No icon

ஒரு சிறப்புப் பார்வை

புதிய மறைக்கல்விப் பாடத்திட்டம்-4

முன்னுரை

மகிழ்ச்சி என்பது ஒரு கிறிஸ்தவ வாழ்வியல் பண்பு. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கே படைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையான, நிலையான மகிழ்ச்சி கடவுளிடமிருந்தே வருகின்றது. உலகம் தரும் மகிழ்ச்சி கானல் நீர் போல மறைந்து போகக் கூடியது. ஆனால், நமதாண்டவர் இயேசு கிறிஸ்து வழங்கும் அமைதியும், அதன் வெளிப்பாடான மகிழ்ச்சியும் நிலையானது. ஆகவேதான், மகிழ்ச்சி என்னும் கனியைத் தூய ஆவியார் நமக்குக் கொடையாக வழங்குகின்றார். ஆண்டவரிடம் நாம் பெறும் மகிழ்ச்சி எவ்வளவு புனிதமானது என்பதை பவுலடியார், “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” (பிலி 4:4) என்று கூறுகிறார். ஆகவே, நமக்கு மகிழ்ச்சி என்பது, இயேசுவோடு நம்மை இணைக்கும் போதுதான் சாத்தியப்படும் என்பதைப் புனித பவுலடியார் தெளிவாகக் கூறுகின்றார்.

மறைக்கல்வி என்றாலே அது ஒரு புரியாதப் பாடமாகவும், தேவையற்றச் சுமையாகவும், கட்டாயப்படுத்திப் படிக்க வைக்கும் விருப்பமற்றப் புத்தகமாகவும் மாறிவிட்ட இச்சூழலில், மறைக்கல்வியை மகிழ்வான அனுபவமாக மாற்றவும், மாணவர்கள் தாமே ஆர்வத்தோடு விரும்பி கற்கவும், ஆசிரியர், பெற்றோர் மகிழ்வோடு கற்பிக்கவுமே இப்பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. மகிழ்வான மறைக்கல்வி என்பது ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் எவ்வாறு இயேசுவில் மகிழ்ந்திருப்பது என்பதை மூன்று வழிகளில் கற்றுக்கொடுக்கிறது. 1. கண்களை மூடி தியானிப்பதன் வழியாகவும் 2. இதயத்திலிருந்து செபிப்பதன் வழியாகவும் 3. மறைக்கல்விப் பாடலை ஆடிப்பாடுவதன் வழியாகவும் இயேசுவை மையப்படுத்தி மகிழ்ந்திருப்பது எப்படி என்பதை முதல் பகுதி தெளிவாக விளக்குகின்றது.

1. கண்களை மூடி தியானிப்போம்

தியானம் என்பது நமது  மனதையும், உள்ளத்தையும் இறைச் சிந்தனையால் நிரப்பவும், இறை உடனிருப்பை உணரவும் உதவிடும் சிறந்த முறையாகும். தியானம் என்பது கற்பனைகளையும், உணர்வுகளையும், தேடலையும் உள்ளடக்கிய செபநிலை என்பதைக் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி எண். 2705 இல் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. மேலும், “இயந்திரத்தனமான உலகிலே பிரச்சனைகளும், சோதனைகளும், சவால்களும் நிறைந்த இக்காலக்கட்டத்தில், ஒவ்வொரு கிறிஸ்தவரும் தினந்தோறும் தவறாமல் தியானிக்க உறுதி எடுத்தல் அவசியம்” என்பதை (க.தி.ம. 2708) எடுத்தியம்புகிறது.

