No icon

பேரா. S. பிலிப்  &  பேரா. இம்மாகுலேட்

நீங்கள் தரையில் எழுதப்பட்டோரா? (எரே 17:13) உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றனவா? லூக் 10:20)

உலகம் என்றால் எத்தனை உண்டு? இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10) என்று, புனித பவுல் எழுதியிருப்பதிலிருந்து விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு என மூன்று உலகு உண்டு என்பது தெரிகிறது. ஏனெனில், இப்போதுள்ள விண்ணுலகும், மண்ணுலகும் அதே வார்த்தையினாலே தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன (2 பேது 3:7) என்கிறார் பேதுரு. ஆண்டவருடைய நாள் வரும்போது, வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். அவர் வாக்களித்தபடியே நீதிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (வாசிக்க 2 பேது 3:10-13). இதிலிருந்து என்ன புரிகிறது. பழையன எல்லாம் மாறி, புதிய உலகு ஒன்று தோன்றும். அதனை நம்புவோருக்கு உதவுவதற்காக இந்த சிந்தனை பதிவாகின்றது.

நாம் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் செய்யும் நன்மை, தீமைகள் பதிவாகின்றன. நமது செயல்களுக்கு ஏற்ப பெயர்கள் எழுதி வைக்கப்படும். நமது நன்மை, தீமைக்கு ஏற்ப அவை எழுதப்படும்; பரிசு கிடைக்கும்.

1. நீங்கள் தரையில் எழுதப்பட்டவரா?

இது என்ன தரையில் எழுதுவார்களா? என்று கேள்வி எழலாம். பழைய ஏற்பாட்டிலே ஒரு வசனத்தையும், புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதியையும் முதலிலே தியானிப்போம்.

“ஆண்டவரே! இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்; உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர்; ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்” (எரே 17:13).

இந்த வார்த்தை மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியை நமக்கு நினைவூட்டலாம்... நினைவிற்கு வந்ததா? இங்கே இயேசுவின் வாழ்விலே நடந்த அந்த நிகழ்ச்சியை நினைவூட்ட விரும்புகிறேன். யோவா 8:1-11 வரையுள்ள விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணின் நிகழ்ச்சி. மறைநூல் அறிஞரும், பரிசேயரும் விபசாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணைக் கையும், மெய்யுமாகப் பிடித்து இயேசுவிடம் கொண்டு வந்து நிறுத்தினர். அவர்கள் அறிஞர்கள் என்பதால் அத்தகையோருக்கு என்ன தண்டனை என்பது தெரியும்.

“அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்” (லேவி 20:10). சட்டங்களை அறிந்த அவர்கள் ஆணை விட்டு விட்டு பெண்ணை மட்டுமே கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று நிறுத்துகிறார்கள். யோவா 8:11 வரையுள்ள அந்தப் பகுதியில் விபசாரத்தில் கையும் மெய்யுமாக பிடிப்பட்டாள் என்று நிறுத்தியபோதே சட்டத்தில் பாதியைக் கடைப்பிடிக்கவில்லை. இயேசு அந்த நிகழ்வைக் கையாளும் முறையைப் பாருங்கள். “இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்” யோவா 8:6. ஆனால், அவர்கள் விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்ததினால், அவர் நிமிர்ந்து பார்த்து “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.

இது சிந்திக்க வேண்டிய இடம். தரையில் என்ன எழுதினார் என்பது நம் கேள்வி. நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.

அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

(i) இயேசு தரையில் எழுதியது ஒரு காரணமாக இருக்கலாம். எரே 17:13 இன்படி, உம்மை விட்டு அகன்றோர், தரையில் எழுதப்பட்டோர் ஆவர். எனவே, அங்கே நின்றவர்கள் பெயர் தரையில் எழுதப்பட்டோர் ஆவர் என்பதால் தங்கள் பெயரை இயேசு எழுதி விடுவாரோ என்று நினைத்து பயத்துடன் சென்றிருக்கலாம்.

(ii) இயேசுவின் இரக்கக்குணமும் பாவிகளைத் தேடிவந்த பண்பும் அவர்கள் பெயரை எழுதி அவமானப்படுத்திவிடாது. “நேர்மையாளரை அல்ல; பாவிகளையே அழைக்க வந்தேன்” (மத் 9:13) “பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்” (1திமொ 1:15 (அ)) இவ்வாறு, பாவிகளைத்தேடி மீட்க வந்தவர் அவர்களது பெயரை எழுதி அவமானப்படுத்துவாரா? கண்டிப்பாக இரக்கமுள்ள இயேசு அப்படி எழுதியிருக்க மாட்டார்.

கடவுள் விரலில் எழுதியதாகச் சொல்லப்படும் இடங்கள் இரண்டு:

1. ஆண்டவர் சீனாய் மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார் (விப 31:18). இதைமீண்டும் மோசே இணைச்சட்டத்தில் “கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்”.

2. “ஆகையால் அவர் (கடவுள்) இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துக்களைப் பொறிக்கச் செய்தார் (தானி 5:24) திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத்தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான் (தானி 5:5). அன்றிரவே கல்தேய அரசனாகிய பெல்சாட்சர் கொலை செய்யப்பட்டான் (தானி 5:30).

முதன் முறை கடவுள் தம் விரலால் எழுதியது கட்டளை; இரண்டாவது எழுதியது தீர்ப்பு. இங்கே மானிடமகன் இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று, இழந்து போனதைத்தேடி மீட்கவே மானிட மகன் வந்துள்ளார் (காண்க லூக் 19:9, 10) என்கிறார்.

எனவே, இயேசு அவர்கள் தவறுகளை உணருமாறு கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளை எப்படி அவர்கள் மீறுகிறார்கள் என்று எழுதிக் காட்டியிருக்கலாம். தரையில் எழுதப்பட்ட நிலையில், தனித்து நின்றிருந்த பெண்ணிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, நீர் போகலாம் இனிப் பாவம் செய்யாதீர்” (யோவா 8:11) என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

தரையில் எழுதப்பட்டோர் என்பவர் தண்டனைக்குரியவர், வேறு எங்கே எழுதப்பட்டோர் வாழ்வுக்குரியோர் ஆவர். அதுதான் வாழ்வு நூலில் அல்லது வானகத்தில் பெயர் எழுதப்பட்டோர்.

வாழ்வு நூல்: வாழ்வு நூல் என்பது என்ன? அதிலே என்ன எழுதப் பெற்றிருக்கும். இயேசு தம் சீடர்கள் பணி செய்துவிட்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார். அப்போது இயேசு அவர்களிடம் “தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார் (லூக் 10:20). விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கும் நூலே வாழ்வு நூல். இதுகுறித்து திருவெளிப்பாட்டிலே ஆறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

1. வெற்றி பெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப் பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிடமாட்டேன் (திவெ 3:5(அ)).

2. மண்ணுலகில் வாழ்வோர் அதை (விலங்கை) வணங்குவர். இவர்கள் கொலைசெய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர் (திவெ 13:8).

3. உலகம் தோன்றியது முதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகு வாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள் (திவெ 17:8).

4. அது வாழ்வின் நூல், இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

5. வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள் (திவெ 20:15).

6. தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது. அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழைய மாட்டார்கள். ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதில் நுழைவார்கள் (திவெ 21:17).

இந்த வார்த்தைகளை தியானிக்கும்போது, திருமுழுக்கு கொடுத்து பெயரை எழுதுவது போல, நமது பெயர்களும் வாழ்வின் நூல் என்னும் நூலிலே எழுதப்பட்டிருக்க வேண்டும். விண்ணகத்தில் எழுதுவது என்பது, வாழ்வின் நூலில் எழுதுவது என்பதுதான்.

மோசே உண்மையிலே துணிச்சலுள்ள நபர் என்று சொல்லலாம். அவரது மக்களை இஸ்ரயேலரை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடும்போது, அவர் சொல்வதைப் பாருங்கள்.

“இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல் நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்” என்றார். ஆண்டவரோ மேசேயிடம், “எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன்” என்கிறார் (விப 32:32,33).

இதுகுறித்து நீங்கள் தியானித்தது உண்டா? எப்போதும் நம் பெயர் வாழ்வு நூலில் இருக்கும்படியான செயல்பாடுகளுடன் இருக்க வேண்டும். திவெ 3:5 இல் சொன்னதுபோல, வெற்றி பெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிடமாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்” என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய தகுதி உடையோராய் நாம் வாழ்வோம். இதுவரை இதுபற்றி சிந்திக்காதிருந்தால் இன்றே சிந்தித்து வாழ்வை மாற்றுங்கள். வாழ்வு நூலில் இடம் பெறும் வழிகளைத் தேடி கடைப்பிடியுங்கள்.

எசா 66:14 உங்கள் எலும்புகள் ...

Comment