No icon

தலையங்கம்

‘மதம்’ வளர்க்கும் மதம் / அரசியல்

மதம்ஒரு போதை என்பார் கார்ல் மார்க்ஸ். போதை மயக்கும்; மயங்கவும் வைக்கும். அதன் போதையில் மயங்கியவர்கள் ஒன்று ஆயுதம் எடுப்பார்கள்; அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றி ஆயுதம் எடுக்க வைப்பார்கள். மதங்களின் பெயரால் நடைபெற்ற சிலுவைப்போர்களே அதற்குச் சாட்சி. இன்று அரேபிய வளைகுடா நாடுகளையும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் மதங்களே ஆள்கின்றன. மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் படுகொலைகளும் பயங்கரவாதச் செயல்களும் நாளுக்கு நாள் தலைத்தூக்கிக்கொண்டேயிருக்கின்றன.

இராணுவச் சர்வாதிகாரத்தைவிட மதச் சர்வாதிகாரம் கொடுமையானது. மதமும் அரசியல் அதிகாரமும் ஒன்று சேர்கிறபோது அதன் நேரடி விளைவுகளும் பக்க விளைவுகளும் மிகக் கொடுமையானவை. அதிகாரம் ஒரு போதை; மதம் ஒரு போதை; இரு போதைகளும் ஒன்று சேர்ந்தால் முழுக்க முழுக்க எதிர்மறை விளைவுகளே எழும். தீவிரவாதிகள் என்றாலே மனுக்குலத்துக்கு எதிரானவர்கள்; அவர்களை வலது சாரி - இடது சாரி என்று வகைப்படுத்துவதே தவறு. ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் ஓர் உதாரணம் மட்டும்தான். மதமும் அதிகாரமும் சேர்கிறபோது அங்கு மனித உரிமைகளுக்கு இடமேயில்லை.

இலங்கை-மியான்மரின் புத்த தீவிரவாதமும், இந்தியாவின் இந்து தீவிரவாதமும், ஆப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதமும், நைஜீரியாவின் போக்கோராம் தீவிரவாதமும், பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதமும், பிலிப்பைன்ஸின் கிறிஸ்தவத் தீவிரவாதமும் மனுக்குலத்திற்கு எதிரானவை. மூன்றாம் உலகப்போர் வெளிப்படையாக நடைபெறவில்லையே தவிர, உலக அளவில் மதத்தின் பெயரால் உள்ளார்ந்த மூன்றாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறது. சிலுவைப் போர்களும் பிறை போர்களும், சூலாயுதப் போர்களும், புத்த விகாரப் போர்களும் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. மானுடம் தொடர்ந்து இரத்தம் சிந்திக்கொண்டேயிருக்கிறது. மண்ணில் மதத்தின் பெயரால் படுகொலைகளும் ஆள்கடத்தல்களும் ஆயுதப்பேரங்களும் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன.

இந்தியாவின் வரலாற்றை பாபர் மசூதி இடிப்பிற்கு முன், பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் என்று நம்மால் பிரிக்க இயலும். அடிமை இந்தியாவில், ஆங்கிலேயரே எண்ணிப்பார்க்காத வகையில் மதத்தின் பெயரால் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்டாலும் இந்தியாவிற்குள் இன்னொரு பிரளயம் கடந்த நாற்பது ஆண்டுக்காலமாக மிகத் தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. ஊர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை; வரலாற்றுத் திரிபும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. காந்தியும் நேருவும் மறைக்கப்படும் அதே வேளையில், சவார்க்கர்களும், கோல்வால்கர்களும், கோட்சேக்களும் கொண்டாடப்படுகிறார்கள். மசூதிகள் இடிக்கப்படும் அதே வேளையில், புராணப் புருஷர்களின் பெயரால் கோயில்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவர், இங்கு, இந்நாளில் பிறந்தார் என்று மறு வரலாறு புகுத்தப்படுகிறது. அதிகாரமும் மதமும் ஒன்று சேர்ந்தால் சர்வாதிகாரம் மட்டுமே கோலோச்சும் என்பதைவிட, ஜனநாயகம் குழித்தோண்டி இருந்த இடம் இல்லாமல் புதைக்கப்படும் என்பதற்கு இலங்கையும் இந்தியாவும் ஓர் உதாரணம்.

அரசியலும் மதமும் ஒரே துறையானால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்து. உரோமையிலிருந்து வத்திகான் பிரிக்கப்பட்டதும்கூட அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான். ஆசிரமங்களும், துறவற மடங்களும், சங்கர மடங்களும் சமூகத்திலிருந்து தனித்து இருப்பதன் காரணமே அதன் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். எப்போது மடங்களுக்குள்ளும் துறவற ஆசிரமங்களுக்குள்ளும் ஆசீர்வாதம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் அடியெடுத்து வைத்தார்களோ  அந்நொடிப் பொழுது முதல் அதன் புனிதம் கெட்டுவிட்டது. முற்றும் துறந்தயோகிகளும்கூட இன்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து புல்டோஸர் விடுகின்றனர். காவியுடை தரித்த துறவிகளும்கூட எம்.பிக்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் களம் காண்கின்றனர்.

வெள்ளை அணுக்களும், சிவப்பு அணுக்களும் உடலுக்குத் தேவை. அதேபோன்றுதான் சமயமும் அரசியலும். ஆனால், அவற்றில் ஒன்று பெருகினாலும் அது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து. அரசியலும் மதமும் கலந்தால் அது ஒரு புற்றுநோயைப் போல. எத்தனைமுறை கதிர்வீச்சு பாய்ச்சினாலும் அறுவை சிகிச்சை நடந்தாலும் அது வளர்ந்துகொண்டேயிருக்கும். வளர்ந்து வரும் இந்த இந்துத்துவா இந்தியச்

சமூகத்திற்கு புற்றுநோயைப் போல.. இதனை நாம் முளையிலேயே கண்டறிந்து, அதாவது காந்தி கொல்லப்பட்டபோதே கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததன் விளைவைத்தான் இன்றையபுதிய இந்தியாஅனுபவித்து துன்புறுகிறது.

 இந்தியாவில் இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ ஒருபோதும்ஒரே இந்தியாஎன்று நிர்மாணிக்கவே முடியாது. செப்பு மொழி பதினெட்டும் சிந்தனை ஒன்று மட்டுமே பாரதியின் வழியில் இங்கு சாத்தியம். ‘செப்பு மொழி ஒன்றுஎன்றால் இங்கு சிந்தனைகள் பதினெட்டாகும் என்பது தெளிவு. நம் தேசிய கீதமும் தேசியக் கொடியும் இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும் உன்னதமான அடையாளங்கள். இங்கு கடவுள்கள் மட்டுல்ல; ஆலய வடிவங்களும், கலைகளும், ஆகம விதிகளுமே பன்மைத்துவம் நிறைந்தவை என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டனர். இந்து என்ற சமயத்தின் பெயரால் எல்லாரையும் இணைப்பது முயற்கொம்பே. சாதியமும் சனாதனமும் சமதளத்தில் ஒருபோதும் பயணிக்கவே முடியாது. ஆரியம் புறக்கணிக்கப்பட்ட நம் தேசிய கீதமானஜன கண மனசொல்லும் திராவிடமும் மராட்டியமும் வங்காளத்துவமும் பஞ்சாபியமும் குஜராத்தியமும் கோலோச்சும்வரை ஒரே நாடு என்பது கானல் நீரே. ஆனாலும், சனாதனம் சலிப்படைந்து உட்காரவே உட்காராது.

சிறைக்கூடங்களிலிருந்து பறந்து வரும் புல்புல் பறவைகளின் சிறகுகளில் சவார்க்கரையும் கோல்வால்கரையும் எப்போதும் இறக்குமதி செய்யும். இராமரை வைத்து அயோத்தியைப் பிறப்பித்தவர்கள் தற்போது விநாயகரை வைத்து இந்துத்துவத்தை வளர்க்கின்றனர். யாத்திரை என்ற பெயரில் அரசியல் நெருப்பை அணையாது காத்து அதில் யாகம் வளர்க்கும் இவர்கள், தற்போது ஊர்வலம் என்ற பெயரில் சிறுபான்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி, இராமநவமி துர்கா பூஜையின்போது ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்தவே விழைகின்றனர். போவாத ஊருக்கு வழி கேட்பது போல, ஆகாத கடவுள்கள் உள்ள தெருக்கள் வழியே ஊர்வலம் நடத்தவும் தொழுகை நடத்தும் பொது இடங்களில் அனுமன் சல்சா பாடுவதும்வேண்டுமென்றே விநாயகரை பிரதிஷ்டை செய்வதும் கேவலமான பாஜக அரசியல். எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்து மதத்தை மென்று தின்று, ஜீரணித்து ஜீரணித்து இந்தியா என்ற ஜனநாயக நாட்டைஆத்ம நிர்பார்முறையில் ஒரு கழிவறைக்கூடமாகவே மாற்றி வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கழிவறை அரசியல் செய்து நாட்டை மலக்காடாகவே (மதக் காடாகவே) மாற்றிவிட்டனர். எங்கு பார்த்தாலும் நோய்; எல்லார் மூக்கிலும் வாடை. மதத்தை வைத்து இந்திய மனிதத்தை மதம் பிடித்த ஒன்றாக மாற்றிவிட்டனர். அதிகாரம் மட்டுமே இவர்கள் இலக்கு என்பதால் அதிகாரமற்றவர்களைப் பற்றி இவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதேயில்லை.

அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மட்டுமே தங்கள் சேவகம் என்பதால் அரசியல் கட்சிகளுக்கான மறைமுக தேர்தல் நிதி மானாவாரியாக இவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் திவால் ஆவதைப் பற்றியோ, அவைகளைத் தனியாருக்கு தாரை வார்ப்பதைப் பற்றியோ இவர்களுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை. ஏழைகளின் வயிறு வத்தினால் என்ன? ஒட்டினால் இவர்களுக்கு என்ன? விலைவாசி உயர்வைப் பற்றியோ, வேலைவாய்ப்பின்மைப் பற்றியோ, பொருளாதாரச் சரிவுப் பற்றியோ இவர்களுக்கு அக்கறையில்லை. வடக்கே இராமர், மேற்கே விநாயகர், தெற்கே முருகர், கிழக்கே துர்கா, மத்தியில் பூரி ஜெகந்நாதர், ஆந்திராவில் வெங்கடாஜலபதி, மகாராஷ்டிராவில் துக்காராம், சாய் பாபா, தெலுங்கானாவில் அனுமர், கேரளாவில் ஐயப்பன் சுவாமி, காஷ்மீரில் வைஷ்ணவி தேவி, உத்தராகண்டில் ரிஷிகேஷ்வர் என்று மத முனையங்களை ஏற்படுத்தி சனாதனத்தைக் கூர்மைப்படுத்தி தங்களின் அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்துகின்றனர்.

 மதம் - இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது. சரியான முறையில் கையாளவில்லையென்றால் அதனைப் பிடித்திருப்பவனையும் குத்திக் கிழித்து காயப்படுத்திவிடும். மதம் வீட்டிற்குள்ளும் வழிபாட்டுத்தலங்களுக்குள்ளும் இருக்கும்வரை பாதுகாப்பானது. அது தெருவுக்கும் தெருமுனைக்கும் வந்துவிட்டால் ஆபத்து. சமயவாதிகளோடும் (இமாம்கள், குருக்கள், துறவிகள், ஐயர்கள்) ஆன்மீகவாதிகளோடும் இருக்கும் வரை பாதுகாப்பானது. அரசியல்வாதிகளின் கையில் மதம் அகப்பட்டுவிட்டால் அது ஆபத்தானது. அரசியல்வாதிகள் வேண்டுமானால் மதத்தைக் காப்பாற்ற முயற்சிக்கலாம். ஆனால், எப்போதும் மதம் அரசியல்வாதிகளைக் காப்பாற்றப் போவதில்லை.

மதத்திற்குமதம்பிடித்தால் மனிதம் (நீதம்) மரித்துப் போகும். காந்தியத்தின் வெற்றியே மதத்தின் கூர்முனைகளை மழுங்கடித்ததுதான். அம்பேத்கரியத்தின் தார்ப்பரியமே மதத்தோடு சாதியத்தின் கூர்முனைகளை மழுங்கடித்ததுதான். அரசியல்வாதிகளே! மதங்களை விட்டு விடுங்கள். கட்சிகளே! மதத்தின் பெயரை நீக்கி உங்களைப் பொதுமைப்படுத்துங்கள். ஒரு நவகாளி போதும். ஒரு மண்டைக்காடு போதும், ஒரு அயோத்தீபோதும். ஒரு கோவை போதும். ஒரு கோத்ரா போதும். ஒரு மும்பை போதும்.

அரசியல்வாதிகளே! மதங்களை விட்டுவிடுங்கள்! மதங்களுக்கு மதம் பிடிக்க வைக்காதீர்கள். மதம் பிடித்த யானையால் யானைக்கும் ஆபத்து; பாகனுக்கும் ஆபத்து; யானையின் எதிரே வருவோருக்கும் ஆபத்து. ஜாக்கிரதை. வாடியப் பயிரைக் கண்டு வாடும் மனநிலையே மதத்திற்கும் (யானை) அரசியலுக்கும் (பாகன்), மனிதருக்கும் (சமூகம்) தேவை.

Comment