No icon

பேரா. S. பிலிப் &  பேரா. இம்மாகுலேட்

உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு (லூக் 11:34)

கண் என்பது உடலில் மிக முக்கியமான உறுப்பு, அதன் பயன்பாடுகள் அதிகம். அதன் முக்கியத்துவத்தை ர்ந்து அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு என்பது மிகமிக முக்கியமான செய்தி. இப்போதெல்லாம் எந்த இருட்டிலும் தங்கள் மொபைல், லேப்டாப் அல்லது கம்பியூட்டர் போன்ற கருவியின் துணையோடு இருளிலும் கண்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒருநாள் இரவில் தங்கள் மகள் மொபைலை பயன்படுத்துவதை அறிந்து அதைக் கண்காணித்த பெற்றோர் கண்டுகொள்ள பெரும் அதிர்ச்சி அடைந்தனர். படுக்கச் சொல்லும்போது, அறையிலும் அவள் கையிலும் மொபைல் இல்லை. ஆனால், இரவின் நடுசாமத்தில் கவனித்துக் கொண்டிருந்தபோது உள்ளாடைக்குள் மொபைல் சத்தமில்லாமல் வெளிச்சம் அடிக்க, அதை எடுத்து முழுவதுமாக போர்வையால் மூடிய நிலையில் பேசிக்கொண்டிருக்கிறாள். இப்படியும் நடக்க முடியுமா என்று அந்த பெற்றோர்களால் நம்பவே முடியவில்லை.

கண் உடலுக்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்குமே அதுதான் கலங்கரை விளக்கு. அதனை சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். மொபைலைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளை ஏற்கனவே எடுத்துச் சொல்லியிருந்தோம். கண்ணின் கருவிழி மட்டுமல்ல; விழித்திரையே பாதிக்கப்படும் அதைச் சரிசெய்ய வழி கண்டுபிடிக்கவில்லை என்று பதிவு செய்திருந்தோம்.

இன்று கண் எப்படி உடலுக்கு விளக்காகிறது. அதைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.

உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்; அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாய் இருக்கும்” (லூக் 11:34).

கண் கெட்டுப்போவது எப்போது?

i. கண்ணை தவறான முறையில் பயன்படுத்தும்போது:-

கண்ணின் பார்வை பாதிக்கிறது. ஆரம்ப காலங்களில் கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி சரி செய்யலாம். ஆனால், விழித்திரையே பாதிக்கப்பட்டால் சரி செய்ய முடியாது.

ii. தொலைக்காட்சி, மொபைலில் தொடர்ந்து பார்த்தல், சரியான வெளிச்சம் இல்லாத இடத்தில் சிரமப்பட்டு படித்தல், படுத்துக்கொண்டே படித்தல், ஓடும் வாகனத்தில் படித்தல் இதுபோன்ற செயல்பாடுகள் காலப்போக்கில் கண்பார்வையைப் பாதிக்கின்றன.

iii. கண்ணில் வலியோ, நீர் வடியும் நிலையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

i. கண்ணாடி பயன்படுத்த மருத்துவர் ஆலோசனை கூறினால், அவர்கள் அறிவுரைப்படி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு, மருத்துவர் ஆலோசனையைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், கண்கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சிறு தூசிதானே விழுந்தது, லேசாகத்தானே அடிபட்டது, ஒரு நேரம் ஒரு சொட்டு மருந்துவிடாவிட்டால் என்ன? இன்றைக்கு மட்டும் தூங்காமல் விழித்திருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த வயதில் மொபைலில் பார்த்து அனுபவிக்காமல் வயதான பிறகா பார்க்க முடியும் என்பன போன்ற அலட்சிய போக்கு கண் பார்வையைப் பாதிக்கச்செய்யும்.

தவிர்க்க வேண்டியவை எவை?

மனிதனை விலங்கிடாமலே அடிமைப்படுத்துவது டிவி மெகா தொடர்கள், வீடியோ கேம்ஸ், யுடியூப் பதிவுகள் போன்றவை. மெகா தொடர் பார்த்தால் அடுத்த நாளில் அதன் தொடர் செய்தியைப் பார்க்கும் வரை மனம் அதைச் சுற்றியே அலைமோதிக் கொண்டிருக்கும். தூக்குப் போடும் இடத்தில் நிறுத்தினால், ஐயோ! செத்தானா என்னவோ என்ற எண்ணம் திரும்பத்திரும்பத் தாக்கும். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு சஸ்பென்ஸ் உடன்தான் தொடரும் போடுவார்கள். அது வியாபார நோக்கு. ஆனால், நாமோ அதற்கு அடிமைகள் ஆகிறோம்.

