குருத்து ஞாயிறு - 28.03.2021
- Author --
- Tuesday, 23 Mar, 2021
குருத்து ஞாயிறு
(எசா 50:4-7, பிலி 2:6-11, மாற் 14:1-15:47)
அருள்முனைவர் M. ஆரோக்கியராஜ், OFM, CAP.
இறுதிப் பயணம்
பாடுகளின் துவக்கம்
இது இயேசுவின் எருசலேம் நோக்கிய இறுதிப் பயணம். தம் பணிக்கு இரத்தச் சான்று அளிக்கும் நேரம் வந்துவிட்டது. இயேசு குருத்துக்களுடன் வெற்றிப்பயணமாக எருசலேமிற்குள் நுழைகின்றார். கழுதையின்மீது அமர்ந்து செல்பவர் அமைதி தேடிச் செல்கின்றார் என்று விவிலியம் பொருள் கொள்கின்றது. ஆனால், இது இயேசுவுக்குப் பாடுகளின் வாரமாகும். கள்வர்க் குகையாகி மாறிப்போயிருந்த கோவிலைக் களையெடுக்க முனைகின்றார். பாவிகளுடன் பலமுறை பந்தியமர்ந்துள்ளார். பரிசேயர்களைப் பற்றிய உவமையை அவர்களிடமே எடுத்துரைக்கின்றார். அவரது கடவுளரசு கோட்பாடுகள் அன்றைய ஆட்சியாளர்களுக்கு கண்டனக் குரலாகவே ஒலித்தது. எனவே, அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டம் அங்கு காத்திருக்கின்றது. இது அவருக்கு ஏற்கெனவே தெரியும் (யோவா 7:10). தாம் நம்பியவர்கள் தம்மை கைகழுவியிருக்கின்றனர், நண்பர்களே எதிரிகளாகச் செயல்படுபவர்கள் என்பதையும் இயேசு அறிந்துள்ளார். இன்று ‘ஓசான்னா’ பாடும் கூட்டம் இன்னும் ஐந்து நாள்களில் ‘ஒழிக, ஒழிக’ என்று கத்தப் போகின்றது. பலருக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் இன்னும் வாழத் துடிக்கும் நெஞ்சம் சிலுவையில் அறையப்படவிருக்கின்றது. எதிரிகளையும் அன்புச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியவர், எதிர்ப்புக்களைத் தம்வயமாக்கி அனைவரையும் ஒருசேர மீட்க உறுதிபூண்டவர் தம் எதிரிகளின் கையில் சிக்கி சீர்குலையப் போகின்றார். இறுதி இராஉணவின்போது அப்பத்தை உடைத்துக் கொடுத்த இயேசு தமது உடலைச் சிலுவையில் உடைத்துக் கொடுக்கும்போதும் தம் இரத்தத்தைச் சிந்தும்போதும் நற்கருணையின் பொருள் அதன் நிறைவு நிலையை அடைகின்றது என்பதை இயேசு நன்குணர்ந்துள்ளார். தமது வாழ்வின் ஒவ்வொரு வசந்தத்தையும் தம் மக்களுக்காகவே செலவிட்ட இயேசு இறுதியில் தம் உயிரையும் கொடுக்கத் துணிந்துவிட்டார். (யோவான் நற்செய்தியின்) பாடுகள் குறித்துக் காட்டும் சில சிறப்புக் குணங்களை நாம் இங்கு காண்போம்.
1. பாடுகள்-இயேசுவின் முழுமையான தற்கையளிப்பு.
தம் மக்களுக்காகவே மட்டுமே வாழ வேண்டும் என்று கடவுள் தந்த கடமையை இதுவரை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் இயேசு. இப்போது கொடுமையான பாடுகளையும் அன்பின் பணியாக அரவணைத்துத் தம்மையே முழுமையாகக் கையளிக்கத் தீர்மானித்துவிட்டார். இயேசுவுக்குச் சிலுவையில் நடக்கவிருப்பது ஓர் அரசியல் படுகொலை. கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்படும் ஆடு தமக்கு நடக்கப்போவது என்னவென்று தெரியாமல் செல்கின்றது. ஆனால், தமக்கு நடக்கவிருக்கும் கொடுமைகள் இயேசுவுக்குத் தெரியும். 33 வயதில் கொடுமையான இறப்பு, அதுவும் அவமானத்தின் சின்னமான சிலுவையில் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், இயேசு தம் மக்களுக்காகத் தம்மையே சிலுவையில் சீரழிக்க தீர்மானித்துவிட்டார். இந்தத் தற்கையளிப்பு இயேசுவை உலகின் ஒளியாக, அப்பமாக, உயிர்ப்பாக, நல்லாயனாக, விண்ணக வாயிலாக உயர்த்தும். நல்ல ஆயனின் வாழ்வு நோக்கம் தம் மந்தைக்காக மடிவதில் அடங்கியுள்ளது (10:11). இரவில் கைது, தேவையற்ற முறையில் கேள்விக்குட்படுத்துவது, நிருபிக்கப்படாத குற்றங்களுக்கு அடிஉதை மற்றும் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடுவது, சிலுவைச் சாவு, விரைவான அடக்கும் போன்ற எதுவுமே அன்றைய சட்டத்தின் அடிப்படையில் அமையவில்லை. உடன் வாழ்ந்தவரே காட்டிக்கொடுப்பது, தான் அன்பு செய்த நண்பர்கள் மூவரும் கைவிடுவது, உயிர்தருவேன் என்று வாக்களித்து பேதுருவே மறுதலிப்பது போன்ற அனைத்தும் கொடுமையானவை. கடவுளின் விருப்பம் நிறைவேற இயேசு எல்லா நிலையிலும் அமைதிக் காக்கின்றார். இவ்வாறு கொடுமைக்குள்ளான நிலையிலும் காது வெட்டப்பட்ட தலைமைக்குருவின் ஊழியனைக் குணப்படுத்துகின்றார். கொடுமைகளின் மத்தியிலும் கொடுமைச் செய்தவர்களையே முழுமையாக மன்னித்துவிட்டு உயிர்விடுகின்றார். எல்லாவற்றையும் படைத்த கடவுள் தமக்கென்று தம் உயிரைக்கூட வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
2. இறப்பு - அன்பின் உச்சம்
கடவுளன்பின் உச்சகட்டம் இயேசுவின் இறப்பாகும். இறப்பு எவ்வாறு அன்பின் வெளிப்பாடாக இருக்கமுடியும் என்று சாதாரண மனித மனம் கேள்வி எழுப்பலாம். உண்மையான அன்பிற்கு எல்லை இல்லை. அனைத்தையும் தம் மக்களுக்காகப் படைத்து வைத்த கடவுளே மனிதனாகி, தம் விலைமதிப்பில்லா உயிரையும் கையளிக்கும் தருணம். தாம் அன்பு செய்தவர்களை இறுதிவரை அன்பு செய்வதன் செயல்விளக்கமே இந்த இறப்பு. தாம் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டபோதும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டபோதும், கசையால் அடிக்கப்பட்டபோதும் இயேசு மௌனம் காக்கின்றார். அந்நிலையில் யாரையும் வெறுக்கவோ, சபிக்கவோ இல்லை. கொடுமைக்குப் பெயர்போன பிலாத்துவே இயேசுவை விடுவிக்கும் வழியைத் தேடுகின்றார். மக்களுக்கான அவரின் எல்லைகடந்த அன்பு அனைத்து தியாகத்திற்கும் வழியமைக்கின்றது (15:13). தாம் தண்டிக்கப்படும் வேளையிலும் தம்மைச் சார்ந்த அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இயேசு வேண்டுகின்றார் (18:8). கடவுளின் அன்பு பற்றிய உண்மையை அறிக்கையிடுவதே நமது தொழில் என்று ஏரோது முன் எடுத்துரைக்கின்றார் (18:37). தமது பொறுமையால் ஏரோதையும் வெற்றிகொள்கின்றார் என்றே கூறத் தோன்றுகின்றது. அவரின் உடைகள் பறிக்கப்பட்டாலும், பொய்க்குற்றங்கள் சுமத்தப்பட்டாலும், அடிப்படை மனித உரிமைக்கு எதிரான செயல்கள் நடந்தபோதும், தம் தந்தை மற்றும் மக்கள்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அனைத்தையும் சகித்து, இயேசு மௌனம் காக்கின்றார். சில மனிதர்கள் மேலும் அந்தக் கொலையாளிகளின் சிந்தனையில் இந்த சாவு இயேசுவின் தோல்வியாகத் தென்படலாம். ஆனால், இயேசு சிலுவையின் வழியாக விண்ணகத்திற்கு உயர்த்தப்படுகின்றார் என்பதை யோவான் அடிக்கோடிடுகின்றார். பாடுகளின்போது இயேசு உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது அன்பின் வெளிப்பாடாகும். வார்தைகளைப் பேசினார், வாழ்வு தரப்பட்டது, அதன் மூலம் அவரது அன்பு வெளிப்பட்டது. கடவுளின் ஆளுமையை வெளிப்படுத்திய இயேசு உலகின் அன்புக்காக இறக்கப் போகின்றார். இயேசு இறந்த விதத்தைக் கண்ணுற்ற (கொலைகளுக்குப் பெயர்போன) நூற்றுவர் தலைவனே இயேசு உண்மையிலேயே இறைமகன் என்று சான்று பகர்கின்றார் (மாற் 15:39). இயேசுவின் அன்பு; நூற்றுவர் தலைவன், பிலாத்து, போர்வீரர்கள், தம்மோடு அறையப்பட்டத் திருடர்கள், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்கள் போன்ற அனைவரையும் அரவணைத்துச் செல்கின்றது.
3. இறப்பு - கடவுளிடம் திரும்பிச் செல்லும் வழி
மேலிருந்து வந்தவர் மேலே செல்கின்றார். இயேசுவின் சாவு அவரது விண்ணக மாட்சியின் நுழைவாயில். மாமிசமாக உருவான வார்த்தை தம் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்கின்றது (அது வார்த்தையாக நம்முடன் தொடர்ந்து வாழும்). அவர் தம்முடன் அனைவரையும் அழைத்துச் செல்லவிருக்கின்றார். அவர் இருக்கும் இடத்திலே அவர் அன்பு செய்பவர்களும் இருப்பர் (17:24). யோவான் நற்செய்தியில் இயேசு வெற்றியின் கடவுள்.இயேசு கடவுளாகப் பிறந்து, கடவுளாகவே வாழ்ந்து, கடவுளாகவே மரிக்கின்றார். இயேசு தமது பெயரை வெளிப்படுத்தி அவரைக் கைது செய்பவர்கள் பின்வாங்கி விழச் செய்கின்றார் (18:6). தலைமைக் குருவைப் பார்த்து சவால் விடுகின்றார் (18:20-21,23). மிரட்டப்படும்போது அமைதிக் காக்கின்றார் (19:9). அவருக்கு தரப்படும் முள்முடியும் செந்நிற ஆடையும் அவரை அரசனாகவே காட்டுகின்றது (19:5). இறந்தபின் அவரது கால்கள் முறிக்கப்படவில்லை. அவரது விலாவின் வழியாக வரும் இரத்தமும் தண்ணீரும் புதிய வாழ்வின் அடையாளமாக அமைகின்றன (19:34). அவர் (அரசன்போல்) புதுக்கல்லறைக்குள் வைக்கப்படுகின்றார் (19:39). யோவானின் நற்செய்தியில் சிலுவை என்பது நிறைவான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் கருவி. யோவான் நற்செய்தியில் இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவதும் விண்ணுலகிற்கு உயர்த்தப்படுவதும் ஒன்றே. எனவேதான், எல்லாம் நிறைவேறிவிட்டது என்றுக் கூறிவிட்டு தலைசாய்த்து உயிர்விடுகின்றார்.
4. இறப்பு - தீமை மற்றும் சாவின் மீதான வெற்றி
வாழ்நாள் முழுவதும் சாத்தான் மற்றும் இருளின் சதிராட்டங்களைத் தோற்கடித்த இயேசு சிலுவையிலும் அவற்றை வெற்றிகொள்கின்றார். சிலுவையிலிருந்து வெளிப்படும் உயிராற்றல் அனைத்துலக சக்திகளையும் தோற்கடிக்கும் வல்லமை படைத்தது. சில மனிதர்கள் புரிந்துகொள்ளாது அவரின் பணியை எதிர்த்தனர், அவரை வெறுத்து ஒதுக்கினர். இயேசுவை ஒதுக்குவது வாழ்வை வெறுத்துவிட்டு இறப்பைத் தேர்ந்தெடுப்பதாகும். அன்னாவும் கயபாவும் பொய்க்குற்றங்களை அவர்மீது சுமத்தினர் (யோவா 18:19-24). இயேசுவைச் சாவுக்குத் தீர்ப்பிட பிலாத்துவைக் கட்டாயப்படுத்தினர் (யோவா 18:28). பொய்க்குற்றங்களைச் சுமத்தினர் (19:7), பிலாத்துவின் விடுதலை செய்யும் விருப்பத்தை நிராகரித்தனர் (18:38-40, 19:4-7,12,14-15). அவர் செசாரின் நண்பர் அல்ல என்று எச்சரித்தனர். எங்களுக்கென்று சட்டமுண்டு அதன்படி அவன் கொல்லப்பட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தனர். செசாரைத் தவிர எங்களுக்கு வேறு அரசன் இல்லை என்று வாதிட்டனர் (19:15). பிலாத்து நான்குமுறை அவர்களின் பழிச்சொற்களை நிராகரித்தார் (18:31,38, 19:4,6). வெளிப்படையாகவே இயேசுவை விடுதலை செய்ய விரும்பினார் (18:39-40, 19:12). குற்றம் சுமத்தப்பட்ட இயேசு மட்டுமே பிலாத்துவை நேரடியாகச் சந்தித்து வாதிடும் வாய்ப்புத் தரப்பட்டது. மற்றவர்களின் பொய்மையை இயேசு வென்றுவிட்டதாக பிலாத்து கருதுவதால் அவரை விடுதலை செய்ய விரும்பினார் என்றே பொருள்கொள்ளத் தோன்றுகின்றது.
பாடுகளின் சமயத்தில் சாத்தான் மிகத்துரிதமாக செயல்பட்டது. யூதாஸ் இஸ்காரியோத்துவின் உள்ளத்தில் இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் சிந்தனையைச் சாத்தான் புகுத்தியிருந்தது (13:2). இயேசுக் கொடுத்த அப்பத்தைப் பெற்றவுடன் யூதாசுவுக்குள் சாத்தான் நுழைந்தான் (13:27). யூதாசு சாத்தான்களாக மாறியிருந்த தலைவர்களுடன் கைக்கோர்த்தார் (8:44). சாத்தான் இயேசுவின் பணியில் தொடர்ந்து தடைக்கற்களைப் போட்டுக்கொண்டே சென்றது. அத்தனை சதித்திட்டங்களின் மத்தியிலும் யோவான் நற்செய்தியில் இயேசு அனைத்தையும் நிறைவேற்றிய பின்னரே தம் உயிரைக் கையளிக்கின்றார். இவ்வாறு முடிவான நிலையில் இயேசு சாத்தானைத் தோற்கடிக்கின்றார். சாத்தான் மற்றும் தீமையைத் தோற்கடிப்பதன் மூலம் கடவுளின் பிரசன்னம் உலகிற்கு வெளிப்படுத்தப்படுகின்றது.
5. அரசனாகும் இயேசு
இயேசுவின் பாடுகளின் சமயத்தில் உலக அரசனுக்கும் (செசார்) உண்மை அரசனுக்கும் இடையில் போட்டி எழுகின்றது. விண்ணகத்தின் கட்டளையால் இயேசு அரசனானார். அதைப் புரிந்துகொண்ட எதிரிகள் பின்வாங்கித் தரையில் விழுந்தனர் (18:6). அவரிடமிருந்து கிளம்பிய விண்ணக ஆற்றலைப் பிலாத்துவும் அவரது மனைவியும் கண்டுகொண்டனர் (19:8). கடவுள் அவருக்குக் கொடுத்துள்ள அதிகாரம் பிலாத்து மற்றும் தலைமைக்குருக்களின் அதிகாரத்திலிருந்து வேறுபட்டது என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். பிலாத்துவுக்கு ஆளுநராகச் செயல்படும் தகுதியைத் தந்தவர் இயேசுவின் தந்தையே. உண்மையைப் போதிப்பது இயேசுவின் பணியாகும் (18:37). பாடுகளின் சமயத்தில் தரப்படும் பல அடையாளங்கள் (முள்முடி, செந்நிற ஆடை) இயேசுவை அரசன் என்று அறிவுறுத்தும் நோக்கம் கொண்டவை. (19:13) இல் “கல்தளம் என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கைமீது (பிலாத்து) அமர்ந்தான்” என்ற வசனம் சில ஏடுகளில் “…(இயேசுவை) அமர்த்தினான்” என்று காணப்படுகின்றது. அதாவது, தான் அமர வேண்டிய நீதி இருக்கையின் மீது பிலாத்து இயேசுவை அமர்த்துகின்றார். செசாரின் அரசைவிட இயேசுவின் அரசு ஆற்றல்மிக்கது என்பதைப் பிலாத்துவே ஏற்றுக்கொள்கின்றார் என்றே பொருள்கொள்ள வேண்டும். பிலாத்து உள்ளாந்த முறையில் இயேசுவை யூதர்களின் அரசனாகப் பிரகடனம் செய்யும் பொருட்டு “நாசரேத்தூர் இயேசு யூதர்களின் அரசன்” (யோவா 19:20) என்ற பலகையை மூன்று மொழிகளில் எழுதி வைத்தார். தலைமைக் குருக்கள் “யூதரின் அரசன் நான் என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்…” (யோவா 19:21) என்றுக் கூறியபோது பிலாத்து உறுதியாக அதை மறுத்துவிடுகின்றார். இவ்வாறு பலவகைகளில் பிலாத்து இயேசுவை உண்மையான அரசன் என்று அறிக்கையிடுகின்றார்.
6. இறப்பு - மீட்பளிக்கும் அறநெறி
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவிடமிருந்து புதிய வாழ்வு ஊற்றெடுத்தது. இயேசுவைப் பார்த்து, தெரிந்து, புரிந்து, நம்பிக்கைக் கொள்வோர் மேலிருந்து பிறக்கின்றனர். அவரைக் காண்பதே மறுமலர்ச்சிக்கும் வாழ்வு மாற்றத்திற்கும் இட்டுச் செல்லும். கிறிஸ்தவ சமூகமே இயேசுவின் இறப்பின்போது பிறப்பெடுக்கின்றது (19:26-27). அவரது விலாவிலிருந்து ஊற்றெடுக்கும் தண்ணீரும் இரத்தமும் சிலுவை தரும் மீட்பின் அடையாளங்கள் (19:32-37). இறந்து உயிர்த்த இயேசுவின் உடலே புதிய ஆலயமாகின்றது (2:21). மேலும், அப்போது ஆவியின் ஆற்றல் உலகிற்கு இறங்கி வந்தது. அந்த ஆவி வாழ்வளிக்கும் தண்ணீராகவும், வாழ்வு தரும் இரத்தமாகவும் செயல்படுகின்றது. கடவுளின் செம்மறியான இயேசு (1:29,36) பாஸ்கா ஆடுகள் கொல்லப்படும் நேரத்தில் கொலைச் செய்யப்படுகின்றார் (19:14). பாஸ்கா ஆடுகள்போல் இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை (19:33-36). எகிப்திலிருந்து மக்கள் விடுதலை பெற்றதுபோல், உலகின் மீட்புக்கு இயேசு வழியமைக்கின்றார்.
7. சிலுவை - கிறிஸ்தவ வாழ்வுக்குப் பொருள் தருகின்றது
இயேசுவின் (இறப்பும்) உயிர்ப்பு இறப்பை நிரந்தரமாகத் தோற்கடிக்கின்றது. சிலுவையின் நிழலில் நிறைவான நிலையான வாழ்வு இயேசுவின் இறுதி வார்த்தையாக ஒலிக்கின்றது. இயேசு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துக்கொண்டு விண்ணகம் செல்கின்றார். அவரை நம்புவோர் அவர் தரும் மாட்சியில் பங்கெடுப்பர் (13:36). அவர் இருக்கும் இடத்திலேயே அவர் அன்பு செய்கின்றவர்களும் இருப்பர், அதாவது, கிளையானது திராட்சைச் செடியோடு இணைந்திருக்கும். தாம் தந்தையிடம் திரும்பிச் செல்வதையும் (14:1-4,12,28-29, 16:5-7,28, 17:11,13), அதன்பின் தூய ஆவியாரைத் துணையாளராக அனுப்புவதையும் (14:3,18-19, 28, 16:7,16, 17:24) பற்றி பல இடங்களில் கூறுகின்றார். இறப்பு முடிவு அல்ல என்பது தெளிவாக்கப்படுகின்றது. உயிர்த்த இயேசுவை எதிர்கொள்ளும் பொருட்டு ஒவ்வொருவரும் விண்ணகம் செல்கின்றனர். எனவே, கிறிஸ்தவன் இறப்பை அமைதியோடு எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கைப் பிறக்கின்றது. மனிதன் என்ற முறையில் இயேசு கொடுமையாகத் துன்புற்று நமக்கு மீட்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த உண்மைக் கடவுளுடன் உள்ளார்ந்த முறையில் இந்தப் புனித வாரத்தில் ஒன்றிணைவோம்.
Comment