No icon

அருள்பணி. P. ஜான் பால்

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 1 அர 19: 16, 19-21, கலா 5: 13-18, லூக் 9: 51-62

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அழைப்பில் உயர்ந்தது - தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. ஆண்டவரின் அழைப்பில் இது சிறப்பு வாய்ந்தது - இது சிறப்பில் குறைந்தது என்று எதுவும் இல்லை. ஆண்டவரின் அழைப்பு அனைவருக்குமானது. ஆண்டவரின் அழைப்பு அற்புதமானது. குருத்துவம் என்பது ஒரு அழைப்பு என்றால், திருமணம் என்பது ஒரு அழைப்பு. துறவறம் என்பது ஒரு அழைப்பு என்றால் இல்லறம் என்பது ஒரு அழைப்பு. இவ்வாறு, அனைவருமே ஆண்டவரால், அவர் பணிசெய்ய அழைக்கப்படுகின்றோம். அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவரும் அர்ப்பணத்தோடு, பிரமாணிக்கத்தோடு இறுதிவரை அந்த அழைப்பில் நிலைத்திருக்கிறோமா என்பதைப்பற்றி சிந்திக்கவே இன்று ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இறைவாக்கினர் எலியா வழியாக ஆண்டவரின் அழைப்பை பெற்ற எலிசா, தன் பெற்றோரைச் சந்தித்து, பிரியாவிடை பெற்று வருகிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு எலியா கடவுள் எனக்கு சொல்லியவாறு நான் செய்துவிட்டேன் என்று சொல்ல, ஆண்டவரது அழைப்பின் உன்னதத்தை புரிந்துகொண்ட எலிசா, தன் நிலத்திற்கு திரும்பிச் சென்று, ஏர்பூட்டிய தனது மாடுகளை அடித்து, கலப்பையை உடைத்து, மக்களுக்கு விருந்து படைத்துவிட்டு, ஆண்டவரின் பணி செய்ய ஆனந்தமாய் செல்கிறார். உங்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுவிட்டு என்னை பின் செல்லுங்கள் என்று சொல்லி ஆண்டவர் இயேசு தன் திருத்தூதர்களை அழைத்தார். ஆனால், அந்த திருத்தூதர்கள், ஆண்டவர் இயேசுவின் இறப்பிற்கு பிறகு, மீண்டும் அந்த படகுகளையும், வலைகளையும் தேடிச் சென்றார்கள். எப்பொழுது ஆண்டவரது அழைப்பின் உன்னதத்தை உணர்ந்தார்களோ, அப்பொழுதே தங்கள் உயிரை துச்சமென மதித்து, இறையரசைப் பற்றி அறிவித்தார்கள். இன்று குருக்கள், அருள் சகோதரிகள், பொதுநிலையினர் என, நாம் பெற்றிருக்கிற அழைப்பில் அர்ப்பணத்தோடு, பிரமாணிக்கத்தோடு நிலைத்திருந்து, ஆண்டவரது பணியை செய்கிறோமா என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் கட்டளைப்படி, இறைவாக்கினர் எலியா, தனக்குப் பின்வரும் இறைவாக்கினராக எலிசாவை அருள் பொழிவு செய்கிறார். நிலத்தை உழுது கொண்டிருந்த எலிசா ஆண்டவரின் அழைப்பை ஏற்று, அவரது பணியை செய்ய சென்றார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவர் இயேசு, நம் அனைவரையும் பாவம் என்னும் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, உரிமை வாழ்விற்கு அழைத்துள்ளார். மீண்டும் பாவம் செய்து அடிமைகளாக வாழாமல், தூய ஆவியின் மக்களாய் வாழ்வோம் என்று கூறும் புனித பவுலடியாரின் அனுபவங்களை கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்பு தந்தையே! உமது பணியை செய்ய நீர் அழைத்திருக்கும், உமது திரு அவையின் திருப்பணியாளர்கள் முழு உள்ளத்தோடு, விருப்பத்தோடு, வாஞ்சையோடு உமது அரசை எங்கும் பரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை வழி நடத்துபவரே! உமது மக்களை நல்வழிப்படுத்த, நீர் தேர்ந்தெடுத்துள்ள எம் நாட்டுத் தலைவர்கள், உமது இறையாட்சியின் விழுமியங்களை பின்பற்றி, வேறுபாடுகள் அற்ற சமத்துவம் மிகுந்த நாட்டை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் பரம்பொருளே! திருமணம் என்னும் அழைப்பை பெற்று, அதன் மூலம் உமது பணியை செய்து வரும் உமது மக்களை நீர் ஆசீர்வதியும். தங்கள் இல்லற வாழ்வின் மூலம் உம்மை அவர்கள் பிறருக்கு பிரதிபலிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கமுள்ள தந்தையே! எம் பங்கிலிருந்து குருவாக, அருள் சகோதரிகளாக மாறிட, நீர் தரும் அழைப்பை புரிந்து, ஏற்றுக்கொண்டு, உமது இறையாட்சி பணியை விருப்பத்தோடு செய்திட ஆர்வமுள்ள இளைஞர், இளம் பெண்கள், முன்வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நாங்கள் வாழும் இடங்களில் தாக்கப்பட்டாலும், வன்முறைக்கு ஆளானாலும், உமது திருமகனின் உயரிய தியாகத்தை நினைவு கூர்ந்து, உமது பணியை நிறைவாக செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment