No icon

தமிழகத்தில் கிறிஸ்தவம்

3.3 திருச்சிப் பகுதி மறைத்தளங்கள்

திருச்சியில் பிராமண சந்நியாசிகளின் மறைப்பணி

இராபர்ட் தெ நொபிலியைத் தொடர்ந்து, திருச்சியில் பணியாற்றியவர் பிராமண சந்நியாசி தந்தை இம்மானுவேல் மார்ட்டின் ஆவார். இவரை மக்கள்ஜெகனிவாசகர் சுவாமிகள்என அழைத்தனர். இவர் 1517 இல் போர்த்துக்கல் நாட்டில் பிறந்து, 1615 இல் இயேசு சபையில் சேர்ந்தார். மதுரை மறைப்பணிதளத்தில் பணியாற்ற 1624 இல் இந்தியாவுக்கு வந்தார். இராபர்ட் தெ நொபிலியைப் போன்று இந்து சந்நியாச உடையணிந்து, புலால் உணவைத் தவிர்த்து, பிராமணர்களின் மத்தியில் இறைப்பணி புரிந்தார்.

இவர் பகல் வேளைகளில் இந்துக்களையும், இரவு வேளைகளில் தலித் மக்களையும் மனம்திருப்பினார். திருச்சி வரகனேரியில் புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் அமைந்திருந்தது. இவ்வாலயம் எப்போது எழுப்பப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், 1638 டிசம்பர் 3 முதல் மக்களின் வழிபாட்டில் உள்ளது. உயர் குடிகளுக்கு என்று அமையப்பெற்ற இவ்வாலயத்தில் இம்மானுவேல் மார்ட்டின் தங்கி, திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நற்செய்தியை அறிவித்தார். 1639 இல் திருச்சியில் 50 பேர்களும், மதுரையில் 70 பேர்களும் திருமுழுக்குப் பெற்றதாகக் கூறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் ஆவர்.

தலித் கிறிஸ்தவர்களுக்கென்று உறையூர் அருகேயுள்ள திருத்தாந்தோணியில் ஓர் ஆலயம் இருந்தது. அக்கோயிலில் பண்டார சுவாமி தந்தை மனுவேல் ஆல்வாரெஸ் பணியாற்றினார். பிராமண சந்நியாசி இல்லாத நாள்களில் சாதிக் கிறிஸ்தவர்கள் தயக்கமின்றித் தலித்துகளின் ஆலயத்தில் திருப்பலியில் பங்கேற்றனர். 1640 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தந்தை பல்தசார் பண்டாரசாமியாகத் திருச்சியில் பணியாற்றினார். பின்னர் தஞ்சை, சத்தியமங்கலம் பணியிடங்கள் சென்றுவிட, மனுவேல் ஆல்வாரெஸ் அவரின் பணியைத் தொடர்ந்தார். இவ்வாண்டின் இறுதியில் இருவர் பிராமண சந்நியாசி, இருவர் பண்டார சுவாமிகள் என நான்கு அருள்பணியாளர்களும், ஆறு வேதியர்களும் திருச்சியில் மறைப்பணி ஆற்றினர்.

1640 இல் பறையர் கிறிஸ்தவர் அதே சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பணக்கார மகனுக்குத் தன் மகளை மணமுடிக்க மறுத்தார். இவ்வழக்கை விசாரித்த நாயக்கர் மன்னரின் மருமகன் வெங்கடராயப் பிள்ளை தந்தை இம்மானுவேல் மார்ட்டினையும், நான்கு புதிய கிறிஸ்தவர்களையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து ஜூலை 22 இல் சிறையில் அடைத்தார். அங்கு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மறவ நாட்டிலிருந்து திரும்பிய திருமலை நாயக்கர் கைதிகளை விடுவிக்க ஆணை பிறப்பித்தார். விடுவிக்கப்பட்ட இம்மானுவேல் மார்ட்டின் காவேரி ஆற்றைப் படகில் கடக்கும்போது தண்ணீரில் தள்ளிவிடப்பட்டார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கரையேறி உயிர் பிழைத்தார்.

பண்டார சுவாமிகளின் மறைப்பணி

திருச்சி தலித் கிறிஸ்தவர்களைக் கவனத்தில் கொண்டேபண்டார சுவாமிகள்முறை தோற்றுவிக்கப்பட்டு, தந்தை பல்தசார் அதன் பணியை முதலில் திருச்சியில் துவங்கினார். 1640 இல் இம் மக்களுக்காக ஓர் ஆலயம் எழுப்பி, இந்நகரில் மறைப்பணியாற்றினார். இந்தியச் சமூகத்தின் அடிமைக் கூறுகளான சாதி வேற்றுமை கத்தோலிக்கத் திரு அவையிலும் புரையோடியது, பெரும் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. 1643 இல் தந்தை பல்தசார் கிறிஸ்து பிறப்பு திருவிழாவைத் திருச்சிக்கு அருகேயுள்ள அல்லித்துறையில் கொண்டாடியிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. 1644 இல் திருக்காட்சிப் பெருவிழாவைத் தந்தை மார்ட்டின் ஆல்வாரெசோடு இணைந்து திருச்சியில் கொண்டாடினார். அங்கும் ஒரு குடிலை அமைத்தார். பிராமணர், தலித் என அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே மனதுடன் திருப்பலியில் பங்கேற்றனர். இதைக் கண்டு எரிச்சலடைந்த சாதிய வெறியர்கள், திரு மலை நாயக்கரிடம் நற்செய்திப் பணியைத் தடை செய்யுமாறு முறையிட்டனர். ஆனால், மறைப்பணியாளர்கள் இருவரும் சாதிய வேற்றுமைகளைக் களைய தங்களால் இயன்றவரை உழைத்தனர்.

1644 ஜனவரி 17 கைதுக்குப் பிறகு, திருமலை நாயக்கர் தலையிட மார்ட்டின் ஆல்வாரெசு திருச்சி திரும்பினார். ஆனால், அவரின் ஆலயத்தை ஒரு முகமதியப் படையின் தளபதி ஆக்கிரமிப்புச் செய்து விட, கிறிஸ்தவ மறையைத் தழுவிய ஒரு பணக்காரர் ஒரு புதிய ஆலயம் மற்றும் அருள்பணியாளர் இல்லத்தைக் கட்டித் தந்தார். அவ்வாண்டின் பதிவுப்படி 350 சாதி கிறிஸ்தவர்களும், 1633 தலித் கிறிஸ்தவர்களும் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் வாழ்ந்தனர். பல்தசார் முயற்சியில் 1645 ஆம் ஆண்டு தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பன்னிரு ஏழைக் கிறிஸ்தவர்களை அழைத்து, தாழ்ச்சியின் அடையாளமாக அவர்களின் காலடிகளைக் கழுவி முத்தம் செய்தார். நல்ல உணவும் அந்த ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.

1646 இல் ‘500 புதிய கிறிஸ்தவர்கள் திருச்சி திரு அவையில் உருவாகின்றனர்என்கிறார் பல்தசார். மேலும், மன்னர் திருமலை நாயக்கரைச் சந்தித்து மறைப்பணிக்கான உதவியை நாடினார். மன்னர் மறைப்பணிக்கென அரியமங்கலம் கிராமத்தை வழங்கினார். அங்கு தலித் கிறிஸ்தவர்கள் ஒரு சிற்றாலயத்தை அமைத்திருந்தனர்.

திருச்சி மறைத்தளம் சந்தித்த வேதனைகள்

தலித் மக்கள் திரளாகக் கிறிஸ்தவத்தைத் தழுவியதால், புதிய கிறிஸ்தவர்களும், மறைப்பணியாளர்களும், பிராமணர்கள், யோகிகள், பண்டாரங்கள், சாதி, சமய ஆதிக்க மனநிலை கொண்டவர்களின் எதிர்ப்புக்கும், துன்புறுத்தலுக்கும் அடிக்கடி உள்ளாயினர். சில நேரங்களில் மறைப்பணி நலன் கருதி பிராமண சந்நியாசிகள், தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிகப் பணியாற்றியபோது, சாதிக் கிறிஸ்தவர்களால் தாக்கப்பட்ட அவலமும் அரங்கேறியது. தந்தை இம்மானுவேல் மார்ட்டின் கொடுமையாகத் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திருச்சியை விட்டே வெளியேற்றப்பட்டார். பலரை மனமாற்ற உதவியாக இருக்கும் மலபார் வழிபாட்டு முறையைப் பொறுத்துக் கொண்டது, தமிழகத் திரு அவைக்குப் பேரிடராக அமைந்தது. திருமுழுக்குப் பெற்றவர்கள் கிறிஸ்தவராக ஒன்றுபட விடாமல் இந்து சனாதனத்தின் சாதியாக இன்றும் பிரிந்து கிடப்பது நற்செய்திப் பணிக்குப் பெரும் பின்னடைவாகும்.

விஜயநகரப் பேரரசிலிருந்து அதன் மாநிலங்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்பியதால், மாநிலங்களுக்குள் போட்டியும், பூசலும் அதிகரித்தன. இதனால் அடிக்கடிப் போர் மேகங்கள் சூழ்ந்தன. பலவீனப்படும் விஜயநகரைக் கைப்பற்ற பீஜப்பூர் சுல்தான், மைசூர்அரசர், மராத்தியர்கள், மொகலாயர்கள் என அண்டை அரசுகள் அடிக்கடிப் போர் தொடுத்தன. இதனால் மக்களின் நிம்மதியும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊர்கள் அடிக்கடி படைவீரர்களால் சூறையாடப்பட்டன. இதனால் மக்கள் அஞ்சி, ஓடி ஒளிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1659 இல் பீஜப்பூர் சுல்தான் படைகள் திருச்சியை முற்றுகையிட்டுத் தாக்கின. கோட்டைக்கு முன்பாக அமைந்த ஏராளமான கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயம் ஆகியவற்றை இடித்துத் தள்ளினர். கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமையப் பெற்ற பாச்சூர் மறைத்தளம் முற்றிலும் அழிவுற்றது. இங்கு பணியாற்றிய தந்தை இம்மானுவேல் ஆல்வாரெஸ் அவர்களை, அங்கு வாழ்ந்த யோகிகள் துறையூர் அரசர் அனுமதியுடன் கைது செய்து இழுத்து வந்து, 19 நாள்கள் திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அடைத்து வைத்தனர். தந்தை பல்தசார் 1667 இல் திருமலை நாயக்கரை மதுரையில் சந்தித்து அவர் விடுதலை பெற உதவினார். அவரின் உடமைகளை மீட்டு, மீண்டும் பாச்சூரில் பணியாற்ற அனுமதி பெற்றார். 1663 இல் பீஜப்பூர் சுல்தானின் தளபதி வனமியானின் படையெடுப்பால் திருச்சி சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தது. பயிர்கள் எரிக்கப்பட்டன; பலர் கொல்லப்பட்டனர்; இன்னும் பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். 400 பெண்கள் வனமியானின் கொடுமையிலிருந்து தப்பிக்கத் தங்களைத் தீயில் மாய்த்துக் கொண்டனர். மன்னர் சொக்கநாதர் தேவையான பொருள்களை வனமியானுக்குத் தந்து மக்களைக் காத்தார். முசிறி பகுதியில் பணியாற்றிய தந்தை அந்தோணி புரொவென்சா வேடர் இனத்தைச் சார்ந்த வலையனின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினார். இத்தனை தடைகளையும் தாண்டி, திருச்சி திரு அவை இறையருளால் வளர்ச்சிப் பாதையில் பயணித்தது.

பெண்களின் நற்செய்திப் பணி

திருச்சி அல்லித்துறையில் வசித்த சந்தனம்மாள் என்ற கிறிஸ்தவப் பெண் நற்செய்திப் பணியாற்றினார். அவ்வூரில் அவர் மட்டும் கிறிஸ்தவத்தைத் தழுவியதால், உறவினர்களும் ஊராரும் அவரை அவ்வூரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இச்சூழலில் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் ஒரு தலித் பெண். தலித்தோடு உறவாடியதை ஊரார் ஓர் இழிவாகக் கருதினர். அவரோஅனைவரும் இறைவனின் பிள்ளைகள்எனச் சுற்றுப்புறமெங்கும் சென்று நற்செய்தி அறிவித்தார். 23 வயது மேரி என்ற பெண், இராபர்ட் தெ நொபிலியின் அறிவுரைகளால் மனம் திரும்பி, ஏழ்மை, கீழ்ப்படிதல், கற்பு ஆகிய வாக்குறுதிகளை வழங்கி ஒரு துறவியைப் போல் வாழ்ந்தார். இப்பெண்ணைப் பின்பற்றி ஒரு சில இளம் பெண்களும், கைம்பெண்களும் இவ்வாழ்வை மேற்கொண்டனர்.

சின்னம்மாள் எனும் கிறிஸ்தவப் பிராமணப் பெண், திருச்சியில் நற்செய்திப் பணியை மிகத் தீவிரமாகச் செய்து வந்தார். இவரின் உறவினர் மகள் ஒன்பது வயது முத்தம்மாள் மிகவும் நோயுற்றிருந்தாள். இந்துவாகிய அவளின் தந்தையின் அனுமதியுடன் அச்சிறுமிக்குத் திருமுழுக்குத் தர சின்னம்மாள் ஏற்பாடு செய்தார். தந்தை பல்தசார், அச்சிறுமியை ஆலயத்திற்கு அழைத்துச் சென்று திருமுழுக்களித்தார். இயேசுவின்மீது அளவற்ற நம்பிக்கைக் கொண்டிருந்த அச்சிறுமி, சின்னம்மாளின் கரங்களிலே மரித்தாள். பாச்சூர் ஆளுநர் மனைவி சாந்தாயி கிறிஸ்தவ மறையைத் தழுவினார். இவர் அழகிலும், அறிவிலும் சிறந்தவர். ஆடல், பாடலில் தேர்ந்தவர். இறைவன் தனக்குத் தந்த திறமையைப் பயன்படுத்தி நற்செய்திப் பணியை ஆடிப்பாடி, வீணை வாசித்து அறிவித்தார். இவரது கணவர் மனம் மாறவில்லை. ஆனால், இவரின் உறவினர் மற்றும் பணியாளர்கள் கிறிஸ்தவத்தில் சேர்ந்தனர். தொட்டியத்தைச் சேர்ந்த நல்லதம்பி திருட்டுத் தொழிலை விட்டுக் கிறிஸ்தவனானான்.

மன்னர் மற்றும் தளபதியிடையே நடந்த போரில் நல்லதம்பி கொல்லப்பட்டான். அவன் இறக்கின்ற பொழுதுஇயேசுவே! இயேசுவே!’ எனக் கத்திக் கொண்டே உயிர் விட்டான்.           (தொடரும்)

Comment