No icon

உடைபட்டு உருபெறும் எம்மாவு அனுபவம்

உடையாமல் உயிர்ப்பில்லை; உடைபடாமல் மீட்பில்லை. புது உயிர் தரும் முட்டையிலிருந்து துவங்கி, வாசல் தட்டும் வசந்த காலத்திற்கும், பாறையைப் பிளக்கும் பாஸ்கா காலத்திற்கும் இது பொருந்தும். மேலை நாடுகளில் வசந்த காலம் (Primavera: மார்ச் முதல் மே வரை) துவங்கியாயிற்று. மரப்பட்டைகளை உடைத்துக் கிளைகள் வெளியேறுகின்றன; உலர்ந்து போனதாய்க் காட்சியளித்த கிளைகளில் புதுத் தளிர்களும், மலர்களும் பூத்துக்குலுங்கி, தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்கின்றன. அப்படியெனில், இந்நாள்களில் பாறையைப் பிளந்து, ஆதிக்கப் பார்வைகளைக் கடந்து உயிர்த்த இயேசுவைச் சந்திக்கும் நாமும், வாழ்வில் வசந்தங்களை வீச வேண்டாமாநிச்சயம் வேண்டும்! அதற்குத் தேவை எம்மாவு அனுபவம்.

பயந்தவர்கள், ‘எல்லாம் முடிந்ததுஎன்று கருதியவர்கள், ‘இனி என்ன செய்ய?’ என்று ஒதுங்கியவர்கள், ‘வழியில்லைஎன்று வதங்கியங்கள் என நமக்குள்ளும் எத்தனை எத்தனை பலவீனங்கள்? உடைபட, உருபெற, உயிர்தர மறுக்கும் தருணங்கள்! “வரலாற்றின் மையமான உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே உண்மையில் நமது எதிர்காலம். அனைத்துப் பலவீனங்களையும் கொண்டுள்ள நமது வாழ்வு அவரது கரங்களில் உள்ளது. இதை எப்போதாவது மறந்தால், இறைப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினராகிய நாம்  உலகிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மனித வழிகளைத் தேடத் தொடங்கிவிடுவோம்” (திருத்தந்தை பிரான்சிஸ்).

எம்மாவு அனுபவம் எந்நாளுமே!

உயிர்ப்பின் உண்மை வாசம் நம் இதயக் கதவுகளைத் தட்ட, எம்மாவு பாதை அனுபவம் நம்மை மீட்டெடுக்க, உயிர்ப்பு முட்டை தரும் படிப்பினைகள் வழி நம் புதிய எம்மாவு பாதைகளைச் செம்மைப்படுத்தவே இப்பதிவு. எப்படி முட்டை உயிர் வளர்ச்சியின் ஆரம்பமாக உள்ளதோ, அங்ஙனமே கிறிஸ்தவ நம்பிக்கை வளர்ச்சியின் மையம் உயிர்ப்பு!

அடைகாப்பதன் அவசியம் உணர்வோம்: கடந்த நாள்களில் நடந்தவை அனைத்தையும் சிந்தித்தவாறே எருசலேமிலிருந்து எம்மாவு சென்று கொண்டிருந்த சீடர்கள் இருவரும் நீண்ட உரையாடலுக்குப் பின்னர்தான் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். காத்திருக்கும் மொட்டு மலர்வதுபோல், குறிப்பிட்ட காலம் பொறுத்திருந்து, முழு வளர்ச்சியடைந்த குஞ்சு மட்டுமே முட்டையை உடைத்து வெளியேறுகிறது. பொறுமை வாழ்விற்கு அவசியம்.

முட்டைக்குத் தகுந்த வெப்பமளித்து புது உயிர் பெற வழிவகுக்கும் உயிரினம்போல், உயிர்ப்பை மையம் கொண்டு இயங்கும் குடும்பங்களிலும், கிறிஸ்தவ வாழ்விலும், திரு அவையின் அமைப்புகளிலும்  தகுந்த வெப்பநிலையும், பொறுமையோடு அடைகாக்கும் தருணமும் இன்று  அதிகம் தேவை. உடனடி கலாச்சார வேகமும், மோகமும் நீடித்த நன்மையைத் தர இயலாது என்கிற புரிந்துணர்வு செயல்பாடும் அவசியம். மக்களை வழிநடத்தும் ஆயன்கள், மந்தைகளாகிய மக்கள்மீது பொறுமையோடு நடந்து கொள்ளும் பக்குவம் வளர்க்க வேண்டும். எந்த மாற்றமும், ஏற்றமும் ஓரிரு பகல் இரவில் நிகழ்ந்து விடாது. தவறு செய்கிற ஒருவர் திருந்துவதற்கான போதிய தருணங்களைத் தரும் அறநெறியும் வேண்டும். தண்டனை பெயரில் வரிவிலக்கு, ஊர் விலக்கு, அபராதத்தொகை விதிப்பு போன்ற பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளாற்றலின் தனித்துவம் காண்போம்: நம்பிக்கை ஓர் உள்ளாற்றல். அதனை உணர உதவுவது பேராற்றல். எம்மாவு சீடர்களின் உள்ளாற்றலை உயிர்த்த ஆண்டவர் என்கிற பேராற்றல் தொடுகிறது. கருவில் உருவாகும்போதே நம்பிக்கை என்கிற மறை பொருளையும் இணைத்தே இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறார். முட்டைக்குள் விரவிக் கிடக்கும் ஆற்றலைப்போல நமக்குள்ளிருக்கும் நம்பிக்கை ஆற்றல்களை இனம் காண்பது நமது செயல்பாடுகளில் மாற்றங்களை உருவாக்கும்.

எல்லாம் முடிந்தது. இனி என்ன செய்ய?’ என்கிற ரீதியில்தான் எம்மாவு சீடர்கள் இருந்தனர். ஆனால், உயிர்த்த ஆண்டவரின் சந்திப்பு நம்பிக்கையளிக்கிறது. ‘முடியாது’, ‘இயலாதுஎன்கிற எதிர் மறைகளை வென்றெடுக்கத் தவறுகையில், பொறியில் சிக்கிய எலியாய் பலரும் மனச்சோர்வுக்கும், தற்கொலை எண்ணங்களுக்கும் உட்படும் அபாயம் பெருகும். ஆலயச் செயல்பாடுகள் இத்தகு நம்பிக்கைகளை மக்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். எனது குழப்ப நிலைக்கு, அவநம்பிக்கைச் சூழலுக்குத் தெளிவு பெற ஒரு பங்கு உண்டு; பணியாளர் உண்டு; அமைப்பு உண்டு என்கிற மனப்பாங்கு, பங்குகளில் உள்ளனவா? முட்டையின் ஊட்டச்சத்து மறைமுகமாய் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவதுபோல், நமக்குள்ளே நம்பிக்கையோடு துவங்கும் செயல்பாடுகள் நிச்சயம் ஒருநாள் முன்னேற்றத்தை வருவிக்கும். எதிர்மறையாக ஒருவரைப் பார்க்கும், பாவிக்கும் சிந்தனைகளுக்குத் தடைபோடுவோம்.

அதிகப் புரட்டுதல்களை எதிலும் தவிர்ப்போம்:  வெவ்வேறு விதங்களில், வடிவங்களில் ஆம்லெட் தயாரிக்கப்படும் வடிவமைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். ஆம்லெட் பெறும் வடிவங்கள் வீட்டிற்குள்ளும், வீதியிலும் மாறுபடுகின்றன. அன்பின் வெளிப்பாடாய் வீட்டிலும், வணிகத்தின் முனைப்போடு கடைகளிலும் ஆம்லெட் பரிமாறப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வீட்டில் அதிகம் என்பதால் குறைவான அளவு எண்ணெய், மிதமான உப்பு சேர்கிறது. கடையிலோ சுவைக்கும், வடிவத்திற்கும் முக்கியத்துவம் கூடுதல்.

புரட்டிப்போடாமல் சற்று நேரத்தில் எடுப்பது ஆஃபாயில்; இரண்டு முறை புரட்டிப்போட்டால் ஆம்லெட். இதுதான் தத்துவம். இதற்குக் கூடுதலாகப் புரட்டிப் போடமலே விட்டுவிட்டாலோ அல்லது பலமுறை புரட்டிக்கொண்டே இருந்தாலோ கறைபட்டு காரியம் பயனற்றுப் போய்விடும். எதையும் தேவைக்கு அதிகமாய்ப் புரட்டிக் கொண்டேயிருந்தால் வெறுப்புதான் மிஞ்சும்.

பல நேரங்களில்  நடந்து முடிந்த காரியங்களையே மனத்தில் புரட்டிக் கொண்டிருப்பதனால் முன்னோக்கி நடைபயில முடியாமல் நாள்களை வீணடிக்கிறோம். வளர்ச்சிக்கான புரட்டுதல்கள் என்றால் ஒருமுறை அல்லது இருமுறைக்குள் தெரிந்துவிடும்; தெளிவு பிறந்துவிடும். அதை விடுத்துப் பலமுறை அதையே புரட்டுவது கரிந்து போன ஆம்லெட்போல் ஆகிவிடும். உயிர்ப்புக் கல்லறையும் ஒருமுறைதான் புரட்டப்பட்டது. நம்பிக்கை பிறந்தது, மாற்றம் நிகழ்ந்தது... பயணிக்கும் எம்மாவு சீடர்களிலும்.

நாமும் எம்மாவு சீடர்களாகுவோம். உடைக்க வேண்டியவற்றைப் பட்டியலிடுவோம். நாமே உடைபட வேண்டிய தருணங்களை இனம் காண்போம். நமது உடைபடுதல்கள் உயிர்ப்பு கொடுப்பவையாய் அமைவதை உறுதி செய்வோம். அது தவிர்த்து, பதவிகளுக்காய், அதிகாரங்களுக்காய், அங்கீகாரங்களுக்காய் மனிதர்களை, மனித உணர்வுகளை, சூழல்களை அநீத விதத்தில் உடைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருபோதும் அதிகார மனநிலைகள் நமக்கு வேண்டாம். எப்போதும் நினைவிருக்கட்டும், அதிகார மையங்கள் ஆபத்தானவை. “எந்த ஜென்மத்திலும் மன்னனாகப் பிறந்துவிடக்கூடாது. சகல அதிகாரங்களையும் கொண்ட இந்நிலையை அடைவதற்குத் துடிக்கும் ஒருவன் கைகள் எவ்வளவு இரத்தக்கறை படிந்தவையாக மாறுகின்றனஎன்றுஇடக்கைஎனும் நாவலில் எஸ். ராமகிருஷ்ணன் இந்துஸ்தானையே அடக்கி ஆண்ட ஒளரங்கசீப் சொல்வதுபோல் குறிப்பிடுகின்ற வார்த்தைகள் நினைவிருக்கட்டும்.

Comment