அறிவு முதிர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களும், பெற்றோர்களும் தியானத்தைக் கற்றுக்கொள்ள முடியும். அதைப் பின்பற்ற முடியும். ஒன்றிலிருந்து ஐந்து வரை படிக்கும் மாணவர்கள் தியானக் கலையைப் புரிந்துகொள்ள முடியுமா? என்னும் நியாயமான கேள்விக்கு, நிச்சயமாக முடியும் என்பதே பதில். தியானங்களில் பல மறைகளும், வழிகளும் இருந்தாலும், ஆரம்பப் பள்ளி கத்தோலிக்க மாணவர்கள் எளிதில் புரிந்து, தியானிக்க ‘Visio Divina’

‘கடவுளைப் பார்த்து தியானித்தல்’ முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். மாணவர்கள் அமைதியில் அமர்ந்து, கண்களை மூடி, இறை உடனிருப்பை உணர்ந்து, பிறகு சிறிது நேரம் கழித்து, கண்களைத் திறந்து, நம்மைத் தாய்ப் போல அன்பு செய்து பராமரிக்கும் இயேசுவின் முகத்தைக் கவனமுடன் உற்று நோக்கி, அதை மனத்திரையில் பதித்து, அவரோடு பேசுதலும், பிறகு அவர் பேசுவதைக் கேட்டலும், பின்பு அந்த இறையனுபவத்தை மாணவர்கள் பகிர்ந்துகொள்ள செய்வதுமே இறைமுகத் தியானம் என்பதாகும்.

இத்தியானம் செய்ய இரண்டு நிமிடங்கள் போதும். இறைமுகத் தியானத்தின் சுவையை மாணவர்கள் கற்றுக்கொள்வது மிக அவசியம். இது தேவையற்ற சிந்தனைகளை வெளியேற்றி, இறைச்சிந்தனையை உருவாக்கும் அற்புத கலையாகும். இத்தியானமுறை ஒரு மகிழ்வான அனுபவமாகும்.

2. கைகளைக் குவித்து மன்றாடுவோம்

செபம் என்பது ஓர் ஆற்றல். நமக்கு வல்லமை அளிக்கும் அற்புத இறைசக்தி. உண்மையான செபம் என்பது வெற்று வார்த்தைகளைப் பிதற்றும் உதட்டு செபமல்ல; (மத் 6:7) மாறாக, அகத்தைப்பார்த்து மதிப்பிடும் கடவுளிடம் (1சாமு 16:7) நாம் பேசும் இதய செபம். செபம் என்பது நம்முடைய சிறிய இதயத்திற்கும், இயேசுவின் பெரிய இதயத்திற்கும் இடையே ஏற்படும் விவரிக்க இயலா உறவு பரிமாற்றமாகும். சுருங்கக்கூறின், செபம் என்பது உதடுகள் சம்பந்தப்பட்டது அல்ல; மாறாக, இதயம் சம்மந்தப்பட்டது.

நாம் இதயம் திறந்து செபிக்கும்போது, இயேசுவின் பெரிய இதயத்திலிருந்து நிரம்பி வழியும் அன்பு, கருணை, இரக்கம், மன்னிப்பு, கனிவு அனைத்தும் நம்முடைய சிறிய இதயங்களிலும் நிரம்புகின்றது. இதயம் திறந்து செபித்து, இயேசுவின் பண்பு நலன்களைத் தனது சிறிய இதயத்தில் சேர்த்து, ஒருவர் வெளியே வரும்போது, அவர் புதிய மனிதராக, அன்பு செய்பவராக, கருணை உள்ளம் கொண்டவராக, இரக்கமுள்ளவராக, மன்னிப்பவராக, கனிவு கொண்டவராக மாற்றம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, செபம் என்பது இரண்டு இதயங்களிடையே நடக்கும் உறவு பரிமாற்றமும், அதன் வழியாக ஏற்படும் மனமாற்றமுமே ஆகும். எனவே, இதயத்திலிருந்து செபிக்கும் கலையைக் கற்றுக்கொள்வதும், அதை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதும் ஆசிரியர், பெற்றோரின் தலையாயக் கடமையாகும். இதனால், மனப்பாடச் செபங்கள் முக்கியமில்லை என்று பொருள் கொள்ளாமல், மனப்பாடச் செபத்தையும் பெற்றோர், மாணவர்களுக்குக் கற்றுத்தருவது அவசியம்.

3. ஆடிப்பாடி மகிழ்வோம்

“இசை கேட்டால் அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்” என்னும் பாடல் வரிகளுக்கேற்ப, இசை புனிதமானது, உள்ளத்தை ஊடுருவும் சக்தி வாய்ந்தது. நமது மனங்களை அசைத்துப் பார்க்கும் வல்லமை பெற்றது. இசைக்கும் இறைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதை நாம் பலமுறை அனுபவித்திருப்போம். பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் அசைத்துப் பார்க்கும் திறன் இசைக்கு உண்டு. குறிப்பாக, ஆடுவதையும், பாடுவதையும் குழந்தைகள் அதிகம் விரும்புகின்ற காரணத்தினால் தான், மழலையர் முதல் ஆரம்பக் கல்வி வரை ஆடல், பாடல் வழியாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது.  இளம் வயது மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பல கலைகளில் ஆடல் பாடல் கலையே முதன்மையான இடம் வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.

எனவேதான், மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தவும், பங்கேற்கும் திறனை உற்சாகப்படுத்தவும் ஆடல், பாடல் கலை பயன்படுத்தப்படுகிறது. மறைக்கல்வி வகுப்பை உயிருள்ளதாக மாற்றவும், விரும்பி கற்கும் மனநிலையை மாணவர்களிடையே விதைக்கவும், மறைக்கல்வி என்பது மகிழ்வான கல்வி என்பதை உறுதிப்படுத்தவும், மறைக்கல்வி வகுப்பை ஆர்வத்தோடும், மகிழ்வோடும் தொடங்கவுமே, “ஆடிப்பாடி மகிழ்வோம்” என்ற பகுதி மிகுந்த கவனத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆடுவதும், பாடுவதும் வெறும் கேளிக்கைக்காக மட்டுமே செய்தால் அதில் எந்த பொருளும் இல்லை. தியானம் போல, செபம் போல, ஆடலும், பாடலும் ஒரு சிறந்த மகிழ்வான பக்தி முயற்சியாகும். நோக்கம் குலையாமல், பக்தி களையாமல் இக்கலையைப் பயன்படுத்தும்போது, ஆடலும், பாடலும் மகிழ்ச்சி கலந்த பக்தியாகின்றது. உடன்படிக்கைப் பேழையைக் கண்ட தாவீது மகிழ்வோடு கடவுள்முன் நடனமாடினார் (2சாமு 6:14) என்பதைத் திருவிவிலியம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் உடன்படிக்கைப் பேழையை திரும்ப பெற்றதைக் குறித்த மகிழ்வின் வெளிப்பாடே தாவீதின் நடனம்.

ஆகவே, இயேசுவின் உடனிருப்பை உணரவும், அவரின் அன்பை அனுபவித்து மகிழவுமே “ஆடிப்பாடி மகிழ்வோம்” பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, ஆடலும், பாடலும் இயேசுவை மையப்படுத்தியே அமைக்கப்பட்டிருப்பது இப்பகுதியின் சிறப்பு.

ஆடல் பாடலின் நோக்கத்தைப் பற்றி திப. 149:3 தெளிவாகக் கூறுகின்றது. “நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்துப் பாடுவார்களாக!”. ஆகவே, மறைக்கல்வி வகுப்பில் பயன்படுத்தும் ஆடலும், பாடலும் இயேசுவை மையப்படுத்தவும், அவரின் பெயரைப் புகழவும், போற்றவுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

“ஆடிப்பாடி மகிழ்வோம்” பகுதியில் உள்ள அனைத்து மறைக்கல்விப் பாடல்களும், பாடச் சிந்தனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகும். பாடலுக்கான நடனத்தை செயலி மூலம் வழங்கியிருப்பது இப்பகுதியின் இன்னொரு சிறப்பாக அமைந்திருக்கிறது.

மறைக்கல்விப் பாடலுக்கு அழகான, மகிழ்வான, மரியாதையான, விரசமில்லாத, எளிமையான நடன அங்க அசைவுகளை மட்டுமே, ஆசிரியர் பெற்றோர் கற்றுத்தர வேண்டும். சினிமா பாடலுக்கு ஆடுவதைப் போல, ஒழுங்கற்ற, விரசமான முகம் சுளிக்கின்ற நடன அசைவுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகின்றது. ஒவ்வொரு முறையும் மறைக்கல்வி வகுப்பு தொடங்கும்போது,  ஆடல் பாடலோடு ஆரம்பித்தால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

Comment