No icon

​​​​​​​பேராயர் பீட்டர் மச்சாடோ

கர்நாடக அரசின் மதமாற்ற தடைச்சட்டம்

கர்நாடக அரசின் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையானது, கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா அரசின் அறிக்கையை நான் ஊடகங்களில் படித்தேன். நாங்கள் இந்த செயல்பாட்டை பயனற்ற மற்றும் தேவையற்ற ஒன்றாக கருதுகிறோம். இதனால் நல்லது எதுவும் வெளிவரப்போவதில்லை. மதமாற்றம் குறித்த பயஉணர்வு, மதவிரோத உணர்வுகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணியில், இதுபோன்ற ஆய்வு மேற்கொள்வது உண்மையாகவே ஆபத்தானது. இதனால் எமது சமூகத்தின் வழிபாட்டு தலங்களும் அருள்பணியாளர்களும் மற்றும் அருள்சகோதரிகளும் அடையாளம் காணப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்படுவார்கள். நாங்கள் ஏற்கனவே நம் நாட்டின் வடக்கிலும், கர்நாடகாவிலும் அவ்வப்போது இதுபோன்று நடைபெறும் சம்பவங்களைப்பற்றி கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

எதற்காக கிறிஸ்தவப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் பற்றிய கணக்கெடுப்பை மட்டும் எடுக்க மாநில அரசு இந்தளவு முனைப்பைக் காட்டுகிறது. மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் ஸ்ரீபசவராஜ் பொம்மை, பரந்த மனநிலை மற்றும் அறிவுடையவர் என்று யாரை நாங்கள் உயர்வாக கருதுகிறோமோ, அவர் சமூகத்தின் அமைதி, ஒற்றுமை மற்றும் அமைதிநிறைந்த வாழ்வை கெடுக்க நினைக்கும் அடிப்படைவாத குழுக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து போவது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது.

கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் நடத்தப்படும் கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை குறித்து இந்த அரசாங்கம் கணக்கெடுக்கட்டும். இது கண்டிப்பாக, கிறிஸ்தவ சமூகம் இந்த நாட்டை கட்டியமைப்பதில் எந்தளவு சேவை புரிகிறது என்பதை பற்றிய உண்மையான சிந்தனையைத் தரும். எத்தனை மக்கள் இந்த கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்? ஒருவேளை, சில மதவிரோத குழுக்கள் கூறி வருவது போல மதமாற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மையானால், இந்தியாவில் மற்ற மதங்களோடு ஒப்பிடுகையில் இந்திய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதன் காரணம் என்ன?

நாங்கள் எப்பொழுதும் வலுக்கட்டாயமான, வஞ்சகமான மேலும் இலவசத்திற்கான மதமாற்றத்திற்கு எதிரானவர்கள். மேலும் நாங்கள் மிக உயர்ந்ததும், புனிதமுமான இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, சட்டப்படி வாழ்பவர்கள் என்பதை மீண்டும் தெரிவிக்கிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் எண் 25(26,29 மற்றும் 30) ஒவ்வொரு குடிமகனும்/குடிமகளும் தான் விரும்புகிற மதத்தை பயமின்றி, எவ்வித வற்புறுத்தலுமின்றி ஓதுவதற்கு, ஒழுகுவதற்கு மற்றும் ஓதிபரப்புவதற்கு உறுதி தரவில்லையா? குற்றவாளிகளை தண்டிக்க நாட்டின் அரசியலமைப்புச்சட்டம் மற்றும் சட்டத்துறையில் போதுமானளவு பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருக்கும்போது, நமக்கு மதமாற்றம் தடைச்சட்டம் தேவைதானா? மற்ற சட்டங்கள் அனைத்துமே அப்பாவிகளை வதைக்கவும், படுகொலை செய்யவும் வேட்டையாடுபவர்களின் கைகளில் இருக்கும் கருவிகள் போன்றவையே. ஒரு சில நாட்களுக்கு முன் சென்னை நீதிமன்றம், வெறுமனே ஆலயத்திற்கு செல்வது மற்றும் கிறிஸ்தவ அடையாளங்களை வரைவது, ஒருவர் மதம்மாறிவிட்டார் என்று அர்த்தமில்லை என்ற தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சமூகம் தேசப்பற்றுள்ளது. சட்டத்தின்படி வாழ்வது. எல்லாவற்றிக்கும் மேலாக நாட்டின் ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு சேவையாற்ற விரும்புவது. எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஊக்கமும் ஆதரவும் தேவை.

பேராயர் பீட்டர் மச்சாடோ

பெங்களூரு

(தமிழாக்கம்: பணி. ஜான் பால், நம் வாழ்வு)15.10.2021

Comment