(1 அர 17:10-16, எபி 9:24-28, மாற் 12:41-44)
பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
- Author குடந்தை ஞானி --
- Friday, 05 Nov, 2021
உலகிலே மிகப்பெரிய பணக்காரன்
ஒருமுறை ஒரு செய்தியாளர் இன்றைய உலகின் பணக்காரராக இருக்கும் பில்கேட்ஸ் அவர்களிடம், உங்களைவிடப் பெரிய பணக்காரர் உலகில் இருக்கின்றாரா? என்று கேட்டார். அதற்கு ‘இருக்கின்றார்’ என்று பதிலுரைத்த பில்கேட்ஸ், தமது வாழ்வில் நிகழ்ந்த கடந்தகால சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார். அப்போது அவர் கையில் காசின்றி வேலைதேடி அலைந்த காலம். செய்தித்தாள் விற்பனை செய்யும் ஒரு கருப்பின இளைஞனிடம் சென்று, தன்னிடம் காசு இல்லை என்றும், ஆனால்; வாசிக்க ஆர்வமாக இருப்பதால் தமக்கு ஒரு செய்தித்தாள் தருமாறும் கேட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்தை அறிந்த இளைஞன் - எனது வருமானத்திலிருந்து உங்களுக்கு அதை நன்கொடையாகத் தருகின்றேன் - என்று ஒரு செய்தித்தாளைத் தந்தான். மீண்டும் ஒருநாள் சந்தித்து அதேபோல் அவர் செய்திதாள் ஒன்று கேட்க அவனும் அதே பதிலுடன் செய்தித்தாள் ஒன்றைத் தந்தான். ஆண்டுகள் பல கடந்தன. உலகிலே பணக்காரரான பின் பில்கேட்ஸ் அவரைத் தேடிச்சென்று இறுதியில் அவரைக் கண்டுபிடித்துவிடுகின்றார். என்னைத் தெரிகின்றதா? என்று பில்கேட்ஸ் அவரிடம் வினவ, அவரோ தெரியாது என்றார். அவர் இன்னும் செய்தித்தாள் விற்பவராகவே இருந்தார். தமது கடந்தகால கதையை அவரிடம் எடுத்துக்கூறி, தாம் தற்போது உலகப் பணக்காரன் என்றும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவருக்குத் தர தாம் தயாராக இருப்பதாகவும் பில்கேட்ஸ் கூறினார். அவனோ, அன்று நான் எனது தேவையைக் குறைத்துக்கொண்டு உங்களுக்கு செய்திதாள் கொடுத்தேன். ஆனால், நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றியபின் மீதி இருப்பதை எனக்குத் தருவதாக வாக்களிக்கின்றீர்கள். அது எனக்குத் தேவையில்லை என்றுக் கூறி நடையைக் கட்டினார். பில்கேட்ஸ் என்னைவிடப் பணக்காரன் அவன்தான் என்று கூறுகின்றார். இன்றைய நற்செய்தியில் இப்படியான சம்பவம் நடந்தேறுகின்றது. தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து ஒரு பெண் இயேசுவின் கண்ணில் பெருமையடைகின்றார்.
விதவைகளுக்கான சிறப்பு சலுகைகள்
உடனிருக்கவும் உதவிசெய்யவும் ஆளின்றி விதவைகளின் வாழ்வில் சோகமே தொடர்கதையானது. மனித ஆறுதலும் அவர்களுக்குத் தோற்றுப்போனது. கணவனை இழந்து, வாரீசு வரத்தை இழந்து, நல்வாழ்வின் வழிமுறைகளைத் தொலைத்து சொல்லொண்ணாத் துன்பங்களை அன்றாடம் அனுபவித்த அவர்களுக்கு விவிலியத்தில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன. கைம்பெண் குருவின் மகளாக இருந்தால் அவள் மீண்டும் தம் தந்தையின் வீட்டுக்கு வந்து வாழலாம் (லேவி 22:13). மூன்றாம் ஆண்டில் விளையும் தானியங்கள் கைம்பெண்களுக்கும் சொந்தமானதாகும் (இச 14:28-29). கைம்பெண்களை இழிவாக நடத்துவது குற்றமாகும். அவர்களைக் கடவுளே பாதுகாக்கின்றார் (எசே 22:7). விதவைகளுக்குத் தீங்கு செய்யாதே. நான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பேன் (விப 22:22). கடவுளே அவர்களுக்கு நீதி வழங்குவார் (இச 10:18). நீதிபதிகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நேர்மையோடு நீதி வழங்க வேண்டும் (இச 24:17, 27:19). அவர்கள் (லேவியர்கள்போல்) பத்தில் ஒரு பங்கு பெறும் உரிமை பெற்றவர்கள் (இச 14:29, 26:12-13). அவர்களின் உரிமைகளை வன்முறையால் பறிப்பதைப் பார்த்து இறைவாக்கினர்கள் கொதித்தெழுந்தனர். மனித உரிமைச்சட்டங்களை மதிக்காது வயதானவர்களையும் விதவைகளையும் கொடுமைப்படுத்திய அசீரியா விரைவில் அழிவுரும் என்று எசாயா எச்சரிக்கின்றார். எளியோருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பது இயற்கையின் விதியாகும். பாதுகாக்க ஆளில்லை என்று அவர்கள் மீது கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவது கடவுளின் சாபத்தைப் பெற்றுத்தரும் என்று விவிலியம் போதிக்கின்றது. கணவன் இறக்கும் தருவாயில் மனைவி தம் விதவைக் காலம் முழுவதும் தமது வீட்டில் தங்கவும், கணவனின் சொத்துக்களைப் பயன்படுத்தவும் உரிமை பெற்றனர். பிறரின் இரக்கப்பெருக்கில் வாழ்வு நடத்தும் அப்படியான விதவைகளிடம் பொங்கிவழியும் இரக்கம் பற்றி இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுகின்றன.
உணவு பஞ்சம் இல்லவே இல்லை.
கடவுள் அனைத்துலக உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் படைத்து வைத்துள்ளார். நிறைவுடைய அவருக்கு எந்தக் குறையும் வைக்கத் தெரியாது. சூரியன் தொடர்ந்து உதிக்கின்றது. பயிர்பச்சைகள் தொடர்ந்து வளர்கின்றன. மக்களினம் பெருகப்பெருக புதிய கண்டுபிடிப்புகள் பெருகி மக்களின் வாழ்வை வளம் கொழிக்கச் செய்கின்றன. படைப்பின் பலன்கள் பொதுவில் இருக்கும்போது எவருக்கும் எந்தக் குறைவும் எற்பட வாய்ப்பில்லை. ஆனால், சிலரின் சுயநலமே பலரைப் பட்டினியோடு படுக்கைக்கு அனுப்புகின்றது. மனித பேராசை கடவுளின் சொத்துக்களைக் கொள்ளையடித்து தமக்கென்றும் தம் வாரீசுகளுக்கென்றும் பதுக்கி வைக்கின்றது. முதல் வாசகத்தில் தம்மிடம் இருக்கும் கொஞ்சத்தையும் பகிர்ந்து கொடுக்கும் விதவைப் பெண் நிறைவாகப் பெற்றுக்கொள்கின்றாள். தம்மிடம் இருப்பதையும் கொடுத்துவிட்டால் அவளும் அவரது மகனும் பட்டினியால் இறக்க நேரிடும் என்பது பற்றி அவள் கவலைக்கொள்ளவில்லை. பகிர்வதால் அனைவரின் பசியும் போய்விடுகின்றது. கொடுக்கக் கொடுக்க கடவுள் அளந்து மடியில் கொண்டிக்கொண்டே இருந்தார். இறைவாக்கினர் மூலம் பாடம் கற்ற இந்த விதவை பகிரும் தொழிலை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்திருக்க வேண்டும். கடவுளின் சொத்தைக் கடவுள் மக்களுக்குப் பயன்படுத்துவருக்குக்கடவுளின் களஞ்சியம் எப்போதும் திறந்திருக்கின்றது. ஓவ்வொரு மனிதரும் அவரவர்க்குத் தேவைப்படும் உணவுக்கு மட்டுமே உரிமையாளர்கள். அவர்கள் பல ஆண்டுகளுக்கென்று பதுக்கி வைத்திருப்பது பலருக்குரிய உரிமைச் சொத்தாகும். பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது வீணாக்கும் ஒவ்வொரு பொருளும் மற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது. வீணாக்கும் ஒவ்வொரு துளி உணவும் ஏழைகளைக் கிண்டலடிக்கும் செயலாகும்.
மக்களின் பசியாற்றும் கோவில்
எல்லா மதக் கோவில்களும் மக்களின் பசியாற்றும் அன்னசாலைகளாகச் செயல்படுவது நமக்குத் தெரியும். கோவிலுக்கு வந்த காணிக்கைகளை வைத்தே பாலஸ்தீன நாட்டை அவர்கள் நடத்தினர். கோவிலில் பெரும்பணம் குவிந்து கிடந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். எருசலேம் ஆலயத்தில் இரகசிய அறை என்றும், பொருள்கள் அறை என்றும் இரண்டு அறைகள் இருந்தன. இரகசிய அறையில் பக்தியுடையோர் தங்களின் அன்பளிப்புகளை இரகசியமாகப் போட்டனர். அது ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும் மக்கள் தங்களின் செல்வங்களைப் பாதுகாப்பாக வைக்கக் கோவிலில் வசதி செய்யப்பட்டிருந்தது (2 மக் 3:4-6,10-15, 4 மக் 4:1-3). அநாதைகளும், விதவைகளும் அதைப் பயன்படுத்திக் கொண்டனர் (2 மக் 3:10). திருப்பலியில் மக்கள் தரும் காணிக்கைகள் ஏழைகளுக்குத் தரப்பட வேண்டும் என்பது திருஅவையின் போதனையாகும். தெய்வச் சிலைகளுக்குப் படைக்கப்படும் உணவை வழியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களுக்குத் தந்தால், அந்த சிலைகளே கரமெடுத்துக் கும்பிடும்.
அனைத்தையும் கொடுக்கும் விதவை
இன்றைய நற்செய்தியில் அந்த விதவை காணிக்கையிடும் கொதிராந்து, ஒரு நாள் கூலியான தெனாரியத்தில் 64 இல் ஒரு பகுதி, அதாவது மிகச்சிறிய காசுதான் ஆனால், அது பல பாடங்களைக் கற்பிக்கின்றது. 1. அந்தக் காணிக்கை அவளது இதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்டதாகும். ஒருவர் தமது தேவைகளைக் குறைத்துக்கொண்டு பிறருக்குத் தருவதே உண்மையான தியாகமாகும். இந்த பெண்ணோ சாதாரண தியாகத்தையும் தாண்டிச் சென்று, தமக்குரிய அனைத்தையும் அன்பளிப்பாக்கி உண்மை அர்ப்பணிப்பின் இலக்கணமாகத் தென்படுகின்றாள். இந்தச் செயல் இயேசு தம்மையே சிலுவையில் தியாகமாக்குவதற்கு முன்னுரையாக அமைகின்றது (இதனால் அவள் இயேசுவுக்கு இணையானவள் என்று பொருளில்லை). மேலும், இது அவர் கொடுக்கும் முதல் காணிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. தம்மிடம் இருக்கும் அனைத்தையும் இதுவரை கொடுத்த அவர், இப்போது மீதியிருப்பதையும் காணிக்கையாக்குகின்றார். நாம் எதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றோமோ அதையே அவர் கொடுத்துவிடுகின்றார். இது அவளது முழு அர்ப்பணத்தின் வெளிப்பாடாகும். 2. இந்த ஏழை விதவை தன்னிடம் இருக்கும் சிறிதளவு பணமும் தன்னைவிட தேவையில் இருக்கும் மற்றொருவருக்குப் பயன்படட்டும் என்ற எண்ணத்தில் காணிக்கையிடுகின்றாள். இங்கு அவரது பிறர் நலம் போற்றும் பண்பைப் பாராட்டாமல் இருக்க இயலாது. கோவிலில் இடப்படும் காணிக்கைகள் ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்பதே அன்றைய (இன்றைய) சட்டம். 3. தம்மிடம் இருப்பதை மற்றவருக்குக் கொடுத்தால் கடவுள் தம்மைக் கவனித்துக் கொள்வார் என்ற இறை நம்பிக்கை இங்கு பளிச்சிடுகின்றது. நாளைய கவலையைக் கடவுள் கவனித்துக் கொள்வார் என்று முழுமையாகக் கடவுளைச் சார்ந்து வாழ்கின்றார். அவர் நீண்ட நேரம் செபித்தமையின் விளைவு இதுதான். 4. சில சமயங்களின் நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்கள் நம்மை அடிமையாக்கி ஆட்டிப்படைக்கின்றன; அடக்கியாளுகின்றன. நமது வாழ்வுச்செயல்களை அவை ஓரளவு தீர்மானிக்கின்றன. அவற்றைவிட்டுப் பிரிய நமது மனம் இசைவதில்லை. அங்குள்ள பலர் தமது வாழ்வுக்குச் சேகரித்ததுபோக மீதியிருந்ததை (தமக்குத் தேவைப்படாததை) உண்டியலில் போட்டனர். ஆனால், அந்தப் பெண்ணிடம் பொருள் பற்று கொஞ்சமும் இல்லை. எனவேதான், எளிதில் அதனிடமிருந்து விலகியிருக்க முற்படுகின்றார். பொருள் பற்றிலிருந்து விலகியிருப்பதே உண்மையான மகிழ்ச்சி, நிறைவு என்று அனைவருக்கும் பாடம் கற்பிக்கின்றார் அந்தப் பெண். 5. அவள் கோவிலில் பலி செலுத்தினாரா? என்று நற்செய்தி பேசவில்லை. இயேசு அதைப் பற்றி இங்கு கவலையும் கொள்ளவில்லை. ஆனால், பிறரன்பு பல பலிகளைவிடவும் மேலானது என்பதன் உயர் போதனையாக அவளது செயல் அமைகின்றது. கடந்த வார நற்செய்தியில் இயேசு போதித்த கடவுளன்பையும் பிறரன்பையும் தம் செயல் மூலம் எடுத்துரைக்கின்றாள் அந்தப் பெண். அவள் கடவுளரசிற்கு வெகுதொலைவில் இல்லை.
ஆளுக்கொரு நீதி
கணக்குப் பாடத்தில் இரண்டும் இரண்டும் நான்கு என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். தீ சுடும், பனி குளிரும் என்பது உலக உண்மைகள். பொதுக்காரியங்களுக்கு அதிக பணம் கொடுப்போரே கல்வெட்டுக்களில் இடம்பெறுவர். அவர்களுக்கே அலங்கார வளையம் அமைக்கப்படும். ஆனால், இயேசு எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதைவிட, எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதுற்கு அழுத்தம் தருகின்றார். தாம் வைத்திருக்கும் கொஞ்சத்திலிருந்து கிள்ளிக்கொடுப்பவர்கள், ஊரையெல்லாம் கொள்ளையடித்து, அள்ளிக்கொடுப்போரைவிட சிறப்பு வாய்ந்தவர்கள் என்று இயேசு இலக்கணம் வடிக்கின்றார். பின்லேடன் போன்றோர் பலரைக் கொன்றுவிட்டு, வீதிக்கு வீதி கோவில்கள் கட்டி என்ன பயன். எளியோரை நசுக்கி வறியோரைக் கொள்ளையடித்து கோவில் உண்டியலில் போடும் காசு கடவுளுக்கு ஏற்புடையதாகுமா? இரத்தக்கறை படிந்த கரங்களோடு கொடுக்கப்படும் காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஒருவரின் அர்ப்பணத்திலிருந்து கொடுக்கும் அனைத்திற்கும் மதிப்பு அதிகமாகும். இதயத்திலிருந்து கொடுப்பதும் முக்கியமாகும். தமக்குக் கிடைக்கும் கொஞ்ச ஒய்வூதியத்தில் பலவற்றை பலருக்கும் தாரைவார்ப்போர் கடவுளின் கண்ணில் மதிப்பு பெறுகின்றனர். தெருவெல்லாம் பிச்சையெடுத்து பலமுறை கொரோனா நிவாரணம் தந்த அந்த தர்மம் பெறுபவர் தர்மத்தின் தலைவனாகத் தென்படுகின்றார். கொடுத்துவிட்டு அதுபற்றி போதிப்போம். கடவுள் அதில் மகிழ்வார். பொருள் மட்டுமல்ல; நேரம், அன்பு போன்றதையும் கொடுக்கலாம்.
எந்த அளவையால் அளக்கின்றோமோ…(லூக் 6:38)
நாம் மற்றவர்களுக்கு எந்த அளவையால் அளக்கின்றோமோ, அதே அளவையால்தான் கடவுள் நமக்கும் அளக்கின்றார். எந்த முதலீடும் இல்லாமல் தமது சபையைத் துவக்கிய அன்னைத் தெரசாவின் சபைக்கு அன்றாடம் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவூட்டிய பின்னும் மிச்சம் எஞ்சியுள்ளது. வெறும் 2000 ரூபாயில் அடையமுடியாதவர்களை அடையும் நிறுவனம் என்று, துவங்கி இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீரைத்துடைத்தார் தெலசால் சகோதரர் ஜேம்ஸ் கிம்ட்டன். ஏழைகளுக்கு அள்ளிக்கொட்டுவோரின் வங்கிக்கணக்குகளைக் கடவுள் வெறுமையாக வைத்திருப்பதில்லை. கடவுளே அவர்களுக்காகத் திட்டமிட்டு அதை செயல்படுத்துகின்றார். கடவுள் வழி நடத்தும் இடங்களின் அவர் கொடுத்துக்கொண்டே வழிநடக்கின்றார். இல்லாதவர்களுக்கு உதவும் நோக்குடன் கடவுளிடம் கையேந்துபவர்களுக்கு அவர் எந்தக் குறையும் வைப்பதில்லை.
Comment