No icon

அருள்பணி. P. ஜான் பால்

ஆண்டின் பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு (எரே 17:5-8, 1கொரி 15:12, 16-20, லூக் 6:17, 20-26)

திருப்பலி முன்னுரை:

ஏழைகள், வறியவர், பட்டினியாய் இருப்போர், துன்பத்தில் அழுவோர் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள். எனவே, இவர்கள் இறையாட்சிக்குள் நுழையவே முடியாது. மாறாக, செல்வம் படைத்தோர், உண்டு கொழுத்தோர், களிப்பில் வாழ்வோர் அனைவரும் பேறுபெற்றவர்கள். ஏனெனில் இவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் இறையாட்சிக்குள் நுழைய முடியும் என்ற எண்ணத்தை யூத மக்கள் பின்பற்றி வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில்தான் ஆண்டவர் இயேசு சபிக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட மக்களை பார்த்து, நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறுகிறார். பேறுபெற்றவர்கள் என தங்களை கருதிக்கொண்ட செல்வந்தர்களை, உண்டு கொழுத்தோரை பார்த்து, உங்களுக்கு ஐயோ கேடு! என்கிறார். காரணம், இவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு இறையாட்சியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று எண்ணினார்கள். இறைவன் மீது நம்பிக்கை வைக்காமல், இறையாட்சிக்குள் செல்வதற்கு தங்கள் செல்வங்கள், சொத்துக்கள் மேல் நம்பிக்கை வைத்தார்கள். எனவே தான், இறைவன் உங்களுக்கு ஐயோ கேடு என்று சொல்லுகிறார். அதேநேரத்தில் வறுமையின் மத்தியில், பட்டினியின் கோரப்பிடியில், துன்பத்தின் ஆழத்தில் கூட இறைவன் இருக்கிறார், அவர் நம்மை மீட்டு வழி நடத்துவார் என்று நம்பிய மக்களை பார்த்து நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறுகிறார். இன்று நமது வாழ்வு எப்படி இருக்கிறது? நமது இறை நம்பிக்கை எப்படி இருக்கிறது? ஆண்டவர் நம்மை காணும்பொழுது உங்களுக்கு ஐயோ கேடு என்று சொல்வாரா? அல்லது நீங்கள் பேறு பெற்றவர்கள் என்று சொல்வாரா? என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை:

ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் பேறு பெற்றவர்கள். அவர்கள் நீரோடை அருகில் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனிதருவார்கள். ஆனால், வலுவற்ற மனிதரை நம்புவோர் சபிக்கப்பட்டவர்கள், பாலை நிலத்து புதர்செடி போல் வறண்டு போவார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசு இறந்து, உயிர்த்தெழுந்தார் என்ற மறை உண்மையில் நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும். இந்த மெய்பொருளில் நாம் நம்பிக்கை வைக்காவிட்டால், நமது வாழ்வு முற்றிலும் வீணாய்போகும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்:

1. எங்களை வழிநடத்தும் தந்தையே! உம் திரு அவையின் திருப்பணியாளர்களோடு சேர்ந்து, உம் திருமகனும் எங்கள் மீட்பருமான ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இறந்து உயிர்த்தெழுந்தார் என்ற மறைபொருளை அனைவருக்கும் அறிக்கையிட வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை பாதுகாக்கும் தந்தையே! எம் தாய்த்திருநாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் பதவி, அதிகாரம்தான் பெரிது என்று நம்பி ஆட்சி செய்யாமல், உண்மையான இறைவன் உம்மீது நம்பிக்கை கொண்டு, எங்களை வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்ல தந்தையே! எம் பங்கில் நோய் நொடிகள், பசி பட்டினியால் வாடுபவர்களுக்கு உதவும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும், எங்கள் தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை பிறரோடு பகிர்ந்து வாழும் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் வானகத் தந்தையே! அரசு பணியாளர்களை ஆசீர்வதியும். நீர் அவர்களுக்கு தந்திருக்கிற இந்த வேலை வாய்ப்பு, மக்களுக்கு சேவை புரிவதற்குதான் என்பதை உணர்ந்து, இலஞ்சம் தவிர்த்து, நேர்மையாக பணியாற்ற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் பரமதந்தையே! கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நாட்டின் பல இடங்களில் பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு, தாக்கப்படும் உம் மக்களை நீர் ஆசீர்வதித்து, அவர்கள் வழியாக உமது நீதியை, உண்மையை நிலை நாட்ட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

Comment