ஞாயிறு – 26.03.2023
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு எசே 37:12-14 உரோ 8:8-11 யோவா 11:1-45
நீர் இங்கே இருந்திருந்தால்!
இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணம் செய்தார். எல்லாவற்றையும் இழந்த மக்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை அணையாமல் தக்கவைப்பதும், தங்கள் கண்முன்னாலேயே எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்டதைக் கண்டு, இருளிலும் குளிரிலும் பயணம் செய்து, முன்பின் தெரியாத ஓரிடத்தில் அடிமைகளாக இருந்த மக்களுக்கு உற்சாகம் கொடுப்பதும் அவருடைய பணியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உடலளவிலும் ஆன்ம அளவிலும் மக்கள் இறந்துகொண்டே இருந்த மக்களுக்கு புதிய இறைநம்பிக்கை ஊட்டுகின்றார். முதலில், அவர்கள் தங்கள் கண்டுகொள்ளாத்தன்மையாலும் சிலைவழிபாட்டாலும் கடவுளுக்குச் சினமூட்டிய நாளில் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த உறவு அறுந்தது என்கிறார் எசேக்கியேல். ஆனால், அந்த வலி முடிவன்று. ‘நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச்சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்’ (எசே 36:24) என உரைக்கிறார் ஆண்டவர்.
பாபிலோனிய அடிமைத்தனத்தை கல்லறைக்கு ஒப்பிடுகிறார் எசேக்கியேல். ஆனால், கல்லறை திறக்கப்பட்டு மக்கள் கடவுளின் உயிரைப் பெற்றவர்களாய் மீண்டும் நாடு திரும்புவார்கள். இந்த உருவகம் படைப்பின் தொடக்கத்தில் மண்ணிலிருந்து கடவுள் மனிதரை உருவாக்கி தன்னுடைய உயிரை அவர்கள்மேல் ஊதியதை நினைவுபடுத்துகிறது (காண். தொநூ 2:7). படைப்பின் தொடக்கத்தில் முதற்பெற்றோர் கடவுளை தங்களுக்கு உயிரளிப்பவராக, நண்பராகப் பார்த்தது போல, இஸ்ரயேல் மக்களும் கடவுளை அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய கடவுள் அவர்களை இறப்பிற்குக் கையளிக்கமாட்டார். இதையே ஆண்டவர், ‘என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்’ (காண். எசே 37:13) என உரைக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:8-11) புனித பவுல், உரோமையருக்கு எழுதுகின்ற திருமடலில், இரண்டு வகையான வாழ்க்கை நிலைகளுக்கு - ‘ஊனியல்பு வாழ்வு’ ‘ஆவியில் வாழ்வு’ - இடையே இருக்கின்ற முரண்களைப் பதிவுசெய்கின்றார். ஊனியல்பு வாழ்வு இறப்பு நோக்கி ஒருவரை இட்டுச்செல்கிறது. ஆவியில் வாழ்வு அவருக்கு நிலைவாழ்வு தருகிறது. ஆவியின் இருப்புதான் அவசியம். ஆவியார் குடிகொள்ளும்போது ஒவ்வொருவரும் கடவுளின் இல்லிடமாக மாறுகின்றார் (காண். 1 கொரி 3:16). ஆவியைக் கொண்டிருப்பவர்கள் ‘இயேசுவை இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழச்செய்த ஆவியையே கொண்டிருப்பதால்’ அவர்கள் நிலைவாழ்வைக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இறந்தாலும் அந்த ஆவியார் அவர்களை உயிர்ப்பிப்பார். ஆக, அழிவுக்குரிய உடலை அழியா வாழ்வாக மாற்றுவது இறைவனின் ஆவி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 11:1-45) நாம் வாசிக்கும் இலாசர் உயிர் பெறுதல் நிகழ்வுதான் யோவான் நற்செய்தியில் இயேசு நிகழ்த்தும் ஏழாவதும் இறுதியுமான அறிகுறி. முதல் அறிகுறியை அவர் கானாவில் நிகழ்த்தியபோது அவர் தன்னுடைய மாட்சியை வெளிப்படுத்தினார், சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டனர் (காண். யோவா 2:11). இந்த இறுதி அறிகுறி நிகழ்விலும், ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ (காண். யோவா 11:4) என்றும், ‘நீ நம்பினால் கடவுளின் மாட்சியைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?’ (காண். யோவா 11:40) என்றும் இயேசு சொல்கின்ற வார்த்தைகள், இங்கேயும் கடவுளின் மாட்சி வெளிப்படப்போகிறது என்பதையும், பலர் அவர்மேல் நம்பிக்கை கொள்வர் (காண் யோவா 11:45) என்பதையும் காட்டுகின்றன. கடவுளின் மாட்சியை அறிதல் என்பது அவருடைய இருப்பையும் செயல்பாட்டையும் கண்களால் கண்டுணர்வது - விடுதலைப் பயண நிகழ்வில் ஒளிரும் மேகத்தையும் எரியும் நெருப்புத்தூணையும் காண்பது போல... (காண். விப 14-15).
ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) இயேசு இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதை பதிவு செய்திருந்தாலும், இலாசர் உயிர் பெறுதலை அவர்கள் பதிவு செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக, யோவான் இலாசர் உயிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறார். மேலும், யோவான் மற்ற அற்புத நிகழ்வுகளைப் பதியும்போதெல்லாம், ‘பிரச்சனை-தீர்வு-போதனை’ என பதிவு செய்கிறார். எ.கா. பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறுதல். ஆனால், இங்கே, ‘போதனை-பிரச்சனை-தீர்வு’ என தலைகீழாக இருக்கின்றது. இறந்தவர் உயிர்பெற்றவுடன் நிகழ்வை முடித்துவிடுகிறார் யோவான். உயிர்ப்பு, நம்பிக்கை, இறப்பு, யூதர்கள், இயேசுவின் கருணை என நிறைய இறையியல் கருத்துகள் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கின்றன.
இலாசரின் இறப்பு நிகழ்வில் லாசர் மட்டுமல்ல, இயேசுவைத் தவிர எல்லாக் கதைமாந்தர்களுமே கல்லறைக்குள்தான் இருக்கின்றனர்:
(அ) சீடர்கள் இயேசுவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும்போதெல்லாம் அதில் ஓர் அரைகுறைத்தனமும், அவசரமும் தெரிகிறது. அரைகுறைத்தனம் அவர்களின் கல்லறை.
(ஆ) யூதர்கள் இயேசுவை நம்பவே இல்லை. நம்பிக்கையின்மை அவர்களின் கல்லறை.
(இ) மார்த்தா இயேசுவை பாதி நம்புகிறார். ‘ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்‘ என்கிறார். ஆனால், கல்லறைக்கு அருகில் இயேசு சென்றபோது, ‘ஐயோ, நாற்றம் அடிக்குமே’ என அவரைத் தடுக்கின்றார். பாதி நம்பிக்கை அவரின் கல்லறை.
(ஈ) மரியா இயேசுவை நம்பினாலும், அவர் இன்னும் அழுது முடித்தபாடில்லை. தன் சகோதரனின் இழப்பு தந்த வெற்றிடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வெற்றிடத்தைக் கண்ணீர் வடித்து மூடிவிட நினைக்கின்றார். அழுகை அவரின் கல்லறை.
(உ) இலாசர் இறந்துவிட்டார். இறப்பு அவரின் கல்லறை. மற்றும்
(ஊ) ‘இயேசு யார்?’ - இந்த அறியாமைதான் வாசகர் ஒவ்வொருவரின் கல்லறை.
இந்தக் கல்லறைகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்களா?
முதலில், இந்த நிகழ்வின் ஒரு சில சொல்லாடல்களைப் புரிந்துகொள்வோம்:
1. பெத்தானியா
நாசரேத்துக்குப் பின் இயேசு தனது இரண்டாம் இல்லமாக நினைத்தது பெத்தானியாவைத்தான். நான் புனித நாடுகளுக்குச் சென்ற போது, உண்மையாகவே இயேசு இங்கு இருந்த இடம் என நான் என் உள்ளுணர்வில் உணர்ந்தது பெத்தானியா மட்டும்தான். 10க்கு 10 பழமையான வீடு. அந்த இல்லத்திற்குள் சென்றவுடன், ‘நானும் இங்கு இருந்திருக்கிறேன்’ என்ற உணர்வை அந்த வீடு தருகிறது. இயேசுவும், லாசர், மார்த்தா, மரியாவும் பேசியதை, சிரித்ததை இந்தச் சுவர்கள் கண்டிப்பாக உள்வாங்கி இருக்கும். இந்தச் சுவர்களின்மேல் காதுகளை வைத்துக் கேட்டால் நாமும் அதை உணரலாம். ‘நீங்க எப்படி பிறந்தீங்க? இடையர்கள், ஞானியர் எத்தனை பேர்? எகிப்துக்கு ஏன் ஓடிப்போனீங்க? அங்க இருந்த எப்ப வந்தீங்க? கோவிலில் ஏன் காணாமல் போனீர்கள்? அது என்ன? இது என்ன?’ என இரண்டு சகோதரிகளும் இயேசுவை கேள்விகள் கேட்டு துளைத்திருப்பார்கள். இலாசர் அப்போது மௌனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஒருவேளை இவர்கள் பிறந்த சில ஆண்டுகளில் இறந்திருக்க, இவர்கள் மூவரும் துணைக்குத் துணையாக வளர்ந்திருக்கலாம். இப்படி இயேசு அன்பு கொண்டிருந்த ஓர் இடத்தில் இழப்பு வந்துவிடுகிறது. இலாசர் இறந்துவிடுகிறார். இனி இயேசு இந்த இல்லத்திற்குள் வந்தால் அவரை வரவேற்கும் மூன்று உயிர்களில், ஒரு உயிர் மறைந்துவிடுகிறது.
‘உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்’ என்று இயேசுவுக்கு தூதர்களை அனுப்புகின்றனர் மார்த்தாவும் மரியாவும். தூது அனுப்பும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஓரளவு பணக்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது ஏழைகளாக இருந்து எப்பாடுபட்டாவது இயேசுவுக்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். செய்தி கேட்டவுடன் இயேசு புறப்படவில்லை. ‘இந்த நோய் இறப்பில் போய் முடியாது’ என்று சொல்லிவிட்டு இலாசர் இறக்கும்வரை காத்திருக்கின்றார். கானாவில் இரசம் தீர்ந்தபோதும் இயேசு இப்படித்தான் தள்ளிப்போடுகின்றார்.
2. தூக்கம்
‘இலாசர் இறந்துவிட்டதை,’ ‘இலாசர் தூங்குகிறார்’ எனச் சொல்கிறார் இயேசு (காண். மத் 27:52, 1 கொரி 7:39, 11:30, 15:6, 1 தெச 4:13-15). ‘இறப்பை’ தூக்கத்திற்கு உருவகிப்பது மற்ற இலக்கியங்களிலும் காண்கிறோம். ‘உறங்குவது போலும் சாக்காடு’ என்கிறார் வள்ளுவர் (குறள் 339). ‘தூக்கம் என்பது குறுகிய சாவு, சாவு என்பது நீண்ட தூக்கம்‘ என்கிறார் ஷேக்ஸ்பியர். இயேசு சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்கின்றனர் சீடர்கள். ஆகையால்தான், ‘ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்’ என்று பதில் சொல்கின்றனர்.
3. என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பு
பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறும் நிகழ்விலும், ‘இவர் இப்படி பிறந்தது கடவுளின் மாட்சி வெளிப்படவே’ (யோவா 9:3) என்கிறார் இயேசு. தான் கையாளவேண்டிய இழப்பு என்னும் எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் இயேசு. இலாசர் உயிர்பெறும் நிகழ்வின் இறுதியில், ‘மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்’ எனப் பதிவு செய்கிறார் யோவான். ஆக, கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்கள் தரும் பதில்தான் நம்பிக்கை.
4. கல்லறையில் வைத்து நான்கு நாள்கள்
இலாசர் இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆயிற்று என்பது இரண்டு இடங்களில் (11:17, 39) பதிவு செய்யப்படுகிறது. யூதர்களின் நம்பிக்கை என்னவென்றால், ஒருவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மூன்று நாள்கள் கல்லறையைச் சுற்றி வரும். நான்காம் நாளில் இறந்தவரின் முகம் மாற ஆரம்பிக்கும்போது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் வேறு எங்காவது சென்றுவிடும். ஆக, ‘நான்காம் நாள்’ என்பது இலாசரின் ஆன்மா அங்கு இல்லை என்பதை உருவகப்படுத்துகிறது. மேலும், ஒன்றுமில்லாமையில் தான் இயேசுவின் அற்புதம் நிகழ்கிறது என்பதையும் இங்கே யோவான் உள்ளிடுகிறார். மார்த்தா இயேசுவிடம், ‘நான்கு நாள் ஆயிற்றே. நாற்றம் அடிக்குமே’ என்கிறார். இயேசுவின் சமகாலத்தில் எகிப்தியர்கள் மட்டுமே இறந்த உடலை அதிக நாள்கள் பத்திரப்படுத்தும் வகை அறிந்திருந்தனர். யூதர்கள் வெறும் நறுமணத் தைலத்தை மட்டுமே பயன்படுத்தக் கற்றிருந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் நறுமணம் மூன்று நாள்கள் மட்டுமே தாங்கக்கூடியவை. நான்காம் நாளிலிருந்து உடல் வெளிப்படுத்தும் கெட்ட நாற்றத்திற்கு அவைகளால் ஈடுகொடுக்க முடியாது.
5. இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்
தானியேல் 12:2 காலத்திலிருந்தே ‘இறந்தவர் உயிர்ப்பு,’ ‘இறுதிநாள்’ போன்ற புரிதல்கள் யூதர்கள் நடுவில் இருந்தன (காண். திப 23:6-8, மாற் 12:18-27). மார்த்தாவும் இதே புரிதலைக் கொண்டிருக்கிறார். அந்த நாளில் எல்லாரும் உயிர்ப்பதுபோல இலாசரும் உயிர்ப்பார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார். ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்‘ என்று மார்த்தா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், ‘இறந்தவரை இயேசு என்ன செய்ய முடியும்?’ என்ற சந்தேகமும் கொண்டிருக்கின்றார்.
6. மரியா அவர் காலில் விழுந்து
மார்த்தா இயேசுவைத் தேடி ஓடியதுபோல மரியா ஓடவில்லை. பாவம் குழந்தை! இன்னும் அழுது முடிக்கவில்லை. மார்த்தா இதற்கிடையில், ‘ஆம் ஆண்டவரே, நீரே மெசியா, நீரே இறைமகன், நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்‘ என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். ஆனால், மரியாவோ எதுவும் பேசாமல் அதே நம்பிக்கை அறிக்கையை ஒரே ஒரு செயலால் செய்துவிடுகின்றார்: ‘இயேசுவின் காலில் அவர் விழுகின்றார்.’
7. வந்து பாரும்
‘அவனை எங்கே வைத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘வந்து பாரும்’ என்கின்றனர் மார்த்தாவும், மரியாவும். தன் முதற்சீடர்களிடம், ‘வந்து பாரும்’ என்று இயேசு சொன்னது இங்கே இயேசுவுக்கே சொல்லப்படுகிறது. ‘வந்து பாரும்’ என்பதை நாம் பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளலாம்: ‘வந்து பாரும் உன் நண்பனை,’ ‘வந்து பாரும் எம் சகோதரனை,’ ‘வந்து பாரும் கல்லறையை,’ ‘வந்து பாரும் மனுக்குலத்தின் காயத்தை,’ ‘வந்து பாரும் எங்கள் கண்ணீரை.’ வானத்திலிருந்து இறங்கி நம்மை ‘வந்து பார்த்தவருக்கு,’ கல்லறைக்கு ‘வந்து பார்ப்பது’ ஒன்றும் பெரிதல்லவே. ஆகையால், வேகமாக உடன் செல்கின்றார்.
8. இயேசு கண்ணீர்விட்டு அழுதார்
கிரேக்க பதம் உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட்டால், ‘இயேசு கோபப்பட்டார் அல்லது நொந்துகொண்டார்’ என்றுதான் இருக்க வேண்டும். ‘கண்ணீர்விட்டு அழுதார்’ என்பது அவரின் உணர்வை ரொமான்டிசைஸ் பண்ணுவதுபோல இருக்கிறது. இறப்பு வரும்போது கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். வழக்கமாக நமக்கு கடவுளின்மேல் தான் கோபம் வரும். இங்கே இயேசுவுக்கு இறப்பின் மேலும், பாவத்தின் மேலும், தன்னை நம்பாத மனிதர்கள் மேலும் கோபம் வருகிறது.
9. அது ஒரு குகை
பெத்தானியாவிற்கு திருப்பயணம் செல்பவர்களை இலாசர் கல்லறைக்கும் அழைத்துச் செல்வார்கள். பெரிய கிணறு போல இருக்கும் இந்த இடம். இதனுள்ளே இறங்கிச் செல்லலாம். இவ்வளவு ஆழத்தில் வைத்துவிட்டு மேலே ஒரு கல்லைப் புரட்டி வைத்திருப்பார்கள். இவ்வளவு ஆழத்திலிருந்து இலாசர் எப்படி மேலே வந்தார் என்பதும், அவருடைய கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தாலும் அவர் எப்படி மேலே வந்தார் என்பதும் இயற்பியல் விதிக்கு மாறாக இருக்கின்றன. ஆனால், இதுவே அற்புதம். ‘கல்லை அகற்றியது’ மனிதர்கள்தாம் என்றாலும், இலாசரை வெளியே கொண்டுவந்தவர் கடவுளே.
இந்நிகழ்வை இன்று நாம் எப்படி நம் வாழ்வோடு பொருத்திப்பார்ப்பது?
1. இறப்பு என்னும் எதார்த்தம்
அழுகை, கண்ணீர், சோகம், இறப்பு இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்பது மனித இயல்புக்கே முரணானது. மனித இயல்பு தன்னிலேயே குறைகளைக் கொண்டது. இங்கே அழுகை, அழுகல், கண்ணீர், கசப்பு, கருணை எல்லாம் சேர்ந்து இருக்கும். இவற்றில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. உயிர்ப்பு மட்டும்தான் மேன்மை என நினைக்கக்கூடாது. ஏனெனில் இலாசரின் உயிர்ப்பு அவரின் கொலைக்கு வித்திடுகிறது. ஏனெனில், ‘தலைமைக் குருக்கள் இலாசரையும் (இயேசுவோடு சேர்த்துக்) கொன்றுவிட திட்டமிடுகிறார்கள்’ (12:10). ஆக, இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத் தரவில்லை. யாயிரின் மகள், இலாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. மேலும், இன்று இறப்பே இல்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் முயற்சி செய்தாலும், விபத்து, வன்முறை போன்றவற்றால் மனிதர்களின் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நாம் நம் அன்றாட இறப்பை - ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே இருக்கிறோம். நம் உடலின் செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன - சாதாரண எதார்த்தமாக எடுத்துக்கொள்வதே சால்பு. ‘எனக்கு கல்லறையே கிடையாது’ என மறுப்பதை விட, அல்லது மறுதலிப்பதை விட, ‘என் வாழ்வின் கல்லறை இதுதான்’ என நம் அன்றாட இறப்புகளையும், இறுதி இறப்பையும் ஏற்றுக்கொள்வதே ஞானம்.
2. உடனிருப்பு
இயேசு பெத்தானியாவிலிருந்து தூரத்தில் இருக்கிறார். பெத்தானியாவுக்கு வருகிறார். பின் ஊரின் நடுவில் நிற்கின்றார். பின் கல்லறைக்கு அருகில் வருகின்றார். ஆக, இவ்வாறாக இயேசுவின் நெருக்கம் கூடிக்கொண்டே வருகின்றது. ஆக, நம் வாழ்வின் கல்லறைக்கு வெகுதூரத்தில் அவர் நிற்பது போல தோன்றலாம். அல்லது சில நேரங்களில் நம் அருகில் வருவதற்கு அவரே காலம் தாழ்த்தலாம். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். நம் கல்லறைகள் நாற்றம் அடித்தாலும் அவர் துணிந்து அங்கே நிற்பார்.
3.வாழ்வைப் பற்றிய புரிதல்
முதலில், கடவுளே உயிரின் உரிமையாளர். அவரே வாழ்வின் சொந்தக்காரர். நாமெல்லாம் அவரிடம் அதை இரவல் வாங்கியிருக்கிறோம். இரவல் கொடுத்தவன் அதை ஒருநாள் நிச்சயம் கேட்பான். அவன் கேட்கும்போது அதை நாம் தர மறுத்தல் அநீதி. இரண்டாவதாக, வாழ்க்கை ஒரு வட்டம், சுழற்சி. நம்முடைய முன்னோர் விட்டுச்சென்ற பண்பாடு, மொழி, நாகரீகம் ஆகியவற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும். நாம் வந்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்பது தான் வாழ்வின் நியதி. மூன்றாவதாக, வாழ்க்கை அல்லது உயிர் என்பது குழும அனுபவம். ஒருவர் மற்றவரோடு நாம் கொண்டுள்ள இனிய உறவிலும், கடவுளோடு உள்ள உறவிலும், நம்முடைய இறந்த முன்னோர்களோடு கொண்டுள்ள உறவிலும், நாம் பிறந்த இந்த மண்ணின்மேல் கொண்ட உறவிலும்தான் அதைக் கண்டுணர முடியும். சமூக விலகலும் தனிமைப்படுத்துதலும் சிலகாலம் தான். என்னுடைய வாழ்வை நான் இனிமையாக வாழக் கற்றுக்கொண்டால் இறப்பைப் பற்றிய கவலை எனக்கு வராது.
இறுதியாக,
‘ஆண்டவரே, உம் நண்பர்கள் நலமற்றிருக்கிறார்கள்’ என்ற செய்தி இன்றும் நம் ஆண்டவரின் காதுகளை எட்டுகின்றது. ஆனால், அவர் அன்றுபோல இன்றும் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். கடவுளின் பொறுமை மனித நம்பிக்கையின் அளவுகோல். ‘ஆண்டவரே இங்கு இருந்திருந்தால்’ என்று புலம்புவதை விடுத்து, ‘தூங்கினால் நலமடைவான்’ என்பதற்கிணங்க, கொஞ்சம் தனிமையில், நம் உள்ளம் என்னும் கல்லறையில் சிறிது நாள்கள் நம்மையே அடைத்துக்கொண்டு தூங்குவோம். கல்லறைகளைத் திறக்க வல்லவர் நம் அருகில். அவரிடமே உள்ளது ‘பேரன்பும் மீட்பும்’ (காண். திபா 130).
Comment