No icon

அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச.

போதும் என்ற மனமே...

சத்யா: உலகத்திலேயே மகிழ்ச்சியாய் இருக்கிற ஆட்கள் யாரா இருக்க முடியும்னு பேசிட்டு இருக்கோம். அறிஞர் சுந்தர் என்ன சொல்றாருன்னா...

சுந்தர்: அறிஞர் பட்டம் ஏற்கனவே உனக்கு கொடுத்தாச்சு, சத்யா.

சத்யா: அப்போ உனக்கு என்ன பட்டம் கொடுக்கலாம், சுந்தர்?

சுந்தர்: எனக்கு பட்டம் எல்லாம் எதுக்கு? நான் பட்டம் விட்டு ரொம்ப நாளாச்சு.

சத்யா: ஐயோ, கடிக்காதே.

ஆசான்: சுந்தர் என்ன சொல்கிறார்?

சத்யா: நிறைய பணம் உள்ளவர்கள் தான் மகிழ்ச்சியா இருக்காங்கன்னு சொல்றான்.

சுந்தர்: ஏன்னா.. பணம் இருந்தா எது வேணாலும் வாங்கிக்கலாம் இல்லையா? நிலம், வீடு, வசதிகள், துணிமணி...

சத்யா: இப்போ பணத்தை வச்சு என்ன வாங்குவ?

சுந்தர்: ஒரு புது செல்ஃபோன்.

சத்யா: அதான் ஏற்கனவே ஒன்னு வச்சிருக்கியே.

சுந்தர்: அதைவிட க்யூட்டா, விலை கொஞ்சம் அதிகமா உள்ள ஃபோன் வாங்கலாம் இல்லியா?

சத்யா: அப்போ.. இது உன்னோட தேவையில்லை. பேராசை, பேராசை பெருநஷ்டம்னு...

சுந்தர்: ஒரு பழமொழி இருக்குன்னு சொல்லப் போற. எத்தனை நாளா பழமொழி சொல்லிட்டு இருக்கப்போற, சத்யா? என்னைக்கு புது மொழி சொல்லுவ?

சத்யா: இவன் கிடக்கிறான். நீங்க சொல்லுங்க. இவனுக்கு தேவையான ஒரு கதை சொல்லுங்க.

ஆசான்: ஜப்பான் நாட்டில் ஒரு கிராமியக் கதை இருக்கிறது. அந்த இளைஞனுக்கு அந்த இளம் வயதிலேயே பெரும் பொறுப்பு இருந்தது. தந்தை இறந்துவிட்டதால், அடிக்கடி நோய்வாய்ப்பட்ட தாயை இவன் கண்காணிக்க வேண்டியிருந்தது. எனவே, கடுமையாக உழைத்தான். என்ன தான் உழைத்தாலும், கிடைத்த ஊதியம் இவனும் இவன் தாயும் ஏதோ உண்டு, வயிற்றை நிரப்பவே போதுமானதாக இருந்தது. தாய்க்கு வாங்கித் தர வேண்டிய மருந்துகளை அவனால் வாங்கித் தர முடியவில்லை.

மருந்துகளின்றி அவன் தாய் அல்லற்படுவதை நினைத்து, அவன் மிகவும் வருந்தினான். வேலைக்குப் போகும் வழியில் மனம் சோர்ந்து போய், ஒரு மரத்தடியில் அமர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் தூரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.

அவனுடைய மாமாவின் நினைவு வந்தது. அந்த ஊரிலேயே பெரிய செல்வந்தன். ஆனால், எளிதாக பிறருக்கு பணம் தரமாட்டான். உதவி கேட்டாலும், ஒருபோதும் செய்ய மாட்டான். ‘பிறருக்குச் செய்யாவிட்டாலும், பரவாயில்லை. நான் அவருடைய மருமகன் இல்லையா? அம்மா அவரது தங்கை தானே? தாயின் நிலையை, என் இயலாமையை எடுத்துச் சொன்னால் உதவ மாட்டாரா? பணம் கொடுத்து உதவ முன் வராவிட்டாலும், கடனாவது தர மாட்டாரா? முயன்று பார்ப்போமே!’ என்று நினைத்த இளைஞன், அவரது வீட்டிற்கு விரைந்தான்.

அவனது நிலையை எடுத்துச் சொல்லியும், கஞ்சக்கார மாமன் அவனுக்கு பணம் கொடுத்து உதவ மறுத்தான். ‘கடனாவது தாருங்களேன்என்று இளைஞன் கெஞ்சினான். மாமன் சொன்னான்: “இங்க பாரு. நீ ஒன்னும் பெரிய ஆள் இல்லை. உனக்கோ, உன் தாய்க்கோ சொத்துன்னு பெருசா எதுவும் இல்லை. உனக்குன்னு நிரந்தரமா நல்ல வேலை கூட இல்லை. என் பார்வையில் நீ ஒரு புழு மாதிரி. புழுவுக்கு கடன் கொடுக்க முடியுமா? அது எப்படி கடனை திருப்பிக் கொடுக்கும்? அதனால, இங்க நிக்காத ஓடிப் போயிடு. மறுபடியும் வராதேஎன்று விரட்டினான்.

திரும்பிய இளைஞன் அழுகையை அடக்கிக்கொண்டு, வீட்டிற்குப் போகும் வழியில் இருந்த அந்த மரத்தடியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அவ்வழியாக ஒரு முதியவர் வந்தார். அவன் முகத்தைப் பார்த்தே அவன் மனதில் இருந்த கவலையை அவர் புரிந்துகொண்டார். மற்ற இளைஞர்களைப் போல் அல்லாமல், சோர்ந்து போய், அவன் அமர்ந்திருந்தது ஏன் என்று கேட்டார். “கடுமையாக உழைத்தும், போதுமான பணம் இல்லாததால் நானும், என் தாயும் நிம்மதியாய் வாழ முடியவில்லைஎன்றான் இளைஞன்.

முதியவர் தன் பையிலிருந்து ஒரு ஜோடி பழைய செருப்பை எடுத்து அவனிடம் கொடுத்தார். “இதைப் போட்டு நட. உனக்குப் போதுமான பணம் கிடைக்கும்என்றார் முதியவர். பழைய செருப்பை அணிந்துகொண்டு நடந்தால், பணம் எப்படி கிடைக்கும் என்று புரியாமல் திகைத்த இளைஞனின் அருகில் வந்து முதியவர் சொன்னார்: “இங்கே பாரு, இது முக்கியம். தேவையான போது மட்டும் தான் இந்த செருப்பைப் போட்டுக்கணும். தேவை இல்லாமல் எப்போதும் போட்டுட்டு நடந்தா, உன்னோட உருவம் குறைந்து, குறுகி, சின்னதா, மிகச் சின்னதா ஆகிட்டே வரும். மறந்துடாத!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஒரு ஜோடி பழைய செருப்பைப் போட்டால் பணம் எப்படிக் கிடைக்கும் என்பது புரியாவிட்டாலும், முதியவர் சொன்னதை நம்பி, இளைஞன் அவர் தந்த செருப்புகளை அணிந்துகொண்டு, நான்கைந்து அடிகள் எடுத்து வைத்தான். அவன் செருப்பு பட்ட இடத்தில் எல்லாம் கீழே தங்க நாணயங்கள் கிடந்தன. செருப்பைக் கழற்றி பையில் வைத்துக்கொண்டு, தங்க நாணயங்களை அள்ளிக்கொண்டு துள்ளிக் குதித்தவாறு அவன் வீட்டிற்கு ஓடினான்.

வறுமை மறைந்தது. அவனும், அவனது தாயும் வசதியாய், மகிழ்ச்சியாய் வாழத் தொடங்கினர். இந்தச் செய்தி அவன் மாமனைச் சென்றடைந்தது.

சுந்தர்: யார் அந்த கஞ்சக்கார பயலா?

ஆசான்: அன்று மாலையே மாமன் இளைஞனின் வீட்டிற்கு வந்தான். என்ன நடந்தது என்று கேட்டான். பொய் சொல்லத் தெரியாத இளைஞன் நடந்ததையெல்லாம் சொன்னதும், முதியவர் தந்த அந்த மந்திரச் செருப்புகளைப் பறித்துக் கொண்டு மாமன் ஓடினான். ஓடிப் போய் தனது வீட்டிற்குள் நுழைந்ததும், கதவைச் சாத்தி விட்டு, அந்த செருப்புகளை அணிந்துகொண்டு, அங்கும், இங்கும், மேலும், கீழும் நடந்தான். தேவையின்றி அதிக நேரம் அணியக் கூடாது என்று இளைஞன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், இரவு முழுவதும் மாமன் நடக்க நடக்க, அவன் வீடெங்கும் தங்க நாணயங்கள் நிறைந்து குவிந்தன.

மறுநாள் காலை அந்த செருப்புகளை வாங்கிச் செல்வதற்காக இளைஞன் வந்து கதவைத் தட்டினான். திறக்க யாரும் வரவில்லை. ஓங்கி உதைத்துத் திறந்தால் வீடெங்கும் தங்க நாணயங்கள்! ஆனால், பேராசைக்கார மாமனை எங்குமே காணவில்லை. முதியவர் தந்த அந்த மந்திரச் செருப்புகளைத் தேடினான். அவற்றின் மேல் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. அந்தப் புழுவை உதறிவிட்டு செருப்புகளை எடுத்து பையில் வைத்துக்கொண்டான். தங்க நாணயங்களை ஒரு பெரிய சாக்கில் போட்டு கட்டி எடுத்துச் சென்றான்.

அந்த ஊரில் இருந்த அத்தனை ஏழை, எளிய மக்களையும் ஒன்று கூட்டி, தங்க நாணயங்களைப் பகிர்ந்து கொடுத்தான். ஊரே அவனைப் போற்றிப் புகழ்ந்து கும்பிட்டது. மந்திரச் செருப்புகளை ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் அதனைத் திறந்த போது இளைஞன் இதனைப் பார்த்தான்.

சத்யா: எதனை?

ஆசான்: ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கிருந்தோ வந்த ஒரு புழு அந்த செருப்புகள் இருக்கும் பெட்டிக்குள் நுழையப் பார்த்தது.

சுந்தர்: புழு யாருன்னு புரியுதா? செருப்பைப் போட்டுகிட்டே இருந்ததுனால சுருங்கிச் சுருங்கி புழுவாக மாறிப் போன மாமன்.

சத்யா: காசில்லாத இந்த இளைஞன்ட்டஇந்த நிலையில இருக்கற நீ எனக்குப் புழு மாதிரின்னு சொன்ன மாமன், நிஜமாவே புழு ஆயிடறான்.

சுந்தர்: அவனைச் சுத்தி எங்கும் தங்கம் இருக்கிறப்போ அவன் புழு ஆயிடறான்.

சத்யா: நீ சுந்தராவே இருடா. புழுவா மாறிடாத.

ஆசான்: பேராசைக்கு நம்மில் யாரும் பலியாகலாம். ஒரு அப்பட்டமான பொய்யை நம்பும் போது தான், நாம் பேராசைக்குப் பலியாகிறோம்.

சத்யா: என்ன பொய்?

ஆசான்: தேவைக்கு மேலே மேலே சேர்த்து வைத்துக்கொண்டால், நாம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற பொய் தான் நம்மை பேராசைக்காரர்களாக மாற்றிவிடுகிறது. பேராசைக்காரர்கள் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். சேர்த்த எதையும், அவர்கள் இழக்க விரும்புவதில்லை. எனவே, கொடுக்க மறுக்கும் கஞ்சர்களாக மாறி விடுகின்றனர். எனவே, ‘போதும் என்ற மனமே...

சுந்தர்: பொன் செய்யும் மருந்து’.

சத்யா: அதென்ன பொன் செய்யும் மருந்து? அப்படி ஒரு மருந்தா இருக்கு?

ஆசான்: ஆங்கிலத்தில்அல்கெமி (Alchemy) என்பார்கள். ‘சாதாரண உலோகங்களைக் கூட, பொன்னாக மாற்றி விட முடியும். அப்படி மாற்றுவதற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் சில ஏமாற்றுப் பேர்வழிகள் கிளப்பிவிட்ட புரளி. தமிழில் ரசவாதம்.

சுந்தர்: நம்ம ஊர்ல வாஸ்து மாதிரி.

ஆசான்: நம்மில் யாரும் பொன்னைத் தேடி அலைந்து புழுவாய்ப் போக வேண்டியதில்லை. போதும் என்ற மனமே போதும். அதுவே மனதிற்கு நிம்மதியைத் தரும். போதுமென்ற மனமிருந்தால் பொன் நமக்கு அவசியமில்லை. நம்மிடமுள்ள கல்லும், மண்ணும் கூட நமக்கு நிம்மதியைத் தர முடியும்.

சுந்தர்: சரி, சரி. இப்ப இருக்குற ஃபோனே போதும். எக்ஸ்ட்ராவா இன்னொன்னு வேணாம். சத்யா, ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்.

Comment