No icon

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

“கத்தோலிக்கத் திரு அவையின் பிறரன்பு மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை என்பது தவறான கருத்து. கிறிஸ்தவர்களின், மக்களுக்கான பணியெல்லாம், ஏழைகளில் இறைவனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டாற்றுவதேயன்றி வேறெந்த நோக்கமும் கொண்டதல்ல.”

- செப்டம்பர் 4, மங்கோலிய திரு அவைக்கான செய்தி

“நாடுகளின் உண்மையான முன்னேற்றம் பொருளாதாரச் செல்வத்தாலோ, ஆயுதங்களின் சக்தியில் அவர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதனாலோ அளவிடப்படுவதில்லை; மாறாக, மக்களின் நலவாழ்வு, கல்வி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வழங்கும் திறனால் அளவிடப்படுகிறது.”

- செப்டம்பர் 4, திருத்தந்தையின் குறுஞ்செய்தி

“நல்லது செய்ய செல்வந்தர்களாக இருக்க வேண் டிய அவசியமில்லை; மாறாக, எப்போதும் சாதாரண மனிதர்களே மற்றவர்களைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்கள் நேரத்தையும், அறிவையும், இதயத்தையும் அர்ப்பணிக்கின்றவர்களாக இருந்தாலே போதும்.” 

- செப்டம்பர் 3, ஞாயிறு மறையுரை

“கருணை இல்லம் எனும் இரண்டு வார்த்தைகளில், திரு அவையின் வரையறை உள்ளது. இதயத்தை அன்பால் நகர்த்தும், அன்பை உணர்த்தும் ஒரு வரவேற்பு இல்லமாக இருக்கும் திரு அவை எனும் இறைவனின் இல்லத்தில் நாம் அனைவரும் சகோதர-சகோதரிகளாக இருப்போம்.”

- செப்டம்பர் 2, கருணை இல்லத் திறப்பு விழா

“சமயங்கள் உலகிற்கு நல்லிணக்கத்தை அளிக்க அழைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி இதனைக் கொடுக்காது; ஏனெனில், தொழில்நுட்ப வளர்ச்சி இவ்வுலகம் சார்ந்த சிந்தனையிலும், மனித குலத்தின் கிடைமட்டப் பரிமாணத்திலும் விண்ணகத்தை மறந்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.”

- செப்டம்பர் 2, பல்சமய நல்லிணக்கக் குழுக்கான செய்தி

“ஆண்டவரின் மகிழ்ச்சியும், நன்மைத்தனமும் விரைந்து ஓடுபவை அல்ல; அவைகள் நம்மோடு தங்கி, நம்முடைய வாழ்க்கைக்குச் சுவை அளிக்கின்றன. புதிய வழியில் மற்றவைகளைப் பார்க்க வைக்கின்றன. நற்செய்திக்காக வாழ்வைச் செலவழிப்பது என்பதுதான் கிறிஸ்தவ மறைபரப்பு அழைத்தலை அழகாக வரையறுப்பதாகும்.”

- செப்டம்பர் 1, மங்கோலிய  அருள்பணியாளர்களுக்கான செய்தி

Comment