No icon

மன்றாடி மகிழ்ந்திடுவோம் 7:

யோசுவா (நம்பிக்கை மன்றாட்டு)

 

     இரண்டு தவளைகள், ஒரு வீட்டுக்குள் சென்றன. அங்கே ஒரு பானையில் தயிர் நிறைய இருந்தது. மிகுந்த வாசனை தருவதாக இருக்கிறதே! இதுவரை பார்த்திராத பொருளாக இருக்கிறதே! சுவைத்துப் பார்த்து விட்டாலென்ன? என்று இரண்டு தவளைகளும், தயிர் பானைக்குள் விழுந்தன.

     தயிர் பானைக்குள் விழுந்த இரண்டு தவளைகளும், மூழ்கத் துவங்கின. ஒரு தவளையோ, ஐயோ! செத்தேன், தொலைந்தேன் என்று மூழ்கி இறந்தது. அடுத்த தவளையோ, இல்லை நான் சாக மாட்டேன், வெளியே சென்று விடுவேன் என்று தன் கால்களால் தொடர்ந்து தயிரை உதைத்தது. வெண்ணெய் திரண்டது. திரண்ட வெண்ணெய் மீது அமர்ந்து இளைப்பாறியது. பின் மேல்நோக்கி எம்பிக் குதித்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.

     ’என் மனித எண்ணங்களைக் கிறிஸ்துவுக்குக் கீழ்படியுமாறு அடிமைப்படுத்துகிறேன்’ என்கிறார் புனித பவுல்.(2 கொரி 10:5)

     எனக்குள் இருப்பவர் பெரியவரல்லவா? நான் வெற்றிபெறுவேன் என்பதே யோசுவாவின் நம்பிக்கை.

மனிதனல்லவா, கடவுளின் சொல்லுக்கு அடங்க வேண்டும். ஆனால், இதோ பாருங்கள்- யோசுவா சொல்லுக்கு கடவுள் அடங்கி யோசுவா சொன்னதை செய்தாராம்.(யோசு 10:12-14)

நம்பிக்கையே ஜெயம்:

     எமோரியர்களுக்கு எதிராக யோசுவா போரிடுகிறார். சூரியன் அஸ்த மிக்கும் நேரமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரம் போரை நிறுத்தினால், தோல்வியாகிவிடும். ஆகவே, யோசுவா ஆண்டவரை வேண்டிக் கொண்டு, சூரியனே அங்கே நில்; சந்திரனே இங்கே நில் என்று கட்டளையிட்டாராம். ஒருநாள் அளவாக சூரியனும், சந்திரனும் அசையாது நின்றன. போரிட்டு வெற்றி பெற்றார்.

     ’ஆண்டவரை வேண்டிக்கொண்டு’- எனக் காண்கிறோம். போர் புரிகிற நேரத்தில் எவ்வளவுதான் மன்றாடியிருக்க முடியும். கூடுமானால் அப்பா நன்றி.

     வெற்றி தந்துட்டீங்க நன்றிப்பா எனச் சொல்லிவிட்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் கட்டளை கொடுத்திருப்பார்.

சூரியனா சுற்றுகிறது?

     சூரியனும் சந்திரனுமா சுற்றுகிறது? பூமியல்லவா சுற்றுகிறது என்று நாம் சொல்லுவோம். உண்மைதான். பல ஆண்டுகளுக்கு முன்பு, பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கண்டுபிடுத்துச் சொன்ன கலிலேயோ என்ப வரை நம் திருச்சபை துன்புறுத்தியது. அதற்காக, நம் திருத்தந்தை மன்னிப்பு கேட்கிறேன் என்றார். நம் திருத்தந்தையின் துணிச்சல், நேர்மை யைப் பாராட்ட வேண்டும். நம் திருச்சபை நுணுகி ஆராய்வது நல்லதுதான். ஆனால், சீர்திருத்தக் கருத்துகளை மிகவும் காலதாமதமாகவே ஏற்கிறது. இறந்த பின்புதானே புனிதர் பட்டம் கொடுக்கும், காலதாமதமாகவே மன்னிப்பு கேட்கும். திருச்சபை சற்று முன்பாகவே ஏற்றுக்கொள்ளத் துணிந்தால் என்ன?

     மறைநூலில் முரண்பாடுகள் இல்லை. மக்களின் அறிவுத்திறனுக் கேற்ப, வெளிப்பாடுகள் தரப்பட்டன, பேசப்பட்டன. உதாரணமாக மத்தேயு 23:35-ல் பரக்கியாவின் மகன் சக்கரியா என இயேசு குறிப்பிடுவது, மக்கள் சக்கரியாவின் தந்தை பரக்கியா எனக் கருதி வந்தனர். ஆனால், 2குறி 24:20-22ன் படி சக்கரியாவின் தந்தை யோயியாதா என்பதே. இதனை இயேசு அறியாதவரா? அது போலவே, அன்று மக்கள் சூரியனே பூமியைச் சுற்றி வந்ததாகக் கருதி வந்ததால், இத்தகைய சொல்லாட்சி காண்கிறோம். வேதாகமத்திலோ, எந்த முரண்பாடும் இல்லை. மேலும் மறைநூல் என்பது விஞ்ஞான நூல் அல்ல, மீட்பின் நூல் என்பதும் நாம் அறிந்ததே.

வியப்புக்குரிய நம்பிக்கை:

சூரியனையும், சந்திரனையும் பார்த்துக் கட்டளையிடும் அதிகாரம், யோசனை எப்படி எங்கிருந்து வந்தது? ஓ! வியப்புக்குரிய நம்பிக்கையே.

ஆண்டவரையே சார்ந்து ஆண்டவரோடு உறவாடிக் கொண்டிருந்த மோசேயின் சீடனல்லவா! ஆண்டவரை வேண்டிக்கொண்டு மோசே தன் கோலை உயர்த்தி செங்கடலை, இரண்டாகப் பிளந்ததைப் பார்த்தவரல் லவா! மோசேயின் வாக்கினால் அற்புதங்கள் நடந்ததைக் கண்டவரல்லவா!

     மன்றாடும்போதே பெற்றுவிட்டதாக நம்பும் நம்பிக்கை வீரர் இவர். என்னோடு எனக்குள் என் ஆண்டவர் இருக்கிறார் என முழுமையாக நம்பும் மனிதர் இவர்.

இயேசு, தந்தையை வேண்டிக் கொண்டு, ”லாசரே வெளியே வா” என்று முழக்கமிட்டாரே; ”காற்றே இரையாதே, சும்மாயிரு” எனக் கட்டளையிட்டாரே; அந்த தெய்வத்தின் பிள்ளையல்லவா இவர்.

இயேசுவின் பெயரில், பிறவி முடக்குவாதமுற்றவரைப் பார்த்து எழுந்து நடக்கச் சொன்ன பேதுருவின் முன்னோடியல்லவா! இவரை எப்படித்தான் பாராட்டுவதோ?

சூரியனையும், சந்திரனையும் என் அப்பாதானே படைத்திருக்கிறார். ஆகவே, நான் சொன்னால் என் அப்பா நிறுத்துவார் என்பது இவரது வாதம். ஆம் எசா 44:26ன் படி ஆண்டவர் தம் ஊழியரின் வாக்கியங்களை உறுதிப்படுத்துகிறார், நிறைவேற்றுகிறார்.

என் பிள்ளை சொல்லிவிட்டதே- செய்யாவிட்டால் எனக்குமல்லவா கேவலம். இதோ செய்துவிடுகிறேன் என்று செய்து விடுவாரே என்பது இவரது நம்பிக்கை.

’இயேசுவே ஆண்டவர் என்று உள்ளத்தால் நம்பி, வாயினால் அறிக்கையிடுகிறவர் மீட்பு பெறுவார்’ (உரோ 10:10) என்ற பவுலடியாரின் வாக்கை தேவ ஆவியானவர் அப்பொழுதே சொல்லிக் கொடுத்து விட்டாரோ?

 உலகத்திலிருப்பவனை விட (பிசாசைவிட, மனிதர்களை விட, படைப்புகளை விட) எனக்குள் இருப்பவர் பெரியவர் (1யோவா 4:4) என்ற யோவானின் நம்பிக்கை அறிக்கையை அன்றே ஆண்டவர் யோசுவாவுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டாரோ?

உலகம் கொள்ள முடியாத கடவுள் எனக்குள்- ஆம் எனக்குள் என்றால் என்னைவிடச் சிறியவர் போல், குழந்தை போல், நான் சொல்வதற்கு கீழ்படிந்து செய்பவர் போல்- ஆமாம். நான் சொல்வது அவரே சொல்வதாகும். ஆம், அவர் சொல்ல எல்லாம் உருவாகும்; கட்டளையிட எல்லாம் நிற்கும் (திபா 32:9) என்பதே யோசுவாவின் உயிருள்ள நம்பிக்கை.

ஆண்டவரை உள்ளத்தில் கொண்டிருப்பதே உண்மையான வாழ்வு. உள்ளத்தை தூய்மையாகக் காத்துக் கொள்வோம். மலை போன்ற பிரச்சனைகள் யாவும் பெயர்ந்து போய்விடும். ஆமென்.

Comment