No icon

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை

இயேசு அறிவிப்பின் தலைவர்

சனவரி 25 ஆம் தேதி புதன்கிழமை வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தவர்களுக்கு, லூக்கா 4: 17 -21 வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் தனது மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

கடந்த புதன் கிழமை நாம் இயேசுவின் மாதிரியைப் பிரதிபலித்தல் மற்றும் எப்போதும் மற்றவர்களைச் சென்றடையும் ஆயனுக்குரிய அவரது இதயத்தைப் பற்றி சிந்தித்தோம். அறிவிப்பின் மாதிரியான இயேசு, இன்று நமக்கு அறிவிப்பின் தலைவராக உள்ளார் என்ற தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். தனது கிராமமான நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் செபிக்கும் போது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து ஒரு பகுதியை வாசித்த இயேசு, நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று என்று கூறி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்துகின்றார். இறைவார்த்தையின் வழியாக தன்னைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறாரோ அதை இயேசு வெளிப்படுத்திவிட்டார். இயேசுவின் இந்த அறிவிப்பில் ஐந்து அடிப்படைக் கூறுகளை காணலாம்.

1. மகிழ்ச்சி: ஆண்டவருடைய ஆவி என்மேல் இருக்கிறது; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஆண்டவர் என்னை அனுப்பினார் என்ற நல்ல செய்தியை எடுத்துரைக்கின்றார் இயேசு. மகிழ்ச்சி இல்லாமல் இயேசுவைப் பற்றி நம்மால் பேச முடியாது. மகிழ்ச்சி இல்லாதபோது, நற்செய்தி கடந்து செல்லாது. ஏனெனில், நற்செய்தி என்பது நல்ல செய்தி, மகிழ்ச்சியின் செய்தி. வருத்தமான மன நிலையில் உள்ள கிறிஸ்தவர் அழகான விஷயங்களைப் பற்றி பேசலாம். ஆனால், அவர் மகிழ்ச்சியுடன் அதை அறிவிக்காவிட்டால் அது வீண்.

2. விடுதலை: சிறைபட்டோர்க்கு விடுதலையை அறிவிக்க தான் அனுப்பப்பட்டுள்ளதாக இயேசு கூறுகிறார். கடவுளை அறிவிக்கும் எவரும் மதமாற்றம் செய்யவோ, அழுத்தம் கொடுக்கவோ, சுமைகளை இலகுவாக்கவோ முடியாது. சுமைகளைச் சுமத்துவதற்கு அல்ல; ஆனால், அவற்றை தூக்கி எறியவும், குற்றத்தை அல்ல; அமைதியைக் கொண்டு வருவதுமே, உண்மையான விடுதலை என்கின்றார். இயேசுவைப் பின்பற்றுவது என்பது தியாகங்களை உள்ளடக்கிய துறவு. கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர், பயணத்தின் சோர்வைக் காட்டிலும் இலக்கின் அழகைக் காட்டுபவராக இருக்க வேண்டும் என்றும், மீட்பருக்குத் தகுதியான ஒவ்வோர் அறிவிப்பும் விடுதலையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் இயேசு வலியுறுத்துகின்றார்.

3. ஒளி: பார்வையற்றோர் பார்வை பெறுவதற்கு வந்ததாக இயேசு கூறுகிறார். இங்கு உடல் உறுப்பில் உள்ள பார்வையைப் பற்றியது மட்டுமல்லவாழ்க்கையை ஒரு புதிய வழியில் பார்க்க நம்மை அனுமதிக்கும் ஒளி பற்றியது. ஒரு பிறப்பு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது. மறுபிறப்பு இயேசுவுடன் மட்டுமே நிகழ்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையும் தொடக்க காலங்களில் "அறிவொளி" என்று அழைக்கப்பட்ட திருமுழுக்கு என்னும் அருளடையாளத்தின் வழியாக தொடங்கியது. இயேசு நமக்கு கடவுளின் பிள்ளைகள் என்ற ஒளியை அளிக்கின்றார். அவர் தந்தையின் அன்பு மகன், என்றென்றும் உயிருடன் இருப்பவர். தவறுகள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், என்றென்றும் அன்பு செய்யப்படும் கடவுளின் குழந்தைகள் நாம் என்பதை வலியுறுத்துகின்றார்.

4. குணப்படுத்துதல்: "ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வந்ததாக இயேசு கூறுகிறார். ஒடுக்கப்பட்டவர் என்பது வாழ்க்கையில் நோய், சோர்வு, இதயத்தில் சுமைகள், குற்ற உணர்வுகள், தவறுகள், தீமைகள், பாவங்கள் என ஏதாவதொன்றால் நசுக்கப்படுபவர்கள். பாவத்திலிருந்து இயேசு நம்மை எப்போதும் குணப்படுத்துகிறார். சுமை சுமந்து சோர்ந்து போன அனைவரையும் தன்னிடம் வரும்படி அவர் அழைக்கிறார். நமது வாழ்க்கையை மேம்படுத்துகிறார். கடவுளின் மன்னிக்கும் சக்தி, நமது ஆன்மாவை எல்லா கடனிலிருந்தும் விடுவிக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றார்.

5. இரக்கம்:ஆண்டவர் அருள்தரும் ஆண்டை அறிவிக்க வந்ததாக" இயேசு கூறுகிறார். கிறிஸ்துவுடன் இணைந்து நமது வாழ்க்கையை புதியதாக்குகிறது அருள். இயேசுவின் அறிவிப்பு எப்போதும் அருளின் வியப்பைக் கொண்டுவர வேண்டும். பெரிய காரியங்களைச் செய்வது நாம் அல்ல; நம் வழியாக கணிக்க முடியாத காரியங்களைச் செய்வது இறைவனின் அருளாகும். கடவுளின் அருள் ஆச்சரியங்கள், வியப்புக்களுக்கு நற்செய்தியில் புதுமை என்ற ஒரு பெயர் உள்ளது.

இவ்வாறாக இயேசு, மகிழ்ச்சி, விடுதலை, ஒளி, குணப்படுத்துதல் மற்றும் அருள் ஆகியவற்றை அளித்து, அவர் விரும்பியபடி அதை அறிவிக்க நமக்கு உதவுகிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், தன் புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்து, அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

Comment