No icon

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை :

திருவழிபாட்டு இறைவேண்டல்

திருத்தந்தை பிரான்சிஸ்இறைவேண்டல் குறித்த தன் மறைக்கல்வித் தொடரை வழங்கினார். பிப்ரவரி 3ம் தேதி, புதன்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வியுரை, ’திருவழிபாட்டில் இறைவேண்டல்’ என்பதை பற்றியதாக இருந்தது. முதலில், புனித பவுல், எபேசியருக்கு எழுதிய திருமடலிலிருந்து (எபே 12:22-24) வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்வரும் மறைக்கல்வியுரையைத் திருத்தந்தை வழங்கினார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் தொடர் மறைக்கல்வித் தொடரில் இன்று, திருஅவையில் பொதுமக்கள் இணைந்த இறைவேண்டலான, திருவழிபாடு குறித்து சிந்திப்போம். கிறிஸ்தவர்களின் ஆன்மீக வாழ்வுக்கு, அவர்களின் தனிப்பட்ட இறைவேண்டலுடன் திருவழிபாட்டு பங்கேற்புகளும் எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்தவை என்பதை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வலியுறுத்திக் கூறியுள்ளது. அனைத்துக் கிறிஸ்தவ ஆன்மீகமும், புனித மறையுண்மைகளின் கொண்டாட்டத்தில், தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளது. இந்த புனித மறையுண்மைகளின் கொண்டாட்டத்தில் நாம் காணும் அப்பமும் இரசமும், எண்ணெயும் தண்ணீரும், என்ற அருளடையாளங்கள் வழியாக, இயேசு, தூய ஆவியாரின் வல்லமையில், தன் மக்கள் நடுவே பிரசன்னமாகி இருக்கிறார். மனுவுரு எடுத்த வேளையில் எவ்வாறு, இறைமகன் மனிதத் தசையோடு நம்மிடையே குடிகொண்டாரோ, அவ்வாறே, வார்த்தை, மற்றும், அருளடையாள திருவழிபாட்டு கொண்டாட்டங்களின் வழியாக, நம்மோடு உள்ளார். நம் தனிப்பட்ட இறைவேண்டல் என்பது, திருஅவையின் திருவழிபாட்டு இறைவேண்டலிலிருந்து தன் ஆன்மீக செல்வத்தைப் பெற்று தன்னை வளப்படுத்த வேண்டும். ஏனெனில், திருவழிபாட்டுக் கொண்டாட்டம் என்பது, கிறிஸ்தவ இறைவேண்டலின் ஆதாரம், மற்றும், உச்சம் ஆகும். இந்த உன்னத வழிபாட்டு நடவடிக்கையில், நாம் ஒவ்வொருவரும், நம் வாழ்வை கிறிஸ்துவுடன் இணைத்து, இறைத்தந்தைக்கு, புனித, மற்றும், அவருக்கேற்றப் பலியாக வழங்கும்படி, அழைக்கப்படுகிறோம்.

இவ்வாறு, இறைவேண்டல் குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் அனைவரும், திருவழிபாடுகளின் மெருகைக் கண்டுகொள்வதுடன், நம் தனிப்பட்ட இறைவேண்டல்களை மேலும் வளப்படுத்துவோம் என்ற அழைப்பை விடுத்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment