(எசா 40:1-5, 9-11, தீத் 2:11-14, 3:4-7, லூக் 3:15-16, 21-22)
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா
- Author அருள்பணி. P. ஜான் பால் --
- Thursday, 06 Jan, 2022
திருப்பலி முன்னுரை:
இன்று நாம் ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவினை கொண்டாடுகின்றோம். திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் மற்ற திருவருட்சாதனங்களைப் பெறுவதற்கு ஒரு நுழைவாயிலாக இருக்கின்றது. நமது ஜென்மபாவம் திருமுழுக்கினால் கழுவப்பட்டு, நாம் இறைவனோடும், திருஅவையோடும் இணைக்கப்படுகிறோம். எனவே, ஜென்மபாவத்தோடு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் திருமுழுக்கைப் பெற வேண்டும். இந்நிலையில், பாவமே இல்லாமல் பிறந்த நம் ஆண்டவர் இயேசு எதற்காக திருமுழுக்குப் பெற்றார் என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழலாம். இக்கேள்விக்கான விடையை ஆண்டவர் இயேசுவே தருகிறார். திருமுழுக்குப் பெற ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானிடம் வரும்பொழுது, திருமுழுக்கு யோவான், “நீரா என்னிடம் வருகிறீர்?” என்று இயேசுவைப் பார்த்து கேட்க, அதற்கு ஆண்டவர் இயேசு: “கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறை” என்று பதிலளிப்பார். ஆகவே, திருமுழுக்குப் பெறுவது என்பது, கடவுளுக்கு ஏற்புடையதான ஒன்று. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமுழுக்குப் பெற வேண்டும் என்பதை எண்பித்துக்காட்டவே, பாவமே இல்லாத நம் ஆண்டவர் இயேசுவும் திருமுழுக்குப் பெற்றார். பாவமே இல்லாமல் பிறந்த இறைவனே திருமுழுக்குப் பெற்றார் என்றால், பாவிகளாகிய நாம் கண்டிப்பாக திருமுழுக்கைப் பெற வேண்டும் என்ற நிதர்சனமான உண்மை இங்கு வெளிப்படுகிறது. திருமுழுக்கின் போது, பெற்றோர்களாக, ஞானபெற்றோர்களாக நாம் கொடுத்த வாக்குறுதியின்படி, நம் பிள்ளைகளை வளர்த்து வருகிறோமா? என்று சிந்தித்தவர்களாய் இப்பெருவிழாத் திருப்பலியில் பங்கு பெறுவோம்.
முதல் வாசக முன்னுரை:
எருசலேம் மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக இறைவனிடமிருந்து இருமடங்கு தண்டனையைப் பெற்றுவிட்டார்கள். எனவே, இறைவன் இப்பொழுது அவர்கள்மேல் இரக்கம் கொண்டு, அவர்களை மீண்டும் தம் மந்தைகளாக மாற்றி, அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அன்புகாட்டி, வழி நடத்துவார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
பாவிகளாகிய நம்மை தூய்மையான மக்களாக மாற்ற இறைமகன் இயேசு தன்னையே ஒப்புக்கொடுத்தார். தனது அளவற்ற இரக்கத்தினால், புதுப்பிக்கும் தூய ஆவியாலும், புதுவாழ்வு தரும் நீராலும் நம்மைக் கழுவி, நம்மை மீட்டார் என்று கூறும் இந்த இரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
மன்றாட்டுக்கள் :
1. இரக்கமுள்ள தந்தையே! திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனத்தினால் நாங்கள் திருஅவையின் அங்கத்தினர்களாக இணைக்கப்பட்டு இருக்கிறோம். இத்திருஅவை தன் நற்செயல்களால் உலகின் கடையெல்லைவரை இருக்கும் அனைவரையும் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனின் சீடர்களாக மாற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்புத் தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள், பாவமே இல்லாதபோதும் திருமுழுக்குப் பெற்ற உம்திருமகனைப்போல, தங்களை ஏழை பாமர மக்களின் நிலைக்கு தாழ்த்திக்கொண்டு, வேறுபாடுகள் அற்ற நல்லாட்சி புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்கள் விண்ணக தந்தையே! உம் திருமகனின் திருமுழுக்கு விழாவை கொண்டாடும் நாங்கள், எங்கள் திருமுழுக்கில் எங்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அடிக்கடி நினைவுகூர்ந்து, அதற்கேற்றவாறு எங்கள் வாழ்வை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பரிவுள்ள தந்தையே! கல்வி கற்கும் பிள்ளைகளை நீர் நிறைவாக ஆசீர்வதியும். இப்பெருந்தொற்று காலத்தில் நிறைவான கல்வியைப் பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இவர்கள்மேல், உம் தூய ஆவியாரை அனுப்பி, அவரது கொடைகளால் நிரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Comment