No icon

(பாரூ 5:1-9 பிலி 1:3-11 லுhக் 3:1-6)

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு

புதிய பாதை
நம் வாழ்வின் பாதை ஒன்றாக இருக்க, அங்கே புதிய பாதை ஒன்றை உருவாக்க இறைவன் வருவதாக இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்கிறது. ‘ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்’ 


(திபா 126 : 2) என்று அக்களிக்கும் திருப்பாடல் ஆசிரியர், ‘சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றியபோது நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்’ என எழுதுகிறார். பாபிலோனிய நாடு கடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்றுநாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஓர் இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப்பார்க்கிறார்.


இந்த நிகழ்வையே முதல் வாசகத்தில் (காண். பாரூ 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் ‘வெளிப்படுத்தப்பட்ட நூலாக’ ஏற்றுக்கொள்வதில்லை. 

பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டார். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். 


இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு. பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்: (1) துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும்; (2) ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும்; (3) பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, ‘ஐரின் டிகாயுசனேஸ்’ (‘நீதியில் ஊன்றிய அமைதி’) என்றும் ‘டோக்ஸா தெயோசேபெயாஸ்’ (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’) என்றும் பெயர்கள் சூட்டப்படும்; (4) நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர் போல் தூக்கிவரப்படுவார்கள்; மற்றும் (5) மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமும், நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.


அடிமைத்தனத்தின் பழைய பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை. பழைய பாதை இஸ்ரயேல் மக்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. ‘ஆடைகள் களையப்படுதல்’ என்பது ‘அடையாளங்கள் அழிக்கப்படுவதைக்’ குறிக்கிறது. பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது. பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி சுகாதாரத்திற்காகவும், நேர மேலாண்மைக்காகவும் மழிக்கப்படும். இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர். பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் ‘ஐரின்’ (அமைதி), ‘டோக்ஸா’ (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவற்றைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன. பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது. பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது.பழைய பாதை கண்ணீரால் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது.பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக இழுத்துச் செல்லப்பட்டனர் மக்கள் இறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர் போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள். பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார். பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி மேலேபோய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களைத் தேடி வருகின்ற இறைவனின் பாதை புதிய பாதையாக இருக்கிறது. 


இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11) பவுலின் சிறை மடல்களில் ஒன்றான பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் திருமடலின் நடை மற்ற திருமடல்களின் நடையைவிட ஆத்மார்த்தமாக இருக்கின்றது. “நீங்கள் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டீர்கள்” (1:7), “என் அன்பார்ந்தவர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றிவாகை” (4:1) என அன்பில் நீராட்டுகின்றார். தன் திருமடலின் தொடக்கத்தில் அவர்கள் இதுவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்காக அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றார். ‘உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று அவர்கள்மேல் தான் வைத்துள்ள நம்பிக்கையைப் பதிவுசெய்கின்றார். மேலும்,‘கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன்’ என ஏங்குகின்றார்.


இயேசுவின்மேல் நம்பிக்கைகொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், ‘அறிவிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக’ முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார்.

புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.


நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 3:1-6) திருமுழுக்கு யோவானின் பணித்தொடக்கத்தை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் போல அல்லாமல், லூக்கா யோவானின் பணியை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்கிறார். உரோமைப் பேரரசர் திபேரியு சீசர், யூதேயா ஆளுநர் பிலாத்து, மாநில அரசர்கள் ஏரோது, பிலிப்பு, குறுநில மன்னர்கள் இத்துரேயா, லிசானியா, தலைமைக் குருக்கள் அன்னா, கயபா என்று ஒரு சாதாரண, சாமானிய யூதரின்மேல் ஆட்சி செய்த அனைவர் பெயர்களையும் பதிவு செய்கின்றார் லூக்கா. ஒரு சாமானிய யூதர் தனது சமூக, சமய, பொருளாதார வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் இந்த சாமானிய யூதரின் அன்றாட வாழ்வைத் தீர்மானித்தனர்.


ஆனால், இப்படிப்பட்ட சமூக, சமய, பொருளாதாரப் பாதை சமூகத்தை வழிநடத்திக்கொண்டிருக்க, கடவுளின் வார்த்தை விந்தையாக பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவானுக்கு அருளப்படுகின்றது. ஆக, இறைவன் தேர்ந்தெடுக்கும் பாதை சாமானிய சமூகப் பாதையிலிருந்து முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் இறைவனின் விந்தை.


‘ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்’ என்று மொழிகின்ற திருமுழுக்கு யோவான் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், ‘இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்’ என்ற எசாயாவின் வாக்கு நிறைவேறுவதாக லூக்கா பதிவிடுகின்றார். எசாயா மொழிகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக்கொள்வோம்:


பாலை நிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை.பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநில மன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவனின் குரல் நம்மை எட்டுகிறது.


வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாதபோது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது. 


ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.


பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது. 


கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக்கொண்டிருக்கும் பிறழ்வுகள்.


இவற்றை எல்லாம் சரி செய்யும்போது,‘நாம் கடவுள் அருளும் மீட்பைக் காண்கிறோம்.’ ஆக, லூக்காவைப் பொருத்தவரையில்,‘மீட்பு’ என்பது இறப்புக்குப் பின் அல்லது மறுவுலக வாழ்வில் நடக்கும் நிகழ்வு அன்று. மாறாக, இன்றே, இங்கேயே நடக்கக்கூடியது (காண். லூக் 19:9).


ஆக, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாழ்வுக்கு, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு, பிறழ்வுகளிலிருந்து மீட்புக்கு நாம் கடந்து செல்லும் புதிய பாதை இறைவனின் அரும்பெரும் செயலால் சாத்தியமாகிறது. விதை விதைத்தலின் கண்ணீர் மறைந்து, அறுவடையின் மகிழ்ச்சி நம்மைப் பற்றிக்கொள்கிறது.


இன்றைய திருப்பலியின் சபை மன்றாட்டில், ‘ஆண்டவரை நோக்கி விரைந்து செல்லும் மக்கள் எதிரே உள்ள தடைகளால் நிறுத்தப்படாமல் இருக்க’ என்று செபிக்கின்றோம். ஆண்டவரின் புதிய பாதை நம் வாழ்வியல் அனுபவமாக நாம் செய்ய வேண்டியன எவை? (அ) துன்ப, துயரம் என்னும் பழைய ஆடைய நாம் களைய வேண்டும்; (ஆ) சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட வேண்டும்; (இ) அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இறைவனின் மீட்புச் செயலைக் கண்டுணர வேண்டும்.


இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி குறித்துக் காட்டுவது அமைதி. அமைதிக்கான சிறந்த வழி பாதை மாற்றம். அணு ஆயுதங்கள் செய்து கொண்டே உலக அமைதி பற்றிப் பேசுவது எப்படிப் பயனற்றதோ, அப்படியே, எந்த ஒரு அகப் பாதை மாற்றமும் செய்யாமல் புறப்பாதை இனிமையாக இருக்கும் என்று யோசிப்பதும் பயனற்றது. அகம் மாற முகம் மாறும். அந்த முகத்தில் மீட்பு ஒளிரும். அந்த முகம் புதிய பாதையை வெற்றியுடன் பார்க்கும். அந்த வெற்றியே அமைதி.

Comment