No icon

ஜூலை 31 (புனித இஞ்ஞாசியார் திருவிழா)

புனித இஞ்ஞாசியாரின் ஒருங்கிணைந்த ஆளுமை

வாழ்வின் இரு வேறுபட்ட பரிமாணங்களை இணைத்துச் செயல்பட்ட ஒருங்கிணைந்த ஆளுமையே (Integrated Personality) புரட்சிப் புனிதர் இஞ்ஞாசியாரின் தனிச்சிறப்பாகும்உடைபட்ட ஆளுமையில் (Split personality) வாழ்ந்த காலத்தில்  அவற்றை ஒன்றிணைக்க, ஆன்மிகப் பயிற்சிகளின் வழியாக ஆன்மிக உத்திகளைப் பரிந்துரைத்ததால் இப்புனிதர் உலகளாவியத் தாக்கத்தை ஏற்படுத்தியதற்குக் காரணமாய் அமைகிறது.   

மனிதரின் ஆளுமை அவரது வாழ்வின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆளுமை என்பது ஒரு மனிதரின் தனிப்பட்ட குணங்களையும் அல்லது அவரின் மனிதத் தன்மையையும், அதனால் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிக்கிறது. ஒரு மனிதரை இன்னார் என்று அடையாளப்படுத்தி, பிறரிடமிருந்து வேறுபடுத்தும் தனித்துவம் எனலாம்ஆளுமை ஒரு மனிதனின் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் ஊடுருவி ஒளிர்வதைக் காணலாம். குறிப்பாக, அவர் வாழ்வின் இக்கட்டான சூழலில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை ஆளுமை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒருசில தலைவர்களின் ஆளுமையை உலகம் ஏற்றுக் கொண்டு, பின்பற்ற விரும்புகிறது. அவர்களில் புனித இஞ்ஞாசியார் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார். அகில உலக இயேசு சபையை நிறுவி கல்விப் பணியாலும், இறைப்பணியாலும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் அளவிற்குத் தனது ஒருங்கிணைந்த ஆளுமையால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் புனித இஞ்ஞாசியார். உலகின் 112 -க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 இயேசு சபைத் துறவிகள் பணிபுரிகிறார்கள்.

அவர் காலத்தில் செபம் வேறு, செய்யும் பணி வேறு எனப் பிரித்துப் பார்த்த காலம். முழுநேரச் செப அப்போஸ்தலப் பணியை முதன்மைப்படுத்தியக் காலம். அவர்கூட கார்துசியன் என்ற முழுநேரச் செபம், தவம் செய்திடும் மடத்தில் சேர நினைத்தார். இவரின் தனிச்சிறப்பு செபத்தையும், செயலையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பார்வை ஆகும். வாழ்வை வழிபாடாய்ப் பார்க்கும் துறவறம் அமைக்கிறார். இயேசு சபையார் அனைவரும் பணியைச் செபமாகப் பார்க்கும் துறவிகள் (COMPLATIVES IN ACTION) ஆவர்.

துறவிகள் செய்திடும் பணியை முழு ஈடுபாட்டுடனும், தன்னால் இயன்ற அளவிற்குச் சிறப்பாகவும், புனிதமாகவும் செய்திடும் போது, அந்தப் பணியே செபமாகிறது. உண்மையான செபம் நம்மை ஆழ்ந்த அர்ப்பணமுள்ள பணிக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதாவது, ஒருவர் செபிக்கும் போது கிடைக்கும் அதே ஆன்மிக அனுபவம், அவருக்குத் தனது பணியைச் செய்திடும் போதும் கிடைத்த, அவர் பணியைச் செபமாக்கும் துறவறம் காண்கிறார் என்று பொருள். அதாவது, நாம் செய்திடும் வேலை நம்மை இறைவனோடு ஒன்றிக்கச் செய்திடும் செபமாகப் பார்ப்பதே புனித இஞ்ஞாசியாரின் பார்வையாகும். இதற்கு அவர் விட்டுச் சென்ற ஆன்மிக உத்தி ஆன்ம ஆய்வு (EXAMEN) என்ற சுய விழிப்புணர்வுத் தியானம் ஆகும்.     

பெரும்பாலும் தனது வாழ்வில் அறிவை மையமாக வைத்து, அறிவியல் முறைப்படி  தனது காரியங்களைத் திட்டமிட்டுச் செய்தாலும், சில முக்கிய நேரங்களில் இறைபலத்தை நம்பி ஆன்மிகத் துணிவுடன் செயல்படுகிறார். தான் எந்த அளவிற்கு அறிவுஜீவியாக இருந்தாரோ, அந்த அளவிற்கு ஆன்மிக ஜீவியாகவும் தனது ஆளுமையை, ஒருங்கிணைந்த ஆளுமையாக அமைக்கிறார். பாம்பலூனா போரில் பிரெஞ்சுப் படையினர் 3000 பேரும், தனது ஸ்பெயின் நாட்டுப் படையில் 1000 வீரர்கள் இருந்த போதும் ஆன்மிகத் துணிவுடன் செயல்பட்டவராக இருக்கிறார். காரியங்களைச் செய்யும்போது முழுக்க முழுக்க நமது அறிவை மற்றும் திறமைகளைப் பயன்படுத்திச் செய்தபின், ஆன்மிகத் தன்மையோடு முடிவுகளை இறைவனிடம் அர்ப்பணிப்பதில் அவரது ஒருங்கிணைந்த ஆளுமை அடங்கியுள்ளதுஅதற்கு அவர் நமக்குக் கற்பித்த ஆன்மிக உத்தி ஆவிகளை ஆய்ந்துணர்ந்து, தெளிந்து தேர்ந்திடும் செபமுறை (DISCERNMENT OF SPIRITSஆகும்.

தனது துறவிகள் ஒவ்வொருவரும் தனித்துவமும், கருத்துரிமையும் பெற்றவர்களாகச் செயல்பட விரும்புகிறார். அதே நேரத்தில், குழும உணர்வையும், கூட்டுச் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கும் ஆளுமையே இவரின் தனிச் சிறப்பிற்குக் காரணம். இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் உத்தியாக ஆன்மிக உரையாடலைத் (SPIRITUAL CONVERSATION)   தருகிறார். அதாவது, ஆன்மிக உரையாடலில் அனைவரும் தங்களது தனித்துவம் வாய்ந்த சிறந்த கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். அதன்பின் அதன் நன்மை, தீமைகளை விவாதித்து இறுதி முடிவு எடுத்தபின், அனைவரும் அந்த முடிவைத் தங்களது முடிவாக ஏற்றுக்கொள்ளும் ஓர் உளவியல் ஆன்மிக உத்தியாகும்.

நிகழ்காலத்தில், அதாவது இங்கு, இப்பொழுது (HERE AND NOW) தனது முழுத்திறமையையும் சுய விழிப்புணர்வுடன் செய்த அவர், தொலைநோக்குப் பார்வையில்  எதிர்காலத்தை நினைத்து இன்றே தனது செயல்பாட்டைத் திட்டமிட்டுத் தொடங்கி செய்தவராகப் பார்க்கிறோம். இயேசு சபை வளர்ந்த காலத்திலே தனது சபை ஓரிடத்திலே முடங்கி விடாமல், அகில உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற அருமையான தொலைநோக்குப் பார்வையில் புனித பிரான்சிஸ் போன்ற வேதபோதகர்களை உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பி அகிலமெங்கும் பரவும் வகை செய்திருக்கிறார். நிகழ்காலத்தில் பணிசெய்தாலும், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, ஓர் ஒருங்கிணைந்த ஆளுமையைப் பெற்றவராக இருக்கிறார். இவ்வாளுமையைப் பெற்றிட அவர் பரிந்துரைக்கும் ஆன்மிக உத்தி IGNATIAN CONTEMPLATIONS

தன் வாழ்வில் ஏற்பட்ட அனைத்துத் தடைகளையும் நேருக்கு நேராக இறைபலத்தால் அவற்றில் நேர்மறை விடைகளைக் கண்ட ஒருங்கிணைந்த ஆளுமை பெற்றவர். பாம்பலூனா போரில் தோல்வி அடைந்து தடையைச் சந்திக்கிறார், அதில் தேவ அழைத்தல் என்னும் விடையைக் காண்கிறார். புண்ணிய பூமிக்குச் செல்ல முடியாத தடையை உணர்கிறார். அதன் விளைவாக மன்ரேசா குகையில் பத்து மாதங்கள் தங்கி ஆன்மிகப் பயிற்சிகளை விடையாகத் தருகிறார்.

உரோமில் சபையைத் தொடங்கிட தடையை உணர்கிறார். ‘லாஸ்டோடாஎன்ற இடத்தில் திருக் காட்சியின் மூலம்நான் உனக்குச் சாதகமாய் இருப்பேன்என்ற இறைகுரலையும், காட்சியையும்  விடையாகப் பெறுகிறார். இவ்வாறு தன் வாழ்க்கையில் தான் சந்தித்தத் தடைகளை விடைகளாக்கும் ஒருங்கிணைந்த ஆளுமையைப் பார்க்கலாம். இதற்கு அவர் தந்த உத்தி தனிச் செபம் (PERSONAL PRAYER) ஆகும்

தனது துறவிகள் தான் பணியாற்றும் இடத்தில், அதன் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி வேரூன்றி, தங்களது பணியை அமைத்துக் கொண்டாலும், அகில உலகத்தன்மையோடு சிறகுகளைப் பெற்றவராய், தனது சிந்தனையையும், பார்வையையும் அமைத்துக்கொள்ள பணித்தார்எனவேதான்இயேசு சபை உருவாகும் முன்பே, தனது அன்புத் தோழரான புனித சவேரியாரை அகில உலகப் பார்வையோடு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

உலகமெங்கும் பணியாற்றிய இயேசு சபைத் துறவிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தில் வேரூன்றியும், அதேநேரத்தில் உலகளாவியப் பார்வையைப் பெற்றவர்களாகப் பார்க்கிறோம். அதற்கு அவர் பரிந்துரைத்த ஆன்மிக உத்தி அனுதினத் திருப்பலி (HOLY EUCHARIST) ஒப்புக்கொடுத்தல் ஆகும்.

 புனித இஞ்ஞாசியார் திருவிழாவில், உடைந்த ஆளுமையை விடுத்து, ஒருங்கிணைந்த ஆளுமையைப் பெற்றிட வரம் வேண்டுவோம்.

Comment