அருள்பணி. P. ஜான் பால்
கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா தொநூ 14:18-20, 1 கொரி11:23-26, லூக் 9:11-17
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Thursday, 09 Jun, 2022
திருப்பலி முன்னுரை
இன்று நாம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மொழிந்த வார்த்தைகளில் அன்று தொடங்கி இன்றும் விமர்சனத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கும் இறைவார்த்தை என்றால் அது இதுதான்: “இதோ எனது சதை; இதோ எனது இரத்தம் இதை உண்டு பருகி நிலைவாழ்வை பெற்றுக்கொள்ளுங்கள்”. இவ்வார்த்தைகளை சொன்னவுடனேயே அவரது சீடர்களுள் பலர் இவரது பேச்சு மிதமிஞ்சி போகிறது என்று சொல்லி அவரை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றத்திற்கு பிறகு தொடக்க திரு அவையானது ஆண்டவர் இயேசு ஏற்படுத்திய நற்கருணை கொண்டாட்டத்தை கொண்டாடுவதன் வழியாகவே ஒன்றிணைக்கப்பட்டது. ஆண்டவர் இயேசுவே உண்மையான உணவு என்பது அவரது பிறப்பு நிகழ்விலேயே நமக்குச் சொல்லப்படுகிறது. ‘அப்ப வீடு’ என்று பொருள்படும் பெத்லகேமில் பிறந்த ஆண்டவர் இயேசுவை, கால்நடைகள் உணவு உட்கொள்ளும் அந்த தீவனத் தொட்டியில், சிறிய துணியில் பொதிந்து அன்னை மரியாள் வைத்திருக்கிறார். தூய உள்ளத்தோடு இந்த உணவை பெறவேண்டும் என்று வந்த இடையர்களும், ஞானிகளும் அதை பெற்று மகிழ்ந்தார்கள். ஆனால், தீய உள்ளத்தோடு தேடிய ஏரோதுவுக்கு இவ்வுணவைப் பெற வாய்ப்பில்லாமல் போனது. ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடும் இன்று நாமும் தூய உள்ளத்தோடு இறைவனை நாடி வருகிறபொழுது, அவர் உணவாக வந்து நம்மை ஆசீர்வதிப்பார். தீய உள்ளத்தோடு அவரை பெற்றோம் என்றால் அதுவே நமக்கு சாபமாக மாறிவிடும் என்ற பவுலடியார் அனுபவங்களை நினைவுகூர்ந்தவர்களாய் இப் பெருவிழா திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை
கடவுளின் உன்னத அர்ச்சகராக இருந்தவர் அரசரும், குருவுமான மெல்கிசெதேக். தனது பயணத்தின் பொழுது ஆபிரகாமை சந்திக்கிறார். ஆபிரகாம் தனக்கு இருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுத்து கடவுளின் ஆசியை இவர் வழியாக பெற்றுக்கொண்டார் எனக் கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
நான் கடவுளிடமிருந்து எதை பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களுக்குக் கொடுக்கிறேன். இது எனது உடல் இது எனது இரத்தம், என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொன்ன ஆண்டவரின் செயலை நாம் நினைவு கூறும்போதெல்லாம் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறோம் என்றுரைக்கும் பவுலடியாரின் வார்த்தைகளை இவ்விரண்டாம் வாசகத்தில் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. வாழ்வு வழங்குபவரே! உம் திருமகனின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவினை கொண்டாடும் இந்நாளில், உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொன்ன உன் திருமகனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து இவ்வுலகில் இறையாட்சியை பரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம்மை வழி நடத்துபவரே! எங்களுக்காக தனது கடைசி சொட்டு இரத்தத்தையும், தண்ணீரையும் தந்த உம் திருமகனைப் போலவே, எங்களை ஆட்சி செய்யும் தலைவர்களும் தன்னலம் கொள்ளாமல் மக்கள் நலனில் அக்கறைகொண்டு செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எல்லாம் வல்லவரே! ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தை அனுதினமும் உட்கொள்ளும் நாங்கள், அவர் கற்பித்த இறையாட்சியின் பண்புகளைக் கடைபிடித்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பரிவுள்ளம் கொண்டவரே! வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணையை பெறவேண்டும் எனும் திரு அவையின் சட்டத்தைக் கடைபிடித்து, நற்கருணையை உட்கொண்டு நாங்கள் வாழ்வடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. அமைதியை தருபவரே! ஆபிரகாமை உலகிற்கு ஆசீர்வாதமாய் கொடுத்தீர். அந்த ஆபிரகாம் மெல்கிசெதேக் குருவிடம் ஆசீர்வாதம் பெற்றார். நாங்களும் உமது திருமகனின் பதிலாளாக இருக்கும் எங்கள் பங்குத்தந்தையின் ஆசியைப் பெற்று, நலமடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment