No icon

வேறு மதத்தவரைத் திருமணம் செய்த பெண்களை கவனிக்க சிறப்புக்குழு

மகாராஷ்டிரா அரசுக்குக் கடும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் மதம் மாறித் திருமணம் செய்தவர்கள், வேறு மதத்தவரைத் திருமணம் செய்த பெண்கள் பட்டியலைச் சேகரிக்கும் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

நாடு முழுவதும், லவ் ஜிகாத் பிரச்னையை இந்து அமைப்புகளும், பா.. ஆளும் மாநிலங்களும் பெரிய அளவில் எழுப்பிவருகின்றன. சில மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தன. சமீபத்தில் டெல்லியில் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற இந்துப் பெண் பூனாவாலா என்ற மாற்று மதத்தைச் சேர்ந்த காதலனால் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும் பெண்கள் பட்டியலைச் சேகரிக்க 13 பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருந்தது.

இந்த கமிட்டி மாநிலம் முழுவதும், மாவட்டவாரியாக சாதி மற்றும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்த பெண்களைக் கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. மங்கள் பிரபாத் லோதா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டி, ``வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள், பதிவுத் திருமணம் செய்த பெண்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும். அதோடு அந்தப் பெண்களுக்குத் தேவையான உதவிகள், கவுன்சலிங் கொடுக்கும்.

அதோடு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்த பெண்கள் குடும்பத்தோடு தொடர்பில் இருக்கிறார்களா என்ற விவரத்தையும் இந்த கமிட்டி கேட்டறியும். சாதி, மதம் மாறித் திருமணம் செய்த பெண்கள் தங்களது குடும்பத்தினரிடம் தொடர்பில் இல்லாத பட்சத்தில் அரசு அமைத்திருக்கும் கமிட்டி அந்தப் பெண்களை தொடர்புகொள்ளும். திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் பெண்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படும்'' என்று அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களின் புகார்களைப் பெற தனி ஹெல்ப்லைன் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதையடுத்து கலப்புத் திருமணம் செய்தவர்கள், அதாவது வேறு சாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும் பெண்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று இந்த கமிட்டியின் தலைவர் மங்கல் பிரபாத் லோதா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``தவறுதலாகக் கலப்புத் திருமணம் செய்தவர்கள் பற்றிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிவிட்டோம். வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் பெண்கள் பற்றி மட்டுமே விவரங்கள் சேகரிக்கப்படும். அரசு யாருடைய வாழ்க்கையிலும் தலையிடாது. குடும்பத்திலிருந்து விலகியிருக்கும் பெண்களுக்கு உதவத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம்'' என்று தெரிவித்தார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜிதேந்திர அவாத் அளித்த பேட்டியில், ``பாபாசாஹேப் அம்பேத்கர் முதன்முதலில் பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து சாதித்தடையை உடைத்தார். அரசின் உத்தரவுக்கு இந்துக்களே எதிர்ப்பு தெரிவித்ததால் கலப்புத் திருமணம் செய்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று அரசு தெரிவித்திருக்கிறது என்றார்.

``மற்றொரு ஷ்ரத்தா போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் ஷ்ரத்தா படுகொலையை பா.. அரசியலாக்கிவருகிறது என மகாராஷ்டிரா காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டியிருக்கிறார்'' என்றார்.

 

Comment