No icon

Sunday Sermon

பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு (சாஞா 2:12,17-20,யாக் 3:16-4:3,மாற் 9:30-37)

(சாஞா 2:12,17-20,யாக் 3:16-4:3,மாற் 9:30-37)

யார் பெரியவன்

யார் பெரியவன்? நீயா - நானா? அமெரிக்காவா - ரஷ்யாவா? இந்தியாவா-பாகிஸ்தானா? எதுபெரியது? உன் வீடா- என் வீடா, உன் ஊரா - என் ஊரா? உன் நாடா - என் நாடா? உலகை ஆட்டிப்படைத்து அவ்வப்போது அதைக் கொலைகளமாக்கி, இரத்தத்தால் நனைக்கும் அடிப்படை பிரச்சனை இதுவாகும். தாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும், ஏதாவது ஒரு வகையில் தம்மைப் பெரியவன் என்று எண்பிப்பது, அதிலே நிறைவு காண்பது மனிதர்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகத் தென்படுகின்றது. தன்னைப் பெரியவன் என்பதை நிரூபிக்கவே சண்டைகள், வெட்டுக்கள், குத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2000 ஆண்டுகள் உலக வரலாற்றைச் சுருக்கினால், மனிதர்கள் ஏறக்குறைய 200 ஆண்டுகள் போரில் ஈடுபட்டுள்ளனர். மற்ற ஆண்டுகளில் போரின் இடிபாடுகளைச் சரி செய்துள்ளனர், மற்றும் அடுத்த போருக்குத் தயார் செய்துள்ளனர். கடவுள் மட்டுமே பெரியவர். மற்ற அனைவரும் சிறியவர்கள் என்ற மன நிலையே ஏற்கத்தக்கது. முதன்மை நாற்காலியைப் பிடித்து, எப்படியாவது தம்மை பெரியவன் என்று காட்டிக்கொள்ள விரும்பும் சில குருட்டு வழிகாட்டிகளால் அனைத்து நற்மதிப்பீடுகளும் அடகு வைக்கப்படுகின்றன.

கற்காலப் பிரச்சனை

யார் பெரியவன் என்பது ஆபேல் - காயின், இஸ்மாயில் - ஈசாக்கு, ஏசா - யாக்கோபு காலத்துப் பிரச்சனையாகும். கடவுளைப் போன்ற அறிவைப் பெற்றுவிடும் நோக்குடனே ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை முறித்து பெரும் மதிப்பை இழந்து நின்றனர். தம் தம்பி ஆபேலைவிட தான் வலிமை வாய்ந்தவன் என்பதை நிரூபிக்கும் நோக்குடனே காயின் அவரைக் கொலை செய்கின்றார். கடவுள் வாழும் உயர்ந்த இடத்திற்கு தாமும் சென்றுவிட வேண்டும் என்ற நோக்குடனே மக்கள் பாபேல் கோபுரம் கட்டினர். யார் பெரியவன்? என்ற சண்டை யாக்கோபுவுக்கும் ஏசாவுக்கும் தாயின் வயிற்றிலே துவங்கிவிட்டது. பெரியவன் சண்டைக்குத் தீர்வுகாணும் பொருட்டு யோசேப்புவை அவரின் சகோதரர்கள் முற்றிலும் ஒழிக்கத் திட்டமிட்டனர். சாலமோன் பதவியேற்பது அவரின் சகோதரர்கள் அனைவரும் அழிந்து ஒழிந்த பின்னரே நிகழ்கின்றது.

திருத்தூதர்கள் மத்தியில் எழுந்த சண்டை

இன்றைய நற்செய்தியில் காணப்படும் - யார் பெரியவன் - என்ற சண்டை பல ஆண்டுகளாகத் திருத்தூதர்கள் மத்தியில் நடந்து கொண்டிருந்த மன இறுக்கத்தின் வெளிப்பாடாகும். அவர்களின் உள்ளம் முழுவதும் நிறைந்து கிடந்ததை அவர்களின் வாய் பேசியது. அதுவும் இயேசு தமது இறப்பை இரண்டாம் முறை வெளிப்படுத்தியபின், அந்த இறப்பிற்குபின் மாட்சி நிறைந்த வாழ்வைத் தம் தோற்ற மாற்றம் மூலம் மூன்று திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்திய பின் இது நிகழ்கின்றது. இயேசுவுக்கு எருசலேமில் கொடுமையான இறப்பு காத்திருக்கின்றது என்பதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி திருத்தூதர்கள் செயல்படுகின்றனர். இயேசு எப்படியும் உரோமையர்களை நாட்டிலிருந்து துரத்தி பாலஸ்தீனத்தின் அரசு அரியணையில் அமர்ந்துவிடுவார். அந்நிலையில் தங்களுக்குள் பெரியவராக இருப்பவருக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த மனநிலையில் திருத்தூதர்கள் ஒருவர் மற்றவருடன் ஒப்பாய்வு செய்து தாமே பெரியவன் என்று நிரூபிக்கத் துடித்தனர். நற்செய்தியில் பல இடங்களில் பேதுரு தம்மை முதன்மைத் திருத்தூதராகக் காட்டிக்கொள்கின்றார். செபதேயுவின் மக்களாகிய யோவானும் யாக்கோபுவும் இயேசுவின் வலப்பக்கத்திலும் இடப்புறத்திலும் அமர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். அதற்கு அவர்களின் தாயும் சிபாரிசு செய்கின்றார். பன்னிருவரும் பன்னிரெண்டு இருக்கையில் இயேசுவுக்கு வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமர வேண்டும் என்று விரும்பினர் (மத் 19:28). திருத்தூதர்கள் உலக சிந்தனையிலிருந்து மேலெழும்பாமலே இருந்தனர்.

உண்மையில் யார் பெரியவர்?

பெரியவன் என்ற பதாகையில் வலம் வந்து கொண்டிருக்கும் குருட்டு வழிகாட்டிகளைக் கொண்ட சமுதாயம் தட்டுத்தடுமாறுகின்றது என்பதே எதார்த்தம். தகுதியற்ற நிலையில் யார் பெரியவன் நாற்காலியில் அமர்ந்தாலும் அந்த சமுதாயம் அதற்கு கொடுமையான விலை கொடுக்க நேரிடும் என்பதற்குக் ஹிட்லரைவிட வேறு உதாரணம் இருக்கப்போவதில்லை. தகுதியற்ற தலைமையைப் பின்பற்றும் மக்கள் அனைவரும் மீண்டு எழவே முடியாத குழியில் விழுவது உறுதி. எனவே, உண்மையில் பெரியவன் யார் என்பதற்கு இயேசு விடையளிக்க முனைகின்றார்:

1. தலைமைச் சேவகன்: இயேசுதம் திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவது போல், தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு பகல் பாராது முழுமையான பணியாற்றுகின்றவர்களே பெரியோர். அவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையால் உயர்ந்து நிற்கின்றனர். அவர்கள் தலைமை மகுடங்களைத் தேடிச்செல்வதில்லை. மகுடம் அவர்களை நாடித் தேடிவருகின்றது. அவர்கள் தலைவர்கள் பொறுப்பெடுப்பது மகுடங்களுக்கே மகிமை சேர்க்கும் செயலாகும். அவர்களிடம் அதிகாரத் தோனியோ அடக்கியாளும் குணமோ காணப்படுவதில்லை. தம்மிடம் ஒப்படைக்கப்பட்டோரை வாழவைப்பதில் அவர்கள் பெருமகிழ்ச்சி காண்கின்றனர். தம் மக்களின் வெற்றியையே தமது வாழ்வின் நோக்கமாகக் கருதுகின்றனர். தாம் உடைத்து நொறுக்கப்பட்டாலும் சிலுவையில் பலமுறை அறையப்பட்டாலும் தமது தியாகத்தால் தம் மக்கள் நல்வாழ்வு பெறத் துடிக்கின்றனர். தற்பெருமையையும் புகழையும் அவர்கள் தேடி அலைவதில்லை. அவர்கள் மதிப்பீடு இல்லாத வார்த்தைகளைப் பேசுவதில்லை. அவர்கள் குழுவின் தோல்விகளை தம்மேல் ஏற்றுக்கொண்டு, வெற்றியை அவர்களுக்குப் பரிசளிக்கின்றனர். நல்ல ஆயன் போல் இரவு, பகல் பாராது மக்களுடன் இருக்கின்றனர். கூட்டத்தில் கடையவர்களாக இருந்துகொண்டு தம் மக்களின் வெற்றியை ரசிக்கின்றனர். தம் மக்களோடு மக்களின் வாழ்வில் பங்கெடுக்கின்றனர். தமது எடுத்துக்காட்டான வாழ்வால் அவர்களை வழிநடத்துகின்றனர்.

2. குழந்தைகளின் மனநிலை: குழந்தைகளின் மனநிலையில் வாழும் தலைவன் அனைவரையும் தம் உடன் பிறந்தவராகக் கருதுகின்றார். அனைவரையும் அவர்களாகவே ஏற்றுக்கொள்கின்றார். சிறிய துன்பமும் அவர்களுக்கு நேரிடக்கூடாது என்று நினைக்கின்றார். அவருக்கு வன்மம் வைக்கத் தெரியாது. அப்பழுக்கற்ற முறையில் அனைவரையும் அணுகி, அனைவரோடும் அன்பு பாராட்டுகின்றார். யாரையும் பகைத்துக்கொள்ளவோ வேண்டாம் என்று ஒதுக்கிவைக்கவோ அவருக்குத் தெரியாது. வெறுப்புணர்வு என்பது அவரிடம் கொஞ்சமும் இல்லை. அனைவரையும் சமமாகக் கருதுகின்றார். அவரின் பிரசன்னமே மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கூட்டுகின்றது. அவர் பெருமதிப்பையோ, அவமானத்தையோ பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தோல்வியையோ, இறப்பையோ நினைத்துப் பயம் கொள்வதில்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற மதிப்பற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. அவருக்கு இரட்டை வேடம் போடத் தெரியாது. ஆளுக்கொரு பேச்சு நாளுக்கொரு வேடம் என்ற சிந்தனை அவரிடம் இல்லை. அவர் திறந்த மனத்தோடு அனைவரையும் அணுகுகின்றார். திட்டமிடாமல், பிரதிபலன் எதிர்பாராமல் அனைவரையும் அன்பு செய்கின்றார். சிலருக்கு மட்டுமே சிறப்புமதிப்பு என்றஎண்ணம் கொஞ்சமும் அவர்களிடம் இல்லை. அனைவரோடும் எல்லா சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்.

பெரியவன் சண்டை தோல்வியின் துவக்கமே

பொறாமையும் கட்சி மனப்பான்மையும் அனைத்துக் கொடுஞ்செயல்களின் அடித்தளம் என்பதை யாக்கோபு இரண்டாம் வாசகத்தில் தெளிவாக்குகின்றார். கடவுள் ஒவ்வொரு மனிதரையும் அவரவர்க்குத் தேவையான பண்புகளுடனும், திறமைகளுடனும் படைத்துள்ளார். தம்மிடம் இல்லாத ஒன்றுக்காக கடவுளிடம் வேண்டுவதை விடுத்து அல்லது கடினமாக உழைப்பதை விடுத்து, அடுத்திருப்பவன் மீது பொறாமைப்படுவது நியாயம் அல்ல. ஒரு குழுவுக்குள் நடக்கும் குழப்பம் அமைதியான வாழ்வை அழித்து அதைக் குப்பை மேடாக்கிவிடும். உள்நாட்டுக் குழப்பம் நாட்டின், ஊரின், குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பலரின் உயிரைக் குடித்துவிடும். வெற்றியின் கீதம் அவர்களது வாழ்வில் கேட்காது. ஏனெனில், ஒருவர் நடுவார்-அதே குழுவைச் சேர்ந்த மற்றவர் பறிப்பார். ஒருவர் கட்டுவார் - அதே குழுவைச் சேர்ந்த மற்ற ஒருவர் இடிப்பார். இவ்வாறு சில குழுக்கள், குடும்பங்கள், ஊர்களின் வாழ்வு குழப்பத்திலே துவங்கி பெருங்குழப்பத்திலே முடிவடைந்துவிடுகின்றது. அவர்களின் வாழ்வு முழுவதும் பலன்தராத பாலைநிலமாக மாறிக்கிடக்கும். பொறுமையோடு இணங்கிச் செல்லும் தன்மையே விண்ணக அமைதியைப் பரிசளிக்கும் என்று யாக்கோபு அறிவுரை வழங்குகின்றார்.

பேராசை பெரும் நஷ்டம்

கட்டுப்படில்லாத பேராசையே பல துன்பங்களுக்குக் காரணம் என்று யாக்கோபு தம் மடலில் எழுதுகின்றார். ஒரு குழுவுக்கு ஒரு தலைவன் மட்டுமே இருக்க முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் மட்டுமே வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். ஒரு குழுவில் இருக்கும் அனைவரும் தலைவர்களாக முயற்சி செய்வது, பல சமையல் காரர்கள் சேர்ந்து சூப்பைக் கெடுப்பது போலாகும். விவேகமாகப் பேசத்தெரியாதவர் ஒரு நாட்டின் தலைமைக் கொரடாவாக இருக்கும்போது நாட்டில் குழப்பங்களும், குற்றங்களுமே நிலைக்கும். ஏனெனில், சரியான நேரத்தில், சரியான விதத்தில் சொல்லப்படாத ஒரு சிறிய வார்த்தையினால் போராட்டங்கள் உதிக்கலாம். போர் கருவிகளால் மட்டுமல்ல; கொடுமையான வார்த்தைகளும் கொலை செய்கின்றன. தம் சொந்தக் குடும்பத்தைக் கட்டுக் கோப்பாக வழிநடத்தத் தெரியாதவர் நாட்டையே வழிநடத்த முயற்சிக்கும்போது, அந்த நாடு முழுவதும் குடிகாரன் போல் தள்ளாடும் என்பது உண்மை.தமது சொந்த மனப்புண்களிலிருந்து குணம் பெற்று எழாதவர், நல்ல மனநல ஆலோசகராக மற்றவர்களை வழிநடத்துவது கடினம்.

பல மனிதர்களுடன் வாழும் சூழலில் நமது எண்ணங்கள் அனைத்தும் கைகூடப் போவதில்லை. கட்டுப்பாடில்லாத சுயநல விருப்பங்கள் உண்மையான உறவைச் சீர்குலைத்து அமைதியான வாழ்வை அழித்துச் சுடுகாடாக மாற்றிவிடும். பொறாமை என்பது ஒரு பேய் கூட்டத்தையே தம்மோடு இழுத்துக்கொண்டு வரும். அது நீதிமான்களையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும். புனிதம் ஒற்று சேர்ப்பதை பொறாமை உடைத்து நொறுக்கும். நாம் வாழும் சூழ்நிலையில் நமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பொறுப்புகளுக்குத் தலைமை ஏற்போர், முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை கொள்வது போல்,கொஞ்சமும் திறமையற்ற நிலையில் உலகிற்கே தலைவனாக ஆசைப்படும் முயற்சியைக் கைவிடுவோம். கடவுளுக்கு முன் பெரியவர்-சிறியவர் வேறுபாடு இல்லை என்பதை உணர்வோம்.

Comment