No icon

அந்நியர்களாக அல்ல, அடுத்திருப்பவர்களாக அனைவரும் நோக்கப்பட.....

அந்நியர்களாக அல்ல, அடுத்திருப்பவர்களாக அனைவரும் நோக்கப்பட.....
ஜனவரி 18ம் தேதி, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் நாளுக்கென, தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வுடன் கூடிய அன்பையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கமுடியும் என்ற கருத்துடன், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் மகள் பெர்னீஸ் ஆல்பர்ட்டைன் கிங்  (Bernice Albertine King) அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இன்றைய சமுதாய அநீதிகள், பிரிவினைகள், மோதல்கள் தரும் சவால்களைப் பார்க்கும்போது, வன்முறையற்ற அமைதியின் கருவிகளைக் கொண்டு  மக்களிடையே இணக்க வாழ்வையும், சரி நிகர் தன்மைகளையும் உருவாக்கவேண்டும் என்று கூறிய மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கனவு, இன்றும் பொருத்தமுடையதாகவே உள்ளது என திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அட்லாண்டா நகரிலுள்ள கிங் மையத்தின் தலைவராக செயல்படும் பெர்னீஸ் ஆல்பர்ட்டைன் கிங்  அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், தன் திருமடல் ‘அனைவரும் உடன்பிறந்தோரே’ கூறப்பட்டுள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி, பிரிப்பதன் வழியாக அல்ல, மாறாக இணைப்பதன் வழியாகவும், பகைமையை கட்டிக்காப்பதன் வழியாக அல்ல, மாறாக, அதை இல்லாமல் ஆக்குவதன் வழியாகவும், உரையாடலின் பாதையை திறப்பதன் வழியாகவும், நாம் இன்றைய உலகில் அமைதியின் கலைஞர்களாக செயல்பட முடியும் என கூறியுள்ளார்.

நாம் இவ்வாறு செயல்படுவதன் வழியாகவே, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளாக பொது மாண்பைக் கொண்டுள்ளோம் என்ற உண்மையை உணர்ந்து, அனைவரையும் அந்நியர்களாக அல்ல, நம் அயலவர்களாக நோக்கமுடியும் என்பதை, தன் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மார்ட்டின் லூதர் கிங் நாளுக்கென அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் சார்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோஸ் கோமஸ் அவர்கள்,  கடந்த கோடைகாலத்தில் அமெரிக்காவில் இடம்பெற்ற வன்முறைகளையும், இவ்வாண்டு வாஷிங்டனின் கேபிட்டோல் கட்டிடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையும் பார்க்கும்போது, குணப்படுத்துபவர்களாகவும், அமைதியை உருவாக்குபவர்களாகவும் செயல்படவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது என தன் செய்தியில் கூறியுள்ளார்.

மார்ட்டின் லூதர் கிங் நாள், ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் மூன்றாவது திங்கள்கிழமையன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறப்பிக்கப்படுகின்றது.

Comment