புனித தோமா
இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா எசா 52:7-10, (அ) திப 10:24-35 எபே 2:19-22, யோவா 20:24-29
திருப்பலி முன்னுரை
இந்தியாவின் திருத்தூதரான திருத்தூதர் தோமாவின் பெருவிழாவை இன்று இந்திய கத்தோலிக்கத் திரு அவை அக்களிப்புடன் கொண்டாடி மகிழ்கிறது. 1950 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 52-ல், இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கால்பதித்து, இன்றைய தமிழகம் மற்றும் கேரளாவின் இயேசுவைப் பறைசாற்றி, அவர்தம் விசுவாச அறிக்கையான ‘என் ஆண்டவரே! என் தேவனே!’ என்ற அடிச்சுவட்டில் உயிர்ப்புக்குச் சான்று, திக்கெட்டும் நற்செய்தி அறிவித்து, இறுதியில் சென்னையிலுள்ள புனித தோமையார் மலையில் மறைச்சாட்சியாக 1972-ல் தமது இன்னுயிரையும் ஈந்து சான்று பகர்ந்தவர் திருத்தூதர் புனித தோமையார். இதோ, என் கைகள் என்று சொன்ன ஆண்டவரின் காயங்களில் தன் விரல்களைப் பதிந்து, அவர்தம் உயிர்ப்பிற்குச் சான்று பகர்ந்த அவர், நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் என்று ஒற்றை வரியில் தன் விசுவாசத்தை அறிக்கையாக வெளியிடுகின்றார். தொடக்கத் திரு அவையில் புனித தோமாவின் உயிர்ப்பு அனுபவமே மிகப்பெரிய மூலதனமாகவும் மூல ஆதாரமாகவும் அமைந்தது. நாமும் செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா 11: 16 என்று புனித தோமா துணிச்சல் மிக்க திருத்தூதராக மிகுந்த பேரன்போடு விளங்குகிறார். இயேசுவின் மீதான இவர்தம் அன்பும் அக்கறையும் கீழை நாடுகளின் மாபெரும் திருத்தூதராக விளங்க களம் அமைத்தது. இயேசுவின் காயங்களில் பதிந்த விரல்கள் இந்தியாவில் நற்செய்தியை விதைத்தது. அன்னை மரியாவின் மீதான இவர்தம் அன்பு, தொடக்கத் திரு அவையில் மரியன்னைமீதான பக்தி வளர பேருதவி செய்தது. திருத்தூதர் தோமா கொண்டு வந்ததாக நம்பப்படுகின்ற, புனித லூக்கா வரைந்த அன்னை மரியின் அழியாத ஓவியம் இன்றும் அதற்குச் சான்று. இவ்வாண்டு திருத்தூதர் இந்திய மண்ணில் மறைசாட்சியாக மடிந்ததன் 1950 ஆண்டு என்கிறபோது இது மாபெரும் கொண்டாட்டமாக இந்தியாவெங்கும் கொண்டாடப்படவேண்டும். இவ்வகைகயில் நாமும் இத்திருப்பலியில் சிறப்பாகப் பங்கேற்று புனித தோமையாரின் வழியாக உலகத் திரு அவைiயும் நம் விசுவசத்தையும் புதுப்பித்து கூட்டியக்கத் திரு அவையாக பயணிப்போம்.
முதல் வாசக முன்னுரை
நூற்றுவர்தலைவரான கொர்னேலியுவின் இறைவனின் அறிவுறுத்தலின்படி, திருத்தூதர் பேதுருவை இல்லத்தில் வரவேற்று அவர்தம் திருவுரையை ஆவலோடு கேட்கிறார். கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை, ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவரே ஏற்புடையவர் என்று திரு அவைக்கு அறிவுறுத்தும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள், கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், கிறிஸ்துவை மூலைக்கல்லாகக் கொண்ட கட்டடம் என்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பெருமைப்படுத்தும் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய இத்திருமடலைக் கேட்போம்.
மன்றாட்டுகள்
1. எங்கும் வாழ்பவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் என அனைவரும் புனித தோமையாரின் உயிர்ப்பு அனுபவங்களை உள்வாங்கி, உலகெங்கும் நற்செய்தியை தங்களது வாழ்வால் இவ்வுலகிற்கு அறிவித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. விடுதலை தருபவரே! அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை காப்பாற்றியது போல, வல்லரசு நாடுகளின் அதிகாரப் பிடியில் சிக்கி, தங்களின் அடையாளங்களை இழந்து வரும் நாடுகளுக்கு நீர் விடுதலைதந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அறுவடையின் ஆண்டவரே! புனித தோமையாரின் மறைசாட்சியாக மடிந்ததன் 1950 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்திய மண்ணில் உம் மக்களின் ஆன்மீக தாகத்தை தணிக்க, ஆர்வமுள்ள பல இளைஞர் மற்றும் இளம் பெண்கள், குருக்களாக, துறவிகளாக மாறிட முன்வரவேண்டுமென்றும் புனித தோமையார் வழி நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லாம் வல்லவரே! மதவாத சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் கரங்கள் உயர்ந்து வரும் இந்நேரத்தில், எங்களின் வாழ்வு ஓநாய்கள் நடுவே ஆடுகள் போன்று இருந்தாலும், உமது தெய்வீக பலம் எங்களை ஆட்கொண்டு வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment