No icon

மறைக்கல்வி உரை

தம்மோடு இருக்க நற்செய்தியை அறிவிக்க...

மத்தேயு நற்செய்தியில் உள்ள திருத்தூதர்கள் அனுப்பப்படுதல் என்னும் பகுதி இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பெயின், போர்த்துக்கீசியம், அரபு ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டதைத்தொடர்ந்து திருத்தந்தை கூடியிருந்த மக்களுக்கு தன் கருத்துக்களை எடுத்துரைக்கத்தொடங்கினார்.

மத்தேயு 10; 7-10,16

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில், வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரை - தம்மோடு இருக்க நற்செய்தியை அறிவிக்க

அன்பான சகோதர சகோதரிகளே காலைவணக்கம் அப்போஸ்தலிக்க பேரார்வத்தின் நான்காம் பகுதியாக இன்று நற்செய்தி அறிவித்தல் பற்றிக் காண்போம். மாற்கு நற்செய்தியில் குறிப்பிடுவது போல இயேசு பன்னிருவரையும் - தம்மோடு இருக்கவும், நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் அவர்களை அழைத்து அவர்களுக்குத் திருத்தூதர்கள் என்று பெயரிட்டழைத்தார்.  (மாற்கு 4:14). தங்குதல் அனுப்பப்படுதல் என்னும் இரண்டு வார்த்தைகள் நமக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் இயேசுவோடு தங்காமல் நம்மால் நற்செய்தியை அறிவிக்க முடியாது. நற்செய்தி அறிவிக்காமல் அவரோடு தங்க முடியாது. ஆக இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

தங்குதல் இன்றி நற்செய்தி அறிவிப்பு இல்லை, நற்செய்தி அறிவிப்பு இல்லாமல் தங்குதல் இல்லை.

திருத்தூதர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களை தம்மிடம் அழைக்கிறார் இயேசு. நற்செய்தி அறிவிப்பு இறைவனுடனான சந்திப்பிலிருந்து எழுகிறது; ஒவ்வொரு கிறிஸ்தவ செயல்பாடுகளும் குறிப்பாக மறைப்பணியும், அங்கிருந்தே தொடங்குகிறது. அவரது உடனிருப்பு, உண்மையின் ஒளியால் நம்மை நிரப்பி நாம் அறிவிக்கும் நற்செய்தியை  உறுதிப்படுத்துகின்றது. நாம் அவரை அடிக்கடி சந்திக்க வராவிட்டால் அவருடைய ஒளியைப் பெறாவிட்டால் அணைந்துவிடுவோம்;  அவர் நம்மை அழைப்பதற்கு பதிலாக நம்மை நாமே  அவரிடம் கொண்டு செல்ல முயல்வோம். இயேசுவுடன்  இருப்பவர்கள் மட்டுமே இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க முடியும். இயேசுவின் உடனிருப்பு, பணி, இல்லாமல் அவருடனான உறவு ஒருபோதும் வளராது. நற்செய்தியில், திருத்தூதர்களை  தயார்படுத்துவதற்கு முன்பே அவர்களை அனுப்புகிறார் என்பதை நாங்கள் அறிகின்றோம்  சீடர்களை அழைத்த சிறிது நேரத்திலேயே, அவர் அவர்களை நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்புகிறார்! இதன் பொருள் மறைப்பணி அனுபவம் உருவாக்கத்தின் ஒரு பகுதியாகும் என்பதை வெளிப்படுத்தவே. ஒவ்வொரு சீடரும் தங்குதல், செல்லுதல் என்னும் இரண்டு முக்கியமான நிகழ்வுகளை  நினைவில் கொள்ளவேண்டும். சீடர்களை தம்மிடம் அழைத்து, அவர்களை அனுப்புவதற்கு முன், கிறிஸ்து அவர்களுக்கு ஒரு சொற்பொழிவாற்றுகின்றார். மறைப்பணி சொற்பொழிவு" என்றும்  அழைக்கப்படும் இவ்வுரையானது மத்தேயு நற்செய்தியின் 10 ஆம் அதிகாரத்தில்  காணப்படுகின்றது. நற்செய்திஅறிவிப்பின் "அரசியலமைப்பாகத் திகழும் இயேசுவின் இவ்வுரை. நற்செய்தியை ஏன் அறிவிக்க வேண்டும், எதை அறிவிக்க வேண்டும் மற்றும் எப்படி அறிவிக்க வேண்டும் என்ற மூன்று பகுதிகளை நமக்கு எடுத்துரைக்கின்றது

ஏன் அறிவிக்க வேண்டும்?

நற்செய்தியை ஏன் அறிவிக்க வேண்டும் என்ற உந்துதல் நீங்கள் கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளில் உள்ளது, தகுதியற்ற நாம் கொடையாகப் பெற்றவற்றைக் கொடையாக வழங்க அழைக்கப்படுகின்றோம். இயேசுவைச் சந்திப்பது, அவரைப் பற்றி தெரிந்துகொள்வது என்பது, நாம் அவரால் அன்பு செய்யப்படுகின்றோம் மீட்கப்படுகின்றோம் என்பதைக் கண்டுணர்வதாகும். இது எவ்வளவு பெரிய பரிசு, அதை நம்மிடம் வைத்திருக்க முடியாது, அதை மற்றவர்களுக்கும் பகிரவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். நம்மிடம் ஒரு பரிசு உள்ளது. நாமே ஓர் பரிசு எனவே நம்மை நாமே கொடுக்க அழைக்கப்படுகிறோம்; கடவுளின் குழந்தைகளாக இருப்பதன் மகிழ்ச்சியை அதை இன்னும் அறியாத சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்! இதுவே நற்செய்தி அறிவிப்புக்குக் காரணமாகும்.

என்ன அறிவிப்பது?

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று அறிவிக்கவேண்டும். கடவுள் அருகில் இருக்கிறார். அவர் நமக்கு மிக அருகில் இருக்கின்றார். நெருக்கமாக இருக்கின்றார் என்னும் முக்கிய செய்தியை எடுத்துரைக்கவேண்டும். அவரை நாம் அன்பு செய்வதை விட நம்மை அவர் அன்பு செய்ய விட்டு விட வேண்டும். நம்மை நாம் மையத்தில் வைக்க விரும்பினால் கடவுளின் அன்பை ஏற்பது கடினம். நற்செய்தி அறிவிப்பில் கடவுளுக்கு முதன்மையான இடத்தைக் கொடுக்கவேண்டும், மற்றவர்களும் அவரை வரவேற்க, அவர் அருகில் இருப்பதை உணர வாய்ப்பளிக்க வேண்டும்.

எப்படி அறிவிப்பது.

ஓநாய்களுக்கு இடையில் ஆடுகளை அனுப்புவது போல் நான் உங்களை அனுப்புகிறேன்" என்கிறார் இயேசு. ஓநாய்களை எப்படி எதிர்கொள்வது, எதிர்த்துப் போராடுவது நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று அவர் கூறவில்லை. மாறாக செம்மறியாடுகளைப் போலவும் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் உங்களை அனுப்புகிறேன் என்கிறார் இயேசு. சாந்தமாகவும், குற்றமற்றவர்களாகவும், தியாகம் செய்ய தயாராக இருப்பவர்களாகவும் நாம் மாற வேண்டும் என்கிறார்; சாந்தம், அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு கொண்ட ஆட்டுக்குட்டியான நம்மை மேய்ப்பனாக அடையாளம் கண்டு ஓநாய்களிடமிருந்து பாதுகாக்கின்றார். புனித ஜான் கிறிசோஸ்தம் அவர்களின் வார்த்தைகளான "நாம் ஆட்டுக்குட்டிகளாக இருக்கும் வரை, நாம் வெற்றி பெறுவோம், பல ஓநாய்களால் சூழப்பட்டாலும், அவற்றை நம்மால் வெல்ல முடியும். ஆனால் நாம் ஓநாய்களாக மாறினால், தோற்கடிக்கப்படுவோம், ஏனென்றால் மேய்ப்பனின் உதவியை நாம் இழக்க நேரிடும். அவர் ஓநாய்களுக்கு உணவளிக்கவில்லை, மாறாக ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கிறார்” என்பதை நினைவில் கொள்வோம். நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு இயேசு எதைக் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைப்பதற்குப் பதிலாக, எதைக் கொண்டு வரக்கூடாது என்று சொல்வது வியக்கத்தக்கது: பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். என்று கூறுவதன் வழியாக உலக நாட்டங்களில் ஆர்வம் கொள்ளாது பற்றற்ற வாழ்வை வாழும் உலகிற்குச் செல்ல அழைக்கின்றார். இயேசுவைப் பற்றி பேசுவதை விட இயேசுவையே இவ்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

இறுதியாக, ஒன்றிணைந்து செல்வது:

இயேசு எல்லா சீடர்களையும் அனுப்புகிறார், ஆனால் யாரையும் தனியாக அனுப்பவில்லை இருவர் இருவராக அனுப்புகின்றார். அப்போஸ்தலிக்க திருஅவை மறைப்பணி மற்றும்  மறைப்பணி ஒற்றுமை என்னும் இரண்டில் இணைந்துள்ளது. ஆகவே செம்மறியாட்டுக் குட்டிகளைப் போல் சாந்தகுணமுள்ளவர்களாகவும், நல்லவர்களாகவும், உலகப்பற்று இல்லாமல், ஒன்றிணைந்து செல்லுங்கள் என்ற நற்செய்தி அறிவிப்பின் திறவுகோலை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இயேசுவிடமிருந்து வரும் இந்த அழைப்புக்களை வரவேற்போம்: அவருடைய வார்த்தைகளை நம்முடைய வாழ்க்கைக்கான குறிப்புகளாக மாற்றிக்கொள்வோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கூடியிருந்த ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள் குறிப்பாக இலண்டன் வியட் நாம் அமெரிக்கா திருப்பயணிகளையும் வாழ்த்தினார். அதன்பின் கூடியிருந்த மக்கள் அனைவர் மீதும், அவர்கள் குடும்பத்தினர் மீதும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியும் அமைதியும் நிரம்ப வேண்டி தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

 

Comment