மீக் 5 : 2 - 5, எபி 10 : 5 - 10, லூக் 1 : 39 – 45
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
அமைதியின் வருகை
ஜென் துறவி ஒருவரிடம் வருகின்ற இளவல், ‘மன அமைதியை எப்படி அடைவது?’ எனக்கேட்கின்றார். அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கின்ற துறவி, ‘மனத்தை நீக்கிவிட்டால் அமைதியை அடையலாம்’ என்கிறார். புரியாமல் நிற்கின்றார் இளவல். ‘மனம் என்றால் சிந்தனை, எண்ணம், உணர்வு, விருப்பு, வெறுப்பு, ஆசை, கோபம் அனைத்தும் உறைவது மனதில் தான். மனம் இருக்கும்வரை அமைதி இருக்காது’ என விளக்குகிறார் துறவி.
திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி அமைதி என்னும் மதிப்பீட்டைக் குறித்துக் காட்டுகிறது. “ஆண்டவரே, அமைதியை அருள்வார்!” என்று மிக அழகாக இன்றைய முதல் வாசகத்தில் பதிவு செய்கிறார் இறைவாக்கினர் மீக்கா.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு மூன்று நபர்களின் வருகைகொண்டு வரும் உணர்வு பற்றிப் பேசுகின்றது: முதல் வாசகத்தில், இஸ்ரயேலை ஆளப்போகின்ற அரசர் பெத்லகேமிலிருந்து வருகின்றார். இரண்டாம் வாசகத்தில், மனுக்குலத்தை மீட்கவந்த தலைமைக்குருவான இயேசு தன் இறைத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு வருகின்றார். நற்செய்தி வாசகத்தில், நாசரேத்தூரிலிருந்த கன்னிமரியா யூதேயாமலை நாட்டிலுள்ள தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி வருகின்றார்.
இன்றைய முதல் வாசகம் (காண். மீக் 5:2-5) மிகவும் முக்கியமான மெசியா முன்னறிவிப்புப் பாடத்தைக் கொண்டிருக்கிறது. இறைவாக்கினர் மீக்கா யூதா வாழ் மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வருகிறார். தாவீதின் வழிமரபில் வரும் புதிய அரசரே அந்த மெசியா. மீக்கா கிமு 8 ஆம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தவர். இவரின் சொந்த ஊர் எருசலேமிற்கு அருகில் உள்ள மொரேஷெத் என்ற ஊர். இவர் நிறையப் பேரின் கண்களில் புகையாய் இருந்தவர். எருசலேமிற்கு வெளியிலிருந்து வந்ததால் எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதத் தலைவர்களின் செருப்புகளுக்குள் சிக்கிய சிறுகல்லாய் அவர்களுக்கு நெருடலாகவே இருந்தார்.
இன்றைய வாசகம் மீக்கா நூலின் ‘தலைமைத்துவப் பிரச்சனை’ என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘அரசன் உன்னிடத்தில் இல்லாமல் போனானோ?’ (மீக் 4:5) என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இறைவாக்கினர். யூதாவின் ஆட்சியாளர்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை மறந்து, அவருடைய கட்டளைகளை மீறி, வேற்று தெய்வங்களை வணங்கினர். இவர்களின் இந்தப் பாவச் செயல் எல்லா மக்களையும் பாதித்தது. ஆள்பவர்களின் பாவங்களுக்காக ஆளப்பட்டவர்களும் துன்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்தில் புதிய அரசரின் வருகையை முன்மொழிகிறார் மீக்கா. இந்தப் புதிய அரசரைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர் எருசலேமிலிருந்து வரமாட்டார். மாறாக, எருசலேமிற்கு வெளியே இருந்து வருவார். எருசலேமிலிருந்து இதுவரை வந்தவர்கள் எல்லாம் மக்களை அடிமைப்படுத்தவும், தங்களைத் தாங்களே வளர்த்தெடுப்பதிலும் கவனமாக இருந்தனர். மெசியாவை எருசலேமிற்கு வெளியே பிறக்க வைப்பதால் மீக்கா மெசியா இறைவாக்கையே தலைகீழாக்குகின்றார்: “எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்”. மேலும், மெசியாவின் முதன்மையான பணியாக மீக்கா முன்வைப்பது: “அவர் தம் மந்தையை மேய்ப்பார்”. இதுவரை இருந்த எருசலேம் மைய அரசர்கள் மந்தையை ‘மேய்ந்தார்களே’ அன்றி, மந்தையை ‘மேய்க்கவில்லை.’ தொடர்ந்து, மெசியாவின் ஆட்சியின் அடையாளமாக ‘அமைதியை’ மீக்கா முன்வைக்கின்றார்.
ஆக, அரசர் பெத்லகேமிலிருந்து எருசலேம் வருகின்றார். மக்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்கள் நாடு திரும்புகிறார்கள். அரசர் தன் மந்தையை ஆயராக இருந்து மேய்க்கின்றார். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீக்காவின் இந்த இறைவாக்குப் பகுதியைத்தான் ஞானியர் ஏரோதிடம் வரும் நிகழ்வில் மறைநூல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர் (காண். மத் 2:2). மத்தேயு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் மீக்காவின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. ஏனெனில், இயேசு பெத்லகேமில் பிறக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:5-10), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குருவாக உருவகித்து, அவர் அனைத்துப் பலிகளையும் விட சிறப்பான பலியைச் செலுத்தினார் என்று மொழியும் பகுதியில், ‘இயேசு மனித உடல் ஏற்ற நிகழ்வை’ பதிவு செய்கின்றார். இயேசு மனுவுடல் ஏற்கும் நிகழ்வு இறைத்திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வாக உள்ளது. இயேசு மனுக்குலத்திற்கு வரும் நிகழ்வும், மனுக்குலத்தை விட்டு இறைத்தந்தையிடம் செல்லும் நிகழ்வும் இறைவனின் திருவுளம் நிறைவேற்றும் நிகழ்வுகளாக அமைந்துள்ளன.
யூத வழிபாட்டில் பலிகள் முதன்மையான இடம் பெற்றிருந்தன. லேவியர் மற்றும் இணைச்சட்ட நூல்களில் பல பகுதிகள் பலிகள் பற்றியும், பலிகள் நிறைவேற்றுவதற்கான முறைமைகள் பற்றியும் பேசுகின்றன. இறைவாக்கினர்களின் காலத்தில் பலிகள் சடங்குகளாக மாறியதால், கடவுளே அவற்றை வெறுக்கின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை தன் சமகாலத்து யூதர்களுக்கு அறிமுகம் செய்யும்போது, யூத சமயத்தில் விளங்கிய முதன்மையான அடையாளங்களான தலைமைக்குரு, ஆலயம், திரைச்சீலை, பலிகள் ஆகியவற்றின் வழியாக அறிமுகம் செய்கின்றார்.
கடவுள் இயேசுவுக்கு ஓர் உடலை அமைத்துக் கொடுக்கின்றார். அதே உடலை இயேசு சிலுவையில் கையளித்து, உயிர்ப்பின் வழியாக மீண்டும் பெற்றுக்கொள்கின்றார். எருசலேம் ஆலய வழிபாட்டில் தலைமைக்குரு, பலி செலுத்தும் வேளையில் உள்ளேயும், வெளியேயும் நடந்துகொண்டே இருப்பார். திரைச்சீலையைக் கடந்து அவர் உள்ளே செல்லும்போது பலியுடன் செல்வார். வெளியே வரும்போது பலி செலுத்துபவருக்கான அருளைக் கொண்டுவருவார். இயேசு பலிகளையும் கடந்து இறைத்தந்தையின் திருவுளப்படி நடக்கின்றார். அதாவது, பலியை அன்று, கீழ்ப்படிதலையே ஆண்டவராகிய கடவுள் விரும்புகிறார் என்று இறைவாக்கினர் சாமுவேல் அரசர் சவுலுக்குச் சொல்வதை (காண். 1 சாமு 9), இயேசு நிறைவேற்றுகின்றார்.
ஆக, இயேசு இவ்வுலகிற்கு வந்ததும், உயிர்ப்புக்குப் பின்னர் கடவுளிடம் ஏறிச் சென்றதும் மனுக்குலத்திற்கு மீட்பு தரும் நிகழ்வுகளாக உள்ளன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45) மரியா எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வைப் பதிவுசெய்கிறது. கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லி முடித்து மறைந்தவுடன், தன் உறவினர் எலிசபெத்தை தேடி ஓடுகிறார் மரியா. வானதூதர் சொன்ன ‘எலிசபெத்து’ அறிகுறி சரியா என்று பார்க்க ஓடினாரா? அல்லது தான் பெற்ற மகிழ்வை தன் உறவினரோடு பகிர்ந்து கொள்ள ஓடினாரா? அல்லது கருத்தாங்கியிருக்கும் அந்த முதிர்கன்னிக்கு கைத்தாங்கலாக இருக்க ஓடினாரா? ‘எழுந்தாள். ஓடினாள், நுழைந்தாள், வாழ்த்தினாள்’ - என இரண்டு வசனங்களுக்குள் மரியாளின் நீண்ட பயணத்தை அடக்கிவிடுகிறார் லூக்கா.
இந்தப் பகுதியில் எலிசபெத்து பேசும் வார்த்தைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மரியா மூன்று செயல்கள் செய்கின்றார்: (அ) விரைந்து செல்கின்றார், (ஆ) வாழ்த்துகின்றார் மற்றும் (இ) மௌனம் காக்கின்றார். எலிசபெத்து மரியாவை மூன்று அடைமொழிகளால் வாழ்த்துகிறார்: (அ) ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர்,’ (ஆ) ‘ஆண்டவரின் தாய்’ மற்றும் (இ) ‘ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பியவர்’ ஆண்டவர் சொன்னவை நிறைவேறும் என நம்பியதால் கன்னி மரியா ஆண்டவரின் தாயாக உயர்கின்றார். ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்னும் மரியாவின் சரணாகதியே அவரை இந்நிலைக்கு உயர்த்துகின்றது.
ஆக, மரியாவின் வருகை எலிசபெத்துக்கும் அவருடைய வயிற்றிலுள்ள குழந்தைக்கும் மகிழ்ச்சி தருகின்றது.
அரசரின் வருகை, இயேசுவின் வருகை மற்றும் மரியாவின் வருகை என்னும் மூன்றையும் இணைக்கும் புள்ளி அமைதி.
அமைதியை நாம் இன்று எப்படிப் பெற்றுக்கொள்வது?
(அ) இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வருவதன் வழியாக.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமைதியற்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுடைய அரசரின் வருகை அவர்களுக்கு அமைதி தருகின்றது. பெத்லகேமிலிருந்து வருகின்ற அரசர் ‘அமைதியின் நகரான’ எருசலேமுக்கே அமைதியைக் கொணர்கிறார். இயேசு தானே மனுவுடல் எடுத்து இவ்வுலகிற்கு வருகின்றார். மீட்படைகின்ற மனுக்குலம் அமைதி காண்கின்றது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் திருமுன்னிலை எலிசபெத்தின் வயிற்றிலுள்ள குழந்தையை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. மனுக்குலத்தின் மீட்பு தொடங்குகின்ற நிகழ்வை மரியா தனக்குள் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதை உடனடியாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். ஆக, கடவுள் இந்த உலகிற்கு வரும் ஒரு பாதையாக நாம் இருக்கும்போது நாம் அமைதியுடன் இருக்கின்றோம்.
(ஆ) மற்றவர்களைத் தேடிச் செல்வது
மரியா தன் உறவினரைத் தேடி நீண்டதொரு பயணம் செய்கின்றார். கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம். இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்து கொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம். தான் கடவுளின் தாயாக இருந்தாலும், தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செய்கிறார் மரியா. மரியாவின் அன்பும், தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. ‘எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்’ என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.
(இ) ஆண்டவரில் மகிழ்வது
மரியா - எலிசபெத்து நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி இழையோடுகிறது. இந்த மகிழ்ச்சியின் ஊற்றாக இறைவன் இருக்கின்றார். ‘ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை’ என்கிறார் நெகேமியா (8:10). மரியாவின் வருகையில் இறைவனின் கரத்தைக் காணுகின்றார் எலிசபெத்து. அரசரின் வருகையில் ஆண்டவரின் திருமுன்னிலையைக் காண்கின்றார் மீக்கா.
இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (திபா 80), ‘நாட்டின் புதுவாழ்வுக்காக’ மன்றாடும் ஆசிரியர், ‘உமது வலக்கை நட்டுவைத்த கிளையைக் காத்தருளும்!’ என வேண்டுதல் செய்து, ‘இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்’ என வாக்குறுதி தருகிறார். இறைவனின் கரங்களைவிட்டு நம் கரங்கள் அகலாதவரை நம்மால் அமைதியை பெறமுடியும். அவரின் கரங்களைப் பிடித்துக்கொள்ளும் நாம் மற்றவர்களுக்கு நம் கரங்களை நீட்டினாலும் நாமும் அமைதியை ஏந்திச் செல்பவர்களே!
Comment