No icon

ஞாயிறு – 12.03.2023

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 17:3-7, உரோ 5:1-2,5-8, யோவா 4:5-42

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். நம் அனைவரையும் மனம்மாறி, வாழ்வுதரும் ஊற்றான ஆண்டவரைப் பற்றிக்கொள்ள இறைவன் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். யூதர்கள் மற்றும் சமாரியர்களுக்கு இடையே மிகப்பெரிய பகை இருந்தது. யூதர்களும், சமாரியர்களும் வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவரும் யூத இனத்தை சேர்ந்தவர்களே. நாடு கடத்தலின்போது, மற்றொரு நாட்டுக்கு அடிமைகளாக சென்ற யூதர்களில் சிலர், அங்கிருந்த மக்களோடு திருமணத்தில் இணைந்து, பிள்ளைகள் பெற்று வாழ்ந்தார்கள். பிறகு, தங்களின் இஸ்ரயேல் நாட்டுக்கு திரும்பி வந்தபோது, நீங்கள் அந்நியரோடு திருமணம் செய்து, தூய இரத்தத்தை மாசுபடுத்தி விட்டீர்கள். எனவே, இனிமேல் நீங்கள் கடவுளின் பிள்ளைகள் அல்ல; மாறாக, அசுத்தமானவர்கள், பாவிகள், சமாரியர்கள் என்று கூறி, மற்ற யூதர்கள் அம்மக்களை நாட்டுக்குள் வரவிடாமல் வெளியே தள்ளினார்கள். அன்றிலிருந்து யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் இடையே மிகப்பெரும் பகையானது வளர்ந்தது. ஆண்டவர் இயேசு எருசலேம் செல்வதற்கு சமாரியா வழியாக செல்ல முற்படும்போது, அவர் ஒரு யூதர் என்பதற்காக, சமாரியர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார். ஆனால், இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு சமாரிய பெண்ணோடு உரையாடுகிறார். அந்த உரையாடலின்போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து அப்பெண்ணின் பாவங்களை, குற்றங்களை சுட்டிக் காட்டுகிறார். அப்பெண் தன் பாவங்களை உணர்ந்த நொடிப்பொழுதில், அவளின் கண்கள் திறக்கப்படுகின்றன. இயேசுவை, நீர் இறைவாக்கினர், மீட்பர் என்று அறிக்கையிடுகிறார். மனம்மாறிய அப்பெண் ஆண்டவர் இயேசுவை கண்டதுபோல, நாமும் இத்தவக்காலத்தில் மனம்மாறி, இறைதரிசனம் பெற்றிட இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மோசேவால் வழி நடத்தப்பட்ட மக்கள் நீரில்லாமல் வாடிய போது, ஆண்டவர் அவர்களுக்கு நீரைத் தந்து வாழ்வளித்தார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நல்லவர்களுக்காக ஒருவர் தன் உயிரை கொடுக்கலாம். ஆனால், பாவிகளாகிய நமக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் உயிரையே கொடுத்து, நம்மீது கடவுள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. தூய ஆவியை பொழிபவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், இறைமக்கள் அனைவரும் உமது திருமகன் கொண்டு வந்த நற்செய்தியை, இவ்வுலகிற்கு அறிவிப்பதில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லாம் வல்லவரே! எம் நாட்டு இளைஞர்கள் தீய பழக்கங்கள், மது போதைகள், திரைப்படங்கள் மற்றும் அரசியலுக்கு அடிமையாகாமல், பிற்காலத்தில் நல்ல தலைவர்களாக உருவாக உழைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அரணும் கோட்டையுமானவரே! சர்வதேச பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற இம்மாதத்தில் குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்திருக்கும் பெண்களை நீர் மேன்மேலும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மனமாற்றத்தை தருபவரே! தவக்காலத்தின் மூன்றாவது வாரத்தில் இருக்கும் நாங்கள், எங்கள் உள்ளத்தில் இருக்கும் குற்றங்களை உணர்ந்து, மனம் வருந்தி, திருந்தி, உம்மிடம் வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஞானத்தை அருள்பவரே! தேர்வுகளுக்காக தங்களையே தயாரித்துக் கொண்டிருக்கிற மாணவ, மாணவிகளுக்கு நல்ல ஞாபக சக்தியை தந்து, தங்கள் தேர்வினை திறம்பட எழுதி, நல்ல மதிப்பெண்களோடு அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment