No icon

கோவிட்-19: ``கிறிஸ்தவத்தால்தான் இந்தியர்கள் பிழைத்தனர்!" -

சர்ச்சையைக் கிளப்பிய சுகாதார இயக்குநர்

``இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சுகாதார இயக்குநராக அவர் தன் தொழில்முறை அடையாளத்தின் மீது மத அடையாளத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறார்." - பாஜக கண்டனம்

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் உலக நாடுகளை வாட்டி வதைத்துவிட்டது. அதிலும் இந்தியாவில் கொரோனாகால ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எறும்பு சாரையாகச் சென்ற காட்சிகள் இணையத்தை உலுக்கின. பின்னர் அடுத்தடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா மெல்ல மெல்லக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போது சீனாவில் புதிதாக BF.7 ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் அங்கு அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவிலும் 4 பேர் BF.7 ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்த நிலையில், தெலங்கானா சுகாதார இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் புதிய சர்சையைக் கிளப்பியிருக்கிறார்.

நேற்றைய தினம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீனிவாஸ் ராவ், ``கோவிட்-19 தொற்று தணிந்ததற்குக் காரணம் இயேசுதான். கிறிஸ்தவத்தால்தான் இந்தியர்கள் பிழைத்தனர். மருத்துவர்களின் சிகிச்சையால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இயேசுவின் கருணைதான் அதைக் கட்டுப்படுத்தியது" என்று கூறினார். ஸ்ரீனிவாஸ் ராவ் ஓர் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அந்த வரிசையில் பா.. தலைவர் கிருஷ்ணசாகர் ராவ், ``இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு சுகாதார இயக்குநராக அவர் தன் தொழில்முறை அடையாளத்தின் மீது மத அடையாளத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறார். அவருக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால், பொதுவெளியில் இது போன்று கூற முடியாது. எதற்கு சுகாதார இயக்குநராக இருக்க வேண்டும்... ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும். அவரை கடவுள் பாதுகாக்கட்டும்" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 

Comment