அடுத்தது ஆபாச இலக்கியம் புரோனோகிராபி எனும் செக்ஸ் பற்றிய தகவல் தரும் காட்சிகளைப் பார்த்து. ஆன்மாவை இழக்கும் அபாயம் அதிகமாகிறது. இது குறித்த பாவப்பட்டியலை புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் முதல் அதிகாரத்தில் குறிப்பிடுவார். சாவுக்குரிய வழியில் நடப்பது மட்டுமல்ல; அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள். எனவே, இத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கும்போது, சீராக் ஞானி சொல்வது போல,  “பாம்பைக் கண்டு ஓடுவதைப்போல பாவத்தைவிட்டு ஓடிவிடு; நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்; அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை; அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்” (சீஞா 21:2).

இப்படிப்பட்ட சூழலில் செபிக்க ஓர் ஆலோசனை:-

வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும் (திபா 119: 37). இந்த செபம் வீணானவற்றைத் தவிர்த்துவிட ஆலோசனை வழங்குகிறது.

எப்படி கண்களைப் பாதுகாப்பது?

வீணானவற்றை நாம் பார்க்காதது மட்டுமல்ல; “கண்ணிருந்தும் குருடராய்; காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்களைப் புறப்பட்டு வரச்செய்” (எசா 43:8) என்று எசாயா இறைவாக்கினர் சொன்னது மட்டுமல்ல; கண்ணை ஒளிரச் செய்யும் ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன (திபா 19:8). ஆம், “அவர் உள்ளத்தை உயர்த்துகிறார்; கண்களை ஒளிர்விக்கிறார்; நலமும் வாழ்வும் ஆசியும் அருள்கிறார்” (சீஞா 34:17). இதுபோன்ற வாக்குறுதிகளைப் பற்றிக்கொண்டு வாழும்போது, கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நிகழ்ச்சி:

நண்பர்கள் பலர் சேர்ந்திருந்து எந்த பேஸ்ட் பயன்படுத்துகிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நபர் மட்டும்மோசே பேஸ்ட்என்று சொன்னார். அதற்குக் காரணம் கேட்டபோது, உப ஆகமம் (இணைச் சட்டம் , பழைய மொழி பெயர்ப்பு) 34: 7 இல் மோசே இறக்கும் போது அவருக்கு நுற்றி இருபது வயது. அவர் இறக்கும் வரை கண்கள் மங்கினதுமில்லை; பற்கள் உதிர்ந்ததுமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால், அந்த வாக்குறுதியைச் சொல்லி தினமும் செபித்தால் கண்பார்வையைக் காத்துக்கொள்ள முடியும் என்று சொன்னார் ஒருவர். அது எப்படி பற்கள் உதிராதா? கண்கள் மங்காதா? மோசே வாழ்வில் நடந்தது என்றால் உங்களுக்கும் நடக்குமா? யோசுவா 1:5 இன்படி, “மோசேயுடன் நான் இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்என்று சொல்லியுள்ளபடி அந்த வாக்குறுதியை 2 கொரி 1:20 இன்படி நாமும் உரிமையாக்கிக் கொள்ளலாம், ‘ஆமென்என்று அந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டால்போதும். சவாலாக சொன்ன அந்த வார்த்தைகள் அந்த நபரின் வாழ்வில் இன்றும் உண்மையாக நிறைவேறி வருகின்றன. நீங்களும் வாக்குறுதிகளைப் பின்பற்றி, வாழ்ந்து பாருங்கள். நிச்சயமாய்க் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கண்ணினால் பாவம் செய்யாமல் பாதுகாக்க இயேசு சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா?

திருச்சட்டத்தின் ஒளியில் நடக்க வேண்டும். நம்பிக்கையால் புதுப்பார்வை பெற வேண்டும். உலகத்தின் ஒளியாம் இயேசுவிடமிருந்து (யோவா 1:9) அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஆம், உலகின் ஒளி நானே என்று (யோவா 8:12, 9:5) இல் சொல்லியுள்ள படி, ஒளியில் நடக்கக் கற்றுக் கொள்வோம். ஆண்டவர் எங்களுக்கு வலிமையும் கண்களுக்கு ஒளியும் அருள்வார்” (பாரூ 1:12()) என்ற வாக்குறுதியைப் பற்றிக் கொள்வோம்.

ஓர் எச்சரிக்கை:

உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுத்துவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது” (மாற் 9:47,48) என்று எழுதப்பட்டுள்ளது.

கண் பாவத்தில் விழச் செய்யுமானால் வெட்டி எறிந்துவிட வேண்டும் என்கிறார் என்றால், எவ்வளவு முக்கியம் பாருங்கள். உடலுக்கு கண்தான் விளக்கு. ஆயினும், பாவம் செய்து அதனால் அழிவதைவிட, கண்ணை இழப்பது நல்லது.

இன்னும் கதிர் வீசும்

Comment