No icon

இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 22

நான்கு வகை வேண்டல்கள்!

நாம் ஒவ்வொருவரும் தனியாகவும், குடும்பமாகவும், திரு அவைச் சமூகமாகவும் இறைவேண்டல் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த மூன்று வகைகளிலும் பின்வரும் நான்கு விதமான மன்றாட்டுகளையும் பயன்படுத்தினால்தான் நம் இறைவேண்டல் முழுமையடையும்.

1. திருவழிபாட்டு மன்றாட்டுகள்:

திருப்பலியிலும், திருப்புகழ்மாலை உள்ளிட்ட இதர வழிபாடுகளிலும் நாம் ஏராளமான மன்றாட்டுகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றில் பெரும்பாலானவை நமக்கு மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரியாதவர்கள் இரங்கத்தக்கவர்கள். எடுத்துக்காட்டாக, ‘எல்லாம் வல்ல இறைவனிடமும்’ என்னும் திருப்பலி மன்றாட்டைச் சொல்லலாம். அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய, ஆனால் பலருக்கும் தெரியாத மற்றொன்று ஒப்புரவு அருள்சாதனத்தின்போது நாம் பயன்படுத்தும் மனத்துயர் மன்றாட்டு. ‘என் இறைவனாகிய தந்தையே’ என்று தொடங்கும் இந்த மன்றாட்டை வேண்டினால்தானே, ஒப்புரவு அருளடையாளம் நிறைவுபெறும்? ஆனால், இதைச் சொல்லத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனரே! ஒருசிலருக்கு இதன் பழைய வடிவமான ‘உத்தம மனஸ்தாப மந்திரம்’ தெரிந்திருக்கலாம். ஆனால், பழையது, புதியது எதுவுமே தெரியாவிட்டால், இறைவேண்டலுக்கு அடித்தளமே இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றும்.

2. மரபு மன்றாட்டுகள்:

திருவழிபாட்டு மன்றாட்டுகள் ‘தொடக்கக் கல்வி’ என்றால், மரபு மன்றாட்டுகளை ‘நடுநிலைக் கல்வி’ எனலாம். வழிபாடுகளுக்கு வெளியே காலங்காலமாக நம் திரு அவையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஏராளமான சிறப்பு வேண்டுதல்களே மரபு மன்றாட்டுகள். இவற்றில் முகாமையான சிலவற்றையாவது அனைவரும் கண்டிப்பாக அறிந்து, நாள்தோறும் மன்றாட வேண்டும்.

புகழ்பெற்ற மரியன்னை மன்றாட்டுகளான ‘மிகவும் இரக்கமுள்ள தாயே’ என்னும் பெர்னார்தின் மன்றாட்டு, செபமாலையின் இறுதியில் பயன்படுத்தப்படும் ‘கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க’ (அல்லது அதன் தற்கால வடிவமான ‘வாழ்க அரசியே’) இரண்டையும் அறியாதவர்களைக் கத்தோலிக்கர் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆயினும், நமது இளைய தலைமுறையினர் பலருக்கும் இந்த மன்றாட்டுகள் தெரியாது என்பதுதானே கசப்பான உண்மை! பெற்றோர், மறைக்கல்வியாளர்கள், பங்குத்தந்தையர், மேய்ப்புப் பணித்தொண்டர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இயேசுவின் திரு இருதயத்துக்குக் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கிற செபம், தூய ஆவியார் மன்றாட்டு, காவல்தூதர் மன்றாட்டு, உணவுக்கு முன் / பின் மன்றாட்டுகள், இரக்கத்தின் செபமாலை, திரு இருதயச் செபமாலை, ‘கிறிஸ்துவின் ஆன்மாவே’ போன்ற மன்றாட்டுகள் காலங்காலமாகத் திரு அவையால் மன்றாடப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டவை. எனவே, இவற்றை நாமும் தவறாமல் நமது இறைவேண்டலில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

3. திருவிவிலிய மன்றாட்டுகள்:

இறைவேண்டல் பள்ளியில் தொடக்கக் கல்வியும், நடுநிலைக் கல்வியும் கடந்துவிட்டால், அதன் அடுத்தக்கட்ட ‘உயர் கல்வியே’ திருவிவிலிய மன்றாட்டுகள்.

திருவிவிலியம்தான் அனைத்து மன்றாட்டுகளின் ஊற்று. அங்கிருந்துதான் ஆராதனை, இறைப்புகழ்ச்சி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பணம் என்னும் அத்தனை விதமான வேண்டுதல்களும் ஊற்றெடுக்கின்றன. எனவே, திருவிவிலிய மன்றாட்டுகளையும் நாம் மனப்பாடம் செய்து, நாள்தோறும் நமது தனி, குடும்ப வேண்டுதல்களில் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக, திருப்பாடல்கள் 103:1-6 என்னும் பகுதி: ‘என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு. என் முழு உளமே அவரது திருப்பெயரை ஏத்திடு. என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே’ என்று தொடங்கும் இத்திருப்பாடலின் முதல் பகுதியைக் காலை எழுந்தவுடன் முதல் பணியாக மன்றாடுவது அந்த நாளின் மங்கல முழக்கமாக அமையும். இதே பகுதியை அன்றைய நாளின் இரவில் இறுதி மன்றாட்டாக வேண்டுவதும் பொருத்தமாக அமையும்.

இத்திருப்பாடலைப் போலவே, திருப்பாடல்கள் 23 (‘ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை’) எவ்வேளைக்கும், எச்சூழலுக்கும் உகந்த உலகின் மிகப் பிரபலமான திருப்பாடல் என்னும் பெருமைக்கு உரியது.

பாதுகாப்புக்கான திருப்பாடல்களாகத் திருப்பாடல்கள் 121 (‘மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்தினேன்’) அல்லது திருப்பாடல்கள் 91 (‘உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்குபவர்’) என்னும் திருப்பாடலை நமது பயணங்களின் போதும், குடும்ப இறைவேண்டலிலும் அன்றாடம் பயன்படுத்தலாம்.

திருப்பாடல்கள் 150 (‘அல்லேலூயா, தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்’) மிகச்சிறந்த ஓர் இறைப்புகழ்ச்சித் திருப்பாடல். இதனையும் நாள்தோறும் மன்றாடலாம்.

இப்படி நமக்குப் பிடித்தமான ஓரிரு திருப்பாடல்களை மனப்பாடம் செய்து, நாள்தோறும் நமது தனி மற்றும் குடும்ப இறைவேண்டல்களில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

4. சொந்த மன்றாட்டுகள்:

இறைவேண்டல் பள்ளியின் ‘பட்டப் படிப்பு’ என்று இதனை அழைக்கலாம். ஒவ்வொருவரும் தமது சொந்தச் சொற்களில் ஆண்டவருக்கு இறைப்புகழ்ச்சி, நன்றி, மன்னிப்பு, மன்றாட்டு, அர்ப்பண மன்றாட்டுகளை ஏறெடுப்பதே நான்காவதும், நிறைவானதுமான மன்றாட்டு.

எத்தனையோ ஆண்டுகளாகக் கத்தோலிக்கராக இருந்தும், சொந்தமாக ஓர் இறைப்புகழ்ச்சியோ, மன்றாட்டோ சொல்லத் தெரியாத கத்தோலிக்கர் ஏராளமல்லவா?

‘எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார்தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்’ (உரோ 8:26) என்னும் இறைமொழிக்கேற்ப, தூய ஆவியார் நாம் சொந்தமாக இறைவேண்டல் செய்ய உதவுகிறார்.

நாமும் அன்றாடம் சொந்தமாகச் செபித்து, அந்தப் பயிற்சி மற்றும் அனுபவத்தின் விளைவாகச் சொந்தமாக இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்.

(தொடரும்)

Comment