No icon

(தானி 7:13-14, திவெ 1:5-8, யோவா 18:33-37)

கிறிஸ்து - அனைத்துலகின் அரசர் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறு

இந்த பூமியை எத்தனையோ மன்னர்கள் மாமன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். ஆனால், அவர்களால் ஒரு நாடு, மொழி, இனம், கண்டம் போன்றவற்றின் மீது மட்டுமே உரிமை கொண்டாட முடிந்தது. ஆனால், இயேசு அனைத்துலகின் அரசர். மண்ணக அரசர்கள் தம் நிலப் பரப்பளவையும் அதில் வாழும் மக்களையும் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவர். தம் நிலப் பரப்பளவைப் பெரிதாக்கும் நோக்குடன் போர்கள் புரிந்து, பல மாசற்றவர்களின் இரத்தத்தைச் சிந்தியுள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது பல நாடுகள் மற்ற நாடுகளைத் தமதாக்கும் முனைப்போடு செயல்பட்டமையால், பல்லாயிரம் மனித உயிர்கள் பறிக்கப்பட்டன என்பது வரலாறு. மண்ணக அரசர்கள் தாங்கள் ஆட்சியுரிமை கொண்டாடும் நிலத்தை நன்கொடையாகவோ, வாரீசுரிமையாகவோ, பிறரிடமிருந்து பறித்தே பெற்றுக் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் அவற்றை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கவில்லை. இயேசுவால், இயேசுவில் படைப்பனைத்தும் உருவாக்கம் பெற்றது. படைத்த அவர் தொடர்ந்து புதுப்பிக்கின்றார், பாதுகாக்கின்றார், அதன் முழுமைக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசு என்ற அரசர் பூமிக்கும் கட்டளையிட்டு பூமியின் முகத்தைப் புதுப்பிக்கின்றார். கடலைப் பார்த்து இரையாதே (மாற் 4:39) என்று அவரால் கூற முடியும். அந்த இடத்தைத் தாண்டி வராதே என்று அலைகளுக்கும் எல்லைக்கோடு வகுக்க முடியும் (யோபு 38:8). கடலையே பிளந்து மக்களுக்கு வழியமைக்க முடியும் (விப 14:21). பாலைவனத்தைச் சோலைவனமாக்க முடியம் (எசா 41:18). மக்கள் செல்லுமிடமெல்லாம் நிழல் தரும் மரங்களை உருவாக்க முடியும் (எசா 41:19). வாழ்வுகொடுப்பவன் அரசன். பல அரசுகளுக்கு வாழ்வு கொடுப்பவன் பேரரசன். இயேசுவோ பேரரசர்களுக்கெல்லாம் அரசர். உலக அரசுகள் அனைத்தும் அவரது எல்லைக்கோட்டில் வலம் வருகின்றன (திப 24:1). உலகின் மாமன்னர்களையும் நியமனம் செய்யும் தகுதிபடைத்தவர் கிறிஸ்து அரசர்.

அவரது அரசு நிலையானது (தானி 7:13-14)

இன்றைய முதல் வாசகம் அவரது ஆட்சியுரிமை என்றுமுளது; முடிவற்றது; அழிந்து போகாது என்றுரைக்கின்றது. அவரே முதலும் முடிவும், நேற்றும் இன்றும், நாளையும் மற்றும் என்றென்றும். அனைத்தையும் துவக்கி வைத்தவரும், அனைத்தையும் சிறப்பான முடிவுக்கு இட்டுச்செல்பவரும் அவரேதான். உலகத்தின் முதன்மை ஆள்களாக ஆட்சிசெய்ய விரும்பிய மாமன்னர்கள் அனைவரும் அழிந்துபோயினர். காலம், நேரம், இடம் போன்ற அனைத்தையும் வெற்றிகொண்டு வாழும் அரசர் இயேசு. அவரது அரசு மண்ணைச் சார்ந்ததாக இருந்திருந்தால் மண்மீது நடக்கும் மாற்றங்கள் அதை உருக்குலைத்திருக்கும். உலகம் சார்ந்ததாக இருந்திருந்தால் அன்றாடம் பல பந்திகள் பரிமாறவும், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க மாளிகைகளை உருவாக்கவும் ஏழைகளின் உழைப்பு சுரண்டப்பட்டிருக்கும். படையைச் சார்ந்தாக இருந்திருந்தால் புதுப்புது படைக்கருவிகளை உருவாக்க வேண்டியிருக்கும். அவற்றைப் பயன்படுத்தவும் பராமரிக்கவும் முப்படைகள் தேவைப்பட்டிருக்கும். உலகம் சார்ந்ததாக இருந்திருந்தால் தங்கமும், வைடூரியங்களும், வைரங்களும் அதன் அரண்மனையை அழகு செய்திருக்கும். அதுவே அரசியல் தலைமையாக இருந்திருந்தால் பதவியைத் தக்கவைக்கப் பல மதிப்பீடுகளைப் பலியாக்க வேண்டியிருக்கும். ஆனால், மானிட மனங்களைச் சார்ந்திருப்பதால் அது நித்தியத்திற்கும் நிலைகொள்ளும். அன்பே அதன் சட்ட வடிவம். அந்த அன்பிற்குள் அனைத்தும் அடக்கம். மருத்துவர்கள் இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்தாமல் இந்த அரசர் அத்தனை நோய்களையும் ஒருவார்த்தையால் உடனடியாகவும் நிரந்தரமாகவும் குணப்படுத்துவார். யாராலும் தோற்கடிக்கப்படாத சாவும் அவரால் தோல்வியுறும். அவரது வார்த்தைகள் பலருக்கும் வாழ்வு தரும் உயிராற்றலைத் தன்னகத்தே கொண்டவை. அதில் நீதிமன்றங்கள் இல்லை, யாருக்கும் தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, சிறைச்சாலைகள் இல்லை. அரசியல் உலகில் மனசாட்சியை உலுக்கி வழிநடத்தும் பேரரசன் இயேசு. எல்லாப் பேரரசர்களும் அவர்முன் மண்டியிடத் தயங்குவதில்லை. போரினால் பெற்றுக்கொண்ட அல்லது வெற்றி கொண்ட அரசு அதுவல்ல என்பதால் பிலாத்து முன் படைக்கருவிகளோ, படைவீரர்களோ இன்றி வாதிடுகின்றார். பிலாத்துவும் தீர்ப்பளிக்கத் தடுமாறுகின்றான்.

அன்பே அதன் ஆட்சிமொழி

                இந்த அரசைப் பாதுகாக்கப் போர்ப்படை இல்லை. போர்ப்பயிற்சி அங்கு வழங்கப்படுவதில்லை. போர் என்ற சொல்லே அதன் அகராதியில் இல்லை. அது தேவையும் இல்லை. அன்பே அதன் ஆட்சிமொழி, இரக்கமே அதன் இதயப்பாசறை, சகோதரத்துவ உணர்வே அதன் பக்திஸ்வரம். உண்மையும் நேர்மையும் அதன் அணிகலன்கள், நீதியே அதன் அன்றாட உணவு. ஏழை எளியோர், உடைத்து நொறுக்கப்பட்டு சமுதாயத்தின் கடைநிலையில் வாழ்வோர் அதன் இளவரசர்கள். வன்முறையின் வழக்கு அதற்குத் தெரியாது. பகைவர்கள் என்று எவரும் இல்லை. அது புனித மணம் கமழும் புண்ணிய பூமி. பாவம் அங்கு தம் முகத்தைக் காட்டுவதில்லை. குற்றவாளிகளின் குறைகளை இயேசு என்ற அரசனே துடைத்தெடுக்கின்றார். அன்பே அதன் அடிப்படை சாசனமாக இருப்பதால், பொருள் உடையோர் இல்லாதவர்களுடன் தம் சொத்துக்களைக் பகிர்ந்து கொள்கின்றனர். பகிர்ந்துகொள்ள ஆளில்லாத சமயத்தில் பசித்திருப்போருக்கு கடவுளே உணவளிப்பார்.

வரலாற்றில் சில அரசர்களை உருவாக்கிய மக்களே அவர்களை அரியணைகளிலிருந்து அகற்றியுள்ளனர். அவர்கள் பொதுநலவாதிகளாக இருந்தபோது முடிசூடிய மக்கள், அவர்களின் ஆட்சியை சுயநலம் சிதைத்தபோது அவர்களைத் தூக்கி எறிந்துள்ளனர். ஆனால், கிறிஸ்துவுக்கு மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உளது. தம் மக்களின் நலனுக்காகத் தம்மையே செலவிடுவதில் இயேசுவைத் தவிர பெரியவர் எவரும் இல்லை. தம்மைத் தாக்கியவரையும் குணமாக்கும் (திவெ 1:7), கொலைஞரான நூற்றுவர் தலைவனையும் மனம்மாற்றும், திருடனுக்கும் வாழ்வளிக்கும், உதறிச்செல்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும், கொலைசெய்யத் துடிப்பவர்களையும் மனமாற்றும் மகான் அவர். அதிகாரமும், மணிமுடியும், அரியணையும் உலக அரசனை அலங்கரிக்கலாம். ஆனால், இயேசு அன்புக்கு அடிமை. அனைவருக்கும் அன்புப் பணியாற்றுவதே அவரது பெருமை. பிலாத்து வேறுவழியின்றி இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கின்றார். இயேசு இந்த இடத்தில் மௌனித்தாலும் இது உண்மைக்கும், வாழ்வுக்கும், அன்புக்கும்  கிடைத்த வெற்றியாகும். இயேசுவிடம் இருந்த சிறப்பான்மையை உணர்ந்தமையால் தான் பிலாத்து, இயேசு யூதர்களின் அரசன் என்று எழுதி, நான் எழுதியது எழுதியதே என்று அவர் உண்மையிலே அரசர் என்று அறிக்கையிடுகின்றார்.

தம் உயிரையே பணயமாக்கும் அரசன்

இயேசு விரும்பியிருந்தால் பிலாத்துவின் முன் ஒரு புதுமை செய்து விடுதலை அடைந்திருக்கலாம். அங்குள்ள கற்களை அப்பமாக்கி மக்களின் வயிரை நிறைத்து தம் பக்கம் கவர்ந்திழுத்திருக்க முடியும். சதுசேயர்களைச் சாபமிட்டு அவர்கள் பொய்குற்றம் சுமத்தாதபடி செய்திருக்க முடியும். படைவீரர்கள் யாரும் தம்மைத் தாக்காதவாறு தடுத்திருக்க முடியும். பின்வாங்கித் தரையில் விழுந்த போர்வீரர்கள் மீண்டும் எழாமல் செய்திருக்க முடியும். தனது உடலில் ஒரு கசையடியும் விழாமல் பார்த்திருக்க முடியும். சிலுவையில் அறையப்பட்டபோது அதிலிருந்து கீழே இறங்கி நடந்து வந்திருக்க முடியும். யாரும் எளிதில் கொடுக்க முன் வராத தம் உயிரையே தியாகமாக்குவதால், அவர் உலகின் கண்முன் உயர்ந்து நிற்கின்றார். உலக அரசர்கள் பொதுவாக, படைவீரர்கள் பலரைப் பணயமாக்கி தம் உயிரைக் காப்பாற்ற உழைப்பர். பெரிய ஏரோது தன்னை பாதுகாக்க ஒரு பெரும் படையே வைத்திருந்தார். ஆனால், இயேசு என்ற அரசன் தியாகத்தின் முழுமதி. தற்கையளிப்பில் தலைசிறந்தோன்.

இரண்டாம் வாசகம் இயேசுவுக்கு - நம்பிக்கைக்குரிய சாட்சி, இறந்தோருள் முதல்பேறு, மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் - ஆகிய மூன்று தலைப்புகளைத் தருகின்றது. கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பணிக்காகத் தம்மையே பணயம் வைத்த அவரே உண்மையான சாட்சி. அவரது வாழ்க்கை முழுவதும் உலகிற்குப் பயிற்சிப் பாசறைதான். அவரது உயிர்தியாகத்தைவிட வேறு எதுவும் சிறப்பானது இருக்கப்போவதில்லை. அந்த மாபெரும் தியாகத்திற்குப் பரிசாகக் கடவுள் அவரைக் கல்லறையிலிருந்து எழுப்பி, அனைத்திற்கும் அனைவருக்கும் அரசனாக்குகின்றார். உலக மக்களின் இதயத்திலிருந்து ஆட்சி நடத்தும் மாபெரும் மன்னன். எனவே, மனசாட்சியின்படி ஆட்சி நடத்தும் அத்தனை அரசர்களுக்கும் கீழ்ப்படிவது கிறிஸ்தவனின் கடமையாகும் (உரோ 13:1-7).

உண்மையின் அரசு

இயேசுவின் அரசு உண்மையை வெளிப்படுத்தும் அரசு (யோவா 14:6). தம் மக்களுக்காகத் தம்மையே உடைத்து, சிறு அப்பமாக்கி அதைப் பந்தியில் பரிமாறுகின்றவரே உண்மைக் கடவுள். உண்மைக்காக உயிரையும் தரத் தயாராக இருந்தார் இயேசு. மக்கள் இயேசுவைப் பற்றிக் கூறியவற்றைக் கேள்விபட்ட பின்னரே நீ யூதர்களின் அரசனா? என்று ஏரோது கேள்வி எழுப்புகின்றான். அன்றைய உரோமையின் ஆட்சியாளராகிய செசாருக்கு எதிராக இயேசு செயல்படவில்லை. செசாருக்கு உரியதை அவருக்கே செலுத்தச் சொன்னார். இதயத்தோடு தொடர்புடைய உள்ளார்ந்த சமயத்தைப் போதித்தார் இயேசு. அனைத்து ஆட்சியாளர்களும் இயேசுவைப் பார்த்து பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில், கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது, பல ஆப்பிரிக்க நாடுகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. உண்மை என்பது இல்லாவிட்டால் அனைத்தும் ஒரு துண்டு கேக் போன்றதாகும். அதாவது அனைத்தும் வியாபாரமாகிவிடும் என்பது பழமொழி. பிலாத்துவுக்கு உண்மை என்னவென்று தெரிந்தாலும் இயேசுவின் உயிரைப் பறிக்கத் துடித்தக் கூட்டத்திற்கு அது முக்கியமல்ல. வீதிகளைத் தம் வீடாக்கி, மனிதர்களைக் கோவிலாக்கி, அவர்களுக்கு நிறைபணியாற்றி, தனது வருங்காலம் பற்றிக் கவலைப்படாது, பிறருக்குப் பணியாற்றுவதில் முனைப்புகொண்டு, தலைசாய்க்கவும் இடமின்றி அலைந்த அவரைக் குற்றவாளி கூண்டில் ஏற்றியது பிலாத்துவுக்குப் புரிகின்றது. பொய்க்கே பழகிப்போன சதுசேயர்களுக்கு உண்மையின் உறைவிடம் கசக்கத்தான் செய்யும். கொலைசெய்யத் துடித்த கூட்டத்திலிருந்து இயேசுவைக் காப்பாற்றத் திராணியில்லாத நிலையை உணரும் பிலாத்து, உண்மை உருக்குலைந்து கிடந்ததைப் பார்த்து - உண்மையா, அது என்ன? என்று வினவுகின்றார். என் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல; என்று இயேசு கூறிய பின்னரும் உண்மைக்குக் குரல்கொடுக்க மறந்துவிட்டார் பிலாத்து. பிறவிக்குருடன் பார்த்த உண்மையை, சமாரியப்பெண் கண்டு அனுபவித்த உண்மையைப் பிலாத்து உணர்ந்தும் பலர்முன் அறிவிக்க தைரியமற்றவராக செயல்பட்டார். உள்ளதை உள்ளபடி அறிவிப்போர், பேச்சிலும் செயலிலும் தூய்மை படைத்தோர், பொய்யைப் போதிக்காதவர்கள் போன்றோர் அனைவரும் உண்மையின் வட்டத்தில் வலம் வருகின்றனர். கடவுளைக் கண்முன் நிறுத்திச் செயல்படும் அனைவரும் கடவுளைச் சேர்ந்தவர்களே. இன்று பிலாத்துக் கூறும் - உண்மையா? அது என்ன? - என்ற வார்த்தைகள் உலக அரசியல்வாதிகளின் குணமாகும். இன்றைய சமுதாயத்தில் தலைமைப் பதவியைக் கைக்கொள்ள சில அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் அவிழ்த்துவிடும் பொய்மூட்டைகள் ஏராளம். ஒரு பொய்யை மறைக்க பல பொய்களைக் கூறி அவர்கள் வாழ்வு முழுவதும் பொய்காடாகவே மாறிப்போனது. பொய்கள் கூடி நியாயம் பேசினால் நீதியின் தேவதைத் தம் கண்களைக் கட்டிக்கொண்டுதான் காட்சி தர முடியும்.

திருஅவையில் தம் முகம் காட்டும் அரசு

இயேசு அமைத்த அரசு திருஅவையின் செயல்பாடுகளில் தம் முகம் காட்டுகின்றது. மக்கள் மத்தியில் நிலவும் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து அனைவரையும் வெற்றிகொள்ளும் தகுதி படைத்தது. இதயம் சார்ந்த இயக்கத்தை நடத்தி மனிதர்களின் ஆன்மாவில் உறைந்துகொண்டிருக்கும் தெய்வீகத்தைத் தட்டியெழுப்புகின்றது. பணக்காரர்களிடம் பரிந்துபேசி ஏழை எளியவர் முன்னேற்றப் பணிகளில் தம்மைச் செலவிடுகின்றது. அனைத்து இன மக்களையும் அரவணைக்கும் தெய்வத்தாயாக செயலாற்றுகின்றது. பகைமை உணர்வோடு பக்கத்து நாடுகளுக்கு எதிராகப் படையெடுக்கத் துடிக்கும் அனைவரையும் கண்டிக்கின்றது. போரின் விளைவாக நிலம், வாழ்வாதாரம் மற்ற அனைத்தையும் இழந்த மக்களை இருகரம் நீட்டி அரவணைத்துக் கொள்கின்றது. தேவையின்றி மனித இரத்தம் சிந்தப்படுவதைத் தடுக்கின்றது. பகைமை நாடுகள் அனுசரித்துச் செல்ல அறிவுரை தந்து ஆதரவுக் கரம் நீட்டுகின்றது. வறுமை வாட்டும் நாடுகளுக்கும் தம் அடியார்களை அனுப்பி அவர்களின் பொருளாதார வாழ்வைக் கட்டியெழுப்புகின்றது. எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்காகப் பாடுபடும் ஊழியர்களைத் தம் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏழைஎளியவர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களை முதன்மைப் பீடத்தில் அமர்த்துகின்றது. அனைவரையும் கட்டியணைத்து ஏற்றுக்கொள்ளும் குணம் திருஅவைக்கு உண்டு. சமீபத்தில் நமது பிரதமர் மோடியைத் திருத்தந்தை பிரான்சிஸ் கட்டியணைத்து வரவேற்றார். சூடான் நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் தலைவர்களின் கால்களில் விழுந்து திருத்தந்தை மன்றாடினார். கிறிஸ்து என்ற அரசர் நமது ஆளுமையின் அங்கமாகட்டும். அவர் இதயத்திலிருந்து ஆட்சிபுரியும் வேளையில் யாருக்கும் எந்தக் குறையும் இராது. இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதைப்போல் அவருக்கு ஊழியம் புரியும் குருக்கள் பணியேற்போம். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஆன்மீகப் பணியின் அங்கமாக அமையட்டும்.

Comment


TOP