No icon

பாஸ்கா காலம் - 6ஆம் ஞாயிறு திருப்பலி முன்னுரை - 09.05.2021

பாஸ்கா காலம் - 6ஆம் ஞாயிறு
 திருப்பலி முன்னுரை 

(திப 10:25-26, 34-35,44-48, 1 யோவா 4:7-10, யோவா 15:9-17)
“உங்கள் நண்பர் யாரெனச் சொல்லுங்கள், நீங்கள் யாரென நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்பது ஓர் அறிஞரின் மதிப்பீட்டுரையாகும். ஆம், ஒருவரின் உருவாக்கத்தில் நட்பு என்பது நீங்காத இடத்தைப் பெறுகின்றது. ஆனால் நட்பாக அறிமுகமாவதைத் தெளிவாக இனம் கண்டு கொள்ளவேண்டும். இல்லையேல் அதுவே இடுக்கண் களைவதற்குப் பதிலாகத் தீமை பயக்கும் கூடா நட்பாகக் காட்சியளிக்கும். இல்லங்களும், இயக்கங்களும் தோழமை உணர்வோடு, கூட்டு முயற்சியில் இணைந்து செயல்படும்போது அங்கே வெற்றி உறுதியாகிறது. உண்மை அன்பின் செயல்பாட்டுத் தளமாக, ஆணிவேரும் அடிப்படையுமாக இருப்பது நட்பு. அந்த நட்பின் நங்கூரமாகத் திகழ்வது நம்பிக்கை. அந்த நம்பிக்கைத்தான் சாதனை வரலாற்றின் அடித்தளம். அது இனம், மொழி, சமயம், வட்டாரம் என எல்லைகளைக் கடந்து, விரிந்த பார்வையோடு செயல்படும்போது அங்கே இறையாட்சியின் விழுமியங்கள் விழித்தெழுகின்றன. அந்த விழுமியங்களின் வழிகாட்டுதலைக் கணடுணர்ந்தவர்களாய் வாழ்ந்து “அன்பே நிரந்தரம்” என்னும் நிலையை உருவாக்கும் கருவிகளாய் வாழ இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
கடவுளும், அவரது படைப்புகளும் மனிதரிடையே எவ்வித வேறுபாடும் பார்ப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனது நிலைக்கேற்ப இடைவெளியை உருவாக்கிக் கொண்டு, தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறான். இதனை வன்மையாகக் கண்டித்து, சமத்துவக் கண்ணோட்டத்தில் வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுரு சுட்டிக்காட்டும், மனிதம் காக்கும் கருவிகளாய் வாழும் மனநிலையில், முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுள் நம்மீது காட்டிய பரிவிரக்கம் நிறைந்த அன்பை நாம் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதனை விளக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
மன்றாட்டுக்கள்
1. நட்புக்கு இலக்கணம் வகுத்தளிக்கும் இறைவா! “நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்” என்று கூறிய உமது திருமகனின் அழைப்பை ஏற்று பணிநியமனம் பெற்றுள்ள எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், துறவிகள், பொதுநிலையினர் அனைவரும் உடன் பணியாளர்களையும், பணி இலக்கு மக்களையும் “நண்பர்கள்” என்று அழைத்து, வாழ்ந்து காட்டி, பணிபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தோழமை உணர்வைத் தூண்டியெழுப்பும் இறைவா! எமது நாட்டை வளப்படுத்த வாக்களித்து, ஆட்சி உரிமை பெறப்போகும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் எந்தச் சூழ்நிலையிலும் ஆள் பார்த்துச் செயல்படாமல் கதிரவன், காற்று, வான்மழை ஆகியவை எப்படி எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாக தமது பயன்பாட்டைப் பகிர்ந்தளிக்கின்றனவோ, அதன்படி விருப்பு வெறுப்பின்றி செயல்பட்டு, எம்மை வளமையை நோக்கி வழிநடத்த முன்வர வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பையே இருத்தலாகக் கொண்ட இறைவா! உம்மைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் நாங்கள் எங்கள் வாழ்விடங்களில், பணித்தளங்களில் சந்திக்கும் அனைவர் மீதும் நிபந்தனையற்ற அன்பு காட்டி மதிப்பு, ஏற்பு, காப்பு, அரவணைப்பு, மன்னிப்பு ஆகிய மதிப்பீடுகளின்படி வாழ்வதில் அக்கறை காட்டவும், எந்தச் சூழ்நிலையிலும் மனிதத்தை மறுதலிக்காமல், அதைக் காப்பவர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இயற்கையைக் கொடையாக ஈந்தளித்த இறைவா! எங்களுக்குப் போதுமான மழையைத் தந்து எம் வாழ்வை வளப்படுத்தவும், இயற்கையைப் பாதுகாப்பதில் நாங்கள் உம்மோடு ஒத்துழைக்கவும் நல்ல சூழல் உருவாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment