No icon

அருள்பணி. P. ஜான் பால்

தவக்காலம் முதல் ஞாயிறு இச 26:4-10, உரோ 10:8-13, லூக் 4:1-13

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் இம்முதல் ஞாயிறு, இறைவார்த்தையைக் கொண்டு சோதனைகளை வெல்ல நமக்கு அழைப்புவிடுக்கின்றது. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்!’ என்ற மறைநூல் வாக்கை, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை சோதிக்க வந்த அலகையிடம் சுட்டிக்காட்டுகிறார். அலகையானது, ஆண்டவரை எவ்வாறு சோதிக்கிறது? ‘நீர் இறைமகன் என்றால் இதைச் செய் அல்லது இவ்வாறு செய்!’ என்று சொல்லி சோதிக்கிறது.அதாவது, நான் உம்மிடம் கேட்பவற்றை நீர் செய்தீர் என்றால், நீர் உண்மையாகவே கடவுள், கடவுளின் மகன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்ற நிபந்தனையை முன் வைத்து, அலகையானது ஆண்டவரை சோதிக்க முற்படுகிறது. ஆண்டவர் இயேசு குற்றுயிராய் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோதும், இதே அலகைதான், யூதத் தலைவர்கள், படைவீரர்கள் மற்றும் கள்வன் வழியாக, ‘இவன் இறை மகன் என்றால் தன்னையே விடுவித்து கொள்ளட்டும்!’ என்று சொல்லி, சோதிக்கிறது. அதாவது, நீர் இறைமகன் என்பது உண்மையானால் சிலுவையிலிருந்து இறங்கி வந்து, அற்புதம் நிகழ்த்தும் என்ற நிபந்தனையை அலகை இவர்கள் வழியாக முன் வைக்கின்றது. இன்றும் அலகை, ஆண்டவரை நமது வழியாக சோதித்து கொண்டுதான் இருக்கின்றது. ‘ஆண்டவரே! நான் உம்மிடம் கேட்பவற்றை நீர் கொடுக்காவிட்டால், நீர் உண்மையாகவே கடவுள் இல்லை. எனது செபத்திற்கு நீர் பலன் தந்தால் மட்டுமே, நான் இனிமேல் ஆலயத்திற்கு வருவேன் என்ற நிபந்தனையோடு, ஆண்டவரிடம் செபிக்கும் போதெல்லாம் நாம் ஆண்டவரை சோதிக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களாய், மனம்மாறிட இறைமன்னிப்பை நாடி இத்திருப்பலியில் பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

எகிப்து நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் கைவிடவில்லை. அவர்களை எண்ணிக்கையில் பெருக்கினார். பாலும், தேனும் பொழியும் வளமிகு நாட்டை தந்தார். அவர்களோ தங்களின் முதற்கனிகளைத் தந்தார்கள் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவே ஆண்டவர்!’ என்றும், ‘அவர் பாடுபட்டு, இறந்து, உயிர்த்தெழுந்தார்என்றும் நம்பி அறிக்கையிடும் அனைவரும் மீட்பு பெறுவார்கள். இவர்கள் ஒருபோதும் வெட்கம் அடையமாட்டார்கள் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் அன்பு தந்தையே! தவக்கால வழிபாடுகளில் உள்நுழையும் உம் திரு அவையை ஆசீர்வதியும். உம் திருப்பணியாளர்கள் தங்களின் செப, தவ முயற்சிகளால் உம் மக்களை ஒன்றிணைத்து, வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவுள்ள தந்தையே! தங்களின் அதிகாரத்தால் இவ்வுலகில் பல தீமைகளையும், அச்சங்களையும் ஏற்படுத்தும் நாடுகள், தங்களின் ஆணவ போக்கிலிருந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கமுள்ள தந்தையே! எம் தாய் திருநாட்டையும், தலைவர்களையும் ஆசீர்வதியும். எம் நாட்டில் நிலவும் தீமைகள், வன்முறைகள் அனைத்திற்கும் எங்கள் சுயநலமே காரணம் என்பதை உணர்ந்து, வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் பரம தந்தையே! தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதை அறிந்துள்ள நாங்கள், எங்களின் தனிப்பட்ட பாவங்களால் உம்மைச் சோதிக்காமல், உமது அன்பையும், இரக்கத்தையும் உணர்ந்தவர்களாய் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! எங்கள் பங்குத்தந்தையோடு இணைந்து, இத்தவக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளப்போகும் ஒவ்வொரு தவமுயற்சியையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment