No icon

பேரா. S. பிலிப் & பேரா. இம்மாகுலேட்

நேரத்தைத் திருட அனுமதிக்காதே!

எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே

வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமேஅவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகின்றோம். ( திபா 90:10 )

நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்; ஓடுவது முள் அல்ல; உன் வாழ்க்கைஎன்கிறார் சுவாமி விவேகானந்தர். அதாவது, நேரத்தை சரியாக கையாள்பவர்கள் வாழ்வில் சாதனையாளர்களாக முடியும். காரணம் நேரமும், வாழ்வும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளன. இன்று நம் எல்லாரையும் குறிப்பாக, இளையோரை அதிகம் நேரத்தை வீணடிக்கத் தூண்டும் சக்திகள் பல மறைவாக செயல்படுகின்றன. இன்னொரு வார்த்தையில் சொன்னால், இளையோருக்குத் தெரியாமல் அவர்களிடமிருந்து நேரம் திருடப்படுகிறது. திருடன் என்பவன் அத்துமீறி நுழைபவன். இவனைப்பற்றி இயேசு : திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை (யோவா 10:10) என்கிறார். மேலும், ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர் (யோவா 10:1) எனவும் கூறுகிறார். இவற்றிலிருந்து ஒன்று நமக்குத் தெளிவாக புலனாகிறது. திருட்டுத்தனம் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார் இயேசு. காரணம், இது அத்துமீறியச் செயல் மட்டுமன்று, அதன் நோக்கம் கொல்வதும், அழிப்பதுமே.

திருடர்கள்யார்?

நம்மிடமுள்ள விலைமதிக்க முடியாத பொக்கிஷமான நேரத்தை, நம்மிடமிருந்து திருடுபவை இன்றைய காலக்கட்டத்தில் T.V. சீரியல், கைபேசி, இணையதளம் போன்ற ஊடகங்கள்தான். அதுவும் இந்த T.V. பார்ப்பதில் தலைமுறை இடைவெளி மறைந்து போகிறது. வீட்டிலுள்ள நான்கு தலைமுறையினரையும், தொலைக்காட்சி பெட்டியின் முன் காணலாம். எதிரும்-புதிருமாயிருக்கிற மாமியாரும், மருமகளும் கூட, பகைமையை மறந்து, ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி சீரியலை ரசிப்பதைப் பார்க்கிறோம். இளையோரைப் பொறுத்த மட்டில், அவர்கள் கைபேசிக்கு அடிமையாகிவிட்டனர். இப்போது 5ஜி வந்துவிட்ட நிலையில், செய்வதறியாது உலகம் திணறிக் கொண்டிருக்கிறது.

திருட்டு நடக்கும் விதம்

ஒரு நிமிடத்திற்கு 7 காசு என்று விளம்பரம் செய்கின்றனர். பரவாயில்லையே என நினைக்கும் இளையோர், கைபேசியில் 24 மணிநேரம் பேசினாலும் 100 ரூ. 80 காசுதானே என நினைத்துசாட் (Chat) பண்ணத் தொடங்குகின்றனர். 24 மணி நேரத்தில் 1,440 மணித்துளிகள், 86,400 வினாடிகள் இவர்களை அறியாமல் இவர்களிடமிருந்து திருட்டு போய் விடுகிறது. சராசரியாக இளையோரிடமிருந்து சமூக வலைத்தளங்களால் ஒவ்வொருநாளும் 5 மணி நேரம் அதாவது, 300 மணித்துளிகள் அல்லது 18,000 விநாடிகள் திருடப்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

நிகழ்ச்சி:

ஒரு வீட்டிலே அலமாரி ஒன்று திருட்டுப் போய்விட்டது. வழக்கமாக வீட்டை பூட்டிவிட்டு, வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் செல்லும்போது இது நடக்கும். இல்லையெனில் திருடர்கள் வந்து நடு இரவில் வீட்டில் புகுந்து, வீட்டிலுள்ளவர்களை மிரட்டி அல்லது கட்டிவைத்துவிட்டு, திருடிக் கொண்டு போவார்கள். அப்போது கூட யாரும் அலமாரியைத் தூக்கிக்கொண்டு போவதில்லை, அலமாரியின் உள் இருக்கும் நகை நட்டுகளை அல்லது பணத்தை திருடிச் செல்வார்கள். இங்கு நடந்த திருட்டு பகல் நேரத்தில் நடந்த ஒன்றாகும். அதுவும் வீட்டின் தலைவி வீட்டிலிருக்கும்போது நடந்த அலமாரித் திருட்டாகும்.

