No icon

ஜூலை 31-07-2022 வழிபாட்டுக் குறிப்புகள்

ஆண்டின் பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு சஉ 1:2, 2:21-23, கொலோ 3:1-5, 9-11, லூக் 12:13-21

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 18 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ‘‘மிகுதியான உடைமைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’’ என்று கூறுகிறார். எதற்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறுகிறார். பண்டைய கிரேக்க மக்களை பொறுத்தவரை, இறந்து பாதாளத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்லுகிற ஆன்மாக்கள், தங்கள் உயிருக்கு ஈடாக பொன்னையோ, பொருளையோ அந்த பாதாளத்தில் இருக்கும் கடவுளிடம் கொடுத்து விட்டால், மீண்டும் உயிர் பெற்று வாழ்விற்கு வருவார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. இதுபோன்ற நம்பிக்கையை யூதர்களும் கொண்டிருந்தார்கள், எவரொருவர் அதிகமான செல்வங்களை வைத்திருக்கிறாரோ, கால்நடைகளை வைத்திருக்கிறாரோ, மக்கட் செல்வங்களைப் பெற்றிருக்கிறாரோ, உடைமைகளை வைத்திருக்கிறாரோ அவரே இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். இவரைப் போன்றோர் மட்டுமே விண்ணக வாழ்வில் நுழைய முடியும் என்று நம்பியிருந்தார்கள். எனவே தான், உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று அந்த பணக்கார இளைஞனிடம் சொன்னவுடனேயே, அவன் முகவாட்டத்தோடு சென்றான். ஆண்டவர் இயேசு இந்த சிந்தனையை மாற்றுகிறார். பொன்னையும், பொருளையும் மிகுதியாய் சேர்ப்பதால் உங்களுக்கு நிலைவாழ்வு வந்துவிடாது. மாறாக, பிறரோடு பகிர்ந்து வாழ்ந்து, புண்ணியங்களைச் சேர்க்கின்றபோது, உங்களுக்கு நிலைவாழ்வு வரும் என்று கூறுகிறார். ஆண்டவர் இயேசுவே என் ஒப்பற்ற செல்வம் என்னும் பவுலடியாரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, நம் கடவுளைத்தவிர, இவ்வுலகில் மிகப் பெரிய செல்வம் எதுவுமில்லை என்றுணர்ந்திட இஞ்ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

ஒருவர் ஞானத்தோடும், அறிவோடும் உழைத்து சேர்த்த சொத்துக்களை அனுபவிக்காமல், உழைக்காத ஒருவருக்கு விட்டுச் செல்லும்போது, அவர் உழைத்த உழைப்பு, சேர்த்த சொத்து அனைத்துமே வீண் என்று கூறும் இம்முதல்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கிறிஸ்துவிற்கு சொந்தமானவர்கள். கிறிஸ்துவே நமக்கு வாழ்வு தருகிறார். எனவே, வேறுபாடுகளை களைந்து, மேலுலகு தருபவற்றை பெற்று, நல்லவர்களாய் வாழ்வோம் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்பு தந்தையே!  உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் இவ்வுலக ஆசைகளுக்கும், உடைமைகளுக்கும் அடிபணிந்து போகாமல், எவ்வித சோதனைகளையும் உமது வல்லமையால் வென்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை ஆள்பவரே!  எம் நாட்டை ஆளும் தலைவர்கள், தங்களின் குடும்பங்களையும், உறவுகளையும், சொத்துகளையும் பெருக்குவதில் ஆர்வம் காட்டாமல், மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்லவரே!  எங்கள் பங்கு தந்தையை நிறைவாக ஆசீர்வதியும். பங்கு மக்களாகிய நாங்கள் எங்களிடம் இருப்பவற்றை எங்களுக்கு மட்டுமே சேர்த்துக்கொள்ளாமல், பிறரோடும் பகிர்ந்து வாழும் மனதுள்ளவர்களாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம்பொருளே!  சொத்துக்காக, நிலத்திற்காக, சண்டையிட்டு பிரிந்து வாழும் சகோதர  சகோதரிகள், உம்மை தவிர அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து, ஒரே குடும்பமாக இணைந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. வரங்களை தருபவரே!  மாதத்தின் இறுதிநாளில் இருக்கிறோம். நீர் தந்த இந்த மாதத்திற்காகவும், தரப்போகிற புதிய மாதத்திற்காகவும் உமக்கு நன்றி. நீர் தந்த அதே அன்பு, ஆசீர்வாதம் இப்புதிய மாதத்திலும் எம்மோடு தங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

Comment