03, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு)
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு - இச 6:2-6 எபி 7:23-28 மாற் 12:28-34
அன்பே வாழ்வு!
அன்பே பெருங்கொடை!
“அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து. ஆனால், அந்த அன்பே பொய்யானால் இந்த உலகத்தில் அதைவிடக் கொடிய நோய் எதுவுமில்லை” என்றவர் புனித அன்னை தெரேசா. மனித வாழ்வின் இரகசியம் அன்பு செய்வதிலே அடங்கியிருக்கிறது. காலத்திற்கும் காலாவதியாகாத ஒரே மருந்து அன்பே. மனிதர் அன்பு செய்யக் கற்றுக்கொள்ளும்போதுதான் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்கிறார்.
“கடவுள் தம் உருவிலே மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்” (தொநூ 1:27). கடவுளுடைய பண்புகளால் படைக்கப்பட்டவரே மனிதர். மற்ற படைப்புகளில் இறைவனுடைய பண்புகள் சில வெளிப்பட்டாலும், மனிதரிடத்தில்தான் கடவுளுடைய பண்புகள் முழுமையாக வெளிப்பட்டன. அன்பே கடவுளின் முழுமையான பண்பு. மனிதர் இறை-மனித அன்பின் வழியாக இறைவனோடு நெருங்கி வரமுடியும். கடவுளின் கட்டளைகளின்படி நடந்தால் கடவுளை இன்னும் அதிகமாக நெருங்கி வரலாம். இறைவனின் முதன்மையான கட்டளையே அன்பு செய்வதுதான். இறைவனோடு அன்புகொள்ளும் தகுதி மனிதருக்கே இருக்கிறது. இதுவே மானிடப் படைப்பின் பெருமை.
‘மானிடர் - கடவுளின் உருவம்’ என்ற கருத்துரு மனிதர் மற்ற படைப்புகளோடும், சக மனிதர்களோடும், இறைவனோடும் அன்பு கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. இதுவே மனிதராவதற்கு உயரிய வழி. மனித பிறப்பின் இலட்சியமும் அதுவே. “அன்பே உருவான கடவுள், பிறரை அன்புகூர வேண்டும் என்ற நோக்கத்தினாலேயே, அன்பிலிருந்து நம்மைப் படைத்தார்” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனப் பாடினார் புலவர் ஒளவையார். உண்மையில் மானிடராய்ப் பிறத்தல் எளிது; ஆனால், மானிடராய் வாழ்வதுதான் கடினம். அதனால்தான் உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப், ‘மனிதனுக்கு மிகவும் கடினமானது மனிதனாவதுதான்’ என்கிறார்.
அன்பிற்குரியவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 31 -ஆம் ஞாயிறு வழிபாடு முப்பரிமாண அன்பைக் குறித்துச் சிந்திக்க நம்மை அழைக்கிறது. தன்னையும், தன்னைப் போன்ற பிறரையும், தம் உருவின் முழுவடிவாம் இறைவனையும் அன்பு செய்து வாழ ஆரத்தழுவி நம்மை அழைக்கிறார் இறைமகன் இயேசு.
இன்றைய நற்செய்தியிலிருந்து நம் சிந்தனையைத் துவங்குவோம். இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு வியந்த மறைநூல் அறிஞர் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” (மாற் 12:28) என்ற ஒரு கேள்வியை முன்வைக்கிறார். இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கிறிஸ்தவ மறையின் மிக முக்கியமான கட்டளைகளைக் கூறுகிறார். “இஸ்ரயேலே கேள்” என்ற சிறப்பான அறைகூவலுடன் இயேசு மூன்று கட்டளைகளைக் கூறுகிறார். அவை 1. இறையன்பு, 2. பிறரன்பு, 3. தன்னன்பு.
யூதர்கள் ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்வதைத் தங்கள் முதன்மையான கட்டளையாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த முதன்மையான கட்டளையே (இச 6:4) யூதரின் நம்பிக்கை முழக்கம் ஆகும். இது யூதச் சமயத்தில் மிக முக்கியமான ‘செமா மன்றாட்டு’ (Shema Prayer). ஒரு யூதர் இந்த மன்றாட்டை ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை செபித்தார். இதனை இஸ்ரயேலர்களின் காலைச் செபம் என்று சொல்வார்கள். இவர்களின் காலைச் செபம் ‘செமா இஸ்ரயேல்’ (shema Israel) என்று தொடங்குகின்றது. யூதக் குழந்தைகளுக்கு முதன்முதலில் கற்றுக்கொடுக்கப்பட்ட செபமும் இதுவே. “நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல்” (இச 6:7). இறக்கும் தறுவாயில் ஒரு யூதரின் உதடுகளில் ஒலித்த இறுதி மன்றாட்டும் இதுதான்.
இந்த ‘இஸ்ரயேலே கேள்’ என்ற நம்பிக்கை முழக்கத்தை ஒவ்வொரு யூதரும் தங்கள் வீடுகளின் கதவுகளில் தொங்கவிட்டனர். ஆண்களோ இந்த நம்பிக்கை முழக்கத்தைக் கையிலே சீட்டுப் பட்டமாகக் கட்டிக் கொண்டனர். சிலர் சீட்டுப் பட்டமாக எழுதி நெற்றியிலும் கட்டிக்கொண்டனர். இஸ்ரயேலர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு சிந்தனையோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும், முழு வலிமையோடும் கடவுளை அன்பு செய்ய வலியுறுத்தப்படுகிறார்கள்.
இதில் மிக முக்கியமான இறையியல் நம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. யாவே, பிற தெய்வப் போலி வழிபாடுகளைச் சகித்துக்கொள்ளாத கடவுள் ஆவார். அவர் அன்பைக் கொடுத்து அனைத்தையும் தொடங்கி வைக்கிறார் (உரோ 8:31-39; எபே 1:1). பின்னர் அதே அன்பை எதிர்பார்க்கிறார். அந்த அன்பு முழுமையான அன்பாக இருக்கவேண்டும். ‘கடவுளையும் அன்பு செய்வேன்; அதேவேளையில் கொஞ்சம் மூடநம்பிக்கையிலும் எனக்கு விருப்பம் உண்டு’ என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் பகுதி நேர அன்பர்கள். அவர்களால் கடவுளை முழுமையாக அன்பு செய்ய முடியாது. எனவேதான், இக்கட்டளையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இயேசு திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளை எது எனக் கேட்ட மறைநூல் அறிஞரிடம், இந்த வசனத்தையே (இச 6:4) மனப்பாடமாகக் கூற வைத்தார் (மாற் 12:28).
இறையன்பு என்ற கட்டளையைப் பற்றிப் பேசிய இயேசு, இதற்கு இணையாக இரண்டாவது கட்டளையாக லேவியர் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். “உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார் (லேவி 19:18; மாற் 12:31). யூதர்களின் பார்வையில் இக்கட்டளை தம் சொந்த இனத்தாரை மட்டுமே அன்பு செய்யத் தூண்டியது (விப 2:13). அதாவது, அடுத்திருப்பவர் என்பது ஒரு சக யூதரையே குறித்தது. ஆனால், இயேசுவோ அன்புக்கு எல்லை இல்லை எனத் தெளிவாகக் கற்பித்தார் (லூக் 10:25; மத் 5:43). இயேசுவின் பார்வையில் அடுத்திருப்பவர் என்பவர் தேவையிலிருக்கும் அனைவரையும் உள்ளடக்குகிற, பரந்து விரிந்த கண்ணோட்டமாகும். இதுவே இயேசு வழங்கும் புதிய கட்டளையாகும் (யோவா 13:34-35).
இயேசு கூறிய இரண்டாம் கட்டளையை ஆழமாகப் பார்த்தால், அங்கு இரு அன்புகளைப் பற்றி இயேசு பேசுவதை உணரலாம். அடுத்தவர்மீது அன்பு கொள்வதற்கு ஓர் உந்துசக்தியாக, தன்மீது கொள்ளும் அன்பை இயேசு குறிப்பிடுகிறார். அதாவது, அடுத்தவர்மீது அன்புகூர்வதற்குமுன், ஒருவர் தன்மீது முதலில் அன்புகூர வேண்டும் என்று இயேசு கூறுகிறார். பிறரன்பின் தொடக்கமே தன்னன்பு. தன்னை அன்பு செய்பவர் மட்டுமே கடவுளையும் மற்றவரையும் அன்பு செய்வர். தன்னன்பு இல்லாதவர் பிறரிடமிருந்து அன்பைப் பெறவோ, பிறருக்கு அன்பைக் கொடுக்கவோ முடியாது. தன் உணர்வுகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் செவிமடுப்பவரே, பிறருடைய உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் செவிமடுக்க முடியும். தன்னை மதித்து, ஏற்று, அன்பு செய்து, பிறரையும் ஏற்று உறவுகொண்டு, இறையன்பில் வாழும் மனிதரே முழு மனிதராகிறார்.
இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிடும்போது, “கடவுளை அன்புகூர்வது என்பது, அவரருகே அவருக்காக வாழ்ந்து, அவருடன் இணைந்து உழைப்பவர்களாக, அதாவது நமக்கு அடுத்திருப்பவரிடையே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பணிபுரிவதையும், எல்லைகளின்றி மன்னிப்பதையும், ஒன்றிப்பிலும் சகோதரத்துவத்திலும் உறவுகளை வளர்ப்பதையும் குறித்து நிற்கின்றது” எனவும், “பிறரன்பு என்பது ஏழைகளின் வெளிப்புறத் தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல; அவர்கள் எதிர்பார்க்கும் உடன்பிறந்த நெருக்கத்தையும், அக்கறையையும் நாம் வெளிப்படுத்தவேண்டும்” எனவும் குறிப்பிடுகிறார் (மூவேளைச் செப உரை, 04.11.2018).
நிறைவாக, இடையறாது அன்பு செலுத்தி வாழ்வது என்பது கடினம்தான். ‘அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்று புலம்பும் பெரும்பாலான மனிதர்களின் ஓசையைக் கேட்க முடிகிறது. ‘அன்பினால் பல ஏமாற்றங்களைச் சந்தித்துத் துவண்டுப்போனேன்’ என அங்கலாய்த்தவர்களையும் நாம் சந்தித்துள்ளோம். உண்மையான அன்பு யாரையும் ஏமாற்றுவதில்லை. உண்மை அன்பு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை. அன்பு செலுத்துவதையே தங்களது இயல்பாகக் கொண்டவர்களின் எண்ணங்கள் மேன்மையானதாகவே இருக்கும். உண்மை அன்பு எந்த நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல. ஒருவரை அவருடைய இயல்பிலேயே, இருக்கும் நிலையிலேயே ஏற்றுக்கொள்வதே உண்மையான அன்பு.
இயேசு கிறிஸ்து நம்மீது கொண்ட அன்பு உண்மையான, நிபந்தனையற்ற அன்பு. நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை அன்பு செய்கிறார். தமது வாழ்வில் சந்தித்த எல்லாரையும் அளவுகடந்து அன்புகூர்ந்தார். தலைமைக் குருவான அவர் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி (எபி 7:27), தம் அன்பு முகவரியை அகிலத்திற்கும் பறைசாற்றினார். அன்பே வாழ்வு; அன்பே கடவுள்; அன்பே பெருங்கொடை. “உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப்போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே” (மூவேளைச் செப உரை, 13-10-2024) உண்மையான, கலப்படமற்ற அன்பின் தெய்வீக இலக்கணத்தை இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள, அதையே அயலாருக்கும் வழங்க இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.
Comment