குருத்து ஞாயிறு - 21.03.2021
- Author --
- Tuesday, 23 Mar, 2021
குருத்து ஞாயிறு
(எசா 50:4-7, பிலி 2:6-11, மாற் 14:1-15:47)
அருள்பணி. குருசு கார்மல் சி.ஏ.
தொடக்க முன்னுரை
இறை இயேசுவில் இனியவர்களே! குருத்து ஞாயிற்றைக் கொண்டாடுகின்ற இப்புனிதமிகு நாளே, திருப்பாடுகளின் ஞாயிறு என அழைக்கப்படுகின்றது. புனித வாரத்தின் நுழைவுநாள் இது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா எனும் ஆரவார ஒலிகளோடு எபிரேய மக்கள் ஒலிவக்கிளைகளைக் கையிலேந்தி எருசலேமிற்குள் நுழைகிறார்கள். இயேசுவின் இறையாட்சிக் கனவினை நிறைவு செய்வதற்கு இப்பயணமே வழியமைத்துக் கொடுக்கின்றது. வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர்களுக்குப் புது விடியலை வழங்குகின்றது.
தங்களது தேவைக்காய் பயணம் மேற்கொள்ளும் தலைவர்களுக்கு மத்தியில் இயேசுவின் பயணம் பிறரைக் குறித்து காட்டுகின்றது. அவர்களின் தேவைகளை அடையாளப்படுத்துகின்றது. இறைவாக்கினர்களின் முன்னறிவிப்பின்படி இயேசு எருசலேமிற்குள் நுழைகிறார். துன்பங்களையும், சவால்களையும் தாங்கிக் கொண்டு மீட்பை அடையாளப்படுத்துகிறார். இத்தகைய இயேசுவின் ஆற்றல்மிக்க அனுபவம், நம்மையும் திடப்படுத்தும் எனும் உறுதியான நம்பிக்கையோடு புனித வார வழிபாடுகளில் பங்கெடுப்போம், நம்மையே சுத்திகரிப்புச் செய்வோம்.
முதல் வாசக முன்னுரை
தந்தையாம் கடவுள் தெரிவு செய்த நல்ல பணியாளாக இயேசு விளங்குகின்றார். இறைவன், தாம் தெரிவு செய்தவர்களை ஒருபோதும் கைவிடுவது இல்லை, அக்கறையுடன் அவர்களைப் பராமரிக்கின்றார். துன்பங்கள், துயரங்கள் நேரிடுகின்றபோது உடனிருந்து வலுவூட்டி உறுதிப்படுத்துகிறார். என்றுரைக்கும் இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இறைவனின் மகனாக இவ்வுலகில் பிறந்திருந்தாலும் சாதாரண மனிதனாகவே உலகத்தில் வாழ்ந்தார். எல்லாத் துன்பங்களையும், வேதனைகளையும் ஏற்றுக்கொண்டதோடு, இழிநிலையானச் சிலுவை யையே உடைமையாக்கிக்கொண்டார். அவரிடம் வெளிப்பட்ட தாழ்ச்சியே அவரை இறைமகனாக்கியது. நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாத பேருண்மையை உணர்த்தும் இவ்வாசகத்திற்கு நமது இதயக் கதவுகளைத் திறப்போம்.
மன்றாட்டுக்கள்
1. ஞானமும், வல்லமையும் உடையவரான தந்தையே இறைவா! நம் தாய்த் திருஅவையாம் கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்துகின்ற எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார் அனைவரையும் உமது பாதம் தருகின்றோம். அவர்கள் ஒவ்வொருவரும் விழிப்போடும், அறிவுத்தெளிவோடும் செயல்பட்டு, உம்மோடு இணைந்திருந்து நற்கனிகளைக் கொடுக்கும் நற்பணியாளர்களாக வாழ்ந்திட வேண்டிய மனப்பக்குவத்தை அளித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அருளின் ஊற்றான எம் தந்தையே இறைவா! எம் நாட்டை ஆளுகின்ற தலைவர்களும், அதிகாரிகளும் தன்னலம் கருதாது, மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்கவும், ஏழை, எளியவர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைத்து அவர்கள் பணியாற்றிட உமது கிருபையைப் பொழிந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நற்பேறும், நலமும் அளிக்கின்ற தந்தையே இறைவா! குடும்ப அமைதி, உடல் நலம், குழந்தைப் பேறு ஆகியவற்றிற்காக ஏங்கித் தவிக்கின்ற அனைவரையும் கருணைக் கண் கொண்டு உற்று நோக்கியருளும். அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களின் தேவையை நிறைவு செய்து கொடுத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்களித்த இறைவா! உமது படைப்பின் மகத்துவத்தை உணராமல் அறிவியல் வளர்ச்சி, விஞ்ஞானம், சமூக முன்னேற்றம் என்ற நோக்கில் இயற்கைக்கு எதிராகச் செய்கின்ற தவறுகளை மன்னித்தருளும். உமது படைப்பின் மேன்மையை உணர்ந்து இயற்கையில் தவழும் இறைவனைத் தரிசிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் என்றுரைத்த இறைவா! எம் சமூகத்திலுள்ள குழந்தைகள் அனைவரையும் உமது திருப்பாதம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் ஞானத்தில் சிறந்து விளங்கிடவும், கல்வி அறிவிலும், சமூக நலனிலும் அக்கறையுடையவர்களாய் வளர்ந்து, பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்து நடந்திடவும் உதவியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Comment