்கருணையைப் பாதுகாக்கும் வழக்கமும் இருந்தது.
3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே,
ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற நாள்களில் திருப்பலி கொண்டாடும் வழக்கம் தோன்றியதாக தெர்த்துலியன், புனித சிப்ரியான்
போன்றோரின் குறிப்புகள் மூலம் அறிகிறோம். சிறப்பாக மறைசாட்சியரின் நினைவு நாள்களி லும், இறப்புச் சடங்குகளிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. “நம்பிக்கை யாளர் ஒவ்வொருவரும் வேறெந்த உணவையும் உண்பதற்கு முன்பே நற்கருணையை உட்கொள்ள வேண்டும்” என ‘திருத்தூது மரபு’ என்னும் அக்கால நூல் அறிவுறுத்துகிறது.
4, 5ஆம் நூற்றாண்டுகளில், நற்கருணை யின் முக்கியத்துவம் குறித்த சிந்தனைகள் வலுப் பெற்றன. “திருக்கிண்ணத்திற்கு முன்வந்து பணிந்து வணங்கிய பிறகே, இயேசுவின் திரு
வுடலையும் திருஇரத்தத்தையும் உட்கொள்ள வேண்டும்” என்று எருசலேம் நகரத்துப் புனித சிரில் (-386) அறிவுரை வழங்குகிறார். “கிறிஸ்துவின் திருவுடலை வணங்காமல் எவரும் அதை
உண்ணக்கூடாது” என்பது புனித அகுஸ்தீனின்
(-430) போதனை. திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு புறம்பாக நற்கருணையை ஆராதிக்கும் வழக்கம் 6ஆம் நூற்றாண்டிலேயே துறவற மடங்களில் உருவானது.
595ஆம் ஆண்டு திருத்தந்தை முதலாம் கிரகோரி நிகழ்த்திய திருப்பலியில் நற்கருணை பெறச் சென்ற அப்பம் தயாரிக்கும் பெண் ஒருவர் சந்தேகத்தால் சிரித்துவிட்டார். இதனால் அவருக்கு அந்த நற்கருணையை வழங்காமல், திருத்தந்தை அதை ஒரு தட்டில் தனியாக வைத்துவிட்டார். திருப்பலி முடிந்து அந்த தட்டை அவர் பார்த்தபோது, அதிலிருந்த நற்கருணை அப்பம் இயேசுவின் சதையாக மாறியிருந்தது. உரோமில் நிகழ்ந்த இந்த அற்புதமே, வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதலாவது நற்கருணைப் புதுமை ஆகும்.
6ஆம் நூற்றாண்டில், “கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் நிகழ்வே திருப்பலி” என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி இருந்தது. திருப்பலி வழிபாட்டில் நற்கருணை மன்றாட்டின் இறுதியில், இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் ஆராதனைக்காக உயர்த்திக் காட்டும் வழக்கம் 7ஆம் நூற்றாண்டில் உருவானது. நற்கருணையில் இயேசுவின் இருப்பை உணர்ந்து, அதை வழிபாட்டின் மைய மறைபொருளாகக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்
கொண்டனர். 8ஆம் நூற்றாண்டில், நோயாளிகளுக்கு வழங்குவதற்கான நற்கருணையைப் பாதுகாக்க ஆலயத்தின் ஒரு பகுதியில் நற்கருணைப் பேழை அமைக்கும் வழக்கம் தோன்றியது.
750ஆம் ஆண்டில் இத்தாலியின் லான்சியானோ நகர் சிற்றாலயம் ஒன்றில், பேசில் ஒழுங்கைச் சேர்ந்த குரு ஒருவர் திருப்பலி நிறைவேற்றினார். அவர் சந்தேகத்துடன் வசீகர வார்த்தைகளைக் கூறிய வேளையில், அப்பம் உண்மையான சதையாகவும், திராட்சை இரசம் உண்மை
யான இரத்தமாகவும் மாறின. இன்றளவும் பாதுகாக்கப்
படும் இந்த சதையையும் இரத்தத்தையும் ஆய்வு செய்த வல்லுநர்கள், அவை உயிருள்ளவைப் போன்று காணப்படுவதாகவும், இது விவரிக்க முடியாத அதிசயம் என்றும் கூறியுள்ளனர்.
பாஸ்காசியுஸ் என்ற பெனடிக்டைன் ஒழுங்கு துறவி 831ல் எழுதிய நூல்,
நற்கருணை குறித்த ஆழமான இறையியல் சிந்தனைகளுக்கு வித்திட்டது. “இயேசுவின் நற்கருணை உடலும், அவரது வரலாற்று உடலும் ஒன்றே. கன்னி மரியாவிடம் பிறந்து, சிலுவையில் அறையுண்டு இறந்து, உயிர்த்த இயேசுவின் இயற்கை உடலே நற்கருணை” என்று அவர் போதித்தார். இதனை மறுத்த சில அறிஞர்கள், “நம்பிக்கையாளர்கள் நற்கருணையில் பெறும் கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் கண்ணுக்குப் புலப்படாத அருளடையாளத் தன்மை கொண்டவை” என்று பதிலளித்தனர்.
10ஆம் நூற்றாண்டில் நற்கருணைப் பேழை ஆலயத்தின் நடுப்பகுதியில் அமைக்கப் பட்டதால், நற்கருணைப் பக்தியில் வளர்ச்சி ஏற்பட்டது. அதேநேரம், மக்கள் திருப்பலி வழிபாட்டில் ஆர்வம் இழந்து நற்கருணையை ஆராதிக்க மட்டுமே ஆலயத்திற்கு செல்லும் நிலை உருவானது. “நற்கருணையில் இயேசு முழுமையாக இருக்கிறார்” என்ற நம்பிக்கையால், நற்கருணையைப் பார்த்தவாறு பல மணி நேரம் செபிக்கும் வழக்கம் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது. கிறிஸ்தவ வரலாற்றில் முதல் நற்கருணை பவனி 1089 ஆம் ஆண்டு நடைபெற்றதாக சான்று உள்ளது.
12ஆம் நூற்றாண்டில், நற்கருணை யைக் கண்டு ஆராதிக்க மட்டுமே மக்கள் விரும்பியதால், திருப்பலியில் நற்கருணை உட்கொள்வதைப் பெரும்பாலான கிறிஸ்தவர் கள் கைவிட்டனர். இதன் விளைவாக, ஓராண்டில் 3 முறையாவது நற்கருணை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் நிலைக்கு திருஅவை தள்ளப்பட்டது. 1194ஆம் ஆண்டு ஜெர்மனியின் அவுஸ்புர்க்
பகுதியில், நற்கருணை வாங்கிய பெண் ஒருவர் அதை வீட்டிற்கு கொண்டு சென்று மறைத்து வைத்தார். அந்த நற்கருணை சதையாக மாறிய
புதுமையை அடுத்து, மறைமாவட்டப் பேராலயத்திற்கு பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.
1202ஆம் ஆண்டில் திருத்தந்தை 3 ஆம் இன்னொ சென்ட் வெளியிட்ட ஒரு சுற்றுமடல், “நற்கருணை
விசுவாசத்தின் மறைபொருள்”
என்று அறிக்கையிட்டது. வசீகர வார்த்தைகளைக் கூறியதும் இயேசுவின் திரு உடலையும் திரு
இரத்தத்தையும் ஆராதனைக்காக உயர்த்திக் காட்டும் வழக்கம் 1210ல் பாரிஸ் நகரில் தொடங்கியது. பொதுநிலையினர் நற் கருணை ஆராதனையை அசிசி புனித பிரான்சிஸ்
(-1226) இத்தாலியில் தொடங்கிவைத்தார். நற்
கருணையை ஆராதிக்கும் வழக்கம் பிரான்சின் அவிக்னன் நகரில் 1226ஆம் ஆண்டு ஏற்பட்டது. 
மக்கள் நற்கருணையைக் கண்டு ஆராதிப் பதில் ஆர்வம் காட்டியதால், நற்கருணையைப் பீடத்தில் எழுந்தேற்றம் செய்துவைத்து திருப்பலி நிறைவேற்றும் வழக்கம் 13ஆம் நூற்றாண்டில் இருந்தது. பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜூலியானா என்ற பெண் துறவியின் கோரிக்கையை ஏற்று, 1246ல் ‘இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்’ விழா லியேஜ் மறைமாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. 
1264ல் இத்தாலியின் பொல்சேனா பகுதியில் ஜெர்மன் குரு ஒருவர் திருப்பலி நிறை வேற்றிய வேளையில், நற்கருணை அப்பத்தில் இருந்து இரத்தம் வடிந்து பீடவிரிப்பில் சிந்தியது. இந்தப் புதுமையை தமது பிரதிநிதிகள் மூலம் உறுதிசெய்த திருத்தந்தை 4 ஆம் உர்பான், ‘இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்’ விழாவைத் திருஅவை முழுவதும் கொண்டாட ஆணை வெளியிட்டார். அவரது அறிவுரைப்படி, “மாண்புயர் இவ்வருட்சாதனத்தை...” என்ற கீதத்தை புனித தாமஸ் அக்குவினாஸ் இயற்றினார். ‘இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்’ விழா நிறுவப்பட்டதில் இருந்து, ஐரோப்பிய நாடுகளில் நற்கருணைப் பவனிகள் அதிக அளவில் நடைபெற்றன.
நற்கருணைப் பவனியின்போது குறிப்பிட்ட நிறுத்தங்களில் மக்களுக்கு ஆசீர் வழங்கும் வழக்கம் 14ஆம் நூற்றாண்டில் தோன்றியது. 1380ல் நற்கருணையை எழுந்தேற்றம் செய்து வைப்பதற்கான கதிர்பாத்திரம் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டது. நற்கருணைப் பக்தியை ஊக்குவிக்கும் வகையில், பல ஆலயங்களில் திருப்பலிக்குப் புறம்பே நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டு தொடர் ஆராதனைகள் நடை பெற்றன. தூய நற்கருணையைக் கையில் பெறு வதற்கு மக்கள் அஞ்சியதால், நாவில் வழங்கும் நடைமுறை 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
16ஆம் நூற்றாண்டில் உருவான சீர்திருத்த சபைகள், நற்கருணையில் இயேசுவின் இருப்பைக் கேள்விக்கு உட்படுத்தின. திரிதெந்து பொதுச்சங்கம் (1545-63) நற்கருணையில் இயேசுவின் இருப்பையும், நற்கருணை ஆராதனைக்கான இறையியல் அடிப்படையையும் பதிலாக வழங்கியது: "கடவுளின் ஒரே பேரான மகன் நற்கருணையில், கடவுளுக்குரிய முறையில் வெளிப்படையாக ஆராதிக்கப்படுகிறார். எனவே, இந்த அருளடையாளம் மரியாதையுடனும், பயபக்தியுடனும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாட்சிக்குரிய வகையில் பவனியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும், வெளிப்படையாக மக்களின் ஆராதனைக்காக நிறுவப்பட வேண்டும்.”
1540களில் இத்தாலியில் தோன்றிய நாற்பது மணி நேர நற்கருணை ஆராதனை வழக்கம் சில பத்தாண்டுகளில் ஐரோப்பா முழுவதும் பரவியது. நற்கருணைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் ஆலய முதன்மைப் பீடத்தின் உயர்ந்த மையப்பகுதியில் நற்கருணைப் பேழையை வைக்கும் முறையை சார்ல்ஸ் பொரோமியோ (-1584) தொடங்கி வைத்தார்.  17ஆம் நூற்றாண்டில் நற்கருணை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் பல இடங்களுக்கும் பரவியதால், ஆலயத்தின் பலிபீடம் திவ்விய நற்கருணையின் இருப்பிடமாக ஏற்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது. 
18ஆம் நூற்றாண்டில், பெருமளவிலான மக்கள் நற்கருணை ஆராதனை செய்வதில் ஆர்வம் காட்டினர். புனிதர்களான அல்போன்சுஸ் லிகோரி, பெனடிக்ட் ஜோசப் லாப்ரே போன்றோர் இந்த பக்தியை கத்தோலிக்கரிடையே ஊக்குவித்தனர். 19ஆம் நூற்றாண்டில், பீட்டர் ஜூலியன் ஐமார்ட், அந்தோனி மரிய கிளாரட், ஜான் மரிய வியான்னி போன்ற புனிதர்களின் முயற்சியால் மக்கள் நற்கருணைப் பக்தியில் வளர்ச்சி அடைந்தனர். 1881ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லில்லெ நகரில் முதல் அதிகாரப்பூர்வ நற்கருணை மாநாடு நடைபெற்றது.
1902ல் திருத்தந்தை 13ம் லியோ எழுதிய சுற்றுமடலில், “நற்கருணை திருஅவையின் ஆன்மா” என்று குறிப்பிடுகிறார். திருத்தந்தை 10 ஆம் பயஸ் திருப்பலியோடு இணைந்த நற்கருணைப் பக்தியை ஊக்குவிக்கும் விதத்தில்,
சிறிய வயதிலேயே முதல் நற்கருணை வழங்கும் நடைமுறையை உருவாக்கினார். 1965ஆம்
ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் வெளியிட்ட ‘விசுவாசத்தின் மறைபொருள்’ என்ற சுற்றுமடலில்,
“பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் அப்பமும் இரசமும், தூய இறைவேண்டல் மற்றும் மீட்பரின் வார்த்தைகளின் மறைபொருள் வழியாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மெய்யான இயல்பில் வாழ்வளிக்கும் சதையாகவும் இரத்த
மாகவும் மாறுகின்றன என்பதை நான் எனது
உள்ளத்தில் நம்பி, வெளிப்படையாக அறிவிக் கிறேன்” என்கிறார்.
திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல் (-2005), ‘நற்கருணையின் திருஅவை’ என்ற சுற்றுமடலில், “திருப்பலிக்குப் புறம்பே நிகழும் நற்கருணை வழிபாடு திருஅவையின் வாழ்வுக்கு நிகரற்ற மதிப்பீடாகும்.... நற்கருணை அருளடையாளத்தை எழுந்தேற்றம் செய்வதும், நற்கருணை ஆராதனைக்கு சாட்சிகளாகத் திகழ்வதும், அதை ஊக்குவிப்பதும் மேய்ப்பர்களின் கடமை ஆகும்” என்று குறிப்பிடுகிறார். அவர் ‘எங்களோடு தங்கும் ஆண்டவரே’ என்ற மையக்கருத்தில், 2004-2005ல் கத்தோலிக்கத் திருஅவை நற்கருணை ஆண்டை சிறப்பிக்கச் செய்தார்.
“நற்கருணைக் கொண்டாட்டம் ஒவ்வொன் றும் மறையாத சூரியனாகிய உயிர்த்த கிறிஸ்துவின் ஒரு கதிராக இருக்கிறது. திருப்பலியில், சிறப்பாக ஞாயிறன்று பங்கேற்பது, உயிர்ப்பின் வெற்றியில் நுழைவதாகும். ஆண்டவர் இயேசு, நமக்காக உடைக்கப்படும் அப்பமாகத் தம்மை மாற்றுவதில், அவரது அனைத்து இரக்கத்தையும் அன்பையும் நம்மேல் பொழிகிறார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். நமக்காக நற்கருணையில் உடைபடும் இயேசுவுக்காய், நமது வாழ்வை உடைத்து உருமாற்ற முயற்சிப்போம். நற்கருணை நாதர் நமக்கு ஆசி வழங்குவாராக! ஆமென்.

Comment