No icon

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு (18.04.2021) -திருப்பலி முன்னுரை 11.04.2021

 

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு 
திப 3: 13-15, 17-19, 1யோவா 2: 1-5, லூக் 24: 35-48

திருப்பலி முன்னுரை
இறையேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறைக் கொண்டாடும் இம்மகிழ்ச்சிக்குரிய நன்நாளில் “நம்பினால் வாழ்வு உண்டு” எனும் சிந்தனையில் சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
கிறிஸ்தவ வாழ்வின் மிகப்பெரிய இறையியல் நற்பண்பும், கொடையும் நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை வாழ்வின் செயல்பாடுகளை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது. எல்லாவற்றையும் பிறருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக மாற்றி வழங்குகின்றது. இயேசுவின் உயிர்ப்பு கொண்டுவந்த விடுதலை வாழ்வே சாதாரண சீடர்களை நற்செய்திப் பணியாளர்களாக உருமாற்றியது. எல்லாவிதமான சவால்களை துணிவோடு தாங்குவதற்கும், துன்பங்களில் வாழ்வின் பொருளினைக் கண்டுணர்வதற்கும் உதவி புரிந்தது.
இதனால் திருஅவையும் வேகமாக வளர்ந்தது. மக்களும் விசுவாசத்தில் உறுதி பெற்றனர். அவர்களிடமிருந்து நாம் பெற்ற விசுவாசம், நம்மை கிறிஸ்தவர்களாக மாற்றியிருக்கின்றது என்பதனை உணர்ந்திடுவோம். நமது அன்றாட வாழ்வுக்கு தேவையான அருளும், பொருளும் இறைவன் வழங்கிடுவார். அவருக்கே நமது முதன்மையினை வழங்கிடுவோம். இறைவனில் இணைந்து இறையருளினை நிறைவாக பெற்றிட அருள்கேட்டு இத்திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
இயேசுவைக் கொலை செய்வதற்கு ஏராளமான வழிமுறைகளைக் கையாண்டவர்கள் பரிசேய, சதுசேய கூட்டத்தினர். தங்களால் முடிந்த அளவுக்கு பலவிதங்களில் பல்வேறுவிதமான நெருக்கடிகளை, துன்பங்களை அவர்களுக்கு அளித்தனர். இறுதியாக குற்றவாளியாக்கி அவரை கொலை செய்தனர். அவர்களின் செயல்பாடுகள் அனைத்துமே தவறானது, அது மாற்றப்பட வேண்டியது என்பதனை அறிவுறுத்துகின்ற திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளுக்கு நமது இதயக்கதவுகளைத் திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நாம் வழிதவறி சென்றாலும், நம்மைத் தேடி வந்து அன்பு செய்கின்ற இறைவனாக ஆண்டவர் உடனிருக்கின்றார். அவரே வழிகாட்டியாக, நல்மேய்ப்பனாக உடனிருந்து ஆரோக்கியத்தையும், உள மகிழ்வையும் வழங்கி வருகின்றார். அவரிடம் தஞ்சம் புகுவதே வாழ்வுக்கு நலம். அவரே அனைத்துமாய் இருந்து நம்மை பாதுகாக்கின்றார் என்பதனை உய்த்துணர்ந்து இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம். 
மன்றாட்டுக்கள்
1. உமது பேரன்பால் உலகை நிறைத்துள்ள அன்பு இறைவா, எம் திருஅவையை வழிநடத்துகின்ற திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் நிறைவாக ஆசிர்வதியும். அவர்கள் இறையச்சம், அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளை உள்வாங்கி இறையன்பிலும், பிறரன்பிலும் சிறந்து விளங்கிடவும், இயேசுவின் உடனிருப்பை மனதில் கொண்டு இறைப்பணிகளை சிறந்த முறையில் செய்திடவும் உமதருளைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எங்கள் வாழ்நாள்களை எல்லாம் நலன்களால் நிறைவு செய்கின்ற இறைவா, எம் குடும்பங்களில் இறையன்பு, பிறரன்பு நிலைபெற்றிடவும், அவரவருக்கு உரியது அவரவருக்கு கொடுப்பதனால் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அன்பும், அமைதியும் நிலைபெற்றிடவும் உமதருளைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்கள் கற்பாறையும், மீட்பருமான இறைவா, எம்மை ஆளுகின்ற தலைவர்கள் செலுத்துகின்ற அன்பானது நீதி கலந்த அன்பாக, நீதியை நிலைநாட்டுகின்ற அன்பாக அமைந்திடவும், சாதி, சமய, இன வேறுபாடுகள் களைந்து அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திடவும், மக்களுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலுமாய் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்க உமதருளைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமாகிய இறைவா, நாங்கள் வாழ்கின்ற சமூகத்திலுள்ள இளையோர்களை உமது திருப்பாதம் சமர்ப்பிக்கின்றோம். இலட்சிய தெளிவுடன் இறையாட்சியை உள்வாங்கி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சமத்துவம் போன்ற நல்விழுமியங்கள் மலர்ந்திட ஈடுபாட்டு உணர்வோடு உழைத்திட உமதருளைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment