குடந்தை ஞானி
ஒரே ஒரு விடுதலை வழங்கிய இரட்டை வெற்றி!
- Author குடந்தை ஞானி --
- Friday, 27 May, 2022
இறுதியாக உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனுக்கு வழங்கிய விடுதலை, இடைவிடாமல் ஒற்றை ஆளாக, தன் கால் செருப்புகள் தேய தேய அலைந்து திரிந்து போராடிய ‘பேரன்புநிறை’ அற்புதம்மாளுக்கு முதல் வெற்றியையும் மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் சனாதனத்தின் ஆளுநர் வழி எதேச்சதிகார கூறுகளை நாறு நாறாக கிழித்து, மாநில சுயாட்சிக்கு அங்கீகாரமளித்து, மறு அதிகாரமளித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு வெற்றியையும் வழங்கியுள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்புடைய ஏனைய ஆறு சிறைவாசிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.
அற்புதம்மாளின் பேரன்பும் தமிழக அரசின் சட்டப் போராட்டமும் பேரறிவுக்கு விடுதலையைத் தந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இரண்டு 9 வோல்ட்டேஜ் பேட்டரிகள் வாங்கி கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, ஜூன் 11, 1991 அன்று பெரியார் திடலில், சிறிய விசாரணை என்ற பெயரில் சிபிஐ அழைத்துச் சென்று ஏறக்குறைய 31 ஆண்டுகள் சிறையிலிருந்த பேரறிவாளன் அனுபவித்த வேதனைகள் சொல்லில் வடிக்க இயலாதவை. அப்பா கவிஞர் குயில்தாசனும் அம்மாவும், பேரறிவாளனும், இரு சகோதரிகளும் தவித்த தவிப்புக்கு விவரணை தேவையில்லை. செப். 9, 2011 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் பிப். 18, 2014 அன்று அதே தூக்குத் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதும் வரலாறு. இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஐபிஎஸ், உயிர் வலி (2013) என்னும் ஆவணப்படத்தில், பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிருபிப்பதற்கான வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், தவறாகப் பதிந்ததையும் மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பத்தையும் தெரிவித்ததுதான் இந்த வழக்கின் திருப்புமுனை.
இதன் பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தன் காலணிகளையும் கடந்து தன் கால்கள் தேய தேய நடத்திய பாசப்போராட்டம் இன்னொரு திருப்புமுனை. 2014 இல் முதல்வர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் எழுவரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து, மத்திய அரசிடம் முறையிட்டதும், அது நிறைவேறாமல் முடக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு பிறகு, 2018 ஆம் ஆண்டு, அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தில் விடுதலை செய்ய முடிவெடுத்து, முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது மற்றொரு திருப்புமுனை. உச்ச நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு காட்டிய வழிகாட்டுதலில், மாநில அரசுக்கு அரசியலமைப்புச் சட்டம் 161 வழங்கிய உரிமையைப் பயன்படுத்தி தமிழக அரசு விரைவாக செயல்பட்டது.
பேரறிவாளனின் விடுதலைக்கான கோப்பு தமிழக அரசு, தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவர், மத்திய அரசு என்று அங்கும் இங்கும் பந்தாடப்பட்டுக் கொண்டேயிருந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு தொடர்ந்து பேரறிவாளனுக்கு பரோல்கள் வழங்க, உச்ச நீதிமன்ற பிணை வழங்க, மே 18 ஆம் தேதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அரசியல் சட்டம் எண் 142 ஐ பயன்படுத்தி 29 பக்க வரலாற்று தீர்ப்பளித்து விடுவித்துள்ளது.
இது சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு என்றும் மாநிலத்தின் உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப் பட்டிருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளம் மகிழ்ந்து தெரிவித்துள்ளார். மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதிபதி கூறியிருப்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மாநிலத்தின் சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும் புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு மனிதனின் விடுதலை தாய்மையின் இலக்கணமாக உள்ள அற்புதம்மாளுக்கும் மாநில சுயாட்சிக்கும் ஒரு சேர வெற்றியைத் தந்துள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதப்படுத்தியது தவறு என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டப்பேரவை தீர்மானத்தின் மீதான முடிவுகளை எடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் ஆளுநர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என்று கவர்னர் அலுவலகத்திற்கு குட்டு வைத்துள்ளனர்.
இன்னும் ஒரு படி மேலே போய், மாநில அரசு ஒரு முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஒப்புதல் அளிப்பதுமட்டும்தான் ஆளுநரின் வேலை. அதில் தன்னுடைய சொந்த கருத்துக்களையோ அல்லது அவர்தனது சொந்த முடிவையோ எடுக்கும் அதிகாரம் கிடையாது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை; மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். இனியாரும் அதை மறுக்கக்கூடாது என்று முத்தாய்ப்பாக, வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரிகளை இணைத்து, இந்திய இறையாண்மையை கூட்டாட்சி தத்துவத்தில் நிலைப்படுத்தி, மாநில சுயாட்சிக்கு மணி மகுடம் சூட்டியுள்ளது.
ஒரு ஜோல்னா பையோடும் தேய்ந்துபோன ரப்பர் காலணிகளோடும் பொட்டு நகை சிறிதும் இல்லாமல், மூக்கு கண்ணாடி வழியாக பார்வைகள் விரிய, நம்பிக்கையை மட்டுமே தன் இதயத்தில் சுமந்து, என் மகன் ஒரு நிரபராதி என்று நிமிடத்திற்கு ஒருமுறை உள்ளிழுக்கும் மூச்சோடு முக்கி முனகி, மனுக்களோடு தமிழகத்தின் எம்ஜிஆர், அண்ணா தவிர ஏனைய திராவிட முதலமைச்சர்கள் அனைவரையும் சந்நித்து சந்தித்து, இவர் நடத்திய அன்புப்போராட்டம் கல்வாரிப் பயணத்தின் நீட்சிதான் என்றால் அது மிகையன்று. அற்புதம் பெயரில் மட்டுமல்ல; அவர்தம் சொல்லிலும் செயலிலும் நிகழ்ந்து, அறிவும் அன்பும் ஒரு சேர சந்தித்தது. (சிறையில் பேரறிவாளனை ‘அறிவு’ என்றே அழைப்பர்)
அற்புதம்மாளின் உணர்வுதான் தமிழகத்தின் பெரும்பாலானோரின் உணர்வாகவே மாறிப்போனது. காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைவருமே ஈரத்தால் தன் விசை இழந்தனர். அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளுக்குமே இது வெற்றி என்பதைவிட திராவிடத்தின் - மாநில சுயாட்சியின் வெற்றி. தாயின் மனவுறுதிக்கும் தவ வாழ்வுக்கும் கிடைத்த வெற்றி. இது அற்புதம்மாள் செய்த அற்புதம். மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை நான்கு முறை படித்து, தன் தாயோடு ஒப்பிட்டு பெருமைப்படும் பேரறிவாளனே இதனை ஆமோதித்துள்ளார். இது இவ்வழக்கு சம்பந்தப்பட்ட ஏனைய அறுவருக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது.
குற்றவாளி - நிரபராதி என்ற வரையறைக்குள் செல்லாமல், முப்பது ஆண்டுகாலம் சிறையில் வாடும் - வாழும் மனித உயிர்களின்பால் நம் மனித நேயத்தைக் காட்ட நாம் முயற்சிப்போம். அறிவுக்கு அப்பால் அன்பால் நாம் சிந்திப்போம். மரணத் தண்டனையும் வேண்டாம்; நீடித்த ஆயுள் தண்டனையும் வேண்டாம். தமிழக பாஜக சொல்வதைப் போல, ‘திமுகவைப் பொறுத்தவரை (அண்ணாமலை புகழ்) அண்டங்காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது’ என்றாலும் அண்ணாமலை குறிப்பிடுவதுபோல இது பனம்பழம் - தமிழினத்தின் அடையாளம். பனை தமிழர்களின் தேசிய மரம். காக்கையும் அவர் கூற்றுப்படி திராவிடமே. இது தேசியத்திற்கான எதிர்வினை. அண்ணாமலை சொன்னதிலும் ஏதோ குறியீடு உள்ளது. பேரறிவாளனின் விடுதலை -மாநில சுயாட்சிக்கும் ஒரு தாயின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. இரட்டை வெற்றி. ஜனநாயகத்திற்கும் சாமானியனின் சார்புநிலைக்கும் கிடைத்த வெற்றி. கொண்டாடுபவர்கள் கொண்டாடலாம். அப்படி கொண்டாடுபவர்கள் மனிதாபிமானிகள்.
Comment