திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:
“நோயில்பூசுதல் என்னும் திரு அருளடையாளம் மேலும் மேலும் நம் வாழ்வில் இரக்கம் மற்றும் நம்பிக்கையின் கண்ணுக்குத் தெரிகின்ற அடையாளமாக இருக்க வேண்டும். இது இறக்கும் தருவாயில் இருப்போருக்கு மட்டுமானதல்ல, மாறாக, இது குணப்படுத்தி, மறுசீரமைத்து உணர்வைக் குணப்படுத்தும் ஓர் அருளடையாளம்.”
- ஜூலை 02, நோயுற்றோருக்கான மேய்ப்புப் பணியாளருக்கான செய்தி.
“நம்பிக்கையில்லாமல் நிகழ்காலத்தை நிர்வகித்தால் நம்மால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. இறைவாக்கினர்களாகவும், எதிர்காலத்தைக் கட்டமைப்பவர்களாகவும் நம்மால் இருக்க முடியாது.”
- ஜூலை 07. 50-வது கத்தோலிக்கச் சமூக வாரத்தின் செய்தி.
“மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைத் திறந்த, உறுதியான மனநிலையுடன் வரவேற்கின்ற அதேவேளையில், மனித மாண்பில் சமரசம் செய்யாது முன்னோக்கிச் செல்ல வேண்டும்.”
- ஜூலை 07, மூவேளைச் செப உரை செய்தி.
“கடவுள் நகரங்களின் இருண்ட மூலைகளில் ஒளிந்து கொள்கிறார். துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது இருப்பு துல்லியமாக வெளிப்படுகிறது. எளியோர், மறக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு இறைவன் நட்பாக இருக்கின்றார்.”
- ஜூலை 7, ‘எக்ஸ்’ தளப் பதிவு.
“இறைவனிடம் சரணடைவதற்காக உலகச் செல்வங்களைத் துறந்த புனித ரோசாலியா கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பிறருக்கு அன்பை வழங்கவும், தங்களையே தியாகம் செய்யவும் அழைப்பு விடுக்கின்றார்.”
- ஜூலை 8, புனித ரோசாலியாவின் அருளீக்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் நான்காம் நூற்றாண்டு செய்தி.
Comment