No icon

அருள்பணி. P. ஜான் பால்

தூய ஆவியார் பெருவிழா தி.ப 2:1-11, உரோ 8: 8-17, யோவா 14: 15-16, 23-26

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பெந்தக்கோஸ்தே அல்லது தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நான், என் தந்தையிடம் சென்றதும் உங்களுக்கு ஒரு துணையாளரை கொடுப்பேன் என்று சொன்ன ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தான் தந்த வாக்குறுதியின்படி, தான் விண்ணகம் சென்ற பத்தாவது நாளில் தூய ஆவியாரைத் தம் சீடர்கள் மீது நெருப்பு நாக்கு வடிவில் பொழிகிறார். தூய ஆவியாரைப் பெறுவதற்கு முன்பு சீடர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் தெள்ளத் தெளிவாக காண்கிறோம். தங்கள் உயிருக்கு பயந்து, யூதர்களுக்கு அஞ்சி, தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை அடைத்து வைத்திருந்தார்கள். தங்கள் அடையாளங்களை மறைத்து, மீண்டும் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்பிச் சென்றார்கள். ஆனால், எப்போது  தூய  ஆவியாரைப் பெற்றார்களோ, அப்போது எதையும் எதிர்கொள்ள அவர்கள் தயாரானார்கள். இனிமேல் இந்த இயேசுவைப் பற்றி பேசினால் உங்களுக்கும் அதேநிலை தான் என்ற மிரட்டலுக்கு பயந்து அடைந்து கிடந்தவர்கள், தூய ஆவியாரைப் பெற்றபின்பு, எருசலேம் ஆலயத்தின் முன்பாக, நாங்கள் இனி இயேசுவைப் பற்றி மட்டுமே பேசுவோம் என்று துணிந்து சொன்னார்கள். அதுவரை உயிருக்கு பயந்து இருந்தவர்கள், தூய ஆவியாரைப் பெற்ற பின்பு தங்கள் மரணத்தை எந்த உருவத்திலும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.

இன்று நாமும் திருவருட்சாதனங்கள் வழியாக இதே தூய ஆவியாரைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இன்று எந்தவகையில் நாம் ஆண்டவர் இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ்கிறோம்? ஆண்டவர் இயேசுவுக்காக, அவர் கொண்டு வந்த நீதிக்காக, நாம் இதுவரை ஒரு முறையாவது அநீதியை எதிர்த்து  நின்று  இருக்கின்றோமா? என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் கூடி இருந்தவேளை, தூய ஆவியார் நெருப்பு நா வடிவில், அங்கிருந்த சீடர்கள்மேல் இறங்கி வர, அவர்கள் எல்லாருக்கும் புரியும் வண்ணம் பல்வேறு மொழிகளில் பேசினார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் ஒருவர்தான் ஆனால், அவர் தரும் கொடைகள் பல, அவர் தரும் திருத்தொண்டுகள் பல. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர் மட்டுமே, இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட முடியும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எல்லாம் வல்லவரே! உமது திரு அவை உதித்த நாளை, இன்று நாங்கள் கொண்டாடும் இவ்வேளையில், உமது திருப்பணியாளர்கள், தாங்கள் பெற்றுக் கொண்ட தூய ஆவியாரின் கொடைகளுக்கு ஏற்ப, அனைவருக்கும் திருத்தொண்டாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புத் தந்தையே! எம் நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், அனைவரும் இந்நாட்டு குடிமக்களே என்று உணர்ந்து, எம் நாட்டுத் தலைவர்கள், அனைவருக்குமான நல்லாட்சியைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் பரம்பொருளே! திருவருட்சாதனங்கள் வழியாக, உமது தூய ஆவியாரைப் பெறுகின்ற நாங்கள், அந்த ஆவிக்குரிய மனநிலையோடு, எங்கள் குடும்பங்களில் ஒருவரையொருவர் மன்னித்து, அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் விண்ணகத் தந்தையே! பங்கு என்னும் இந்த சிறிய திரு அவையில், எங்கள் பங்குதந்தையோடு இணைந்து, எங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, அனைவரும் சமம் என்ற உணர்வோடு, நாங்கள் உமது பணிசெய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. என்றும் வாழ்பவரே! மனிதரின் கர்வத்தால், ஆணவத்தால், போர்கள் சூழ்ந்து காணப்படும் இவ்வுலகில், உம் திருமகன் கொண்டுவந்த அமைதி என்றும் நிலைத்து தங்கி, மகிழ்வளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment