No icon

ஜூலை 31 - ஞாயிறு வழிபாட்டுக் குறிப்புகள்

ஆண்டின் பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு சாஞா 18:6-9, எபி 11:1-2, 8-12, லூக் 12:32-48

இன்று நாம் பொதுக்காலத்தின் 19 ஆம் ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும் என்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் நமக்கு எடுத்துரைக்கிறார். மிகுதியாக கொடுக்கப்பட்டவர்கள் யார்? அரசர்களா, ஆளுநர்களா, தலைவர்களா, செல்வந்தர்களா என்றால் கண்டிப்பாக இல்லை. மிகுதியாக கொடுக்கப்பட்டவர்கள், கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவர்களாகிய நாமே. ஒரு மனிதன் ஆண்டவரின் இரண்டாம் வருகையின்போது, நிலைவாழ்வை தீர்வாக பெற்றுக்கொள்ள எப்படி வாழ வேண்டும் என்ற வரைமுறையானது, கிறிஸ்துவர்களாகிய நமக்கே அதிகமாக தரப்படுகின்றது. ஆண்டவரில் குறைவில்லா நம்பிக்கை கொள்ள வேண்டும், பிறரை அன்பு செய்ய வேண்டும், எதிரிகளை மன்னிக்க வேண்டும், அடுத்தவர் மீது இரக்கம் காட்ட வேண்டும், அனைவரையும் மனிதர்களாக மதிக்க வேண்டுமென்று, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அறிவித்து, வாழ்ந்து காட்டி, வாழ அழைப்பு விடுத்திருக்கிறார். நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்வதற்கான வழிமுறைகளை ஆண்டவர் இயேசு நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். அவர் கற்றுத்தந்துள்ள படிப்பினைகளின் படி நாம் வாழ்கிறோமா?. ஆண்டவரின் மீது நமது நம்பிக்கை அதிகரித்து இருக்கிறதா அல்லது குறைந்து போய் இருக்கிறதா? நமக்கு எதிராக பேசியவர்களை மன்னித்திருக்கிறோமா? நமக்கு துரோகம் செய்தவர்கள் மீதி இரக்கம் காட்டியிருக்கிறோமா? நம்மை தகாத வார்த்தைகளால் திட்டியவர்களை அன்பு செய்திருக்கிறோமா? நம்மை ஏளனப்படுத்தியவர்களை நாம் பெருமைப்படுத்தி இருக்கிறோமா என்று, சிந்தித்துப் பார்ப்போம். இவ்வாறு, எப்படி மன்னிக்க வேண்டும், அன்பு செய்ய வேண்டும், இரக்கம் காட்ட வேண்டும், எந்தளவு ஆண்டவரில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது, கிறிஸ்தவர்களாகிய நமக்கு அதிகமாக கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அதிகமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்ற சிந்தனையோடு ஆண்டவரின் ஆசீர்வாதங்களை பெற்றிட இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசகம் முன்னுரை

தாம் அளித்த வாக்குறுதியின்படி, அந்த இரவில் தன் தூதர்களை அனுப்பி, எங்கள் முன்னோர்களை அடிமைப்படுத்தி வதைத்தவர்களைக் கண்டித்து, தகுந்த தண்டனை அளித்து, எங்களை பெருமைப்படுத்தினார் ஆண்டவர் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நான் உனக்கு அளிக்க போகும் நாட்டுக்கு உடனடியாக செல் என்று சொன்ன, இறைவன் யார் என்று ஆபிரகாமுக்கு தெரியாது. இருப்பினும், அவரது சொல்லை நம்பி அவரை பின்தொடர்ந்து. தம் நம்பிக்கையை வெளிப்படுத்தினார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் உயிராற்றலே எம் இறைவா! உமது திரு அவையை வழி நடத்தும் உமது திருப்பணியாளர்கள் அனைவரையும் நம்பிக்கை என்னும் உமது ஆசீர்வாதத்தை பெற்று, அந்த நம்பிக்கையின் ஒளியில் உம் மக்களை உமது இறையாட்சியை நோக்கி வழி நடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. குருக்களுக்கெல்லாம் அரசராய் இருப்பவரே! உமது பணியை செய்ய நீர் தேர்ந்து கொண்ட குருக்களுக்கு, தேவையான உடல், உள்ள நலன்களை வழங்கி, அவர்களை பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வாக்குறுதிகளை நிறைவேற்றுபவரே! நீர் எம் முன்னோர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் படி, எம்மை எல்லாவிதமான அடிமை நிலைகளிலிருந்து விடுவித்து, உம் திருமகனின் தூய பலியில் அனுதினமும் பங்கெடுக்கும் பேறு பெற்றவர்களாக நாங்கள் வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒப்பற்ற எம் செல்வமே இறைவா! மண்ணக செல்வங்களில் எங்கள் மனதை செலுத்தாமல், அவற்றின் மீது நம்பிக்கை வைக்காமல், உம் ஒருவர் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, நிலைவாழ்வை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment