No icon

உயிர்ப்பு 6ஆம் வாரம் - 09.05.2021

உயிர்ப்பு 6ஆம் வாரம்
(திப 10:25-26, 34-35,44-48, 1 யோவா 4:7-10, யோவா 15:9-17)  -அருள்முனைவர் ஆ. ஆரோக்கியராஜ், OFM. Cap.
அப்பழுக்கற்ற கடவுளன்பு

கடவுளின் அன்புக்கு எல்லை இல்லை. அதற்கு விளக்கவுரைகள் எழுதவோ விரிவுரைகள் தரவோ மனிதர்களால் முடியாது. கடவுளை ஒளியாகவும் (யோவா 1:5) ஆவியாகவும் (யோவா 4:24) சித்தரித்த யோவான், கடவுள் அன்பாய் இருக்கின்றார் (1யோவா 4:8) என்று தம் மடலில் பதிவு செய்கின்றார். அதாவது, அன்பு கடவுளின் நற்குணங்களின் பலவற்றுள்; ஒன்றல்ல. கடவுள் என்ற முழுமையின் சாரமே அன்புதான். அனைத்தும் அவரது அன்பிலிருந்து புறப்பட்டு அவரது அன்பில் (மூலம்) செயலாற்றுகின்றது. அன்பிற்கு அப்பாற்பட்டு கடவுளால் சிந்திக்கவோ செயல்படவோ இயலாது. கடவுள் அன்பால் அனைத்தையும் படைத்து, அன்பால் ஆட்சி செய்கின்றார். தீர்ப்பிடும்போதும் அவரது அன்பு பிரசன்னமாயுள்ளது. மக்களுக்கான செயல்பாடுகளில் அவரது அன்பு மிகச்சிறப்பாக வெளிப்படுகின்றது. கடவுள் அன்பிற்குமுன் மனிதக் குறைகள் அவ்வளவு பெரிதல்ல என்பதை உணர்த்தவே, சமுதாயத்தின் பாவி என்ற முத்திரை பதிந்திருந்த சக்கேயுவின் வீட்டில் உணவருந்தச் செல்கின்றார் இயேசு, பேய்களின் தலைவனை வைத்தே பேய்களை ஓட்டுகின்றார் என்ற குற்றப்பழியைப் பொறுத்துக் கொள்கின்றார் (சிலர் அறியாமை வழங்கும் தீர்ப்பு உண்மைத் தீர்ப்பாக இருக்க வேண்டியதில்லை). காட்டிக்கொடுக்கும் யூதாஸையும் ‘நண்பனே’ என்று அன்புடன் அணுகுகின்றார். கொடுமைகளின் நடுவில் கொடியோரை மன்னித்துவிட்டு உயிர்விடுகின்றார். சாதாரணமாக வெறுப்புக் கொள்ளும் சூழலிலும் இயேசுவால் அன்புசெய்யாமல் இருக்க முடியவில்லை. தம்மை வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்லும் மக்களையும் தமக்குரியவர்களாக்கத் துடிக்கின்றார் (லூக் 15:11-24). கடவுளின் கோபம் கூட அவரது அன்பின் மறுபக்கம் என்று கூறுவதே சிறப்பு. கடவுளின் அன்பு நிரந்தரமானது. ஆனால், பாவம் நீங்கியவுடன் அவரது கோபமும் மறைந்துவிடும் (உரோ 1:18). தம் அன்புக்குத் தகுதியற்றது என்று கடவுள் எதையும் (யாரையும்) படைக்கவில்லை (தொநூ 1:31, திப 10:15). படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் உயர்ந்த நோக்கம் உண்டு. அதை அறியாத சமயத்தில் மனிதர்கள் சிலவற்றை களை என்றும் பலவற்றை விஷமானவை, பயனற்றவை என்றும், சிலரைக் குற்றவாளிகள் அல்லது குறையுடையோர் என்றும் பெயரிடுகின்றோம். இந்த கடவுளன்பின் சில பரிமாணங்களை இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. 
1. கடவுள் வேறுபாடு காட்டாதவர்
கடவுளின் அன்பு நிறம் சார்ந்ததோ, நிலம் சார்ந்ததோ, அறிவு சார்ந்ததோ, ஆள் சார்ந்ததோ அல்ல. அனைவரையும் முழுமையாக்கி கடவுளரசில் கரைசேர்க்கத் துடித்தார் இயேசு. ஆனால், இயேசு கொண்டு வந்த மீட்பு யூதர்களின் உரிமைச்சொத்து என்ற கனவில் மிதந்த திருத்தூதர்களுள் பேதுருவும் ஒருவர். அவர் இன்று, - கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை (திப 10:34) - என்று தெளிவு பெற்று, பிற இன மக்களுக்கு திருமுழுக்குக் கொடுக்கும் பணியை முடக்கிவிடுகின்றார். கடவுளின் அர்ச்சிப்பு தங்களது தூய்மை சட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திருத்தூதர்களோடு சேர்ந்து உலகமும் இந்த உண்மையை உள்வாங்கிக் கொள்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் அர்ச்சிப்பு மனித அனுமதியின்றி யூத சட்டங்களுக்கு அப்பாற்பட்டு நடந்தேறுகின்றது. நம்பிக்கைகொள்ளும் அனைவரும் தூய ஆவி தங்கும் ஆலயமாகின்றனர். தூய ஆவியார் தாங்கள் தரும் திருமுழுக்கின் வழியாகவே கிடைக்கும் என்று அன்றைய தொடக்கத் திருஅவை உருவாக்கிக் கொண்ட சட்டமுறைமை தோற்றுப்போய்விடுகின்றது. வரலாற்றின் சில காலகட்டங்களில் சில சமுதாயங்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட சில சட்ட வடிவங்கள் உலகம் முழுவதையும் அடிமைப்படுத்தும் அதிகாரக் குரலாகிவிடக்கூடாது. யூதர்கள் சிலவற்றை உண்ணக்கூடாது என்று அதிகாரத்துடன் போதித்த காலத்தில், வெளியில் இருந்து உள்ளே செல்வது எதுவும் மனதைச் சீரழிப்பதில்லை, உள்ளிருந்து வெளியேறுவதே சீரழிக்கின்றது என்று கூறி, எதை உண்கின்றோம் என்பதைவிட எந்த மனநிலையில் உண்கின்றோம் என்பதே முக்கியம் என்று போதித்தவர் இயேசு (மாற் 7:18). கடவுள் பயம்கொண்ட அனைவரும் கடவுளுக்குரியவர்கள் (திப 10:34). கடவுள் மீதுள்ள மதிப்புள்ள பயம் நாம் நன்மைத்தனத்தின் நாயகர்களாக வாழ நம்மைக் கட்டுப்படுத்துகின்றது; கட்டாயப்படுத்துகின்றது. 
2. முதலில் அன்பு செய்பவர் கடவுள்தான்
நிபந்தனையின்றி அன்புசெய்யும் பணியை முதலில் துவக்கியவர் கடவுள்தான். நமது அனுமதியின்றியே நாம் படைக்கப்பட்டுள்ளோம், நமக்கென்று ஒரு உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது வாழ்நாளுக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் கடவுள் உருவாக்கி வைத்துள்ளார். கடவுளே விரும்பித் தேர்ந்துகொண்டமையால் நாம் அவரது அன்புக்கு உரிமையுடையோர் ஆனோம். தான் மக்களுக்குக் காட்டும் அன்பு கடவுள் தனக்குக் காட்டும் அன்பை ஒத்தது என்று இயேசு நற்செய்தியில் கூறுகின்றார். அது அடுத்தவருக்கு அனைத்தையும் அள்ளிக்கொடுத்துவிட்டு அதில் நிறைவடையும் கறையற்ற, குறையற்ற அன்பாகும். உண்மையான அன்பிற்கு விடுமுறை இல்லை. அது கால நேரம் பார்ப்பதில்லை.   மனித மத இன பேதங்கள் அதற்கு தெரியாது. யாருக்கும் எதிராகத் தீர்ப்பெழுத அதற்குத் தெரியாது. அது மனித இயல்பையும் பலவீனங்களையும் கண்டுகொள்வதில்லை. கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்து இயேசு என்ற செடியோடு இணைந்திருக்கும் வேளையில், இந்த அன்பின் அதிசயங்களை அனுபவிக்கின்றோம் என்று நற்செய்தி போதிக்கின்றது. நம்மில் நிறைந்து நிற்கும் கடவுளின் கொடையாகிய இந்த அன்பு பொங்கி வழிந்து பிறரை நோக்கி நகரும் தன்மை கொண்டது. கடவுளுக்காக வாழ்தல் என்பது மக்களுக்காக வாழ்வதைத் தன்னகத்தே கொண்டது (இச 6:4-5, லேவி 19:18, மாற் 12:29-31). பிறருக்காகத் தம்மையே தியாகம் செய்வதில் உண்மையான அன்பு எண்பிக்கப்படுகின்றது. பிறரன்பு நமது சுயநலத்தைத் தோற்கடிக்கும் வல்லமை கொண்டது. செடியோடு இணைந்திருக்கும் கொடி, செடியின் சாராம்சங்களை உள்வாங்கி கடவுளின் அன்பிற்கு அதிபதிகளாக நம்மை உருவாக்குகின்றது. அந்த அன்பிலிருந்து ஒதுங்கியிருப்போர் விரும்பியே தம் வளர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதிக்கின்றனர். அவரின் கட்டளைகளைக் கடைபிடிப்பதால் அவரது அன்பில் நாம் நிலைத்திருக்க முடியும் என்பது நற்செய்தி கொடுக்கும் அறிவுரையாகும். 
3. மகிழ்ச்சி 
கடவுளை அன்புசெய்து அவரது கட்டளைகளில் நிலைத்திருப்பதில் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்று நற்செய்தி மேலும் கூறுகின்றது. இயேசுவின் இதயத்தில் நானிருக்கின்றேன் அல்லது இயேசு என் இதயத்தில் வாழ்கின்றார் என்ற உணர்வு தரும் மகிழ்ச்சி நிறைந்த மனநிலை சிறப்புமிக்கது. இந்த மனநிறைவை எந்த மனித போராட்டமும் களவாடி விடுவதில்லை. கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தம் உயிரையும் தருவதை இயேசு (10:17-18, 12:27-28, 14:31) மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். திருத்தூதர்கள் இயேசுவுக்காக அடிக்கப்படும்போதும் மகிழ்ந்திருந்தனர். நன்மை செய்யும்போது வரும் துன்பங்கள் பலரின் நல்வாழ்வுக்கு வித்திடும்போது அதுவும் மகிழ்ச்சியே. இறைதூதர்கள் பலர் கடவுள் தரும் மகிழ்வில் திளைத்திருந்தனர். கடவுளின் அழைப்பிற்குப் பிரமாணிக்கமாக வாழ்ந்தேன் என்ற சிந்தனையே இறைவாக்கினர் எரேமியாவுக்கு நிறைவு தந்தது. கடவுளுக்கு மட்டும் பிரமாணிக்கமாக வாழ்ந்தது குறித்து யோபு நிறைவுகொண்டார். கிறிஸ்துவுக்காக சிறைபட்டு, அவருக்காகச் சாவை சந்தித்தாலும் அது எனக்கு ஆதாயமே என்று பவுல் அறிக்கையிடுகின்றார் (பிலி 1:21). கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்போர் அவரது அன்பில் நிலைத்து கடவுளின் மகிழ்ச்சியைப் பெறுவர் என்று நற்செய்தி கூறுகின்றது. கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்போர் எந்த உயிரிக்கும் எள்ளளவும் தீங்கு நினைப்பதில்லை. அன்றாட வாழ்விலும் உண்மையான அன்பு உறவுகள் மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றாகும். பகிரப்படும் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாகின்றது. அள்ளிக் கொடுக்கக் கொடுக்க, மகிழ்ச்சியானது பன்மடங்கு பலுகிப்பெருகும் தன்மை கொண்டது. 
4. இயேசுவின் நண்பர்கள்
கட்டளைகளைக் கடைபிடிப்போரை இயேசு நண்பர்கள் என்றழைக்கின்றார். பழைய ஏற்பாட்டில் ‘அடிமைகள்’ என்ற தலைப்பு, கடவுளின் சிறப்புச் சலுகை பெற்றவர்களைக் குறிப்பிடப் பயன்பட்டது. இயேசு இன்னும் ஒருபடி மேல சென்று இதயத் துடிப்புகளோடு கலந்து நிற்கும் நண்பர்களைப் போன்றவர்கள் "திருத்துதர்கள்" என்று பெருமை பாராட்டுகின்றார். நண்பர்கள் சமதளத்தில் நிற்கின்றனர். அவர்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதால் இருவருக்கும் மத்தியில் இரகசியங்கள் இல்லை. அன்பு பகிர்வில் ஏற்படும் சிறு களங்கம்கூட பிரமாணிக்கமின்மையாகக் கருதப்படும். நண்பர்கள் என்றழைக்கும் இயேசு (கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிக்கும் வேளையில்) மக்களைத் தம் இதயமாகக் கருதுகின்றார். கொடுத்தல்-பெறல், பகிர்தல்-பங்கெடுத்தல், உறவாடுதல்-உடனிருத்தல், காத்திருத்தல்-களங்கமின்றி செயல்படல், ஊக்கப்படுத்தல்-உறுதியூட்டல், வழிகாட்டல்-வாழ்வின் மணித்துளிகளைக் காணிக்கையாக்கல், இரகசியம் காத்தல்-இரவு காவலாளியாகச் செயல்படல் போன்றவற்றின் மூலம் நட்பு அன்றாடம் வளர்க்கப்பட வேண்டும். இவையனைத்தையும் தாண்டி தாம் உருவாக்கிக் கொண்ட நட்புக்காக தம் உயிரையும் இழக்க இயேசு துணிகின்றார் (இயேசு நண்பர்களுக்காக மட்டுமல்ல, எதிரிகளுக்காகவும் இறந்தார்). இயேசுவின் நண்பர்களாவதற்கு அவர் தரும் ஒரு நிபந்தனை அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதுதான். இதையே புனித அவிலா தெரசாள், செபம் என்பது ஒரு நண்பன் மற்றொரு நண்பனோடு உறவாடுவது போன்றது என்று கூறுகின்றார். இயேசுவின் அன்பு தொடர்கதையாக இருக்கும் வேளையில் நமது அன்பு குறுங்கதையாக முற்றுபெறுவது தவறாகும். 
அன்பு செய்வோர் கடவுளிடமிருந்து தோன்றுகின்றனர்
சில மனிதர்களால் கோபம் கொள்ளவே இயலாது. சிலர் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைப் பொறுமையோடு தாங்கிக் கொள்கின்றனர். பழிக்குப் பழி என்ற பாவப் பண்பாடு அவர்களிடம் கொஞ்சமும் இருப்பதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் உயர்ந்த மனிதர்களாகத் தென்படுகின்றனர். அடிக்கப்படும் வேளையிலும் அன்புமொழி கூறுகின்றனர். ஒதுக்கப்படும் சூழலிலும் தேடிச்சென்று உறவு பாராட்டுகின்றனர். பொய்யே அவர்களின் வாயிலிருந்து வருவதில்லை. துன்பப்படுவோருக்குத் துணையிருப்பதில் பேரின்பம் கொள்கின்றனர். மானிடர் அனைவரையும் நடமாடும் தெய்வமாகக் காண்கின்றனர். இவர்களே கடவுளின் கண்மணிகள். திருத்தந்தை பிரான்சிஸ் உலகில் எந்த இடத்தில் மக்கள் துன்புற்றாலும் அவர்கள் சார்பாக ஆதரவுக் குரலெழுப்புகின்றார். இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல் கடவுள் என்னை அன்பு செய்கின்றார் என்பதை அனுபவித்து உணர்பவர்கள், பலர் வாழ வழியமைத்துக் கொண்டு முன்நடக்கின்றனர். இதன்படி கடவுளை அன்பு செய்வோர் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையைச் சுற்றியே முதல் யோவான் மடல் வட்டமிடுகின்றது. இதையே, ’கண்ணுக்குத் தெரியும் மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத் தெரியாதக் கடவுளை மதித்தும் பயனில்லை’ என்று புனித அன்னை தெரசா கூறுகின்றார். 
மனிதச் சிந்தனைகளைக் கடவுள் மேல் திணிக்காதிருப்போமாக மனிதர்கள் சிந்திப்பதுபோல் கடவுள் சிந்திப்பதில்லை. கடவுளின் எண்ணங்கள் உயர்ந்தவை, உன்னதமானவை (எசா 55:9). கடவுள் என்பவர் - அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே, அன்புருவாம் ... - என்று திருவருட்பா உரைக்கின்றது. பல நேரங்களில் சில மனிதர்கள் சில மனித குழுக்கள் தங்களின் தவறான தத்துவத்தைக் கடவுள் மேல் திணிக்கின்றனர். மனித வெறுப்புக் கோட்பாடுகள் எதுவும் கடவுளிடம் இல்லை. சிலுவைப்போர்களும், ஜிகாத் சண்டைகளும் சுயநலம் கொண்ட மனித அரசியல் நிலைப்பாடுகள். ஆனால், அன்பு என்பது மனிதர்கள் உருவாக்கிய அத்தனை எதிர்மறைச் சட்டங்களுக்கும் மேலானது. அன்பிற்கு அடைக்குந்தாழ் இல்லை. கடவுளின் பேரன்பையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதத்தின் பெயரால் உலகைப் பிரித்தாள்வதும், கடவுள் பெயரால் நடந்தேறும் தீவிரவாதச் செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்க முடியாது.
இரண்டாம் யோவான் பவுல் இறந்த திருப்பலியில் ரோகன் சூட்ஸ் என்ற பிரிந்த சபை சகோதரர்களின் போதகர் ஒருவரும் கலந்துகொண்டார். திருவிருந்து சமயத்தில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தேறியது. அப்போது கர்தினாலாக இருந்த ராட்சிங்கர் நேராக அவரிடம் சென்று அவருக்கு நற்கருணை கொடுத்தார். அவரும் பெற்று உண்டார். உலகமே பார்த்துக்கொண்டிருந்த அந்த சமயத்தில், கடவுளின் தூண்டுதலால் கர்தினால் ராட்சிங்கர் அதைச் செய்திருக்க வேண்டும். திருஅவைகள் பிளந்துகிடக்கலாம். ஆனால், இயேசு ஒருபோதும் பிரிந்திருக்கவில்லை. எல்லையே இல்லாத கடவுளன்பை மனிதர்கள் குறுக்குக்கோடுகள் போட்டுத் தடுப்பது தவறு. பிறரன்பில் கால் ஊன்றாத கடவுளன்பு பொருளற்றதாகும். 

Comment