No icon

ஏழைகளின் முன்னேற்றத்தில் நாம் காட்ட வேண்டிய ஒற்றுமை மற்றும் உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பு

அக்டோபர் 8, 1964 அன்று மேதகு ஆயர் D.S. லூர்துசாமி (பின்னாளில் மேமிகு D. சைமன் கர்தினால் லூர்துசாமியாக அறியப்பட்டவர்) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் ஆற்றிய உரை

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் மூன்றாம் அமர்வில் 13-ஆம் திட்டத்தின் கீழ் நடந்த கலந்துரையாடலில் (இன்றைய உலகில் திருச்சபை) பெங்களூருவின் ஆயர் மேதகு D.S. லூர்துசாமி (வயது 40) அவர்கள் இந்தியாவின் அறுபதுக்கும் மேற்பட்ட ஆயர்களின் பெயரால் ஏழைகளின் வாழ்வை முன்னேற்றுவதில் சந்திக்கக்கூடிய உளவியல் அம்சங்களை வலியுறுத்தி ஆற்றிய உரை:

வத்திக்கான் சங்கத்தில் ஆற்றப்பட்ட உரைகள் குறித்து அதற்கான அலுவலக ஆவணங்களை வைத்திருக்கும் பொறுப்பாளர்களின் கணக்குப்படி சுமார் ஆறாயிரம் செய்திகள் பல்வேறு திரு அவைத் தந்தையர்களால் தயாரிக்கப்பட்டன. அவற்றில் 1400 செய்திகளே சங்கத்தின்போது வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் இந்த உரை. இது பெங்களூருவின் ஆயர் மேதகு D.S. லூர்துசாமி அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும், ‘நவீன உலகில் திரு அவைஎனப்பட்ட ஆவணத்தின் செய்திகள் மிக அதிகமான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆவணம் குறித்த கலந்துரையாடல்கள் மட்டும் மூன்று வாரங்கள் வத்திக்கான் திருச்சங்க நிகழ்வில் நடைபெற்றன. இந்த ஆவணம் குறித்து நடந்த அந்த கலந்துரையாடல்களே திரு அவை குறித்த சரியான செய்திகளை வெளிப்படுத்தின. இந்த ஆவணமே இன்றுவரை தொடர்ச்சியாக அடிக்கடி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களாலும் பல்வேறு சூழல்களில் அறிவுறுத்தப்படும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

இச்சங்கத்தின் இத்திட்டத்தின் கீழ் பேசப்படும் செய்திகளே அடிக்கடி ஏதோ ஒருவகையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வுலகில் வாழும் அனைத்து மானிடரும் கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற கருத்துதான்! இது நமக்கு விடுக்கப்பட்டுள்ள பொதுவான அழைப்பு. இது நமது அடிப்படைக் கடமையாகும். இந்தத் திட்டத்தில் வரையறுத்துள்ளபடி ஏழைகளுக்கு உதவிக் கரம் நீட்டுவதும், துன்புறுவோரையும், அடித்தட்டில் வாழ்ந்து கொண்டிருப்போரையும் மேலே கொண்டு வந்து, அவர்களும் மற்றவர்களைப் போல இயல்பாக வாழ்வை வாழ்வதற்கு வழி வகுப்பதும் நம் கடமையாகும்.

உதவிக்கரம் நீட்டுதல்என்றால், நாம் அளிக்கக்கூடிய பணம், பொருள் போன்ற உலகியல் உதவிகள் மட்டுமல்ல; மாறாக, ஏழையராக, சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்களின் நிலையை மற்றவர்களின் நிலைக்கு உயர்த்துவதும், மனித மாண்பை உயர்த்திப் பிடித்து, அவர்களோடு ஒன்றிணைந்து நிற்பதும், இத்தகைய செயல்களால் அனைத்து மனித குலமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வில் வாழ்ந்திடும் வண்ணம் ஒட்டுமொத்த முழுமையான மாற்றத்திற்கு வழிகோல வேண்டும். நம்மிடத்திலுள்ள உலகியல் பொருள்களை இல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் மேலாக, நமது அறிவுத்திறன் வாயிலாக அறிந்து வைத்துள்ள தொழில்நுட்ப, அறிவியல் சார்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் மேலாக, உணர்வுப்பூர்வமாக மனிதர்கள் மத்தியில் உள்ள ஏழை-பணக்காரன் என்னும் வேறுபாட்டை வளமைக்கும் வறுமைக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதைச் செய்ய வேண்டும்.

சுருங்கக்கூறின், நாம் அவர்களுக்கு அளிக்கும் உலகு சார்ந்த தேவைகளை நிறைவு செய்தலைவிட மேலாக அவர்களது உணர்வு சார்ந்த நிலைக்குக் கொண்டு வரும் உதவியை நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அதாவது, நமது உதவிகள் இதயப்பூர்வமாகச் செய்யப்பட்டு, அது அதைப் பெறுவோரின் இதயத்தை நிரப்ப வேண்டும்இவ்வாறு இது இதயங்களுக்குள் ஒரு தொடர்பு உருவாக்கப்பட வேண்டும். தற்போது உதவி செய்வதில் உள்ள நன்கொடையாளர், நன்கொடை பெறுவோர் போன்ற ஒருவிதமான உணர்வுகள், கொடுப்பவர், பெறுபவர் போன்ற நிலையில் உள்ள உளம் சார்ந்த வேறுபாடு உலகளாவிய நிலையில் மட்டும் மாற்றம் பெற்றால் போதாது; மாறாக, அத்தகைய மாற்றங்கள் மறைமாவட்டங்கள் அளவிலும், பங்கு அளவிலும் மாற்றம் பெற்றாக வேண்டும். அந்த மாற்றங்கள் கீழ்க்காணும் விதத்தில் நிகழ வேண்டும்:

1. உள்ளவர்கள் இல்லாதவருக்கு உதவி செய்யும்போது, உள்ளவர்கள் மனத்தில் தன்னைப் பற்றியமேன்மையானவன்’, ‘உயர்ந்தவன்என்ற எண்ணங்கள் எழுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் நம்மிடமிருந்து உதவி பெறுபவர் எத்தகைய தாழ்வான எண்ணங்களுக்கும் உட்படாமல் நமது உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் தங்கள் உலகியல் தேவைகளைப் பெற்றுவிட்டால் மட்டும் போதும் என்று எண்ணிவிடக் கூடாது. அவர்களது உளவியலுக்கும் தேவையான உதவிகள் செய்ய வேண்டும். நம்மிடம் உதவி பெறுவோர் ஒருபோதும் மனத்தளவில் பாதிப்புக்கு உள்ளாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, ஒரு சகோதரன் மற்றோர் இல்லாமையில் உள்ள சகோதரனுக்கு உதவி செய்யும்போது, அவர் உயரத்தில் நின்றுகொண்டு சில ரொட்டித் துண்டுகளைத் தரையில் நின்று கொண்டிருக்கும் நாய்களுக்குப் போடுவது போன்ற நிலையில், அத்தகைய மனநிலையில் செய்யக் கூடாது (மாற்கு 7:27, லூக் 16:21). மாறாக, ஒரு சகோதரன் தனது சொந்தச் சகோதரனுடன் ஒரே மேசையில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் உதவி செய்ய வேண்டும். நம் ஆண்டவர் இயேசு இவ்வாறுதான் நம்மை உயர்த்தினார். அவர் தம் சீடரிடம்நான் உங்களைப் பணியாளர்கள் என்று அழைக்கமாட்டேன்; மாறாக, என் நண்பர்கள் என்பேன்” (யோவான் 15:15) என்றுதான் கூறினார். இந்த ஒருமைப்பாடு மனித மாண்பைக் குறித்து மனிதர்களை நடத்தும்போது வெளிப்பட வேண்டும். இவ்வாறு, மனிதர்களை இணைக்கும் அன்பானது பிளவுண்டுள்ள மனிதர்களை ஒன்றுசேர்த்து, அங்குச் சமத்துவம் ஏற்பட வழி செய்கிறது.

2. நம்மிடம் உதவி பெற வருவோர் உயர்த்திப் பிடிக்கப்படவும், மாண்புறு வகையில் நடத்தப்படவும் வேண்டும். ஏனெனில், கிறிஸ்து அவர்களுள் வாழ்கிறார். நாம் அத்தகைய மனிதருக்கு அளிக்கும் உதவிகளைத் தாமே பெற்றுக்கொண்டு நமக்கு அவர் நிலைவாழ்வை வழங்குகிறார் (மத் 25) இத்தகைய மறுமை சார்ந்த எண்ணங்களுக்காக மட்டுமல்ல; இயல்பான சில பல காரணங்களாலும் உதவி கேட்க வருவோர் கண்ணியத்துடன், மாண்புடன் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தனிப்பட்ட விதத்திலும், குடும்பமாக/குழுவாக எடுத்துக் கொண்டாலும், அவர்கள் தங்கள் பண்பாடு-கலாச்சார-பழக்க வழக்கங்களில் செழுமை உள்ளவர்களாக இருப்பர். தங்களது சமய நம்பிக்கைகளில், அது சார்ந்த வழிபாடு போன்றவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பர். குடும்ப ஒழுக்கத்தில் மேன்மையானவர்களாகப் புனிதத்துவத்துடன் இல்லறத்தை நல்லறமாக்கிக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களிடம் குறைவுபடுவது பொருளாதாரமும், நவீனகாலத் தொழில் நுட்பங்களுமே என்ற நிலையில் அவர்கள் இருக்கலாம்.

இந்தச் சமயத்தில் மேதகு ஆயர் அவர்கள் எவ்வாறு நவீனத் தொழில் நுட்பத்தில் மேம்பட்ட, வளர்ந்துவிட்ட நாடுகள் அவற்றில் பின்தங்கியிருக்கும் நாடுகளுக்குத் தங்களிடமுள்ள நவீனத் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொடுக்கின்றன என்பது குறித்தும் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். எனவே, நாடுகளாயினும், மனிதர்களாயினும் அவர்கள் முன்னேறி விட்டவர்கள், வளர்ந்து கொண்டிருப்பவர்கள், வளர வேண்டியவர்கள் என்று தரம் பிரித்துப் பார்க்கும்போது, அவற்றிற்கான அளவைகளாக அவைகளது பொருளாதார இல்லாமை () பற்றாக்குறையையோ, உலகியல் பொருள்கள் இல்லாமையை, பற்றாக்குறையை () அவர்களிடமுள்ள / நாடுகளிலுள்ள வளமை ஆகியவற்றையோ கொண்டு அளவிடக்கூடாது.

3. தன்னிடம் மிகுதியாக உள்ளவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படியே இல்லாதாருக்கு உதவி செய்யலாம். சில சந்தர்ப்பங்களில் சிலர் தங்களிடம் உள்ள இல்லாமையைக் கையேந்திக் கேட்டு அதனை வெளிப்படுத்த வெட்கப்படுவார்கள். அவர்கள் கையேந்துமளவிற்கு இல்லாதோரும் அல்லர்; அதே சமயத்தில் மிக அவசியமான தேவையில் உள்ளவர்களாகவும் இருப்பர். அத்தகையோர் பிறரிடம் வந்து வாய்விட்டுக் கேட்காமலிருப்பது அவர்களது வறட்டுக் கௌரவம் அல்லது பெருமை என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஒருவேளை அவர்கள் வாழும் சமுதாயத்தில், அவர்கள் சார்ந்துள்ள திரு அவையின் நல்லொழுக்கத்திற்கும், மரியாதைக்கும் பங்கம் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால்தான்  என்பதை  உணர்ந்து, நாம் அவர்களது துன்பங்களை அறிந்திருந்தால், அவர்களுக்கு நம்மால் உதவ முடியுமானால் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு கேட்காமலேயே தானாகவே முன்வந்து உதவி செய்வது, அதைப் பெறுவோரின் மனத்தில் உற்சாகத்தை அளித்து அவர்கள் சமுதாயத்தில் உயர்த்தப்படுவதைப் போன்று உணர்வதற்கும் அவை உதவி செய்வோர் அந்த இல்லாமையில் இருப்போரின் துன்பத்தில் பங்குகொண்டு அவர்களோடு இணைந்திருத்தலையும், மனித குலத்தின் மாண்பு உயர்த்தப்படுதலையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

4. இவ்வாறு வகுக்கப்பட்டுள்ள இந்தத்  திட்டங்களும், அவற்றைச் செயலாக்கம் செய்யும் இறை மக்களின் செயல்பாடுகளும், நல்ல பயனளிக்கும் முயற்சிகளாக இருந்து பெரும் பலன்களை நல்குபவையாக இருக்கும். இவ்வாறு தனிப்பட்ட மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த தனிப்பட்ட மனிதருக்குச் செய்யும் உதவிகள். குடும்பங்கள் மற்ற குடும்பங்களுக்கு அளிக்கக்கூடிய உதவிகள். ஒரு நாடு மற்றொரு நாட்டுக்குச் செய்யும் உதவிகளையும் நாம் உதறித்தள்ளிவிட முடியாது. அதாவது, இப்படி உதவி செய்தல் மைய அமைப்பைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் இவ்வாறு தனிப்பட்ட விதத்தில் அளிக்கப்படும் உதவிகள், தனிப்பட்ட விதத்தில், நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச்சென்று வழங்குதல், வேறு எந்த இடைநிலை மனிதர்களின், அதற்கென செயல்படும் அமைப்புகளின் இடைமறித்தல் இன்றி உதவி செய்தல், கொடுப்பவர், பெறுபவர் மத்தியில் நெருக்கமான உறவை வளர்க்கவும், உணர்வுப்பூர்வமான நல்ல உறவுகள் வலுப்படவும் அவை வழி செய்கின்றன. மாறாக, பெரிய அளவில் அமைப்பு சார்ந்து செய்யப்படும் உதவிகள், அறச்செயல்கள் இருவரின் இதயங்களின் நெருக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அவை எந்த விதமான உளவியல் மாற்றங்களையோ, உதவிகளையோ செய்துவிடுவதில்லை.

அமைப்புகள் வழியாகச் செய்யப்படும் உதவிகள் அவற்றைப் பெறுவோர்மீது ஏற்படும் கழிவிரக்கத்தின்பாற்பட்டதாக, அளிப்பவர்தான் உயர்ந்த நிலையில் இருந்துகொண்டு தனக்குக் கீழே உள்ள பயனருக்கு வழங்கும் உதவியையே வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தகைய உளவியல் உதவிகள் குறித்து அதிகமாகக் கவனம் செலுத்தி, அதற்கேற்ப உதவி செய்யும் தனி மனிதர்கள், குழுக்கள், அமைப்புகள், நாடுகள் சரியான வழிகளைப் பின்பற்றி உதவிகளை அளித்தால், அது உணர்வுப்பூர்வமான நல்ல பலன்களை, மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களின் மத்தியில் ஒருமைப்பாடு எட்டப்பட்டு, பெறுவோரும், கொடுப்போரும் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகளே என்ற பரந்துபட்ட எண்ணம் வளர்ச்சி பெற வாய்ப்பாக அமையும். அவ்வாறின்றி கொடுப்பவர் மேலே, பெறுபவர் கீழே என்ற எண்ணத்துடனான உதவிகளால் விரிசல் மிகப் பெரிதாகி, ஒரு கட்டத்தில் இனி அவை ஒன்று சேரவே முடியாது என்ற ஒரு கடுமையான நிலையும் உருவாகலாம். இதனால் இறைவனின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் என்ற உணர்வு வகுக்கப்படும்போது அதில் மக்களிடையே உணர்ச்சிப்பூர்வமான ஒருமைப்பாடு எட்டப்படுவதற்கான வழிகள் கண்டறியப்பட்டு அவற்றை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும்.

Comment