No icon

(சீஞா 27:30-28:7 உரோ 14:7-9 மத் 18:21-35)

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு
(சீஞா 27:30-28:7 உரோ 14:7-9 மத் 18:21-35)
கடவுளிடமிருந்து இலவசமாகப் பெற்றதை இலவசமாகத் தருவோம்!

எழுபது முறை ஏழுமுறை மன்னித்தல்யூத ராபிகள், ஒரு யூதன் மூன்றுமுறை மன்னித்தால் மட்டுமே போதுமானது. அதற்குமேல் தேவையில்லை என்று போதித்தனர் (ஆமோ 1:3,6,9,11,13, 2:1,4,6). மூன்று முறை அல்லது ஏழுமுறை ஓராண்டு அல்லது ஈராண்டு என்று மன்னிக்கும் குணத்திற்கு நிபந்தனை விதிப்பது வியாபாரக் குணமாகும். அது கடவுள் சிந்தனையில் வெளிப்பாடல்ல. விவிலியத்தில் இடம்பெறும் எண்களை அடையாளமாகப் பொருள்கொள்வதே சிறப்பு. ‘ஏழு’ என்ற எண் நிறைவு மற்றும் முழுமையின் அடையாளம், அதாவது மன்னிப்புத் தேவைப்படும்வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் (லேவி 26:21, இச 28:25, திபா 79:12, நீமொ 24:16, லூக் 17:4). இன்றைய நற்செய்தி ஏழுமுறை எழுபது முறை என்று கூறுகின்றது. ஏழு மற்றும் 10 எண்களின் பெருக்கத்தையும் முழுமையாகவே நாம் கருத வேண்டும். எத்தனை முறைகள் என்பதைவிட குற்றம் அகலும்வரை மன்னித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதையே இன்றைய நற்செய்தியில் பேதுரு மன்னிப்பு எல்லையுண்டா? 490 முறை போதுமா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு எல்லையே இல்லை என்று இயேசு பதில் தருகின்றார். லூக்கா தமது நற்செய்தியில் நாள் ஒன்றுக்கு ஏழுமுறை மன்னிக்க வேண்டும் என்று கூறுகின்றார் (லூக் 17:4). இன்றைய நற்செய்தி கற்றுத் தரும் பாடங்களைக் கண்ணோக்குவோம். 

மன்னிப்பு - கடவுள் குணமாகும்.
மற்றவர்களை மனதார மன்னிப்போர் மனிதன் என்ற தளத்தில் இருந்துகொண்டு தம்முள் இருக்கும் இறைமைக்குக் கீழ்படிகின்றனர். திருத்தந்தை புனித யோவான் இரண்டாம் பவுல் தம்மைச் சுட்ட முகமது அலிஅட்டாவை முழுமையாக மன்னித்து தமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரைச் சந்தித்தார். அவர் திருஅவையின் தலைவர் என்ற முறையில் 94 முறை மன்னிப்பு வேண்டியுள்ளார். ஒருமுறை அன்னைத் தெரசாவின் பணிகளைக் கொச்சைப்படுத்தி கிறிஸ்டோபர் கிட்கென்ஸ் ஆவணப்படம் எடுத்துவிட்டார். பலர் அதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என்று துடித்தபோது, அன்னைத் தெரசா அவர்கள், - அவர் தமது கருத்தைச் சொல்லியுள்ளார். அது என் பணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை - என்று கூறி அனைவரும் தத்தம் நற்காரியங்களில் ஈடுபட வேண்டினார். விவேகானந்தா வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட விவிலியத்திற்கு தாம் எழுதிய அணிந்துரையில், - இயேசு என்கின்ற மனிதன் எப்போது சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போதே தம்மைக் கொடுமைப் படுத்தியவர்களை மன்னித்தாரோ (லூக் 23:34) அப்போது தான் கடவுளாகிவிட்டார் என்று குறிப்பிடுகின்றார். புனிதஸ்தேபானைக் கால்லால் எறிந்துகொல்லும் இளைஞர் கூட்டத்தின் தலைவர் சவுல் (திப 7:58). தம்மைக் கொடுமைக்குள்ளாக்குபவரை மன்னித்து விட்டு இறக்கும் ஸ்தேபானின் குணம் சவுலின் மனத்தை ஆட்டிப்படைத்திருக்க வேண்டும். இந்த சம்பவமே தூய பவுல் மனமாற்றத்தின் முதல்படி என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   

முதல் பாடம்:  கடவுள் மன்னிப்பதில் ஊதாரித்தனம் மிக்கவர். 
கடவுளன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு மன்னிப்பு. கடவுளே விரும்பி னாலும் அவரின் மன்னிக்கும் குணத்திற்கு எல்லை விதிக்க இயலாது. மனிதரின் குற்றம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் உடனடியாகவும் நிபந்தனை இன்றியும் முழுமையாகவும் கடவுள் மன்னித்து விடுகின்றார் என்பதையே “எழுபது தடவை ஏழுமுறை” என்று இயேசு கூறுகின்றார். இதை மக்கள் புரிந்துகொள்ளும் முறையில்விளக்க மத்தேயு ஒரு உவமையைத் தருகின்றார். அரசன் தமது ஊழியனின் பத்தாயிரம் தாலந்து கடனை மன்னிக் கின்றார். ஒரு தாலந்து என்பது ஆறாயிரம் தெனாரியங்களுக்குச் சமமானது. ஒரு நாள்வேலைக்கான சம்பளம் ஒரு தெனாரிய மாகும். பத்தாயிரம் தாலந்து என்பது ஒருவர் ஆறுகோடி நாள்கள் உழைத்தால் கிடைக்கும் வருவாய். ஒருவர் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாதக் கடன் தொகை இது. யூத வரலாற்று ஆசிரியர் யோசேப்புவின் கருத்தின்படி கிமு 4 இல் யூதேயா, இதுமேயா, சமாரியாப் பகுதிகளில் வரியாக வசூல் செய்யப்பட்ட தொகை மொத்தம் 600 தாலாந்துகளாகும். இது பெரிய ஏரோதுவின் ஆண்டு வருமானமாகும். பெரும் கடன்பட்ட ஒருவரால் கடனைத் தீர்க்க முடியவில்லை. பழைய ஏற்பாட்டுச் சிந்தனைப்படி அவர் தம்மையும் மனைவி மக்களையும் விற்று கடனைத் தீர்க்க அரசன் உத்தரவிடுகின்றார் (2 அர 4:1, நெக 5:3-5, ஆமோ 2:6, 8:6, எசா 50:1). அக்காலத்தில் அடிமைகள் அவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படவில்லை. அவரின் சொந்த பந்தங்கள் அனைவரையும் அடிமைகளாக விற்றாலும் இந்தக் கடனை அடைக்க முடியாது. இந்த உவமையில் பணியாள் கடன் தொகையை மன்னிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் திருப்பிச் செலுத்திவிடுகின்றேன் என்றே வேண்டு கின்றார். தம் இதயத்தில் பொங்கிவழியும் பேரன் பினால் அரசன் அந்தத் தொகையை மன்னிக்கின்றார். 

ஓரு சாதாரண மனிதப் பிறவியான அரசனுக்கு இவ்வளவு இரக்கம் நிறைந்த இதயம் இருக்கும்போது, கடவுளின் இரக்கப் பெருக்கிற்கும் மன்னிக்கும் குணத்திற்கும் எல்லையே இல்லை என்பதையே நற்செய்தி அடிக்கோடிடுகின்றது. கடவுளுக்கு எதிரான நமது கிளர்ச்சிகளை அவர் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை (தானி 9:9). குற்றங்களுக்குத் தண்டனை தரத் துவங்கினால் ஒவ்வொரு வீடும் குற்றவாளிக் கூண்டாகவே மாறிவிடும் (எபி 8:12, திபா 130:3-4). மனிதர்களிடம் குறை இருப்பதும் சிலர் குற்றங்களின் கூடாரமாக வாழ்வதும் அவருக்குத் தெரியும். அந்தக் குறைகளை அவர் நிறைவாக்கவே துடிக்கின்றார். நிபந்தனை இன்றி மன்னிப்பது கடவுளின் குலத்தொழில் (எச 33:24, எரே 31:34, 33:8, யோவா 1:29). ஆவியினால் நிறைவேறும் (எச 11:1-3, யோவா 20:19-23). மன்னிக்கவில்லை என்றால் ஆவி செயல்படவில்லை (எச 57:15-21, 65:17-25). கடந்த காலக் குற்றக் கடன் என்ற கணக்குகளைப் பற்றி மனிதர்கள் அதிகம் பேசலாம். குறிப்புகள் எழுதி வைத்துத் தண்டிக்கலாம். ஆனால் முழுமையாக ஒருவரை அன்பு செய்கின்றவரிடம் குறை காணும் பழக்கம் இல்லை. அவர்தான் கடவுள். 

இரண்டாம் பாடம்: பிறரை மன்னிக்காமை ஏற்புடைய செயல் அல்ல. 
பெரும் செல்வத்தை அரசனின் பேரிரக்கத் தால் பெற்ற ஒருவரால் தமது சக ஊழியனின் நூறு நாள்கள் கூலியான நூறு தெனாரியத்தை மன்னிக்க முடியவில்லை. 6,00,000 முறை அதிகமாக மன்னிப்புப் பெற்ற ஒருவர் சிறிய தொகைத் திருப்பிச் செலுத்த முடியாத ஊழியனின் கழுத்தைப் பிடித்து நெரித்து, உடனே என் பணத்தைத் திருப்பிக் கொடு என்பதும், அவரைச் சிறையில் தள்ளுவதும் அடிப்படை மனித மாண்புக்கு எதிரான அநீதிச் செயலாகும். இந்த நிகழ்வைக் கண்டவர்களே நொந்துபோனர் என்று நற்செய்தி கூறுகின்றது. பிறரை மன்னிக்க மறுப்பது நம்மை முழுமையாக மன்னிக்கும் கடவுளுக்கு எதிரான செயல் என்பது இங்கு அழுத்தம் பெறுகின்றது. யூபிலி ஆண்டில் ஒருவர் தாம் கொடுத்த கடன்களை எல்லாம் மன்னிப்பது கட்டாயமாகும். மேலும் மற்றவர்களிடமிருந்து நிலத்தைப் (கடனுக்கு ஈடாகப் பறித்துக் கொண்டவர்) பெற்றுக்கொண்டவர், அதை அதன் உரிமையாளரிடம் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும். தந்தை கடனாளியாக வாழ்ந்தால் அவரது மகன் விடுதலைக் குடிமகனாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அடிமை யூபிலி ஆண்டில் விடுதலைப் பெற்றுச் செல்லும் வேளையில் தலைவர் அவர் கைநிறைய பொருள்களைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதும் விவிலியச் சிந்தனை. கடவுள் நமக்குத் தாராளமாக இரக்கம் காட்டிக் குறைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் நாம், மற்றவர்களின் குற்றங்களையும் மனதார மன்னிக்கும் கடமை உண்டு. 

மூன்றாவது பாடம்: மன்னியாமல் இருப்பதன் விளைவுகள் கொடுமையானவை. 
இன்றைய உவமையில் பணியாள் வதைப் போரிடம் கையளிக்கப்படுகின்றார். அவர் எந்த அளவையால் மற்றவருக்கு அளந்தாரோ அதே அளவையால் அவருக்கும் அளக்கப்படுகின்றது (மத் 7:2). இரக்கம் காட்டாத அவர் இரக்கம் பெறவில்லை (மத் 5:7). திருத்தூதர்கள் இரக்கத்திலும் (லூக் 6:36), மன்னிப்பிலும் அன்பிலும் (1 யோவா 4:11, யாக் 2:13) சிறந்தோங்க வேண்டும். எதிரிகள் இல்லாத வாழ்வே அமைதி தரும். வெறுப்பு வெறுப்போரையே முதலில் சீர்குலைக்கும், பின்பு அவரைச் சின்னாபின்னமாக்கும். இன்றைய பல உடல் நோய்களுக்குக் காரணம் மன இறுக்கமாகும். மன்னிக்காதவர் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கின்றார். தேவையில்லாத பாரமான சிலுவையை இரவும் பகலும் தூக்கிச் சுமக்கின்றார். மன்னிப்பின்மை - ஒருவரைத் தொடந்து துரத்தும்கற்பனை எதிரி, நிம்மதியை அழிக்கும் சாத்தான், ஒருவரின் ஆளுமையை அழிக்கும் புதைகுழி. புறக்கண்களுக்குத் தெரியாமல் ஒருவரின் வாழ்வாற்றலைக் குடித்து, அவரின் நேரத்தை வீணடித்து அவரின் மனநிம்மதியையும் ஆளுமையையும் அழித்து வாழ்நாள் முழுவதையும் சுடுகாடாக்கும் கொரோனா வைரஸ் கிருமி. இதையே இன்றைய முதல் வாசகம் வெகுளி, சினம் இரண்டும் வெறுப்புக்குரியவை என்று உரைக்கின்றது. 

நான்காம் பாடம்: கடவுள் எச்சரிப்பார் ஆனால் இரக்கப்பெருக்கம் கொண்டவர்.
சக ஊழியனைத் தண்டித்த பணியாளனை அரசன் மன்னிக்காமல் ஏன் வதைப்போரிடம் கையளித்தார், இதற்குப் பெயர் பழிக்கு பழி இல்லையா? என்ற கேள்வி இங்கு எழலாம். மன்னிப்பின் அவசியத்தைஉணர்த்தும் கடுமையான எச்சரிக்கையே இதுவாகும். கடவுளுக்கு எவரையும் நிரந்தரமாகக் தண்டிக்கத் தெரியாது. ஆண்டவர் நமது குற்றங்களைக்கணக்கில் வைத்துக்கொண்டால் அவருக்கு முன்யாரும் நிற்க இயலாது (திபா 130:1). இன்றைய உவமையில் பணியாளனைக் கொடுமைப்படுத்து வதுப் பிரச்சினைக்கான தீர்வல்ல. தண்டனை அனுபவிக்கும் அவர் ஒருவேளை திருந்தலாம், ஆனால்அவரால் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாது. எவரும் இந்தப் பணியாள் போல் பிரமாணிக்கமின்றி செயல்பட கூடாது என்பதே கடவுளின் விருப்பமாகும். ஒருவரை நிரந்தரமாகத் தண்டித்து அவரை நிர்மூலமாக்குவது கடவுளின் எண்ணத்தில்கூட இல்லை. கடவுள் முன்னிலையில் பாவம் செய்யும் மனிதர்கள் உள்ளார்களே தவிர, நிரந்தர பாவிகள் யாரும் இல்லை. இதையே நமது பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிக்க முடியாத பாவமோ குற்றமோ எதுவுமில்லை என்று அறிக்கையிடுகின்றார். விவிலியத்தில் பாம்பைச்சபித்த கடவுள் ஏவாளை மன்னித்தார். சகோதரனைக் கொலை செய்த காயினைத் தண்டித்தாலும் அவருக்குயாரும் தீங்கிழைக்காமல் பாதுகாத்தார். நோவாவின்காலத்தில் பெருவெள்ள அழிவுக்கு பின், இனிமேல்வெள்ளத்தை அனுப்பவே மாட்டேன் என்று வாக்களிக் கின்றார். தமக்குக் கீழ்படியாது தலைகனத்தோடு அலைந்த மக்களை மீண்டும் மீண்டும் தம் மக்களாக்கத் துடிக்கின்றார். அவர்கள் கடவுளை வெறுத்தாலும் தம் பேரிரக்கத்தைக் கொஞ்சமும் குறைத்துக் கொள்ளவில்லை. சிலுவையில் அறைப்பட்டு கொடுமைப் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தம்மைக் கொடுமைப்படுத்தியவர்களையே மன்னிக்க அசாத்தியமான தைரியம் தேவை. அதையே இயேசு வெளிப் படுத்துகின்றார். 

