No icon

போதை நமது பாதையல்ல - 21.03.2021

போதை நமது பாதையல்ல  -பேரா. D. பிலிப் & பேரா. இம்மாகுலேட்

"எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ

அதற்கே நீங்கள் அடிமைகள்" (உரோ 6:16)

 

அடிமைத்தனம் எந்த வடிவில் வந்தாலும் அது அகற்றப்பட வேண்டியதொன்றே. அதிலும் போதைக்கு ஒருவன் அடிமையாகும் பட்சத்தில் அது அவனை எல்லாவகை (உடல், உள்ளம், ஆன்மா) பாதிப்புகளுக்கும் இட்டுச் செல்லும்.

முதலில் போதைப் பொருள் என்பவை யாவை என்பது பற்றி நமக்கு தெளிவு தேவைப்படுகிறது. சிலர் கூறுவதுபோல அபின், கஞ்சா, பிரவுன் சுகர் போன்றவை மட்டுமல்ல, மாறாக ரம், விஸ்கி, பிராந்தி, குட்கா ஆகியவையும் போதைப் பொருட்கள் தான். இவற்றின் பிடியில் யார் சிக்கினாலும் மீண்டுவருவது மிகக்கடினமானது.

போதை அடிமைத்தனம் உருவாக்கும் வழிகள்

நிறைய இளையோர் தங்களது கூடாத நட்பால் போதைப் பொருட்களுக்கு அறிமுகம் ஆகிறார்கள். ஊடகங்களின் விளம்பரங்களும் இந்த அடிமைத்தனத்திற்கு வித்திடலாம். இதில் கொடுமை என்னவென்றால்போதையில்லா தமிழகம்என வாய்கிழிய பேசும் அரசே, மதுக்கடைகளை வீதிக்கு வீதி திறந்து வைத்துள்ளது. மேலும்களவும் கற்று மறஎன்பதற்கிணங்க, சிலர் இதில் என்னதான் இருக்கிறது என ஒருமுறை சோதித்துப் பார்க்க வருவார்கள். இறுதியில் இந்த அடிமைத்தனத்தில் விழுந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. எனவேதான் விவிலியம்,

உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால்வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். (திபா 119:101) என்கிறது.

எனவே, இவற்றில் கால்வைக்காமல் காத்துக்கொள்வது அவசியம். பான்பராக் போன்ற போதை பொருட்களை இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை பொது இடங்களில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த பான்பராக் பற்றித் தான் என்னவோ விவிலியம்,

"தீங்கு அவர்களின் வாயில்

இனிப்பாய் இருப்பினும்,

நாவின் அடியில் அதை அவர்கள்

மறைத்து வைப்பினும்,

இழந்துபோகாமல் அதை

அவர்கள் இருத்தி வைத்தாலும்,

அண்ணத்தின் நடுவே அதை

அடைத்து வைத்தாலும்,

வயிற்றிலே அவர்களின்

உணவு மாற்றமடைந்து,

அவர்களுக்கு விரியன் பாம்பின்

நஞ்சாகிவிடுமே" (யோபு 20:12-14) என போதைப் பொருட்களின் விஷத்தன்மைப் பற்றி எச்சரிக்கிறது. அதுபோலவே, திராட்சை மதுவும் தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும் என எச்சரிக்கும் விவிலியம் (எபே 5:18), மதுவும்தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும். பிறகோ அது பாம்பு போலக்கடிக்கும், விரியனைப் போலத் தீண்டும்" (நீமொ 23:31-32) என அதன் விஷத்தன்மைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

காந்தியடிகள் கருத்து:

தேசப்பிதா காந்தியடிகளும் மதுவைத்தான் தீமைகளுக்கெல்லாம் ஆணிவேரும், அடித்தளமுமாக கருதினார். ஆகவேதான் அவர் "இந்த நாட்டின் சர்வாதிகாரியாக நான் ஒரே ஒரு மணி நேரம் இருந்தால், முதல் வேலையாக மதுவை ஒழிக்கும் அரசாணைக்குத்தான் கையெழுத்திடுவேன்" என்றார். அவரது பார்வையில் மதுப்பழக்கம், கொலை, விபசாரத்தைவிட கொடுமையானது எனத் தெரிந்தது. காரணம் மதுவின் போதை இந்தக் கொடிய குற்றங்களுக்கு இட்டுச் செல்லும் எனக் கூறினார்.

நிகழ்ச்சி:

சில வருடங்களுக்கு முன்பு மாடியறையில் ஒரு நடுத்தர வயதுப்பெண் கொடூரமாக கொலையுண்டு கிடந்தாள். காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் கொலைக்கான காரணத்தை கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இறுதியில் அந்த அறையில் அருந்திவிட்டு வைக்கப்பட்ட தேநீர் கோப்பை ஒன்றைக் கண்டு அதுபற்றி கொலையுண்டவளின் கணவனை விசாரித்தனர். அப்போதுதான் பெண்ணின் கணவருக்கு கொலையாளியை அடையாளம் காட்ட முடிந்தது.

இவர்களுக்கு நெருக்கமான நண்பரின் இளம்வயது வாலிபன் தனக்கு மன உளைச்சல் வரும்போதெல்லாம் இந்த சகோதரியின் வீட்டிற்கு வந்து தனது மனவேதனையைக் கூறி ஆறுதல் பெறுவதுண்டு. அப்போது இந்தப் பெண்மணி இவனுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்து அவனுக்கு ஆறுதல் கூறுவதுண்டு. ஆனால், இவனுக்கு போதை பழக்கம் இருந்தது இந்தக் குடும்பத்தினருக்குத் தெரியாது.

குறிப்பிட்ட நாளில் இவனுக்கு போதைப் பொருள் வாங்க பணம் தேவைப்பட்டிருக்கிறது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் அதைக் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பது யதார்த்தம். அதை எப்படியாவது பெற்றுவிட  என்ன செய்தாவது அடைந்து கொள்ள முயலுவார்கள். அதற்காக கொலை செய்யக்கூட தயங்கமாட்டார்கள். அன்று இந்த வாலிபனின் நிலையும் அதுவாகத்தான் இருந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த வாலிபன் வழக்கம் போல் தேநீர் கேட்டுள்ளான். அந்த சகோதரி தேநீர் தயாரிக்கையில் அறையில் இருந்த டேப்ரிக்காடர் அவன் கண்களில் தென்பட்டது. அதை விற்றால் அந்தப் பணத்தைக் கொண்டு போதைப் பொருள் வாங்கலாம் என நினைத்தவன், தன்னை உயிருக்குயிராக நேசித்த பெண்மணியைப் பின்னாலிருந்து தாக்கிக்கொன்று, டேப்ரிக்காடரை எடுத்துச் சென்றிருந்தான். போதையின் விளைவுகளில் ஒன்றுதான் இது.

எப்படி வெளி வருவது:

இறைவார்த்தையை நமக்குள் வைத்தால் போதை நம்மைத் தீண்டாமல் பாதுகாக்க முடியும். விழுந்து விட்டால் வெளிவர  முடியும்.

போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு வாலிபன் ஆற்றுப்படுத்தினரிடம் வந்தபோது அவர், உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு, உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன் (திபா119:11) என்ற வசனத்தை வாசித்து தியானித்து மனப்பாடம் செய்ய வைத்தார். இதில் உமது வாக்கை என்பது இயேசுவைக் குறிக்கிறது. (யோவா 1:14, திவெ 19:13) என்பதை உணர வைத்து, இனி போதைப்பொருள் அருகில் வரும்போது உன் இதயத்திலிருந்து இயேசு உன்னை பார்க்கிறார், என்பதை மறவாதே என்று கூறி அவன் திருந்தி வாழ உதவமுடிந்தது. அதுபோல (கலா 5:24-25) வசனமும் இந்த பழக்கங்களை சிலுவையில் அறைய உதவும்.

பெற்றோர் தங்கள் இளையோரோடு அதிக நேரம் செலவழித்தால், இந்தப் பழக்கத்தில் இவர்கள் விழாமல் பாதுகாக்கும். அதுபோல உளவியல், மருத்துவ ரீதியான உதவியும் இவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும். இளையோருக்கான சிறப்பு கருத்தரங்குகள், தியானங்கள் மூலம் இந்த போதையின் பின்புலத்தைக் கண்டறிந்து உதவி செய்து இவர்களை நல்வழிப்படுத்த இயலும். போதை மறுவாழ்வு மையங்களும் இவர்களுக்கு உதவலாம்.

                                      (இன்னும் கதிர் வீசும்)  

Comment