திருடர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் சொன்ன விஷயம் எல்லாருக்கும் அதிர்ச்சியளித்தது. அவன் சொன்னான்பகல் வேளையில் ஒரு வீடு திறந்து கிடந்ததைப் பார்த்து உள்ளே சென்றேன். வீட்டினுள் அந்த வீட்டு அம்மா T.V. முன்பு அமர்ந்து, தொலைக்காட்சி நிகழ்வுகளை வைத்தகண் வாங்காமல் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தாள். அலமாரியை திறந்து ஏதாவது எடுக்கலாம் என எண்ணிய எனக்கு, இந்த அம்மா இருக்கும் நிலையில் வீட்டில் என்ன நடந்தாலும் இவர் கண்டுகொள்ள மாட்டார்கள் என தெரிந்து கொண்டதால், எனது உதவிக்கு என் கூட்டாளிகள் 4 பேரை அழைத்தேன். நாங்கள் அனைவரும் அந்த பீரோவை சுமந்து சென்றதையும் அந்த அம்மா கவனிக்கவில்லை. காரணம், தொலைக்காட்சி நிகழ்ச்சி அவர்களை அவ்வளவு ஈர்த்திருந்தது.

விவிலியம் சொல்வதென்ன?

தொடக்கத்தில் திபா 90:10 விவிலிய மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். அதில் மனிதரின் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமை மிகுந்தோருக்கு எண்பது எனவும், ஆனால், அவை விரைவில் கடந்துவிடுகின்றன என பார்த்தோம். நமது சராசரி வயது 70 என்று வைத்துக் கொள்வோம். அதில் 15 வருடம் குழந்தை மற்றும் வளரிளம் பருவமாக சென்றுவிடுகிறது. 20 வருடம் நாம் தூக்கத்தில் செலவிடுகிறோம். கடைசி ஐந்து வருடங்கள் நோய், மருத்துவமனை என சென்றுவிடுகிறது. கடைசியில் நமக்கு இருப்பது வெறும் 30 வருடங்கள். இந்த 30 வருடத்தை நாம் உணவருந்துவது, வேலை செய்வதில் செலவிட வேண்டும். நல்ல ஒரு வேலையில் அமர, இளமைப்பருவத்தில் நம் வாழ்வில் திருடர்களை அனுமதித்தால் அவர்கள் நமது எதிர்காலத்தைக் கொல்வார்கள் (Kill the Time), நமது எதிர்காலத்தை அழித்துவிடுவார்கள் என்றுதான் இயேசு யோவான் 10:10 இல் கூறுகிறார்: நேரம் உயிர் போன்றது; போனால் திரும்ப வராது.

செய்ய வேண்டியதென்ன?

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் விலைமதிக்க முடியாதது; ஏன் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒவ்வொரு விநாடியின் பின்னமும் (Microsecond), முக்கியமானது என்பதை உணர்ந்து, நேரத்தை யாரும், எதுவும் நம்மிடமிருந்து திருட அனுமதிக்கக்கூடாது. சொல்ல வேண்டுமென்றால், பிறரிடம் இருந்து நேரத்தை நீ திருடி உன்னை மேன்மைப்படுத்த வேண்டும்.

ஆக, நேரத்தை வீணடிப்பது, பிறரை நமது நேரத்தை திருட அனுமதிப்பதாகும்.

இது நமக்கு தெரியாமல் நமது வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. இதை ஊடகங்கள் விமரிசையாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இது பற்றி விழித்துக்கொள்ளும் நேரம் வந்து விட்டது. விநாடி கூட வீணடிக்காமல், நமது எதிர்கால மேம்பாட்டிற்கு அதைப் பயன்படுத்துவோம்.

(தொடரும்)

Comment