No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

உக்ரைனில் போரை நிறுத்த புடினுக்கு திருத்தந்தை விண்ணப்பம்

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, அந்நாட்டில் இடம்பெறும் தொடர் வன்முறை மற்றும் மரணங்களை, அப்பாவி மக்களின் நலன்கருதி முடிவுக்குக் கொணருமாறு முதலும், முக்கியமுமாக, இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களை, வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

பொதுவாக, ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மூவேளை செப உரை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 02 ஆம் தேதி, ஞாயிறன்று ஆற்றிய மூவேளை செப உரை முழுவதும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்தே பேசியதற்குரிய காரணத்தையும் விளக்கினார்.

உக்ரைனின் போர் ஏற்படுத்தியுள்ள பெரும் அச்சுறுத்தலும் சேதங்களுமே இதற்கு காரணம் என்றும், இப்போரினால் ஓடுகின்ற இரத்த ஆறுகளும் சிந்தப்பட்டுள்ள கண்ணீரும், சிறார் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருப்பதும், பல மக்களையும், குடும்பங்களையும் வீடற்றவர்களாக ஆக்கியிருப்பதும் பெருங்கவலையை அளித்துள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார்.

உக்ரைனின் பெரும்பகுதி, குளிராலும் பசியாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று உரைத்த திருத்தந்தை, இத்தகைய செயல்கள் ஒருபோதும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்று மிகுந்த வேதனையோடு கூறியுள்ளார். மக்களுக்கு ஆற்றிய ஞாயிறு மூவேளை செப உரையில், அண்மை நாள்களில் உக்ரைனில் இராணுவத் தாக்குதல்களின் அதிகரிப்பு மற்றும் அணுசக்தி பேரிடர் அச்சுறுத்தல் ஆகியவை, உலக அளவில் கட்டுக்கடங்காத பேரிடர்களை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பெருங்கவலையோடு திருத்தந்தை கூறினார்.

புடின் அவர்கள் போரை உடனடியாக நிறுத்துமாறும், உக்ரைன் அரசுத்தலைவர் வோலோடிமிர் செலன்ஸ்கி அவர்கள், அமைதிக்கான பரிந்துரைகளுக்கு உண்மையான அக்கறையுடன் திறந்தமனம் காட்டுமாறும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொணர உலகளாவிய சமுதாயமும், தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளார். உக்ரைனின் நிலப் பகுதியை இரஷ்யா தன்னோடு இணைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு நாட்டின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

போர், தன்னிலே ஒரு தவறான மற்றும் பயங்கரத்துக்குரிய செயல் எனவும், உக்ரைனில் போர் தொடங்கி ஏழு மாதங்கள் ஆகியுள்ள இவ்வேளையில், இந்தப் பயங்கரமான கொடுந்துயரை நிறுத்துவதற்கு, அனைத்து துரித வழிகளும் பயன்படுத்தப்படுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடவுளின் பெயராலும், ஒவ்வொரு இதயத்திலும் குடிகொண்டிருக்கும் மனித சமுதாய உணர்வின் பெயராலும் உடனடி போர்நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்புவிடுக்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, ஆயுதத் தாக்குதல்கள் நிறுத்தப்படட்டும், நீதியும் உறுதியும் நிறைந்த தீர்வுகளுக்கு இட்டுச்செல்லும் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வழிகள் தேடப்படட்டும், அவ்வாறு இடம்பெறும் பேச்சுவார்த்தைகள், மனித வாழ்வின் புனிதம், ஒவ்வொரு நாட்டின் தன்னாட்சி மற்றும் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு உரிமை, சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவை மதிக்கப்படவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார். மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் புளோரிடா மற்றும் கியூபாவில், இயான் புயலால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தன் செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Comment