பழிக்குப் பழி - பலவீனத்தின் வெளிப்பாடு
உலகில் நிகழும் போர்களும் போட்டிகளும் வெட்டும் இரத்தமும் குத்தும் மன்னியாமையின் விளைவுகளே. பழிக்குப் பழி வாங்குவது இயலாதவர்களின் இயல்பாகும். பழிவாங்கத் துடிப்பது விலங்கு இயல்புகூட அல்ல. பசிக்கும் வேளைகளில் மட்டுமே தமக்கு தேவைப்படும் உணவுக்காக மட்டுமே சிங்கமும் புலியும் வேட்டையாடும். கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் கொன்றுபோட்டு வெறியாட்டம் போடாது. தமக்குத் துன்பம் இல்லை என்ற நிலையில் எந்த விலங்கும் தேவையின்றி மற்றவற்றைச் சீண்டுவதில்லை. மன்னிக்காத உலகம் என்பது நரகம் மற்றும் கொடுமையின் வெளிப்படாகும். மன்னிக்க மறுத்து உள்ளத்தில் வெறுப்பை வளர்ப்பது தம்மை அழிப்பதற்கான முயற்சியைத் தாமே தொடங்கி வைப்பதாகும். மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றுவதில்லை. ஆனால் அது வருங்காலத்தைப் பிரகாசமானதாக்குகின்றது. மனனிப்பவர் தம்மைத் தாமே குணப்படுத்திக் கொள்கின்றார். மன்னியாதவர் தமக்கும் பிறருக்குமாக இரண்டு குழிகளைப் பறித்துக் கொள்கின்றார். மன்னிக்காமல் வாழ்வது பிறர் இறக்க வேண்டும் என்று நாம் விசம் குடிப்பது போலாகும். மன்னிப்போர் தமக்குத்தாமே மருத்துவர் ஆவார்.  

நமக்கான இன்றைய பாடம்
கடவுள் குற்றம் செய்யும் இயல்புடைய நாம் திருந்துவதற்குக் காலத்தையும் நேரத்தையும் தந்து, இரக்கத்துடன் காத்திருக்கின்றார். தோல்வி என்ற பல பள்ளத்தாக்குகளைக் கடந்துதான் நாம் குறிக்கோள் என்ற மலையுச்சியை அடைய முடியும் என்பது அவருக்குத் தெரியும். நமது மேல் நீடித்த பொறுமை காட்டும் கடவுள் நமக்குத் தரும் அறிவுரை இதுதான்: ஓவ்வொருமுறையும் உமக்கு எதிராகக் குற்றம் நிகழும்போது மன்னித்துவிடு. மன்னிக்காத சமயத்தில் உமக்கு சிறப்பான திருமண வாழ்வு அமையப் போவதில்லை. நீ கோவிலுக்குச் சென்றாலும் பல தவமுயற்சிகளை மேற்கொண்டாலும் உள்ள நிறைவு உம் வசமாகாது. உமக்கென்று நண்பர் குழு ஒன்று உருவாகாது (குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை). நீ எங்கும் நிம்மதியோடு பணியாற்ற முடியாது. நீ வாழ்வில் குற்றமே செய்யாத மனிதனைத் தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்துகொண்டே இருப்பாய். ஆனால் அப்படி யாரையும் உன் வாழ்நாள் முடியும்முன் கண்டுபிடித்துவிட மாட்டாய். மன்னிக்காதவர் தம் வாழ்வின் மகிழ்ச்சியை இழந்து நிற்பார். அதற்குப் பெயர் மனித வாழ்க்கையே அல்ல.

Comment