No icon

புதன் மறைக்கல்வியுரை -

ஹங்கேரியின் புனிதத்துவ வரலாறு

மே மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமையன்று, 1 பேது 1:3-4a,6-7 அடிப்படையாக கொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய புதன் மறைக்கல்வியுரை:

அன்பு சகோதரர்களே! சகோதரிகளே! நான் என் அண்மை ஹங்கேரி திருப்பயணத்தின்போது மிகவும் உறுதியான, தைரியமான மக்களைச் சந்தித்தேன். இவர்கள் தங்கள் ஆழமான கிறிஸ்தவ வேர்களை உணர்ந்தவர்களாக நம்பிக்கையின் வருங்காலத்திற்கு தங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுகின்றனர். இவர்களின் நீண்ட கால புனிதத்துவ வரலாறு, 20 ஆம் நூற்றாண்டில் தன் மகுடத்தைச் சூட்டியது. அதாவது, நாத்ஸி மற்றும் கம்யூனிச காலத்தின்போது விசுவாசிகள் அனுபவித்த சித்ரவதைகளின் சான்று வாழ்வு இந்த மணிமகுடத்தைத் தருவதாக இருந்தது. மக்களிடையே அமைதி மற்றும் இணக்க வாழ்வின் பாலங்களைத் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என ஹங்கேரியும் ஐரோப்பா முழுமையும் எதிர்நோக்கும் சவாலைக் குறித்துக் காட்டுவதாக பாலங்களின் நகரான புதாபெஸ்ட் உள்ளது. இந்நகரில் நான் மனிதாபிமானத்துடன்கூடிய பாலம் கட்டப்பட்டிருப்பதை நேரடியாகப் பார்த்தேன். ஆம், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த எண்ணற்ற புலம்பெயர்ந்தோரை வரவேற்பதையும், நீடித்து நிற்கக்கூடிய நிலையான ஒரு வருங்காலத்தை உருவாக்கும் அக்கறையுடன், இயற்கையான, மற்றும் மனிதாபிமான ஒரு சூழலை உருவாக்கி வருவதையும் கண்டேன். என் திருப்பயணத்தின் இறுதி நாளில் இடம்பெற்ற திருப்பலிக் கொண்டாட்டத்தில், ஹங்கேரி தலத்திருஅவையின் உயிர்துடிப்பையும், வெவ்வேறு வழிபாட்டுமுறைகள் மற்றும் கிறிஸ்தவ சபைகளை இணைக்கும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பாலத்தை பலப்படுத்துவதற்கான தலத்திருஅவையின் அர்ப்பணத்தையும் கண்டேன். இவ்வுலகிலும் நாம் வாழும் சமூகங்களிலும் இணக்க வாழ்வு மற்றும் ஒன்றிப்பின் பாலங்களைக் கட்டியெழுப்ப, விசுவாசத்தில் வேரூன்றியவர்களாக நாமும் அன்புக்குரிய ஹங்கேரி மக்களும் செயல்பட, ஹங்கேரியின் அரசியான அன்னை மரியா பரிந்துரைக்க வேண்டுமென, அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் அவரை நோக்கி இறைஞ்சுகிறேன்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை, ஹங்கேரி நாட்டிற்கான தன் அண்மை திருப்பயணம் குறித்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

Comment